கீற்றில் தேட...

வீடு திரும்பும் எம் பெண்கள்
உடைகளைக் களைந்து மாற்றும்போது
பொலபொலவென உதிர்கின்றன
கண்களின் பிரதிகள் பிசுபிசுப்பாய்.,

குளிக்கையில் சோப்பின் நுரைகளாய்
தரையில் நழுவுகின்றன விழிகளின் குமிழ்கள.;
உள்ளெல்லாம் ஊடுருவி
உடலைப் பற்றிப் பிடித்திருக்கும் சில பிரதிகளை
பிய்த்தும் தேய்த்தும் நீக்க வேண்டியிருக்கிறது !

கூந்தலை உலர்த்தித் தட்டினால் பிசிறுகின்றன
ஒட்டியிருக்கும் பிரதிகளின் இமைகள்

இருக்கையில் அமர்ந்து ஓய்வாய்ச் சாயும்போது
கசிகிறது ஒரு கடைசிப் பிரதி
கண்களுக்குள்ளிலிருந்து.


2.   

முத்தத்திற்காக குவிந்த இதழ்களின் பிரதிகள்
அலைந்து திரிகின்றன வெளியெங்கும்
கைகளால் விலக்கியும் தலையைக் குனிந்தும்
கடக்க வேண்டியிருக்கிறது.

மதுவின் நீலத்திலும்
புகைப்பின் காரையிலும்
காமத்தின் மஞ்சளிலும்
காதலின் நீர்மையிலும்
பதுங்கியும் துள்ளியும் அலைகின்றன பிரதிகள்.

அலைந்து தெம்பேறிய முதல்பிரதி
பின்னால் பார்க்க
மூலம் உக்கிரத்துடன் துப்பிக் கொண்டிருக்கிறது
அடுக்கடுக்காய் பிரதிகளை !

பொருத்த இதழேதும் கிட்டாத பிரதிகள்
ஈரம் காய்ந்துபோய் மேலெழும்பித் தீய்கின்றன.

அலையும் பிரதிகளில்
அளவொக்கும் ஒன்றை
தேடிப்பார்க்கும் சிற்சில இதழ்கள்
அற்ப அதிசயமாய்….

அறியவில்லை எவையும்
பெறுவதற்கோ வழங்குவதற்கோ அல்ல
முத்தங்கள் பகிர்ந்து கொள்வதற்கென்று !


3.

யாருமற்ற பூட்டிய வீட்டிற்குள்
உலவித்திரிந்தன சொற்களின் பிரதிகள்
சுதந்திரமாய் . . .

கதவிடுக்கின் வழியே
கிசுகிசுப்பாய் கசிந்து வந்தன படுக்கையறைப் பிரதிகள்

மணங்கமழும் வளையங்களாய்
முணுமுணுப்பின் கனத்தோடு உலவின பூஜையறைப் பிரதிகள்.

மனப்பாடமும் கண்ணெரிச்சலுமாய்
புத்தங்களின் எழுத்துக்களிலிருந்து
தங்களை பெயர்த்து கொண்டு
வெளியே வந்தன படிப்பறைப் பிரதிகள்

விசில் ஒலியுடனும் . . .
அறவை மணத்துடனும்
கமகமத்து உலவின சமையலறைப் பிரதிகள் ;

பழ வாசனைகளும் சிரிப்பொலியுமாய் புழங்கின
உணவுமேசைப் பிரதிகள்

எல்லா பிரதிகளும் ஒன்றுகூடி கைகோர்த்தப்படி
மெல்ல மெல்ல வந்து சேர்ந்தன வரவேற்பறைக்கு !

விரிந்த சிரிப்புடன் அவற்றை வரவேற்றன
வரவேற்பறைப் பிரதிகள்.

பேச்சு வார்த்தையெல்லாம் முடிந்து
பிரிய நினைக்கும் ஒரு தருணத்தில்
வரவேற்பறை பிரதிகளிடம் மற்றவை
தயங்கித் தயங்கி கேட்டன.
“எப்படி உங்களால் எப்போதும் இருக்க முடிகிறது
ஒரு போலியான ஒழுங்கோடு”