கீற்றில் தேட...

1 காட்டுச் சிறுவர்கள்
எண்ணி விளையாடுகிறார்கள்
பாம்பின் தடங்களை.

2 சில்லுவண்டுகளின் பேரிரைச்சல்
நின்றதொரு காட்டில்
அலறுகிறது நிசப்தம் .

3. முளைத்துக் கிடக்கின்றன
நவதானியத் தளிர்கள்
மூன்றாம்நாள் தெளித்த பால் .

4. தூரத்தில் தெரியும்
அருவியின் சாரல்,
நீர் புகைகிறது

5. கிளிகள் எல்லாம்
ஆண்பால்தான் ,
கனிகளைக் கேளுங்கள் .

6. நதி நீரின் மீது
மெல்ல மிதந்து வருகிறது
அக்கரையின் மணியோசை

7 வேகமாய் கீழே செல்லும்
தூறல் வரிகள்
நகரும் குடைகள்

8. நான்குவரி மின்கம்பிகள்
வரிசையாய் குருவிகள்
எங்கே என் வயலின்?

9. நகரத்தின் சாலைகளில்
வெளிர் மஞ்சள் புகை
மின்சார அந்தி.

10 .கற்றை இருட்டில்
மனசெல்லாம் வெண்மை
எங்கோ மல்லிகை.

11. பௌர்ணமி நிலவுக்கு பயந்து
அசையும் மரத்தடியில்
ஒளியும் நட்சத்திரங்கள்.

12. பருந்தின் கை நழுவ
விழும் கோழிக்குஞ்சு
கீழே முள்பத்தை.