அங்கெல்லாம் மண்ணில்தான் புதைக்கிறார்கள்
எங்கெங்கும் அப்படித்தான்.

அங்கெல்லாம் சுவற்றில்தான் ஆணிஅடித்து
படங்கள் மாட்டுகிறார்கள்
எங்கெங்கும் அப்படித்தான்.

அங்கெல்லாம் நினைவுச்சின்னங்களை
கட்டிடப்பொருள்களாலும் சிலைகளாலும்
எழுப்பி வைக்கிறார்கள்
எங்கெங்கும் அப்படித்தான்.

இங்கு மட்டுந்தான்
இறந்து போன ஆணின் உடலை
பெண்ணுக்குள் புதைக்கிறார்கள்.

இங்கு மட்டுந்தான்
இறந்து போன ஆணின் படங்களை
பெண்ணின் நெஞ்சில்
ஆணி அடித்து மாட்டுகிறார்கள்.

இங்கு மட்டுந்தான்
இறந்து போன ஆணின் நினைவுச்சின்னத்தை
பெண்ணின் துயரங்களால் கட்டிவைக்கிறார்கள்.

இந்த வெள்ளைப் பிரமிடுகள்
தொன்றுதொட்டு வரும்
நாகரிகத்தின் அசிங்கங்கள்

வா
இந்த வெள்ளைப்பிரமிடுகளை உடைப்போம்
எதிர்த்து வரும் பிணங்களை உதைப்போம்.

- பன்னீர்செல்வன் அதிபா