1 .வேல் கம்பு அரிவாளோடு
வீரமாய்க் கிடந்தது
வேட்டைக்குச் சென்ற பறை .
2 .பறையைத் தட்டும் குழந்தை
பாட்டிக்கிழவி சுட்டுத் தரும்
பன்றியின் ஈரலுக்காய் .
3 முதல் மனிதர்களின்
முதல் கொண்டாட்டம்
ஆதிப்பறை .
4 .அரசாணை வரிகள்
காற்றில் பிரதிகளாய்
பறையின் குரல்கள் .
5 .புளிச்சேப்ப தர்பாரில்
தாபத்தில் மிருதங்கம்
பரணியின் பறை கேட்டு .
6 இடிகளின் முழக்கம்
திசையெல்லாம் அதிர்கிறது
அனலில் காய்ச்சிய பறை .
7 உயிரற்றுக் கிடக்கிறது
கழட்டிப் போடப்பட்ட
பறையின் தோல் .
8 இருந்த இசையை
விசைதான் வெளிக்காட்டியது
தோலிலும் கம்பிலும் .
9 எவ்வளவு வலிமை
இந்த ஒப்பாரிக்கு...
பறையோடு இயைகிறதே !
10 தொண்டையைக் கனைத்து
சரிசெய்துகொள்கிறது ஊதி
சீவாளிகளை மாற்றி மாற்றி .
11 ஒப்பாரியோடு சேர்ந்து
தானும் அழுகிறது
மழையில் நனைந்த பறை
12 காற்றில் துடித்துவரும்
பறையில் மயங்கியது குயில்
சேர்ந்து பாடலாமா ....
13. பறை மட்டும் தனியாய்
தனி வாசித்த
மிருதங்கக்காரர் இறப்பில் .
14. இரவல் தாளம் தேடாத
தன்மானப் பாடகன்
தட்டிப் பாடும் பறை .
15 குச்சி விரல்கள்
பறையில் மீட்டின
பாலை யாழ் .
16 பறை ஒலித்த மேடை
மறுக்கும் நட்டுவாங்கம்
எதிர் சங்கமம் .
17. சகல ராகங்களையும்
தாங்கும் பறை
உச்ச ஸ்தாயியில்.