கதை படிப்பது என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் தானே! நானும் ஒரு கதைப் பைத்தியம்தான். ஏற்கெனவே படித்த கதைகள் இருந்தால்கூட, அவற்றையும் விட்டுவைக்க மாட்டேன். என் வீட்டின் அருகில் என்னைப் போலவே கதையார்வம் கொண்ட ஒரு சிறுமி இருந்தாள். மாலை நேரங்களில் அவளும் நானும் பல கதைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வோம். நேரம் கடந்து போவது தெரியாமல் எங்களை மறந்து கதைக் களத்தில் குதித்து நீந்திக் கொண்டிருப்போம்.

கதைகள் சொல்வதிலும் எழுதுவதிலும் அவளுக்கு இருந்த ஆர்வம்தான் எங்களது நட்பின் ஆதாரத் தூணாக இருந்தது. ஒரு நாள் மாலை, நாங்கள் வழக்கமாக சந்திக்கும் நேரம் வந்தது. என் தோழியின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட நேரத்துக்குப் பிறகு, கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தோடு அவள் வந்தாள். என் கையில் அந்த நோட்டை கொடுத்துவிட்டு, "அக்கா, நல்லா இருக்கான்னு படிச்சுட்டு சொல்லுங்க" என்று சொல்லிவிட்டுப் போனாள். அந்தக் கதை:

பூமியின் சிறு வயதில், மனிதன் வளர்ச்சி பெற ஆரம்பித்த நேரம் அது. மனிதர்களும் விலங்குகளும் நண்பர்களைப் போல வாழ்ந்து வந்த பொற்காலம் அது. மனிதனின் அறிவு வளரவளர, அவனுடைய ஆணவமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. கொஞ்ச காலத்தில், இந்தப் பூவுலகில் தன்னைவிட அறிவில் வளர்ச்சி பெற்றவர்கள் எவரும் இல்லை என்ற எண்ணம் மனிதனின் தலைக்கனத்துக்கு வித்திட்டது.

இதனால் நண்பர்களைப் போல பழகி வந்த விலங்குகளிடம் மனித இனம் பகைமை பாராட்ட ஆரம்பித்தது. பசி வந்தவுடன் விலங்குகளைக் கொன்று உண்டு வந்த அவன், சாதுவான விலங்குகளை அடிமைப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளவும் ஆரம்பித்தான். தன்னை வெல்ல பூமியில் எவரும் இல்லை என்ற எண்ணம் மனித இனத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.

முதலில் பொறுமை காத்த விலங்குகள் ஆத்திரம் கொண்டு ஒன்றுகூடி, ஒரு முடிவுக்கு வந்தன. இறுதி முடிவு எடுத்துவிட்டன. இனி எதற்கும் அடிபணிவதில்லை. மனித இனத்துக்கு எதிராகத் தொடங்கின பெரும்போர். முதலில் இந்தப் போரை சவடாலாக எதிர்கொண்ட தலைக்கனம் பிடித்த மனிதர்கள், பின்னர் விலங்குகளின் ஆற்றல் கண்டு அச்சம் கொள்ள ஆரம்பித்தது. இயற்கையைவிட்டு பெருமளவு விலகி வந்த மனித இனம் முடிவில் தோல்வியை தழுவுகிறது. தோல்வியின் அவமானம் தாள முடியாமல் சிலர் ஓடி ஒளிகின்றனர் (ஆனால் விலங்கு உலகில் அவமானம் என்ற உணர்வெல்லாம் கிடையாது). மேலும் சிலர் மனம் நொந்து விலங்குகளின் அடிமைகளாக மாறுகின்றனர். இப்படித் தொடங்குகிறது அந்தக் கதை.

யோசித்துப் பார்த்தேன். இது அப்படியே உண்மையாகிவிட்டால்? தற்போதுள்ள சூழ்நிலையில், மனிதன் செய்யும் செயல்களுக்கும் விலங்குகளின் மீது அவன் இழைக்கும் அநீதிகளுக்கும் இதுவே தண்டனையாக அமைந்துவிட்டால்? அதிர்ச்சியாக இருந்தது.

-ஐஸ்வர்யா

(பூவுலகு இதழின் தன்னார்வலர்களில் ஒருவரான இக்கட்டுரையாளர், சிறீபெரும்புதூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி)

Pin It