(கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதி - பொதுவுடைமை தான் என்ன? - 5. சோஷலிச சமூகம்)

இன்று புவியை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் முதன்மையான விஷயங்கள் புவி வெப்ப உயர்வு, சூழ்நிலைக் கேடு, பருவ நிலை மாற்றம் ஆகியவையே ஆகும். இவை அனைத்தும் முதலாளித்துவத்தினால் உற்பத்தி செய்யப்பட்டவையே. உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் அல்ல; தொடர்ந்து புவியை அழிவுப் பாதையில் கொண்டு செல்பவையும் ஆகும். இப்பயணம் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், உலகில் அனைத்து உயிரினங்களும் அழிந்து போய் விடும் என்பதை முதலாளிகளின் பிடியில் உள்ள அறிஞர்களே உரக்கக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக, உலகம் முழுவதும் மக்கள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அண்மைக் காலமாக முதலாளித்துவம் தான் இதற்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளவும் ஆரம்பித்து உள்ளனர்.

ஆம். முதலாளித்துவ முறையில் இலாபம் கிடைக்கிறது என்பதற்காக உற்பத்தி ஆகும் ஆயுதங்கள், வாகனங்கள், அண்ட வெளிச் சுற்றுலா, இன்னும் எத்தனையோ பண்டங்கள் புவி வெப்பத்தை உயர்த்தச் செய்கின்றன. புவியைக் குளிர்விக்கும் மரம் வளர்த்தல், விவசாயம் ஆகியவை இலாபம் தரவில்லை என்பதற்காக அவை உற்பத்தி செய்யப்படுவது இல்லை. புவி வெப்ப உயர்வை எதிர்க்கும் மக்களின் வாயை அடைப்பதறகாக மரக் கன்றுகள் நடும் விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. ஆனால் அம்மரக் கன்றுகளின் எண்ணிக்கை புவியைக் குளிர்விக்கத் தேவைப்படும் எண்ணக்கையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இருப்பதில்லை. அது மட்டும் அல்ல; அக்குறைந்த அளவு மரக் கன்றுகளும் நடப்படுகின்றனவே ஒழிய வளர்க்கப்படுவது இல்லை. ஏனெனில் அவ்வாறு செய்வதில் இலாபம் கிடைக்காது என்பதால் மூலதனத்தை ஈடுபடுத்த முடிவது இல்லை.

நிலைமை இப்படியே சென்று கொண்டு இருந்தால் இப்புவியில் உயிரின அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி இல்லாமல் இப்புவியல் உயிரின அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் புவி வெப்ப உயர்வுப் பொருள்களை உற்பத்தி செய்யும் இலாபம் தரும் தொழில்கள் பலவற்றைத் தடை செய்தும், பண ரீதியில் நஷ்டத்தையும், மக்களின் தேவையைக் கணக்கில் கொள்ளும் போது நன்மைகளையும் தரும் தொழில்களில் இயற்கை மூலாதாரங்களையும், மனித ஆற்றலையும் ஈடுபடுத்த வேண்டும். இக்குண விசேஷம் சோஷலிச உற்பத்தி முறைக்குத் தான் உண்டு. ஆகவே இப்புவியில் உயிரினங்கள் அழியாமல் தொடர்ந்து வாழ உடனடியாக சோஷலிச முறையை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் இருக்கின்றது.

இது வரைக்கும் உழைக்கும் மக்கள் மட்டுமே தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடிப் பெற வேண்டிய சோஷலிச அமைப்பு, இப்பொழுது புவியைப் பாதுகாக்கும் ஒரே வழியாகவும் மாறி உள்ளது.

பொதுவுடைமை தான் என்ன என்ற இக்கட்டுரைத் தொடரைப் படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இதில் ஏதாவது ஐயங்கள் எழுமானால், அவற்றிற்கு விளக்கம் கேட்டால், விடை அளிக்கிறேன்.

- இராமியா

Pin It