பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு பசுமை வளர்ச்சியின் மூலம் முன்னேற்றம் கொண்டுவருவது பற்றி வட்டமேஜை மாநாடு ஒன்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி புதுடெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்று கிராம அளவில் இந்தப் பசுமை வளர்ச்சிக்கும், கிராம முன்னேற்றத்திற்கும் கிராமப் பஞ்சாயத்துக்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். இதில் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்தும், ஐ.நா நிறுவனங்களிலிருந்தும் கருத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். இதில் வந்திருந்த கருத்தாளர்கள் பன்னாட்டு அமைப்புகளின் தீர்மானத்தில் ஆரம்பித்து பாராளுமன்றத் தீர்மானங்கள், அவைகளின்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பேசினார்கள். இதில் குறிப்பாக வனங்கள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, கரியமில வாயு குறைப்பு, மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துதல், கனிமவளப் பாதுகாப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. உலகமயமாதல் எந்த அளவிற்கு மக்களுக்கு வசதிகளைப் பெறவும், வளர்ச்சியைப் பெறவும், வாய்ப்புக்களைக் கொண்டு வருகிறதோ அந்த அளவிற்கு ஏழைகளுக்கும் குறிப்பாக ஆதிவாசிகளுக்கும், கிராமப்புறத்தில் வாழ்வு நடத்தும் மக்களுக்கும் அதிக நெருக்கடிகளையும் கொண்டு வருகின்றது என்பதை ஆதாரங்களோடு முன்னெடுத்து வைத்து விவாதித்தனர். அப்பொழுது பேசிய கருத்தாளர்கள் இந்த இயற்கை வளங்களை எடுத்துப் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன் படுவதை நிறுத்திவிட வேண்டும் என்ற கருத்தை எவரும் முன் வைக்கவில்லை. இயற்கை வளங்களை எல்லை இல்லா அளவிற்கு சூறையாடுவது நிறுத்தப்பட வேண்டும். அதிலிருந்து கிடைத்துள்ள வருமானங்கள் அரசுக்குக் கிடைக்க வேண்டும். தனியார்கள் லாபம் ஈட்ட இயற்கை வளங்களை எல்லையின்றி சூறையாட அனுமதிக்கக் கூடாது போன்ற விவாதங்களை முன் வைத்தனர். அத்துடன் இயற்கை வளங்களை பூமியி லிருந்து எடுக்கும்போது பாதுகாப்பாக எடுப்பதற்கு உருவாக்கப்பட்ட சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இல்லையேல் பெரும் சேதத்தை பூமிக்கு விளைவித்துவிடுவார்கள் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த விவாதங்களை வைக்கின்ற போதெல்லாம் எந்த அளவிற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பண வெறிபிடித்து லாபம் சம்பாதிக்க முயன்ற நிறுவனங்களுடன் கைகோத்து விதிகளை மீறி மக்களையும், இயற்கையையும் சீரழித்தனர் என்ற புள்ளிவிவரங்களையும் பகிர்ந்துகொண்டபோது ஒரு திகில் படம் பார்ப்பதுபோல் இருந்தது.

அந்த விவாதத்தில் எனக்குக் கடைசியாக இந்தப் பசுமை வளர்ச்சியில் உள்ளாட்சியின் அதுவும் கிராமப்புற உள்ளாட்சியின் பங்கு பற்றிக் கருத்துகள் கூறுமாறு பணிக்கப்பட்டேன். இவர்கள் அனைவரும் பெரும் அறிஞர்கள், உலக அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பேசிய கருத்துக்களை உள்வாங்கியபோது எனக்குப் புலப்பட்டது ஒன்றுதான். உலகம் காந்தியின் வழியில் செல்லும் காலம் விரைவில் இருப்பதை உணர்ந்து கொண்டு என் கருத்தினைப் பகிர்ந்துகொண்டேன். அந்த நேரத்தில் எனக்கு ஒரு ஆதங்கம் ஏற்பட்டது. உலகம் காந்தியின் பக்கம் திரும்பும்போது நம் காந்திய நிறுவனங்கள் காந்தியத்தை கைவிட்டவர்களாக நிராயுதபாணியாக நிற்பதைப் பார்த்தபோது ஒரு வேதனை என்னைச் சூழ்ந்தது. இன்று முன்னேற்றம் என்பது என்னவென்றால் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் உலகம் சந்தித்து வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதுதான். இதுவரைப் பொருளாதாரம் பெருக்க எடுத்த நடவடிக்கைகள் உருவாக்கிய சிக்கல் என்பது எண்ணிலடங்காதவைகள். எனவேதான் முன்னேற்றம் என்ற வார்த்தையை இன்று பயன்படுத்த முடியவில்லை. உலகத்தில் மானுடத்திற்கும் இயற்கைக்கும் இருந்த ஒரு உயிரோட்டமான தொடர்பு இன்று சிக்கல் நிறைந்ததாக மாறிவிட்டது.

மானுடத்தின் எல்லை மீறிய செயல் பாடுகள் இயற்கையின்மீது போர் தொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. எனவேதான் இன்று முன்னேற்றம், மேம்பாடு, வளர்ச்சி என்ற சொற்களைத் தாண்டி “பொறுப்புமிக்க மானுடச் செயல் மற்றும் நலம்” என்ற வார்த்தை உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்று வருகிறது. அப்படி அங்கீகாரம் கிடைக்கின்றபோது உலக அரங்கில், இந்தப் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சவால்களைச் சந்திக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பிரகடனங்களாக வெளியிடப்படுகிறது. இந்தப் பிரகடனங்கள் அனைத்தும் அறிவுசார்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகடனங்கள். ஒரு காலத்தில் இயற்கை வளப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம் பற்றிப் பேசுவோர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் எதிரானவர்கள் என்று சித்தரிக்கப் பட்டனர். விஞ்ஞானத்தாலும், தொழில்நுட்பத்தாலும் எதையும் சாதித்துவிடலாம் என்று முழங்கி வந்தவர்கள், இன்றைய சூழலைப் புரிந்துகொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அடிமட்டத்தில் குறிப்பாக விஞ்ஞானப்பூர்வ நடவடிக்கைகளைக் கைகொள்ள மக்களின் மனோபாவத்தில், செயல்பாட்டில் மாற்றங் களைக் கொண்டுவர வேண்டும் என வாதிட ஆரம்பித்து விட்டனர்.

இதன் பின்னணியில்தான் இன்று இந்தப் பிரகடனங்களை நடைமுறைப்படுத்த தேசத்தின் பாராளுமன்றங்கள் முடிவுகளை எடுத்து, மாநிலங் களுக்குத் தந்து அவைகளை நிறைவேற்ற பணிக்கப்படு கின்றன. மாநில அரசுகள் உள்ளாட்சிகளின்மேல் அந்தப் பணியை வைத்து மக்களின் புரிதலோடும், பங்கேற் போடும் நடைமுறைப்படுத்தப் பணிக்கப்படுகின்றன. இந்த உள்ளாட்சிகள் இந்தப் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க, பருவநிலை மாற்றத்தால் உருவாகும் விளைவுகளைச் சமாளிக்கச் செய்யவேண்டிய பணிகள் என்பது ஏராளம். இந்தப் பணிகள் என்பது கிராமத்தில் உருவாகின்ற குப்பைகளை எரிக்காமல் தடுத்து, பிரித்தெடுத்து அதை மேலாண்மை செய்வதில் ஆரம்பித்து, தனிமனித வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வருகின்ற பணிகள் என சட்டங்களைத் தாண்டி, திட்டங்களைத் தாண்டி, பல்வேறு பணிகளை உள்ளாட்சிப் புரிதலோடும், கடமைப்பாட்டோடும் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். எனவே ஒரு கிராமப் பஞ்சாயத்திற்குத் தலைவராக வேண்டும் என எண்ணுவோரின் பணிச்சுமை என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது. அது வெறும் பணிச்சுமை மட்டும் அல்ல. ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டிய பணிகளை இவர்கள் செய்தாக வேண்டும். அதற்கு உள்ளாட்சித் தலைவர்களுக்கு விரிந்த பரந்த உலகப் பார்வையும், உள்ளூரில் பணிகளும் என சிந்திக்கக்கூடிய ஆற்றலும், அவைகளை செவ்வனே நிறைவேற்றக்கூடிய சக்தி பெற்றவராக உயர்ந்தவராக மாறிட வேண்டும். பலர் உடனே இதற்கு நிதிக்கு எங்கே போவது என்று கேட்கக்கூடும். இதற்கு நிதித்தேவை என்பது மிகக் குறைவு, மாற்றுச் சிந்தனைதான் தேவை. கிடைக்கும் நிதியை எவ்வளவு சிக்கனமாகப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை வைத்துக்கொண்டு, கிடைக்கக்கூடிய நிதியினை வைத்துக்கொண்டு, திட்டங் களை வைத்துக்கொண்டு பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும். இதற்கு மக்களிடமும் ஒரு பொதுப் புரிதலை இந்தத் தலைவர்கள் உருவாக்க வேண்டும்.

கிராமத்தில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்க வைக்க வேண்டும். எந்தச் சூழலிலும் குப்பைகளை எரிக்க கிராமங்களில் மக்களை அனுமதிக்கக் கூடாது. அடுத்து கிராமம் முழுவதும் சூரிய ஒளியைப் பயன் படுத்தித் தெருவிளக்குகளையும், பொதுக்கட்டடங்களில் உள்ள விளக்குகளையும், காற்றாடிகளையும் செயல்பட வைக்க வேண்டும். கிராமங்களில் உள்ள பொதுச் சொத்துக்களில் மரங்களை வளர்த்து வனமாக்க வேண்டும். சாலைகளில் நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்த்தெடுக்க வேண்டும். கிராமங்களில் சிறு தொழில்கள் தொடங்க, அவைகளைப் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவசாயத்தை இயற்கை வழியில் செய்திட விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்தை இயற்கை முறையில் செய்திட விவசாயிகளுக்குப் பயிற்சி யளிக்க வேண்டும். இதன் மூலம் வரும் விளைபொருட் களுக்கு நல்ல சந்தை கண்டுபிடித்துத் தர வேண்டும். அதேபோல் இயற்கை சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிட பஞ்சாயத்துகள் முனைய வேண்டும்.

கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் தூர் வாரப்பட்டு ஆறுகள், குளங்கள், குட்டைகளை அனைத்தும் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். மாட்டுச்சாணம் மற்றும் மனிதக் கழிவுகளின் மூலம் வாயு உற்பத்தி செய்து அனைத்து வீடுகளுக்கும் உபயோகப் படுத்த உதவிட வேண்டும். மின்சாரத்தை தேவைக்கான அளவில் மட்டுமே பயன்படுத்த மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள் பேரிடர் தயாரிப்புச் செய்து மக்களைத் தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல கிராமப் புறங்களில் இந்த பாலிதீன் பைகளிலிருந்து விடுதலை அடைய அதன் உபயோகத்தை முற்றிலுமாகத் தடை செய்திட வேண்டும். இந்தப் பார்வையை உள்வாங்கி மத்திய அரசால் இன்று பணிக்கப்பட்டுள்ள பணியாகிய திட்டம் தயாரித்தலை கிராமப் பஞ்சாயத்துகள் செய்திட வேண்டும். மக்கள் பங்கேற்போடு தயாரிக்கும் திட்டம்தான் பசுமை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திடும். அதற்கான புதிய தலைமையை பஞ்சாயத்துகளில் உருவாக்க வேண்டும். இந்தப் புதிய தலைவர்கள்தான் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் மாற்றுத்தலைவர்கள். இவர்கள்தான் பசுமை அரசியலை நோக்கிச் செல்லக்கூடியவர்கள்.

Pin It