"கடவுளே வருக... வருக.. வணங்கும் பக்தர்கள்" என்று இருக்கிற பேனரை பார்க்க நேர்ந்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகமும் படமும் என் மனதை கோண செய்தது. ஆகையால், உலகம் அழியும் வரையில் அவசியமாக கடைப்பிடிக்கவேண்டிய - மக்களை வழிநடத்த வேண்டிய ஒரு கொள்கை பின்னடைவை சந்திக்கும் நிலை குறித்து விவாதிக்கலாம் என்று தோன்றியது.

M.K.Stalinநவீன அரசியலில் தொண்டர்களால் தலைவர்கள் கடவுளரைப் போலவே தொழப்படுகிறார்கள். அதனைக் காணும் பலரும் முகம் சுளிக்காமல் இருப்பதில்லை. தமது தலைவர்களை தொண்டர்கள் எப்படியெல்லாமோ விளித்துக்கொள்ளட்டும்; புகழ்ந்துகொள்ளட்டும். அது அவர்களின் உரிமை. ஆனால், கட்சியின் அடிப்படை கொள்கை பற்றியஅரசியல் புரிதல் இல்லாத வாசகங்களை எழுதுவதும், படங்களை வைப்பதும் மிக ஆபத்தில் முடியும். தமது அரசியல் கோட்பாட்டை அறியாதவர்களாக - பணம் கொடுத்து பதவி வாங்கி கொள்பவர்களாக இருக்கும் தொண்டர்கள், கொள்கையில் இருந்து விலகி தொழுகிறார்களானால், அதனை அனுமதிக்கும் கட்சித் தலைமை தொண்டர்களை சரியான பாதையில் வழி நடத்தவில்லை என்று பொருள்படும். அவ்வாறானால் அக்கொள்கைகளை வடிவமைத்த ஆதித் தலைவரை அவமானப்படுத்துகிறார்கள் என்றே கருதுகிறேன்.

தமிழகத்தில் உருவாகிய பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தன்னைவிட ஒரு அமானுச சக்தி இருப்பதாகக் கருதி அதை தொழுவதையும், மனிதனை மனிதன் தொழுவதையும் கடுமையாக சாடி வந்திருக்கிறது. குறிப்பாக - சாதி வருண அடிப்படையில் இடைநிலை பிற்படுத்தப்பட்ட சூத்திரச் சாதியினரை, வருணச்சாதியில் அடங்காதஒடுக்கப்பட்ட மக்கள் தொழுவதையும், மேல்சாதியினரான பிராமணரை பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் தொழுவதையும் - அவ்வாறு தொழ நிர்பந்திக்க வைத்ததையும் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆனால், இப்போது பெரியார் வழியிலும் - அண்ணா வழியிலும் வந்திருப்பதாகவும் ஆட்சி நடத்துவதாகவும் பெருமை பாராட்ட தயங்காத திராவிட இயக்கத்தில் - தலைவர்களை தொழுது உயர்த்தும் வக்கிர கலாசாரம் வேரூன்றிவிட்டது. இந்த வக்கிரத்தில் ஊறிப்போவதில் திராவிடர் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட திராவிட அரசியலை முன்னிறுத்தும் இயக்கங்கள் ஒன்றையொன்று மிஞ்ச துடிக்கின்றன. அதேசமயத்தில், பார்ப்பனத் தலைமையைக் கொண்ட அ.தி.மு.க.வைப் பற்றி நாம் பேசவே வேண்டியதில்லை. அண்ணா வழியில் வந்ததாக அ.தி.மு.க. சொல்லிக்கொண்டாலும், கட்சி தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரையிலும் பகுத்தறிவற்ற போக்கையும் - தனி மனித தொழுகையையும் தலைமையும், தொண்டர்களும் கடைபிடித்து வந்தார்கள்; வருகிறார்கள்.இன்னொரு இயக்கமான ம.தி.மு.க.வில் தலைமையை தொண்டர்கள் இரசித்தாலும், தலைமை வேரொருவரை இரசிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகையால் அந்த இருஇயக்கங்களையும் தவிர்க்கலாம்.

வழிபாட்டு முறையை கடுமையாக சாடி வந்த தந்தை பெரியாரின் விரல் பிடித்து வளர்ந்ததாக கூறுவதில் திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க. தலைவர்கள் தயங்கியதில்லை. இந்நிலையில், பெரியாரின் கொள்கையை கொச்சைப்படுத்தும் அதிர்ச்சியான ஓர் நிகழ்வு தமிழகத்தில் நடந்திருக்கிறது.

கரூரில் லைட்வுஸ் கார்னர் ரவுண்டானா அருகில் தமிழகத்தின் துணை முதலமைச்சரும் பெரியாரின் மாணவனின் மகனுமான மு.க.ஸ்டாலினை வரவேற்க ஓர் ஆளுயர டிஜிட்டல்பேனர் வைக்கப்பட்டது. மலேசியாவின் புகழ்பெற்ற பட்டுக் குகை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள பிரமாண்ட முருகன் சிலையின் உருவத்தில் மு.க.ஸ்டாலின் முகத்தை இணைத்து 'தமிழ் கடவுளே வருக வருக.. வணங்கும் பக்தர்கள்' என்ற வாசகத்துடன் அந்த டிஜிட்டல் பேனரை திமுகவினர் வைத்துள்ளனர். இந்த பேனரில் வெளிப்பட்டுள்ள கருத்துக்கள் அவர்களின் மனதில் ஊறிப்போனவை என்பதை உணரமுடிகிறது.

தன் மீது நம்பிக்கையில்லாமல் ஏதோ ஒரு மறைபொருள் தம்மை வழிநடத்துவதாக மனதில் எண்ணிக்கொண்டு அதனைத் தொழுது வாழும் பிற்போக்குவாதிகளால் சமூகத்திற்கும் மக்களுக்கும் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட யாரும் மறுப்பதற்கில்லை. கடவுளால் உருவாக்கப்பட்ட புனிதங்கள் என்று அவர்களால் சொல்லப்படுகிற சில கற்பிதங்கள்தான் சாதி, மதக் கோட்பாடுகளாக உருமாற்றப்பட்டுள்ளன. அவைதான் மனிதர்களை வாட்டிவதைத்து வருகின்றன. பக்கத்து வீட்டில் ஒருவேளைக்கூட உண்ண ஏதுமற்று இயலா நிலையில் கிடப்பவனுக்கு ஈதலைவிட, கல்லின் மீது உணவுப் பொருட்களை ஊற்றி - தெளித்து - பூசி மகிழும் வக்கிர மனநிலையையும், மாணவர்கள் பரிட்சைக்கு படிக்கும்போது, தெருவில் ஒலிபெருக்கியை கட்டி, இல்லாத ஒரு பொருளை இறைவனென்று கூவும் பாட்டுகளை ஒலிக்கச்செய்து அவர்களை துன்புறுத்தும் கேடுகெட்ட மனநிலையும் கொண்டவர்களாகத்தான் கடவுளை வழிபடுகிறவர்கள் இருக்கிறார்கள். "கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடும். இது கடவுளின் கட்டளை'' என்று சொல்லி இந்தச் சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களை பொது விசேசங்களில் கலந்துகொள்ள விடாமல் ஒதுக்கிவைக்கிற வக்கிர புத்தியுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் கடவுளை வழிபடுகிற காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள். ஈழத்தில் சிங்களர்களின் கொடூரத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதாவது செய்யலாமென, நிதி திரட்டினால், "கோயிலுக்கு ஏதாவது செய்யிறேன்னு கேளு தரேன்... நீ சொல்ற விசியத்துக்கெல்லாம் பணம் தரமுடியாது" என்று பேசும் புத்தியற்ற பிற்போக்குவாதிகளாகத்தான் கடவுளை வழிபடும் பித்தர்கள் இருக்கிறார்கள்.

அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண் (பூமி) பூசை போடாமல் பதினாறு இலட்சம் ரூபாய் செலவில் வேள்விச்சாலை அமைத்து விட்டார்கள். அது மாபெருங்குற்றம் என்று ஒரு இந்துமதவாதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்குத் தொடுத்துவிட்டார். (ஏழை மக்கள் நிலை பாதிக்கப்படுவது பற்றி அவருக்கு அவ்வளவு கரிசனம்) ஒரு பரிகாரப் பூசை செய்துவிட்டு வேள்வியைத் தொடருங்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எந்த வேதநூல்கள் சாதி, மதத்தை கட்டிக்காத்து சமூகத்தை பாழாக்க காரணமாக இருந்தனவோ, அந்த ஆகம நூல்கள் அனைத்தும் புரட்டப்பட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மீண்டும் ஒரு பதினேழு இலட்சம் ரூபாய் செலவு செய்து பரிகார பூசை நடத்தினார்கள். இது ஏதோ பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்துவரும் மாநிலத்தில் அல்ல; பெரியாரின் பிள்ளைகளால் ஆளப்படும் இந்தத் தமிழ்நாட்டில்தான் நடந்தது.

அந்த பிற்போக்குத்தனமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியபோது, பெரியாருக்கு நேரடி சொந்தமான திராவிடர் கழகத் தலைவர்களும், ஒன்னுவிட்ட சொந்தமான தி.மு.க.தலைவர்களும் மற்றுமுள்ள பெரியாரின் பிள்ளைகளும் அத்தீர்ப்பு பற்றி வாய் திறக்கவே இல்லை. அதிகாரத்தில் இருந்தும் ஒரு சிறு கண்டன அறிக்கைகூட வெளியிடாதது ஏன்?அரசின் திட்டங்களை தொடங்கும்போது மண் பூசை போடும் வழக்கத்தை மாற்றி அடிக்கல் நாட்டு விழா என்று பிரகடனப்படுத்திய திராவிட இயக்கங்களில் ஒன்றான தி.மு.க.இப்போதெல்லாம் மண் பூசை போட்டுதான் திட்டத்தை தொடங்குகிறது. பார்ப்பனன் மந்திரம் ஓத அருகே பவ்வியமாக நின்று ஆரத்தி பெறுவதை ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.தலைவர்கள் தவிர்ப்பதில்லை. அந்த "மரியாதையை" காப்பாற்றிக்கொள்ளவே, திராவிட இயக்கத் தலைவர்கள் கருத்து சொல்லாமல் இருந்திருக்கலாம்.!

போகிற போக்கில் ஒரு தகவல்: நடிகர், நடிகைகளின் மணவிலக்கல் பற்றி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து உடனடியாக செய்தி வெளியிடுகின்றன.ஆனால், மண் பூசை போடாத மாபெரும் குற்றத்திற்கு நீதிபதிகள் வழங்கிய முட்டாள்தனமான தீர்ப்பை பல ஊடகங்கள் வெளியில் சொல்லவே இல்லை. மக்களுக்கு பகுத்தறிவைசொல்லி தந்தால் அவர்கள் காணத்துடிக்கும் சமூகம் அழிந்துவிடுமல்லவா?

இத்தகைய பகுத்தறிவற்ற மனப்போக்கை மாற்றவே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பெரியாரால் உதாசீனப்படுத்தப்பட்டு, வெளியில் தலைகாட்ட முடியாமல் கிடந்த ஆத்திகர்களின் வாரிசுகளெல்லாம் இப்போது மிக தைரியமாக உலவுகிறார்கள். இப்படிப்பட்ட இந்துமதப் பற்றாளர்களையும் - பிற்போக்குவாதிகளையும் கருத்து ரீதியாக வாதிட்டு கூனிகுறுக வைக்க - பெரியார் முன்வைத்த கேள்விகளை எடுத்துரைக்க - பெரியாரியவாதிகளுக்கு குறைவு ஏற்பட்டதே இதற்கு காரணம்.

தமது கொள்கைக்கு முரணாக கடவுள்களோடு உருவகப்படுத்தி பெரியாரிய அரசியலின் தொடர்ச்சியாக விளங்கப்போகும் ஸ்டாலினுக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது எந்த வகையிலான பகுத்தறிவை சேர்ந்தது? இதுதான் பெரியாரின் கொள்கையா? இதைத் தான் பெரியார் வலியுறுத்தினாரா? என்பதை பெரியாரின் மாணவரான கலைஞர்தான் சொல்ல வேண்டும். தி.மு.க.வில் இருப்பவர்களெல்லோரும் பெரியாரின் வழிதோன்றல்கள் என்று கட்சித் தலைமை சொல்லிக்கொண்டாலும், பெரியாரின் முதன்மைக் கொள்கைகளான கடவுளை மறுப்பது, சாதி முரண்பாட்டை மறுப்பது போன்றவற்றை தெரிந்து கடைப்பிடிப்பதில் தி.மு.க. தொண்டர்களுக்கு துளியளவும் ஆர்வமில்லை. பெரியார் கடுமையாக விமர்சித்த கம்பராமாயணத்தில் இராமனை தொழும் பாக்களை கடகடவென ஒப்பித்து வழிபடும் பணம் படைத்த வைணவப் பக்தரான ஜெகத்ரட்சகனும் தி.மு.க.வில் உயர்பதவியில் இருக்கிறார். கோவில் குடமுழுக்கு நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொண்டு, பெரியாரின் படத்தை பொறித்து சுவரொட்டி, துண்டறிக்கை அச்சடிக்கும் பெரியாரிஸ்டுகள் மிகக் காத்திரமாக சாதியை பேணுபவர்களாக இருக்கிறார்கள். பெரியார் படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை போட்டுக்கொண்டு பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், இந்த நாட்டின் தந்தையாக போற்ற தகுதியுள்ள தலைவரான அம்பேத்கரின் படம் பொறிக்கப்பட்ட சட்டையை அணியவோ, வீடுகளில் படத்தை வைக்கவோ தயங்குகிறார்கள். இவர்களெல்லாம் அறிவுமேதை தந்தை பெரியார் காண துடித்த சமூகத்தை எப்படி உருவாக்க போகிறார்கள்?

கடந்துவந்த அரசியல் பாதை பற்றியும், அடிப்படை கொள்கை குறித்தும் மூத்தவர்கள் இளையவர்களுக்கு சொல்லித் தரவேண்டும். அதை செய்யாமல் பெரியார், அண்ணாவின் பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பது எப்படி?, தமது சொத்தாகவே உருமாற்றப்பட்டு முடங்கிக்கிடக்கும் பெரியாரின் கொள்கைகளை பரப்ப முன்வருபவர்களை தடுப்பது எவ்வாறு? என்பதிலேயே சிந்தனையை செலுத்துவதாலும், தன்னை புகழ்வதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டு மணிக்கணக்கில் அதில் மூழ்கி திளைத்திருப்பதாலும்தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர்களும் திராவிடர் முன்னேற்ற கழகத் தலைவர்களும் ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றி பெரியார் விருது, அண்ணா விருது கொடுத்து மகிழ்வதை காட்டிலும் தொண்டர்களுக்கு கொள்கைகளை சொல்லித்தருவதன் மூலம் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக ஏராளமான "பெரியார் குரலை" நாடெங்கிலும் ஒலிக்கச்செய்வதே எதிர்காலத்திற்கு நல்லது. இல்லையெனில் கருநாடகத்தின் மீது படிந்த காவிக்கறை தமிழகத்தின் மீதும் படியும் நாள் வெகு விரைவில் வரும்.

கடவுள் மறுப்பை அடிநாதமாக கொண்ட கட்சியான தி.மு.க.வின் எதிர்காலத் தலைமையென பரிந்துரைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பாரதிய ஜனதாவினர் வைத்தது போல "தமிழ்க் கடவுளே வருக... வருக.. வணங்கும் பக்தர்கள்" என்று தி.மு.க. தொண்டர்கள் பேனர் வைத்திருப்பது பெரியாரை அவமானப்படுத்தும் செயல். இன்றைக்கு "கடவுள் முருகன்'' உருவத்தில் ஸ்டாலினுக்கு பேனர் வைத்த தி.மு.க. தொண்டர்கள், நாளைக்கு "சிவன்'' உருவத்தில் கலைஞருக்கும்,''பெருமாள்'' உருவத்தில் பெரியாருக்கும் பேனர் வைக்கவும் சிலை வைக்கவும் தயங்க மாட்டார்கள். அது போலவே "இராமன்" உருவகத்தில் மானமிகு ஐயா கி.வீரமணிக்கு பேனர்வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதனை எண்ணி எனக்கு ஏற்பட்ட வேதனையும் வருத்தமும், மானமிகு வீரமணி ஐயாவுக்கும், கலைஞருக்கும் ஏற்படாதா? பெரியார் இருந்திருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.

பெரியாரின் மாணவரென சொல்லி பெருமிதப்படும் கலைஞரே! பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கிருக்கும் ஆர்வத்தை மதிக்கிறேன். ஆனால் அதேசமயத்தில், உங்களுக்கு பின்னால் தமிழகத்தை ஆள தயார்படுத்தியுள்ள உங்கள் மகன் ஸ்டாலினுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் துளியளவும் பெரியாரின் அடிப்படை கொள்கைகளைசொல்லித் தராமல் வளர்ப்பதில் என்ன நியாயம் இருக்கு? இப்போதும் காலம் இருக்கிறது, தங்களை காப்பாற்றிக்கொள்ள உங்களை அமரவைத்து புகழும் அடிவருடிகளின் சொற்களில்மணிக்கணக்கில் மூழ்கி கிடப்பதை விட்டுவிட்டு, சமுதாயத்தை காக்க அடிவருடிகளையும் அன்பான தொண்டர்களையும் அமரவைத்து நீங்கள் பேசுங்கள்... பெரியார் வாழ்ந்ததன்அர்த்தத்தை மணிக்கணக்கில் பேசுங்கள்... உங்கள் வாழ்வு அர்த்தப்படும். 

- முருக சிவகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It