சிங்கள இனவெறிப் பாசிசம் தனது வெறியாட்டத்தை தொடங்கிய நாள் முதல் இதுவரை இரண்டு லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கை என்னும் பருந்தின் கால்களில் அகப்பட்ட சின்னஞ்சிறு கோழிக்குஞ்சை தீர்த்து ஒழிப்பதற்கு, விரிந்து பரந்த சனநாயக நாடான இந்தியா முதல் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வரை அனைத்துப் பயங்கரவாதிகளும் அணிவகுத்தார்கள். விளைவு - இன்று மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மனிதம் மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களை மீட்க இந்திய நடுவணரசும் எதுவும் செய்யவில்லை. தமிழக அரசும் நேர்மையாய் நடக்கவில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று நீர் உரிமை பறிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் வறுமைப் பள்ளத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இலங்கைக் கடற்படையால் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது அன்றாடக் காட்சியாகி விட்டது. தமிழக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்குமுறை உச்சத்தி நிற்கிறது. தமிழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழர்கள் தோல்வியுற்று, சிதைந்து சின்னாபின்னமாக்கப்படும் நேரத்தில், தமிழர்களின் கவனத்தை திசைதிருப்பிட முதல்வர் கருணாநிதி கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழர் மாநாட்டை நடத்துவதாக அறிவித்திருப்பது, அரசியல் ஆதாயம் தேடும் தன்னல நோக்கம் கொண்டதாகும்.

ஒரு இனத்தை அழிக்கும் செயலுக்குத் துணை செய்து விட்டு, அந்த இனம் பேசும் மொழி வளர்ச்சிக்கு உலகத் தமிழ்மாநாடு என்பது, இழிவும் இனத்துரோகமும் ஆகும். உள்ளுர்த் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இந்த ஏமாற்று நாடகத்தை புரிந்திருப்பார்கள். “மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைகளைத் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கால அவகாசம் வேண்டுமென வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழிஞர்கள் கேட்டுக் கொண்டதால்” உலகத் தமிழ் மாநாட்டை ஜுன் இறுதி அல்லது ஜுலை முதல் வாரத்திற்கு தள்ளி வைத்திருப்பதாக அறிவித்திருப்பது - இந்த ஏமாற்று நாடகத்தின் மற்றுமொரு காட்சியாகும். தற்காலிகத் தள்ளிவைப்பு அல்ல, உலகத்தமிழ் மாநாட்டை நடத்தும் தகுதி கருணாநிதிக்கு இல்லை. எனவே நிரந்தரத் தள்ளிவைப்பே நமது லட்சியம்.

உலகத் தமிழ்மாநாட்டை எதிர்த்து பணியாற்றும் நோக்குக்காக - ‘தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ - என்ற பொது அமைப்பு 27.09.2009 அன்று புதிதாய் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் எனப் பலரும் உள்ளிணையும் வகையில் அமைப்பு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவிஞர்கள் இன்குலாப், சுகிர்தராணி, ஜெயபாஸ்கரன், கவிபாஸ்கரன், மதியரசன், எழுத்தாளர்கள் பேராசிரியர் சரசுவதி, சூரியதீபன், இராசேந்திர சோழன், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, ஜகாங்கீர், ஏழுமலை, சுகுமார் போன்ற பலர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், எழுத்தாளர் சூரியதீபன், பொறியாளர் பொன். ஏழுமலை ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வரும் அக்டோபர் 10-ந் தேதி சென்னை மெமோரியல் ஹால் எதிரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தில் தவறாது பங்கேற்குமாறு படைப்பாளிகள், தமிழ் உணர்வாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உலகெங்குமுள்ள தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள், உணர்வாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்காது புறக்கணித்து, ஈழத்தமிழருக்கு ஆதரவாய் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் அவரவர் வாழும் இடங்களில் உள்ள தமிழறிஞர்களை மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்குமாறு வேண்டி ஆவண செய்யக் கேட்டுக்கொள்கிறோம்.

- சூரியதீபன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It