வரலாற்றில் மிக அண்மைக்காலத்தில் உருவான இந்தியை இன்று அசுர வேகத்தில் வளர்த்தெடுக்க முயல்கிறது வடவர் ஆதிக்கம். அவதி, விரஜபாஷா, போஜ்பூரி போன்ற 13,14 வட்டார மொழிகளிலிருந்து தேவநாகரி உருவில் உருவாக்கப்பட்ட இந்தி, சமூகத்தின் மேல்தட்டு வர்க்கம் அதாவது ஆளும் வர்க்கத்தின் அலங்கரிக்கப்பட்ட ரப்பர் பொம்மை. இந்தி பேசும் மாநிலங்கள் என்று சொல்லப்படும் மாநிலங்களின் கிராமங்களில் வாழும் மக்கள் பேசுவது இந்தி அல்ல. அவதி, போஜ்புரி போன்ற இலக்கிய செறிவுடைய வட்டார மொழிகளே. இந்தி - மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆளும் வர்க்கம் கையில் எடுத்த ஒரு கருவி.

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் உழைப்பை, இயற்கை வளங்களை உறிஞ்சி ஒரு மொழிக்கு ஊட்டி அதை வளர்ந்துவிட்டதாகச் சொல்வது மொழிப்பற்றுள்ள மற்ற மாநில மக்களின் மனதைப் புண்படுத்துவதேயாகும்.

மொழி என்பது ஓர் உணர்வு, தாய்ப்பாலோடு ஊட்டப்பட்டது. ஆனால் தாய்களில் ஒருவரது தாய்தான் சிறந்தவர்; அவரை ஏற்றுக் கொண்டால்தான் நாட்டில் ஒற்றுமை நிலவும்; நாடு முன்னேறும் என்பது மற்றவர்களை அடிமையாக நினைத்து சொல்லப்படும் அற்பச் சொற்கள். இதைத்தான் வடவர் வர்க்கம் அசாம், தமிழகம் போன்றவைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது. எல்லோரது தாய்களும்/உணர்வுகளும் சமம். மரியாதைக்கு உரியவர்கள்/உரியவைகள், அவரவர் தன் தன் தாய் மொழியில் மய்ய, மாநில பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்று வந்தால் தான் வேலை உண்டு என்று வடவர் வர்க்கம் சொல்லுமாயின் அப்போதுதான் நான் ஓர் இந்தியன்; சமமாக நடத்தப்படுபவன் என்ற எண்ணம் உருவாகும். அதுதான் நாட்டு ஒற்றுமைக்கு நல்லது.

சரி, அவரவர் மொழிகளில் போட்டியிட்டு தென்மாநிலத்தவர் வடமாநிலத்தில் போய் பணிசெய்ய முடியுமா? இது நல்ல கேள்விதான். பதில் என்னவென்றால் அந்நிலை வருமாயின் பணியமர்த்தப்படு முன் அவரவர் சொந்த மாநிலத்திலோ அல்லது பணிசெய்யப்போகும் மாநிலத்திலோ மூன்று மாதங்கள் பணியிட மொழி சொல்லிக் கொடுத்தால் போதும், அல்லது 100,120 சொற்கள் சொல்லிக்கொடுத்தால் போதும். இந்திய மொழிகளுக்குள் பொதுவான ஓர் ஒற்றுமை உண்டு, அதாவது வாக்கிய அமைப்பு, எழுவாய்+செயப்படுபொருள்+வினைச்சொல் என்பதாகும். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவர் பணிசெய்யும் இடத்தில் மூன்று மாதங்களில் மற்றவர்களோடு கலந்து விடுவார்.

மும்மொழித் திட்டம் ஒரு சதித் திட்டம். தாய் மொழி, இந்தி, ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராத மாநிலங்களுக்கு விதித்தார்கள். நடைமுறையில் பார்க்கும் போது இதன் உட்பொருள் வடவர்கள் இந்தி மட்டும் படித்தால் போதும் என்பதுதான். வடவர்களும் தாய் மொழி, இந்திப் பேசாத மாநில மொழிகளில் ஏதாவது ஒன்று, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விதி செய்தார்களா? இல்லையே. அப்படிச் செய்திருந்தால் வடவர்கள் மூன்று மொழிகளைப் படிப்பதில் எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்திருப்பார்கள். ஒரு நாட்டின் குடிமக்களில் சிலர் ஒரு மொழியை(இந்தியை) மட்டும் (அதுவும் தாய் மொழியை மட்டும்) படித்துவிட்டு இந்தியா பூராவும் சுற்றி வரவும், பலர் மூன்று மொழிகளைப் படிக்கவேண்டும் என்பதும் சதி அல்லவா?

தமிழகம் தவிர, மற்ற தென்மாநிலங்கள் இந்தியை ஏற்றுக்கொண்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் வடவர்கள் அம்மாநிலங்களுக்கு வேலைக்கோ, அல்லது போட்டித் தேர்வு எழுதவோ வரும்போது விரட்டப்படுகிறார்கள். ஆனால் இந்தியை ஏற்காத தமிழகம் வடவர்களை பணியமர்த்தி அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கிறது. எனக்கு கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டு என்வீட்டிற்குள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து உட்கார்ந்துக் கொள் என்பதுதான் இன்றைய சுயமரியாதையற்ற, சுயநலமுள்ள தமிழர்களின் கோட்பாடு. நீ மட்டும் ஒரு மொழி படித்தால் போதும், நான் மட்டும் மூன்று மொழிகள் படிக்கணுமா? நீ தன் தாய் மொழியில் தேர்வு எழுதலாம், நான் மட்டும் எனக்கு அயல் மொழியான இந்தி, அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதணுமா? இந்தியில் புலமைப் பெற 5 ஆண்டுகள் போதும். இதே 5 ஆண்டுகளில் 3 மொழிகளில் நான் புலமைப் பெற முடியுமா? இருவர்களும் இந்தியர்கள் தானே. நான் மட்டும் ஏன் மூன்று மொழிகளைச் சுமக்க வேண்டும்? என்று கேட்க அல்லது கேட்பவர்களை ஆதரிக்க தமிழகத்தில் நாதி இல்லை.

இப்பொழுது உளவியல் ரீதியாக தமிழர்கள் அடக்கி, அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் தருணம். கேட்பதை எல்லாம் கொடுத்துவிட்டு இந்தியைத் திணித்துவிடலாம் என்று திரு.கபில் சிபல் திட்டமிட்டுள்ளார். என்ன செய்வது? இன அடையாளத்தை அழிக்க திட்டம்போட்டு செயல்படும் வடவர்களை வரவேற்க தமிழக சூழ்நிலை தயாராக இருக்கிறது என்பது தான் இப்போதைய நிலை.

இந்தியைப் பரப்ப அதை திணிக்க வேண்டுமென்பதல்ல. அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள், புதிய சமுதாயச் சிந்தனைகள் உருவாக்கம் ஆகியவைகள் இந்தியில் புதிதாக எழுதப்படுமாயின் அவைகள் புதுமையாக இருப்பின் அதை தானாகவே முன்வந்து கற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். தானாகவேப் பரவும். ஆனால் அப்படி ஒன்றும் சிறப்பு இந்தியில் இல்லை. இதெல்லாம் வடவர்களுக்குப் புரியாது. ஆளும் வர்க்கம் என்கிற மமதையில் பணபலம், துப்பாக்கிப் பலம், இந்திப் பேசாத மாநிலங்களிலுள்ள சுயமரியாதையற்ற ஆள்காட்டிகள் பலம் இவைகளை வைத்துக்கொண்டு இந்தியைத் திணிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு காலம் சரியானப் பாடம் கற்பிக்கும். ஆக்கசக்தியற்ற ஒரு மொழியை திணித்து மற்ற மொழிகளை மழுங்க வைப்பதின் மூலம் மற்ற மொழிகளிலும் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகள் உருவாக்கம் நடைபெறப்போவதில்லை. காலம் காலமாக ஆளும் மொழி (அடிமைப் படுத்தும் மொழி) இந்தியாகவும் அடிமைகளாக மற்ற மொழிகளும் வைக்கப்படும். இது நாட்டு ஒற்றுமைக்கு நல்லதல்ல.

இந்தியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். இது அப்பட்டமானப் பொய். இந்திப் படித்தவர்கள் இந்திப் படிக்காத மாநிலங்களுக்கு ஏன் படை எடுக்கிறார்கள்? அங்கேயேதான் வேலை கிடைக்குமே.

சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்தித்(உணர்வுத்) திணிப்பு என்பது

1. மொழிப் போருக்கு வழி வகுக்கும். கொஞ்ச காலம் கடந்து நாட்டுப் பிரிவினைக்கு வழி வகுக்கும்.

2. மற்ற மொழிகளை மழுங்க வைக்கும்; அழிக்கும்.

3. பிராந்திய உணர்வை ஏற்படுத்தும்; அது மோதலுக்கு வழி வகுக்கும்.

4. இன அடையாளத்தை அழிக்கும்; அந்த இனத்தையே அழிக்கும்.

ஆகவே அவரவர்கள் மொழியில் புலமைப் பெற அனுமதிப்பதும், பணிக்குச் செல்லும்போது பணியிட மொழியில் பயிற்சி அளித்து தன்வயப்படுத்திக் கொள்வதும் தான் நாட்டு ஒற்றுமைக்கு நல்லது. அதை தவிர்த்து திணிக்க முயற்சி செய்பவர்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்க விதை(திணிப்பு) விதைத்து உரம், தண்ணீர் இடுகிறார்கள் என்றுதான் வரலாற்றில் எழுதப்படுவார்கள்.

பொன்பரப்பியான்

Pin It