தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கழகத் தோழர்களை சிறைப்படுத்தியுள்ள தமிழக அரசைக் கண்டித்து 19.3.07 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய கருத்தாழம் மிக்க உரை:

“தோழர்களே! தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நமது தோழர்களை சிறைப்படுத்தியுள்ள செய்திகளை உங்கள் முன்னால் பகிர்ந்து கொள்வதும், அதில் தமிழக அரசு நடந்து கொள்ளும் முறை பற்றி அலசுவதும் தான் இந்தக் கூட்டத்தின் நோக்கம்.

மனித உரிமையில் ஆர்வமுள்ளவர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் இத்தகைய அடக்குமுறைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குற்றம் நடந்த பின்பு அதற்குரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்தி வழக்கு நடத்துவது ஏற்கக் கூடியது. ஆனால், குற்றம் நடப்பதற்கு முன்பாகவே ‘நடக்குமோ’ என்று கருதி, கைது செய்கிற அதிகாரம் சட்டம் இருக்கக் கூடாது.

பிரிட்டிஷ் ஆட்சியில் முதல்முறையாக குற்ற நடைமுறைத் திருத்தச் சட்டம் என்பதை அறிமுகப்படுத்தி, அதில், 7-1ஏ என்ற பிரிவில் தான் வழக்கமாக எல்லோரையும் கைது செய்வார்கள். அதை காங்கிரசு எதிர்த்தது. குற்றம் நடக்கும் முன்பே கைது செய்வது கூடாது என்று போராடினார்கள்.

பின்பு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் போரும் வந்தது. போராட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பே சுயமரியாதை இயக்கத் தோழர்களை காங்கிரஸ் அரசு கைது செய்தது.

அப்போது பெரியார், “நீ தான் எதிர்த்தாய், இப்போது நீயே கைது செய்கிறாயே?” என்று கேட்டார். ஒவ்வொரு ஆட்சியிலும் எதிர்த்த சட்டங்களை அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

தி.மு.க.வினர் ‘மிசா’வில் அடிபட்டபோது மிசா என்ற கொடுமையான சட்டம் இனிமேல் இருக்கக் கூடாது என்று கருதியது. 356 பிரிவு கூடாது என்று கூறினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். மீதும் ஜெயலலிதா மீதும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.

நாம் அப்படிக் கூறுபவர்கள் அல்ல. மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாம், சங்கரராமன் வழக்கில் சங்கராச்சாரிக்கும் கொடுக்கக் கூடாது என்று தான் சொல்லுவோம். தேசிய பாதுகாப்புச் சட்டம் கூடாது என்று சொல்லுகிறோம். இந்து மக்கள் கட்சிக்கும் போடக் கூடாது என்றும் சொல்கிறோம். இது நாம் எடுத்திருக்கும் முதல் நிலை.

அடுத்து, இந்த வழக்கைப் பதிவு செய்தது பற்றி சில செய்திகளை நாம் சொல்ல வேண்டும். முதலில் பெரியார் சிலையை கோவிலுக்கு முன்பு வைத்தது தவறு என்று சொன்னார்கள். பெரியார் இருந்திருந்தால் இப்படிச் செய்ய மாட்டார் என்றார்கள். இப்படி பலவிதமாக நம் எதிரிகள் மட்டுமல்ல, பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கோயிலுக்கு முன்பு பெரியார் சிலையை வைக்கலாமா என்று கேட்கிறார்கள். வைத்திருக்கிறோம். பல இடங்களில் வைத்திருக்கிறோம். 15-20 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு முன்பே வைத்திருக்கிறோம்.

கோயிலுக்கு முன்பு பெரியார் சிலையை வைப்பது அவசியம்-இரண்டு பார்வையில்! மதுக்கடைகளில் சிகரெட் பெட்டிகளில் ‘இது தீங்கானது’ - என்று எழுதிப் போடுவதைப் போல, எந்த இடத்தில் தீங்கு இருக்கிறதோ அங்கு தான் எச்சரிக்கை வாசகம் தேவை. கோயிலுக்குச் செல்வது மானத்துக்குக் கேடு என்று - பெரியார் சிலையை அதனருகில் வைப்பது கட்டாயம் என்பது ஒரு பார்வை!

இன்னொரு பார்வை என்னவென்றால், வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் செல்வதற்கு உரிமை வாங்கித் தந்தவர் பெரியார். சுயமரியாதை இயக்கத்தினர்தான் சுசீந்திரத்தில் தொடங்கி, திருவண்ணாமலையில், மதுரையில், மலைக்கோட்டையில், எல்லா இடங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களை, நாடார்களை அழைத்துச் சென்று கோயிலுக்குப் போய் அடி, உதை வாங்கினார்கள். வழக்குகளை எதிர் கொண்டார்கள், சிறைப்படுத்தப்பட்டார்கள். அதற்குக் காரணமானது சுயமரியாதை இயக்கம். அதை வழி நடத்தியவர் பெரியார்!

அடுத்து கோயிலுக்குள் சென்று அங்கு வழிபாடு செய்வதற்கு, தமிழனுக்கு, தமிழ் மொழிக்கு உரிமை இல்லை என்று சொன்னார்கள். அதற்கு இறுதி வரை எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் நாத்திகரான பெரியார் தான். இறுதிப் போராட்டமாக அதையே அறிவித்தார். அதற்குள் மறைந்து விட்டார்.

கோவில் வீதிகளிலே பக்தர்களான நாம் நடந்து செல்வதற்காகப் போராடியவர், உள்ளே சென்று வழிபடுவதற்காகப் போராடியவர் - அப்படிப்பட்ட பக்தர்களாகிய, நமக்காக உழைத்த பெரியார் அங்கு நின்றிருந்தால்தான், “அய்யா, நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் உள்ளே போயிருக்க முடியாதே” - என்று நன்றி காட்டுவதற்கு பெரியார் சிலை அங்கு இருந்தாக வேண்டும். அனுமதி பெற்று சிலை வைப்பதை யாரும் தடுக்க முடியாது. மறுப்பு இருந்தால் வழக்குப் போடுங்கள்.

இப்போது பூணூல் அறுத்தபோது சொல்கிறான், நீங்கள் சட்டப்படி நடந்திருக்க வேண்டும். சட்டத்தை மீறியிருக்கிறீர்கள் என்கிறார்கள். பெரியார் சிலை சூழ்ச்சிகரமாக உடைக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இரவில் போய், பெரியார் தொண்டர்களைப் போல கருப்புச் சட்டை அணிந்து சென்று இதைச் செய்திருக்கிறார்கள். பெரியார் தி.க. தோழர்கள் பகலில் நேரடியாகச் சென்று செய்ய வேண்டியதைச் செய்தார்கள். அது சூழ்ச்சி. இது உணர்ச்சி மேலீட்டால் செய்யப்பட்டது.

சீரங்கத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று ஒரு அமைப்பே தொடங்கி நடத்தப்பட்டது. அதற்கு குரல் கொடுத்து மூளையாகச் செயல்பட்டவர் கோவையைச் சேர்ந்த “தயானந்த சரசுவதி” என்ற இந்துமத சாமியார். அவர் சங்கராச்சாரியாரைவிட பெரிய சாமியார் ஆக வேண்டுமென்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர். அவருக்கு அடியாளாக இருப்பவர் ‘இராம கோபாலனை’விட பெரிய தலைவனாகத் துடிக்கும் ‘அர்ச்சுனன் சம்பத்’ என்பவர்.

அவர் 5 ஆம் தேதி மாலை “பெரியார் சிலையை வைக்கக்கூடாது - வைக்க அனுமதிக்க மாட்டோம் - வைத்தால் தேவையற்ற கலவரம் நடக்கும்” என்று கோவையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். 5 ஆம் தேதி மாலை சொல்கிறார்; 6 ஆம் தேதி உடைத்து விட்டார்கள்.

புகார் கொடுக்கும் தோழர்கள் புகாரில் அதைச் சொல்லியிருக்கிறார்கள். வழக்கைப் பதிவு செய்கிறார்கள். செய்து விட்டு, வழக்கிலிருந்து ‘தயானந்த சரசுவதியை விடுவித்து விட்டார்கள். அதை காவல்துறை இயக்குநரே அறிவிக்கிறார்.
ஈரோட்டில் நடந்தது என்ன?

குற்றம் நடந்த இடத்தில் இராம. இளங்கோவன் இருந்தாரா, குமரகுரு இருந்தாரா இல்லையா என்பது காவல்துறை விசாரித்திருந்தால் தெரிந்தே இருக்கும். எதிர்வினை செய்துவிட்ட தோழர்களை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றவர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். தயானந்த சரசுவதிக்கு ஒரு நியாயம், குமரகுருபரனுக்கும், இளங்கோவுக்கும் ஒரு நியாயமா?

தபசி குமரனைப் பற்றி ஆனூரார் சொன்னார் - சாயிபாபாவின் மோசடிகளைத் தோலுரிக்கும் விதத்தில் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களை வைத்து தொடர் கூட்டங்களை சென்னையில் நடத்திக் கொண்டிருந்தார். டிசம்பர் 1 முதல் 12 வரை சென்னையில் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோருவதற்காக காவல்நிலையம் சென்ற தபசி குமரனை அங்கேயே உட்கார வைத்து வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

சட்டம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று கவலைப்பட்டு தயானந்த சரசுவதியை விடுவித்த காவல்துறை, தபசி குமரனை, இளங்கோவை, குமரகுருவை விடுவிக்க அந்த அறிவை ஏன் பயன்படுத்தவில்லை? பயன்படுத்தாத காவல் துறையை, அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கும் கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும்? இதைப் பார்க்கும் போதுதான் தெரிகிறது.

கலைஞருக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. தப்பு நடந்தாலும் பரவாயில்லை, அவர்களை ஒரு மிரட்டு மிரட்டி வையுங்கள் என்று கருதித் தான் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்க வேண்டியிருக்கிறது.

கொல்ல வந்தவர்கள் -திருப்பியடித்தவர்கள் யாவரும் ஒன்றே என்று கருதுகிறார். கலைஞர் எல்லோரையும் சமத்துவமாகவே நடத்தப் பார்க்கிறார். பெரியார் சிலை உடைப்பில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்து வழக்குப் போட்டார்கள். நம் தோழர்கள் ஆறு பேர் மீதும் வழக்குப் போட்டார். அர்ஜுன் சம்பத் கிடைத்து விட்டார்.

‘பேலன்ஸ்’ இல்லை என்று, பிணையில் வெளியில் வந்த குமரனைப் பிடித்து மீண்டும் சிறையில் போட்டு விட்டார்கள். சமத்துவமாக எல்லாவற்றையும் நடத்துகிறார். சமத்துவ பெரியாரல்லவா கலைஞர். நாங்கள் கலைஞரைப் பார்த்துக் கேட்கிறோம், நீங்கள் செய்வதைப் பற்றிக் கவலையில்லை. அண்ணா ஆட்சி, பெரியார் ஆட்சி என்று மட்டும் சொல்லாதீர்கள் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

சான்றிதழ் கொடுப்பதற்காகவே இங்கு ஒரு தலைவர் இருக்கிறார். இது அண்ணா ஆட்சி, பெரியார் ஆட்சி என்று பட்டம் கொடுத்திருக்கிறார். நம் தோழர்கள் செயல், பெரியார் வழி அல்ல என்று அவர் கூறியிருக்கிறார். பெரியார் இப்படியெல்லாம் சொல்லவில்லை என்று விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். அதற்கும் பதிலடி கொடுத்தோம்..

1957 தஞ்சை சிறப்பு மாநாட்டில் பெரியார் கேட்கிறார், “சாதி ஒழிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தோம், பேசினோம், தீர்வு வரவில்லை, அப்போது என்ன செய்வது?

“பத்து பார்ப்பனர்களை கொலை செய்தால்தான் சாதி ஒழியும் என்றால் என்ன செய்வது?” - என்று பெரியார் கேட்டபோது, கூட்டத்தில் எல்லோரும் ‘ஆமாம்! ஆமாம்’ என்று முழக்கம் போட்டார்கள். அதற்காகப் பெரியார் மீது வழக்கும் போட்டார்கள். நீதிமன்றத்தில் பெரியார் பேசுகிறார்.

“நான் பேசவில்லை என்று சொல்லவில்லை. பேசினேன். ஜனநாயக வழி பயன்படாதபோது அதைப் பயன்படுத்தத் தான் கூறினேன். இப்போது அல்ல! தேவைப்பட்டபோது எரிக்கச் சொன்னேன். அக்கிரகாரத்தை தீ வைக்கச் சொன்னேன்” என்றார். மற்றொரு முறை 1960-களில் பெரியார் கூறுகிறார் –

“வாஞ்சிநாத அய்யர், ராமசாமி அய்யர் போன்றவர்கள் என்னிடம் வந்து, ‘என்னப்பா, நீ ராமாயணத்தை எரிக்கிறேன், புராணங்களை எரிக்கிறேன் என்றெல்லாம் பேசி வருகிறாய். பார்ப்பனர்கள் செய்த காரியங்களுக்காக சாஸ்திரங்களும், வேதங்களும் என்ன செய்தன?’ என்று கேட்டார்கள். ஏன் சங்கராச்சாரியாரே கடிதம் எழுதிக் கேட்டார். அதற்கு நான் கூறினேன், “எங்களை 2000-3000 ஆண்டுகளாக சூத்திரர்களாக, தாசி மக்களாக எழுதி வைத்திருந்து அக்கிரமம் செய்து கொண்டிருப்பதற்காக ‘உங்களை எல்லாம் கொன்றால்கூடத் தீராது’ என்று சொன்னேன்” - என்று பெரியார் பேசியிருக்கிறார்.

‘லட்சுமிபுரம் யுவர் சங்கம்’ என்ற பார்ப்பனர் அமைப்பில் பேசுவதற்கு பெரியார் அழைக்கப்பட்டு, அங்கும் தமது கொள்கைகளை வலியுறுத்தி இப்படிக் கூறுகிறார்-

“நான் இருக்கும் போதே, சிக்கல்களை எல்லாம் தீர்த்துக் கொள்ளலாம். வருங்கால தலைமுறை என்னைப் போல் அமைதியாக இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று 1953-ல் பேசியிருக்கிறார். 1953-ல் பேசியது 2006-ல் நடந்திருக்கிறது அவ்வளவுதான்! ஆனால் இப்படி யெல்லாம் இதையெல்லாம் பெரியார் சொல்லவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.

“பெரியார் தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும், ஆட்சிக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது. நம் ஆட்சி நடைபெறுகிறது. பெரியார்-அண்ணா ஆட்சியைக் கெடுத்து விடாதீர்கள்” என்று சொல்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களை ஆதரித்த பெரியார் - அப்படி ஆதரித்து வந்ததற்காக அமைதியாக இருந்தது கிடையாது.

காமராசரை ஆதரித்த பெரியார் தான், அவரது ஆட்சியில் தான் அரசியல் சட்டத்தை எரித்தார் - ராமர் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார் - தமிழகம் நீங்கிய இந்தியப் படத்தை எரித்தார். எல்லாப் போராட்டங்களும் காமராசர் ஆட்சியில்தான் நடந்தது. மூன்று வருடங்கள் தோழர்களுக்கு சிறைத்த தண்டனை கிடைத்தது. 5 தோழர்கள் சிறையிலேயே இறந்தனர். 13 பேர் விடுதலையான சிறிது காலத்தில் மரணமடைந்தனர்.

அப்படி இறந்த பின்பும் காமராசர் ஆட்சியை பெரியார் ஆதரித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், போராட்டங்களையும் நடத்தி வந்தார். அதற்காக அவர் கவலைப்பட்டதில்லை. “ஆட்சியை ஆதரிப்பது வேறு - கொள்கையைச் சொல்வது வேறு” என்ற கருத்தையே பெரியார் கொண்டிருந்தார்.

ஆனால், பெரியார் இயக்கத்துக்கு பொறுப்பானவர்கள், சொத்துக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் - ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று பேசுகிறார்கள். கொள்கைக்கு ஆபத்து இருந்தால் பரவாயில்லை, ஆட்சிக்கு மட்டும் ஆபத்து வரக்கூடாது என்கிறார்கள்.

திருத்தணியில் ஜெயலலிதா ஆட்சியில் பெரியார் சிலையை மூட்டைக் கட்டி தூக்கிப் போட்டார்கள். அதை நெடுஞ்சாலைத் துறை செய்தது. அப்போது அமெரிக்காவில் இருந்தவர் சொன்னார் - “தோழர்களே - கோபப்பட்டு விடாதீர்கள், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்றார். அப்போது “அம்மா” ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்றார். இப்போது “அய்யா” ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்று சொல்கிறார். நாங்கள் பெரியார் கொள்கைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது - என்று சொல்கிறோம். (பலத்த கை தட்டல்)

அதனால் தான் எங்கள் தோழர்கள் செய்தார்கள்! வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அது சரியா? தவறா? என்று நாங்கள் பேசிக் கொள்கிறோம். செய்த முறை தவறா? அடுத்த முறை எப்படிச் செய்வது? என்பதை தெளிவாக பேசிக் கொள்கிறோம். (கைதட்டல்) காந்தி இறந்தபோது இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தவர்கள் பார்ப்பனர்கள். சர்.ஏ.டி. பன்னிர்செல்வம் சென்ற விமானம் கடலில் விழுந்தது கண்டு மகிழ்ந்து கொண்டாடியவர்கள் பார்ப்பனர்கள்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது எங்கெல்லாம் இனிப்பு வழங்கினார்களோ, அங்குதான் தோழர் அடி கொடுத்தார்கள். தாக்கப்பட்ட எந்த இடத்திலும் தமிழர்கள் நுழைந்ததில்லை. சென்னை அயோத்தியா மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது, “இங்கு காவலர்கள் தவிர பார்ப்பனரல்லாதார் அனைவரும் வெளியில் சென்று விடுங்கள்” என்று ஒலிபெருக்கி வைத்து அறிவிப்பார்கள்.

சேலத்தில் உள்ள சங்கர மடத்தில், யஜுர் வேத பாடசாலயில், ஒரு தமிழன் எந்தக் காலத்திலும் உள்ளே சென்று பார்த்திருக்க முடியாது. இங்கே ஈரோட்டில் ராமரின் செருப்பு வைத்துள்ளதாகக் கூறப்படும் “பாதுகா” மண்டபத்தில் தமிழன் எப்போதாவது போயிருக்கிறானா?

நமது தோழர்கள் அருமையான இடமாகப் பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பெரியார் தொண்டர்கள் சட்ட விரோதமாககூட செய்வார்களே தவிர நியாய விரோதமாக என்றுமே செய்ததில்லை. இது நியாய விரோதம் என்று நாங்கள் கருதவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, தலித்துகளை மேலவளவு, நக்கலமுத்தான்பட்டி போன்ற இடங்களில் மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளில் கொன்றிருக்கிறார்கள். தூத்துக்குடி, வேலாயுதம்பாளையத்தில் ‘தலித்’ வீடுகளை சூறையாடி இருக்கிறார்கள். அவர்கள் மீதெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை. ஆனால், பூணூலை அறுத்தவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது.

நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்க முடியும்? நாங்கள் இதுவரை தவறாக நினைத்திருந்தோம். பெரியாரைக் கொஞ்சகாலம் பார்த்திருக்கிறீர்கள். உங்களுக்கு பெரியாரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அண்ணாவோடு பல காலம் இருந்திருக்கிறீர்கள். அண்ணாவைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று கருதினோம். நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள்.

எதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம்!

புலிகள் இங்கிருந்து இரும்பு உருளைகளை அலுமினிய கட்டிகளை எடுத்துச் சென்றார்களாம். அதனால் தேசத்துக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? இலங்கையில் இருந்து இங்கு ஏதாவது வந்தால்கூட ஆபத்து என்று சொல்லலாம். இங்கிருந்து இலங்கைக்குப் போனால் உனக்கு என்ன ஆபத்து? அதற்கு எதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம்?

‘இந்து’ பத்திரிகையில் எழுதிவிட்டான் என்பதற்காக இந்த நடவடிக்கை! முற்போக்கு, ஜனநாயகம், பெரியார் என்ற வார்த்தைகளை விட ‘இந்து’ ஏட்டிலுள்ள வாசகர் கடிதம் பகுதிதான் கலைஞருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. மிரண்டு போகிறார்.

‘இந்து’ ஏடே எழுதுகிறது என்றுதான் கலைஞர் கோடிட்டுக் காட்டுகிறார். ‘இந்து’ ஏட்டைக் காட்டி எழுதும் இழிநிலைக்கு கலைஞர் வந்து விட்டாரே என்றுதான் எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது.

பூணூலை அறுத்ததற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போடுகிறார், கேவலமாக! பெரியார் ஆரியர்-திராவிடர் என்று பிரித்துப் பார்த்துப் போராடினார். அண்ணா - வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று போராடினார். திராவிடர் என்பதில் உள்ள ‘ர்’ எழுத்தை விட்டு விட்டு, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று பெயரை வைத்துக் கொண்டு, இது மக்களைக் குறிப்பதல்ல, மண்ணைக் குறிப்பது என்றார்கள்.

பெரியார் ஆட்சி என்றால் ஆரியன் -திராவிடன் என்று பார்க்க வேண்டும். அண்ணா ஆட்சி என்றால் வடக்கு, தெற்கு என்று பார்க்க வேண்டும். நாங்கள் கேட்டோம், “உங்கள் ஆட்சியில் காவல்துறை இயக்குநர் ‘முகர்ஜி’ வங்காளத்துப் பார்ப்பனர், பெரியார் கொள்கைப்படி பார்ப்பனரை வைத்துள்ளது தவறு. அண்ணா கொள்கைப்படி வட நாட்டானை வைத்துக் கொள்வது தவறு.

தலைமைச் செயலாளர் திரிபாதி வட நாட்டுப் பார்ப்பனர். உள்துறை செயலாளர் மாலதி என்ற தமிழ்நாட்டுப் பாப்பாத்தி. எது பெரியார் ஆட்சி? எது அண்ணா ஆட்சி? இப்படிச் சொல்லிக் கொள்ள உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது? அப்படிச் சொல்ல யோக்யதை இல்லாதவர்கள் அதைச் சொல்லி ஏமாற்றாதீர்கள். பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு இதைச் செய்யாதீர்கள்.

நீதிபதிகள் எல்லாம் வடநாட்டவராக இருக்கிறார்கள் என்று எங்கள் பழைய தலைவர் போராட்டம் நடத்துகிறார். நீதிமன்றத்தில் ஆங்கிலம் தெரிந்த வழக்குரைஞர்கள் ஆங்கிலத்தில்கூடப் பேசிக் கொள்வார்கள். ஆனால், மக்களோடு நெருங்கிப் பழக வேண்டிய தொடர்பு கொண்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் தமிழகத்தில் பாதிக்கு மேல் வடநாட்டாராக இருக்கிறார்கள். ஈரோட்டில் ‘சோனல் மிஸ்ரா’ என்ற வடநாட்டு பாப்பாத்திதான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நமது தோழர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அணில்மேஷ்ராம், காவல் கண்காணிப்பாளர் அசோக்ராம் சின்கா - இருவரும் வடநாட்டுக்காரர்கள். மக்களோடு தொடர்புள்ள இந்தப் பதவிகளில் வடநாட்டார், பார்ப்பனர் இருப்பதற்குப் போராடாதவர்கள் - நீதிபதிக்காகப் போராடுகிறார்களாம்.

உங்கள் ஆட்சியில் தமிழர் ஆட்சியில், பெரியார் அண்ணா பெயரைச் சொல்லும் ஆட்சியில் வடநாட்டுப் பார்ப்பனர்களை உயர் அதிகாரிகளாக நியமித்துக் கொண்டு அந்தப் பேரைச் சொல்வது, நீங்கள் பழைய கலைஞர் இல்லை என்பதைத்தான் எங்களுக்கு உணர்த்துகிறது.

Pin It