“Periyar - A STUDY IN POLITICAL ATHEISM” என்னும் நூலை இலக்கிய/பண்பாட்டுக் கருத்தியல் வரிசையில், ஓரியன்ட் பிளாக் ஸ்வான் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டிருக்கிறது. வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கார்த்திக் இராம் மனோகரன் என்னும் ஆய்வாளர் பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய இந்த ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.

periyar a study in political atheismஒரு புதிய ஆய்வுப் பார்வையில், தந்தை பெரியாரின் நாத்திகம் எப்படி அரசியல் கருத்தியலாகவும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுமைக்கும் தேவையான கருத்தியலாகவும் இருக்கிறது என்பதை இந்நூலில் நூலாசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்நூல் ஆய்வுலகில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

தந்தை பெரியாரை ஒரு முழுமையான பகுத்தறிவாளர் என்றும், தத்துவங்களுக்கு எதிரானவர் (anti-philosopher) என்றும் முதல் அத்தியாயத்தில் அறிமுகப்படுத்தி, பெரியார் எப்படி உலக தத்துவச் சிந்தனையாளர்களிடமிருந்து தனித்து மாறுபட்டு இருக்கிறார் என்பதை முன்வைக்கிறார்.

‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்றும் ‘தமிழ்நாட்டின் ரூசோ’ என்றும் இங்கே பெரியாரின் மீதான ஒப்பீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நூலாசிரியர் இந்த ஒப்பீடுகள் மீதான கேள்வியை எழுப்புகிறார். பெரியாருக்கும் மற்ற தத்துவச் சிந்தனையாளர்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், பெரியார் எப்படி முற்போக்கான கருத்துகளை முன்வைத்து தனித்து விளங்குகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். சாக்ரடீஸ், பெரியார் இருவருமே கவிஞர்களையும் புலவர்களையும் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் சாக்ரடீஸ் புலவர்களை விமர்சித்தது கடவுளைத் தவறான முறையில் சித்தரித்ததற்காக. ஆனால் பெரியார் புலவர்களை விமர்சித்தது கடவுளைப் புகழ்ந்து பாடி மக்களைச் சிந்திக்க விடாமல் மூடர்களாக வைத்திருந்ததற்காக. தந்தை பெரியாரின் ‘பகுத்தறிவு’ சாக்ரடீஸின் ‘ஆன்மீகத் தத்துவங்களில்’ இருந்து வேறுபடுவதை இங்கே நூலாசிரியர் சுட்டிக் காண்பிக்கிறார். பாதிரியார்களையும், தேவாலயங்களையும் விமர்சித்த ரூசோ மக்களுக்கு மதம் வேண்டுமென்று நம்பினார். அதேபோல் வால்டர், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்தி இருப்பதாக நம்பினார். எனவே தந்தை பெரியாரைத் தமிழ் நாட்டின் ரூசோ என்றோ வால்டேர் என்றோ ஒப்பிட முடியுமா என்கிற கேள்வியை எழுப்புகிறார்.

தந்தை பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிற, விமர்சனத்திற்கு உட்படுத்துகிற, தெளிவை ஏற்படுத்துகிற, பார்ப்பனிய அரசியலை அகற்றுகிற - நாத்திக அரசியல் என்பதை இந்த நூலின் முதன்மையான கருத்தாக முன்வைக்கிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில் அரசியல் நாத்திகம் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார். இதில் மார்க்சியத் தத்துவங்களோடும், அனார்க்கிஸம்(anarchism) எனும் அரசின்மைக் கொள்கையான மிக்கேல் பக்குனின் (Mikhail Bakunin) தத்துவங்களோடும் தந்தை பெரியாரின் எழுத்துகளை ஒப்பிட்டு, பெரியாரியம் என்பது மார்க்சியம் அனார்க்கிஸம் இரண்டுக்கும் இடையிலான, இரண்டும் அல்லாத ஒரு தத்துவமாக இருப்பதை விளக்குகிறார்.

பெரியார் சோவியத் ரஷ்யா சென்று வந்ததையும், மார்க்சியச் சிந்தனைகளைத் தமிழில் வெளியிட்டதையும் முன்வைத்து, பெரியாரின் கம்யூனிச ஆதரவையும் எடுத்துரைக்கும் அதே நேரத்தில், அவர் எப்படி “அதிகாரம்” என்பது எந்த மட்டத்திலும் இருப்பதை எதிர்த்தார் என்கின்ற கருத்தையும் முன்வைக்கிறார். இதன்மூலம் தந்தை பெரியாரின் கருத்துகள் கிட்டத்தட்ட அனார்க்கிஸத்திற்கு அருகில் இருக்கின்றன என்பதை இங்கே விவரிக்கிறார். மார்க்சியப் பெரியாரிய அறிஞர்கள் எஸ். வி.ராஜதுரை, வ.கீதா போன்றவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை என்பது மார்க்சியமே என்று பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியதைச் சுட்டிக்காட்டி, ஆனால் தந்தை பெரியாரின் கொள்கை என்பது மார்க்சியத்தை விடவும் அனார்க்கிஸத்திற்குத்தான் மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்கிற தன்னுடைய வாதத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

இரண்டு மதங்களைப் பெரியார் ஆதரித்ததையும், இஸ்லாமிய மதமாற்றத்திற்கு வலுவாகக் குரல் கொடுத்ததையும் முன்வைக்கும் நூலாசிரியர் அவற்றை ஒரே வரியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“We must realize that these are moments in Periyars’s thoughts and not the essence of Periyars’s thoughts” (இவை பெரியாரின் சிந்தனைகளின் சில கணங்களே தவிர சாரம் அல்ல)

அதேபோல் செக்யூலரிஸம் (மதச்சார்பின்மை) விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு, போஸ்ட்-செக்யூலரிஸம் என்ற கருத்தியல் இன்று முன்வைக்கப்பட்டு, மத அடையாளங்களை அரசியலில் முன்னெடுப்பவர்களிடமிருந்து மட்டும் பெரியார் வேறுபட்டு நிற்கவில்லை. புதிய நாத்திகர்களாக (New Atheists) மதங்களை மட்டும் தாக்கும் வேளையில் நாட்டையும் அரசையும் விமர்சிக்காத நாத்திகத்திலிருந்தும், பெரியாரின் நாத்திக அரசியல் வேறுபட்டு நிற்கிறது என்பதை நூலாசிரியர் நிறுவுகிறார்.

தமிழ்நாடு நாத்திக நாடாக மாறவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கையும் மதமும் மக்கள் மனங்களில் இருக்கிறதேயன்றி, அவர்களின் அரசியல் அடையாளமாக இல்லை. அதுவே பெரியாரின் நாத்திக அரசியல் என்பதைக் கூர்மையாகச் சொல்கிறார். பெரியாரின் இந்த நாத்திக அரசியலே, மானுட விடுதலையின் அடிப்படையிலான, சமூக நீதிக்கான சமத்துவ உலகிற்கான கருத்தியலாக, நூலாசிரியர் இவ் ஆய்வின் மூலம் முன்வைக்கிறார்.

பெரியாரின் சிந்தனைகள் புத்துலகைப் படைத்துக் கொண்டே இருக்கும்!

- உதயகுமார்

Pin It