நவம்பர் 1 மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நாள். இதற்காகப் போராடிய, எல்லை மீட்ட அத்துணை தியாகிகளையும், நினைவு கூறுவோம் வீரவணக்கம் செலுத்துவோம். இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாடு முழுவதும் எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956 நவம்பர் 01 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் ஒன்பது மாநிலங்களாக இருந்த இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரையில், சென்னை மாகாணத்துக்குள் இருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அம்மொழிகள் பேசும் மக்கள் வசித்த பிற நிலப்பகுதிகளோடு இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் என்ற மாநிலங்கள் உருவாயின. தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாகவே நீடித்தது.
இந்த நிலையில், மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்" என 2019-ல் அதிமுக அரசு அறிவித்தது. பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் நவம்பர் 1-ம் தேதி எல்லை பிரிந்ததையொட்டி எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். ஆட்சி மாறிய பிறகு, தற்போது ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை 2022 ல் வெளியிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம்
1918 ஆம் ஆண்டு மாண்டேகு-செம்சுஃபோர்டு குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் நேரத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியும் மொழி உணர்வு அடிப்படையில் தன் கட்சியைப் பிரிக்க முடிவு செய்தது. அதன்படி ஆந்திர காங்கிரசு கமிட்டி, கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரை சூட்டிக் கொள்ளவில்லை. மாறாக கர்நாடக மாநிலம் கேரளம் என தென்னக காங்கிரஸ் கட்சி பிரித்து அமைக்கப்பட்ட நிலையில் தனித்து விடப்பட்டு வேறு வழியே இல்லாமல் போனதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர் வைக்கும் சுழலுக்கு தள்ளப்பட்டனர். இது தெரியாமல் சீமான் போன்றவர்கள் ஜூலை 18 ல் தான் எங்களுக்கு தமிழ்நாடு பெயர் வந்ததா? தொல்காப்பியத்தில் இல்லையா? சங்க இலக்கியத்தில் இல்லையா? அண்ணாதான் வைத்தாரா? அண்ணா வைப்பதற்க்கு முன்பே அய்யா காமராசர் இருக்கும்போதே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்று இருந்தது என்று வரலாறு தெரியாமல் உளறுகிறார். அப்படி காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு பெயரின் மீது அக்கறை இருந்திருந்தால் தமிழ்நாடு பெயருக்காக உண்ணாநிலை இருந்த சங்கரலிங்கனாரின் கோரிக்கையை நிறைவேற்றி உயிரை அல்லவா காப்பாற்றி இருக்க வேண்டும். இந்த மாகணத்துக்கு தமிழ்நாடு என்று அவர்கள் அல்லவா பெயர் சூட்டியிருக்கவேண்டும். மாறாக காமராசர்தான் அதை செய்யவில்லை என்று துணிவாக சொல்லிவிட முடியுமா?
இந்த நிலையை அண்ணாவுக்கோ அல்லது கலைஞருக்கோ ஒப்பிட்டு பாருங்கள்... இவர்கள் ஆட்சியில் இப்படி நடந்திருந்தால் திராவிட தலைவர்கள் தமிழர்களை கொன்றுவிட்டார்கள் என்றல்லவா வீசிருப்பார்கள். ஆனால் திராவிட இயக்காதவர் இல்லை என்பதாலே காமராஜரை ஆதரித்து செல்லும் போக்குதான் தொடர்கிறது. காமராஜரை பழித்துரைக்க வேண்டும் என்பதல்ல நோக்கம். திராவிட தத்துவ அரசியலை விமர்சிக்கும் நேர்மையாளர்களின் நேர்மை தன்மை எப்படிபட்டது என்பதை புரிந்துக்கொள்ளவே சொல்லபடுகிறது. தங்களின் சுயலாப அரசியலுக்காக சங்கரலிங்கனாரின், காமரசாரின் புகழ்பாடும் அரைவேக்காடுகள் தவறியும் உண்மையை சொல்வதில்லை.
'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956, ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகள்:
1) மொழி வாரி மாநிலங்கள் அமைக்க வேண்டும்.
2) மெட்ராஸ் ஸ்டேட் (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும்.
3) ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை அளிக்கக்கூடாது.
5) அரசுப்பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும்.
6) அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல எளிமையாக வாழ வேண்டும். ஆடம்பர செலவுகள் செய்யக்கூடாது.
7) தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்.
8) மாணவர்களுக்கு தொழிற்கல்வி அளிக்க வேண்டும்.
9) நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
10) விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 சதவீதம் அளிக்க வேண்டும்.
11) இந்தியை மட்டும் மத்திய அரசு அலுவல் மொழியாக பயன்படுத்தக்கூடாது
12) பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதை தடுக்க வேண்டும்.
சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள் அன்றைய காங்கிரஸ் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை . இந்த 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரிடம், அவரது உடல்நிலை கருதி போராட்டத்தை கைவிடும்படி ஜீவானந்தம், கக்கன், மா.பொ.சி, பேரறிஞர் அண்ணா ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால், தனது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்த சங்கரலிங்கனார் உடல்நிலை மிக மோசமான நிலையை எட்டியது. 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார். சங்கரலிங்கத்தின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. தமிழ்நாடு பெயர் மாற்றம் பற்றி 'விடுதலை'யில் தொடர்ந்து தந்தை பெரியார் அறிக்கைகள், தலையங்கங்கள் மூலம் வற்புறுத்தியே வந்தார்.
சங்க இலக்கியங்களில் தமிழ்நாடு
தொல்காப்பியத்தில் "தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகம்" என்று தான் பனம்பரனார் குறிப்பிட்டுள்ளாரே தவிர தமிழ்நாடு என்று குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாட்டைக் காண முடியவில்லை. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய புறப்பாடலில், “கைவல் ஈகைக் கடுமான் கொற்ற வையக வரைப்பி்ல் தமிழகம் கேட்ப” என்றும், பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதனை இமயவரம்பன் ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார் இரண்டாம் பத்தின் பதிகத்தில், “அமைவரல் அருவி இமையம் விற்பொறித்து, இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க" என்றும் தமிழகம் என்ற பெயரே தமிழ்நாட்டைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் எல்லை “இமிழ்கடல் வேலித் தமிழகம்” என்று சுட்டப்படுகிறது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில் “வட வாரியர் படை கடந்து தென்தமிழ்நாடு ஒருங்கு காண்" என்றும்,மேலும் பல இடங்களில் தமிழ்நாடு என்று வருவதை அறிய முடிகிறது. அதன் பிறகு பல்வேறு தமிழ் இதழ்களை பயன்படுத்தி வந்தாலும், நமது தாய்நாடு தமிழ்நாடு என்று மக்கள் மத்தியில் எழுத்துக்களிலும் பேச்சுகளிலும் கொண்டு சென்ற பெருமை தந்தை பெரியாரை சாரும்.
தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம்
பார்ப்பனர் அல்லாதாரை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் 1917 இல் ”திராவிடன்” இதழ் தோற்றுவிக்கப்பட்டது. என்.பத்வாச்சலம் பிள்ளை அவர்களை ஆசிரியராக கொண்டு திராவிடன் என்னும் தமிழ் நாளிதழை தொடங்கியது நீதிகட்சி இந்த இதழின் பத்தாவது ஆண்டில் விற்பனை சரிந்து இதழ் நின்று விடும் நிலைக்கு சென்று விட்டபோது, தந்தை பெரியார் அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்; திராவிடன் இதழ் (சீர்திருத்தம், மொழிப்பற்று, வருணாசிரமம் எதிர்ப்பு போன்ற பல நிலைகளில் செயல்பட்டது) மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை குறிப்பிட்டு, "அவ்விதழ் தொடர்ந்து வெளி வருவதற்கு “தமிழ்நாட்டு” மக்கள் துணை நிற்க வேண்டும்" என்று பெரியார் வேண்டுகிறார். 20.03.1927 ஆம் நாளிட்ட குடியரசு ஏட்டில் வெளியான பெரியாரின் சொற்பொழிவிலும், 10.04.1927 ஆம் நாளைக்கு குடியரசு இதழிலும் தமிழ்நாடு என்று சொல்லாட்சியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். மேலும் பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராசலு நாயுடு 17.04.1927 ல் "தமிழ்நாடு" எனும் தாளிகையை தொடங்கினார்.
1956, நவம்பர் 1-ம் தேதி முதல், மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பிய பெயரே சூட்டப்பட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 'மதராஸ்' என்ற பெயரே தொடரும் என அறிவித்தது ஒன்றிய அரசு. ஹிந்தி மொழியை கட்டாயமாக தமிழ் மக்கள் மீது திணிப்பது என்ற நடவடிக்கை எடுத்த ராஜாஜியை பெரியார் கடுமையாக எதிர்த்து கொண்டு இருந்தார். 1937 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் எழுந்த நாவலர் சோமசுந்த பாரதியார் தந்தை பெரியாரோடு தன்னை இணைத்துக் கொண்டார். ராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சரான உடன் கட்டாய இந்தியை பள்ளிகளில் புகுத்தியதை எதிர்த்து 1937 ல் காஞ்சியில் இந்திய எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார் பெரியார். திருச்சியில் இருந்து இந்தியை எதிர்த்து தமிழர் பெரும்படை ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. 01.08.1938 ல் சென்னையை அடைந்த தமிழர் பெரும்படை சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 70000 பொதுமக்கள் கூடிய வெற்றி கூட்டமாக அமைந்தது. 1938 ல் திருவல்லிக்கேணி கடற்கரையில் தந்தை பெரியார் அவர்கள் எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் முழங்கப்பட்ட முதல் குரல்தான் ''தமிழ்நாடு தமிழருக்கே'' என்பதாகும். தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை வைப்பது வெறும் மொழி அடிப்படையில் மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். தமிழ்நாடு தமிழருக்கு என்ற முழக்கத்தை பெரியார் முன்வைப்பதற்கு பல காரணங்கள் இருந்தன என்று அவரே குடியரசு ஏட்டில் எழுதுகிறார்;
தமிழ்நாட்டு தொழில் முறைகள் தமிழனுக்கு பயன்படவில்லை; இரும்புத் தொழில் பம்பாய்க்காரர்; பாரசீகர்கள் உரிமை பெற்று பயனடைகிறார்கள். உலோகத் தொழிலிலும் பம்பாய்க்காரர்கள்; துணி தொழிலை பம்பாய், அகமதாபாத்காரர்கள் கைப்பற்றி பயனடைகிறார்கள்; தமிழ் தொழிலாளிக்கு இங்கு வேலை இல்லை ; லேவா தேவி தொழிலை எடுத்துக் கொண்டால் அவை பெரிதும் மார்வாரின் நாட்டாலும் குஜராத்தி நாட்டாமை ஏகபோக உரிமையாக்கி அவர்கள் கொண்டு போகும் செல்வம் கொஞ்சமா ? அவை எப்படிப் போகின்றன என்பதைப் பார்த்தால், தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள். ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத் திருகிக் கொண்டு போவது போல் போகிறார்கள். மார்வாரிகள் கொண்டு இவ்வாறு ஏமாற்றி வஞ்சித்துத் தேடும் செல்வம் அத்தனையும் பகற்கொள்ளை - வட்டிக் கொள்ளை என்று சொல்லப்படுவதுபோல், கோடி கோடியாய்ச் சிந்து மாகாணத்திற்கு வட்டியின் பேரால் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் பயனாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் வர்த்தகர்கள் மிக மோசமான நிலைக்கு வந்து விட்டார்கள். மணல்வீடு கட்டிச் சரிந்து மட்டமாவது போல் தமிழ் வியாபாரிகள் தினம் தினம் கடன்காரராகி பாப்பராகி இன்சால்வென்டாகித் தற்கொலை செய்து கொள்வதும் நாட்டை விட்டு ஓடுவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள்.
அரசியல் துறையிலும் நாம் (தமிழன்) வேறு நாட்டானுக்கே அடிமையாய் இருக்க வேண்டுமானால் அது மேல் நாட்டானுக்கு அடிமையானால் என்ன? வடநாட்டானுக்கு அடிமையானால் என்ன? தமிழனின் செல்வம் தானாகட்டும் தமிழ்நாட்டை விட்டுக் கடத்தித்தான் ஆக வேண்டுமானால் அது மேல் நாட்டுக்குப் போனால் என்ன? வடநாட்டுக்குப் போனால் என்ன? எனவே தோழர்களே! உதைக்கும் காலுக்கு இதுவரை முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம்; மானமிழந்தோம்; பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக - வடநாட்டானுக்கும் தமிழனல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில், தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுதோறும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே! என்று முடிக்கிறார். மொழி அடிபடையில் தமிழ்நாடு கேட்கவில்லை, பெரியார் கேட்டது பார்ப்பன ஆதிக்கமற்ற, ஜாதி ஒழிந்த, பொருளாதார தன்னிறைவு பெறும் பூரண சுதந்திர தனித்தமிழ்நாடு. மாறாக மொழி என்ற அடைபடையில் மட்டும் தமிழரின் வளர்ச்சியை அணுக்கவில்லை. தமிழர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கருத்தல் கொண்டே தமிழ்நாடு என்பதை அணுகினார். பெரியாரின் இந்த பொதுநோக்கு அப்போது இருந்த தலைவர்களுக்கும் இல்லை, இப்போது இருக்கும் தலைவர்களுக்கும் இல்லை என்பதே உண்மை.
இத்தகைய விடுதலைப் போர் முழக்கத்தைக் கேட்டதும் காங்கிரஸ்காரர்களும், இன எதிரிகளும் அதிர்ச்சியடைந்து போனார்கள். அதன் பின்னர் 21.11.1939 தொடங்கி 25.11.1939 வரை அய்ந்து நாள்கள் விடுதலை இதழில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற தலைப்பில் அய்ந்து தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில், தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்றுதான் பொருள்; இது தமிழ்நாடு பிரிவினையைக் கருத்தில் கொண்டு அல்ல என்றும், திராவிட மக்களின் நாகரிகம், பண்பாடு, கலை, தொழில், இலக்கியம் முதலானவை ஆரியர்களின் நாகரிகப் பண்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும் பல்வேறு சான்றுகளோடு பெரியார் விளக்குகிறார். அதுமட்டுமில்லாது 11.10.1955 அதில் விடுதலையின் இரண்டாம் பக்கத்தில் சென்னை ராஜ்ஜியம் அல்ல தமிழ்நாடு என்று கூறுவோம்; என்று பெரிய எழுத்தில் அச்சீட்டு எழுதி இருக்கிறார் பெரியார். 1930 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டு பேச வேண்டிய இடங்களில் எல்லாம் தமிழ்நாடு என்று தான் பேசும் எழுதியும் வந்துள்ளார். இப்படி பல்வேறு கட்ட பணிகளில் தமிழருக்காகவும், தமிழ்மொழிக்காகவும், தமிழ்நாடு என்கின்ற பெயருக்காகவும் தொடர்ச்சியாக பெரியார் செயல்பட்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டவேண்டும் என்று 1955 அக்டோபரில் தந்தை பெரியார் கோரிக்கை விடுத்தார்.
திமுக அரசின் சாதனை – தமிழ்நாடு பெயர் சூட்டல்
1957-ல் திமுக முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது. 1957, மே 7-ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த திமுக-வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. அதன் பிறகு 1961, ஜனவரியில் சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.சின்னத்துரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்ற வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தபோது, அப்போதைய முதல்வர் காமராஜர் அந்த விவாதத்தைப் பிப்ரவரி வரை ஒத்தி வைத்தார். அதையடுத்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மூன்று நாள்கள் புறக்கணித்தன. அதன் பிறகு நிர்வாகக் கடிதங்களில் மட்டும் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதற்கு பதிலாக 'தமிழ்நாடு' எனக் குறிப்பிட காமராஜர் ஒப்புக்கொண்டார்.
1961-ல் ஒன்றுபட்ட மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேஷ் குப்தாவும், 1964-ல் திமுக உறுப்பினர் இராம. அரங்கண்ணலும் 'மெட்ராஸ் ஸ்டேட்' விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன. அதன் பிறகு திமுகழக ஆட்சி அண்ணா தலைமையில் அமைந்ததன் விளைவாகவே 18 ஜூலை 1967 இல் முதலமைச்சர் அண்ணாவே தனி தீர்மானம் கொண்டு வந்து, அதை சட்டமாக்கினார்,ஒருமனதாக அச்சட்டம் நிறைவேறியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட அந்நாள் 18 ஜூலை 1967 வரலாற்றில் போற்றத்தகுந்த பொன்னாளாகும். ''தமிழ்நாடு'' என்று முதலமைச்சர் அண்ணா முன்மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ''வாழ்க'' என்று மும்முறை வாழ்த்தொலியை எழுப்பினர். ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 யை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதுதான் வரலாற்று ரீதியாக பொருத்தமானதாக இருக்க முடியும். ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு 1967, ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. தமிழ்நாடு பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.
பெரியார் – அண்ணா திராவிட ஒவ்வாமையே காரணம்
தமிழ்நாடு உருவான நாள் என்று, இந்திய ஒன்றியத்தில் இருந்து மதராஸ் மாகாணம் பிரிந்ததை கொண்டாடுவது என்பது பொருந்தாது. அது தெளிவாக தெரிந்தும் கூட எதற்காக மொழிவாரியாக மற்ற மாநிலங்கள் பிரிக்கபட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடவேண்டும் என்கிறவர்களின் எண்ணம் இதுவாகதான் இருக்க முடியும், இங்கே அண்ணா அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 கொண்டாடினால், அதற்கு முதலில் பெயர் வைக்கச் சொன்னது தந்தை பெரியார் என்றும், அந்த கோரிக்கைக்காக உயிர்நீத்தவர் சங்கரலிங்கனார் என்றும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரை சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் உழைப்பு இளம் தலைமுறைக்கு புலப்பட்டுவிடும் என்பதற்காகவே, அடுத்த தலைமுறையிடம் இந்த வரலாற்றை தெரியப்படுத்தாமல், இருட்டடிப்பு செய்கிற வேலையை இன்றைய தமிழ் தேசியவாதிகளும், பெரியார் உணர்வாளர்கள் என்கின்ற போர்வையில் இயங்கும் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும், திட்டமிட்டு நவம்பர் 01 ஆம் நாளை கொண்டாடபடுவததென்பது நடக்கிறது. இச்செயல் முற்றிலும் பெரியார், அண்ணா, திராவிடர் இயக்கத்தின் மீதான வெறுப்பே தவிர வேறு எதும் இல்லை.
தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் திராவிட இயக்கத்தவர் என்று தவிர்த்து விட்டாலும் கூட, ஐயா சங்கரலிங்கனார் தியாகத்தை அவர்கள் எப்போதும் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் அவர் திராவிடர் இயக்கத்தவர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, ஒருவேளை சங்கரலிங்கனார் அவர்கள் திராவிடர் இயக்கத்தவராக இருந்திருந்தால், அவரையும் அலட்சியப்படுத்தி அவரையும் கைவிட்டு இருப்பார்கள். நல்லவேளையாக சங்கரலிங்கனார் காங்கிரஸ் கட்சியாக இருந்து விட்டார். பெரியாரோடும் அண்ணாவோடும் திராவிட இயக்கத்திலிருந்து இருந்தால் இன்றைக்கு சங்கரலிங்கனாரின் நிலைமை என்னவாகி இருக்கும்? தூற்றளுக்கும் அவதூறுக்கும் ஆளாக்கிருப்பார்கள் போலி தமிழ்தேசிய வியாதிகள்.
''கேரளாவில், மாநிலங்கள் பிரிக்கபட்ட நவம்பர் 1 ஆம் தேதியை "கேரள பிறவி தினம்" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். கர்நாடகத்தில், 'ராஜ்யோத்ஸவம் நாள்' எனக் கொண்டாடுகிறார்கள். திமுக இந்த நாளை 'எல்லைப் போராட்ட தியாகிகள் நாள்' என்றே அனுசரித்து வருகிறது. தமிழ்நாடு போன்று மற்ற மாநிலங்களிலும் மெட்ராஸ் என்ற பெயரை மாற்ற தனிபெயர் சூட்டப்பட்டிருந்தால் அந்த நாளை தான் மாநில நாளாக கொண்டாடி இருப்பார்களோ தவிர, அவர்கள் மாநிலத்தில் இருந்து பிற பகுதிகள் பிரிந்த நாளை, மாநிலத்தில் இருந்து பகுதிகள் பிரிந்த (அ) இழந்த நாளாக தான் ஏற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால் நமது பகுதிகள் இழந்த நாளை " தமிழ்நாடு நாள்" என்று கொண்டாடினால், பிறகு போராடி பெயர் சூட்டிய நாளை என்னவென்று கொண்டாடுவது ? பெயர் சூட்டிய நாளை கொண்டாட மனம் வரதாதற்கு காரணம் அது திராவிட முன்னேற்ற கழகம் செய்தது, அண்ணா செய்தார் என்பது தான் அரசியல் ரீதியான ஒரே காரணம்.
தமிழ்நாட்டிற்க்கு கிடைக்க வேண்டிய பல பகுதிகளை இழந்தாலும் நாமும் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கபட்ட நாளை வரவேற்கிறோம். கொண்டாடுகிறோம். நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் உண்மையை அறிஞர் அண்ணாவின் உழைப்பை மறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கொண்டாடப்படுகிற நாளாக போலி தமிழ் தேசியவாதிகளுக்கும், பெரியாரியாரை ஏற்கிறோம் ஆனால் திராவிடத்தை ஏற்க மாட்டோம் என்கிற, இயக்கங்களுக்கு தான் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் உகந்த நாளாக உள்ளது. 1956 நவம்பர் 01 மெட்ராஸிலிருந்து பிற பகுதிகள் பிரிந்த போது தமிழ்தேசியர்களின் தந்தை என்று ம.பொ.சி யை சொல்லி கொள்ளும் தமிழ்தேசிய கட்சிகளும், இயக்கங்களுக்கும் கூட ம.பொ.சி என்ன சொன்னார் என்பதை அறிதல் நன்று. ம.பொ.சி நவம்பர் 01 யை "தமிழரசு நாளாக" கொண்டாடுங்கள் என்று தானே சொன்னார். தமிழரசு நாள் என்றுதான் கொண்டாடினார்கள் அன்றைய தமிழ்தேசியவாதிகள். ஆனால் இன்று வம்படியாக தமிழ்நாடு நாள் நவம்பர் 1 தான் என்று கொண்டாடுவது ஏன் என்று புரிந்தால் சரி. மேலும் 1956 நவம்பர் 1 ல் தமிழ்நாடு என்று பெயரும் சூட்டபடவில்லை, அதனால் தான் ம.பொ.சி அவர்களும் தமிழரசு நாள் என்றுதான் சொன்னாரே தவிர தமிழ்நாடு நாள் என்று சொல்லவில்லை. மொழிவாரி மாநிலம் பிரிக்க பட்டபோது தமிழ்நாடு என்ற பெயர் முன்பே இருந்திருந்து, பிரிந்திருந்தால் தமிழ்நாடு நாள் என்றுதானே நாமும் கொண்டாடி இருப்போம். மாநிலம் பிரிக்கும் போது தமிழ்நாட்டிற்க்கு மெட்ராஸ் ஸ்டேட் என்று தான் பெயர். தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் சட்டமன்றதில் தோற்கடிக்கபட்டு, மீண்டும் அண்ணா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய பின்னர் தானே தமிழ்நாடு..
2019 ல் அன்றைய அதிமுக அரசு திமுகவின் சாதனை என்பதால் வீம்புக்கு, பொருந்தாத நவம்பர் 01 தான் தமிழ்நாடு நாள் என்று அறிவித்தது. அதை திராவிட இயக்க எதிர்பாளர்களும், திமுக எதிர்பாளர்களும் பிடித்துக் கொண்டு தொங்குவது எந்த வகையில் நியாயம். 'மெட்ராஸ் ஸ்டேட்'டிலிருந்து பிரிந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா மாநிலங்கள் உருவான நாள் நவம்பர் 01. அன்று மெட்ராஸ் ஸ்டேட் தனது பகுதிகளை இழந்த நாள். இன்றைய வடிவில் அன்று மெட்ராஸ் ஸ்டேட் சுருக்கப்பட்டது. சுருக்கபட்டதற்கு அல்லது மெட்ராஸ் ஸ்டேட்டிடமிருந்து பிற மாநிலம் பிரிந்து தனி மெட்ராஸான நாளை "தமிழ்நாடு நாள்" என்று கொண்டாடுவது பொருந்தாது. பல ஆண்டுகளாக இது கொண்டாடப்படவும் இல்லை. வேண்டுமானால் “மெட்ராஸ் ஸ்டேட் நாள்” என்று கொண்டாடி கொள்ளலாம். பிரிந்தபோது மெட்ராஸ் என்பதுன் தான் பெயர். தமிழ்நாடு என்று இருந்திருந்தால் தமிழ்நாடு நாள் என்றே ஏற்றிருப்போம். 1967 ல் அண்ணா அவர்களால் கொண்டுவந்ததனால் ஏற்கமுடியாதவர்கள்தான், மெட்ராஸில் இருந்து மற்றபகுதிகள் பிரிந்த நாளை தமிழ்நாடுநாள் என்கிறார்கள். நவம்பர் 01 என்பது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது அதில் தமிழ் பேசும் மக்கள் பகுதியும் பிரிந்தது. அப்பகுதிக்கு மெட்ராஸ் என்று தான் பெயரே தவிர தமிழ்நாடு என்று இல்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டாதபோது எப்படி தமிழ்நாடு நாள் என்று கொண்டாட முடியும்? பெயர் சூட்டாதநாளை கொண்டாடும் ஒவ்வாமைகார்கள், பெயர் சூட்டியநாளை என்னவென்று கொண்டாடுவர்? பெயர் சூட்டியநாளை கொண்டாடப்பட்டு விடக்கூடாது என்பதால்தான் மாநிலங்கள் பிரிந்தநாளை கொண்டாடுகின்றனர். ஏன் இந்த வெறுப்பு, யார் மீதான வெறுப்பு என்பது அவர்களின் சிந்தாந்தத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டதில் இருக்கும் அரசியல் சிறப்பு வாய்ந்தது, தியாகம் செரிந்தது, திராவிட அரசியலின் பெயர் சொல்வது, கொண்டாடத்தக்கது. திராவிட அரசியல் ஒவ்வாமையால் வரலாற்றை மாற்ற துடிக்கும் கும்பல்கள்தான் இந்த வரலாற்று திரிபை கையில் எடுத்துள்ளனர். மெட்ராஸ் ஸ்டேட் பிரிக்கபட்டு தனி மெட்ராஸ் ஸ்டேட் உருவானது நவம்பர் 1-ம் தேதி. சென்னை மாகாணத்துக்கு, `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பெயர் சூட்டிய நாள் 1967, ஜூலை 18-ம் தேதி. பிறகு `தமிழ்நாடு’ என்று 1969, ஜனவரி 14-ம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டவடிவத்தையும் பெற்றது! எனவே தமிழ்நாடு நாள் என்ற பெயரில் நாம் கொண்டாட வேண்டிய நாள் ஜூலை 18 தான்! தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய திருநாள் அதுதான்! திராவிட இயக்கம், தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று அண்ணா அவர்கள் பெயர் சூட்டிப் பெருமையடைய வைத்த நாள் ஜூலை 18. முதன் முதலாக நம் உறுப்பினர்கள் சட்டமன்றதில் தமிழ்நாடு வாழ்க என்று முழங்கிய நாள் ஜூலை 18. சங்கரலிங்கனாரின் கனவு மெய்பட்டநாள் ஜூலை 18. தந்தை பெரியாரின் தமிழ்நாடு போராட்டத்தை வென்றெடுத்த நாள் ஜூலை 18. அதை விடுத்து மெட்ராஸில் இருந்து சில மாநிலங்கள் பிரிக்கபட்ட நாளோ அல்லது ஒன்றிய அரசு தமிழ்நாடு என்ற பெயருக்கு ஒப்புதல் அளித்த நாளோ நமக்கு பெருமை சேர்க்காது என்பதே உண்மை.
நமது உறுப்பினர்கள் முன்மொழிந்து மகிழ்வடைந்த நாளே நம் பெருமைக்குரிய நாளாக கருத முடியும். ஒருபோதும் திராவிடர் இயக்கம், திராவிட இயக்கத்தைச் சார்ந்த தலைவர்கள், உழைத்தார்கள் அவர்களின் முன்முயற்சியால் இவை கிட்டியது என்பதை வரலாற்று ரீதியாக உண்மையில் கூட ஏற்றுக் கொள்ள மனம் இல்லாத கும்பல்கள் தான் இன்றைக்கு தமிழக இளைஞர்களை, திசை மாற்றிக் கொண்டிருக்கிறது. பெரியாரையும் பெரியாருடைய செயல்பாடுகளையும், அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் செயலை நேரடியாகவே செய்து வரும் திராவிட ஒவ்வாமை கொண்டவரின் அரசியல் இவை. திராவிடம், திராவிட அரசியலை எதிர்ப்பது என்பது இன்றைய இளையோர்களின் நேர்மை தன்மை என்று நம்பவைத்து வரலாறை தெரியபடுத்தாமல் வெறும் உணர்ச்சியூட்டும் கதைகளை கொண்டாடும் இடத்திற்க்கு தமிழ்தேசியம் வந்துள்ளது. நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 இரண்டையும் கொண்டாடலாம் என்று பெரியார் கூட்டமைப்பில் இருக்கும் அமைப்புகள் கூறுவதும், இல்லை இல்லை நவம்பர் 1 தான் என்று சில அமைப்புகள் கூறுவதும் நகைசுவையாக உள்ளது. ஆனால் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுபவர்கள், தமிழ்நாடு என்று பெயர் சூட்டபட்ட ஜூலை 18 ஆம் நாளை கண்டுகொள்வதே இல்லை. இதை தான் திராவிட ஒவ்வாமை என்று பார்க்கவேண்டி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 ஆம் நாளைத் “தமிழ்நாடு நாள்” என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது பொருத்தமானது, வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் வாய்ப்பாக அமையும்.
மேலும், இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர்.
இந்த வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக அறிவித்தார். மேலும், நவம்பர் 1-ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாகக் கொண்டாடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனவே, நவம்பர் 1-ஐயும் ஜூலை 18-ஐயும் ஒரே நாளின் அடையாளமாகக் கருதுவது வரலாற்று வேறுபாடுகளை மறைக்கும் செயலாக அமையும். நவம்பர் 1 மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகங்களையும் நினைவுபடுத்துகிறது. ஜூலை 18 தமிழ்நாடு என்ற பெயருக்காக நடைபெற்ற போராட்டங்களின் வெற்றியையும், தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தையும் நினைவுபடுத்துகிறது.
இது எந்த அரசியல் கட்சியின் சாதனையை முன்னிறுத்துவதற்கான விவாதமும் அல்ல. ஒரு மாநிலத்தின் வரலாற்றை அதன் உண்மையான பின்னணியோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதற்கான விவாதம். பேரறிஞர் அண்ணாவின் பெயர் மாற்றத் தீர்மானம் ஒரு கட்சியின் ஆட்சியில் நிறைவேறியிருக்கலாம்; ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் உரியது.
வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்குரிய அடையாளமும் முக்கியத்துவமும் உண்டு. அந்த வேறுபாட்டைப் பாதுகாப்பதே வரலாற்றுக்கு நாம் செய்யும் மரியாதை. ஆனால் திராவிட இயக்கத்தின் இத்தகைய வரலாற்றை மறைக்கும் பொருட்டு, அறிஞர் அண்ணாவை மதிக்கிறோம் எனும், ஆளும் தவெக அரசு மீண்டும் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என்று அறிவித்திருப்பது வரலாற்றை மடைமாற்றம் செய்யும் முயற்சியே என்பதில் சந்தேகமில்லை.
நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாகவும், ஜூலை 18 தமிழ்நாடு நாளாகவும் தனித்துவத்துடன் போற்றப்பட வேண்டும். அண்ணா சட்டம் நிறைவேற்றிய நாள் தான் நமக்கு சிறப்பூட்டும் !
தமிழ் உணர்வூட்டும்! வாழ்க தமிழ்நாடு நாள்!! வாழ்க திராவிட அண்ணா!!!
- த.மு.யாழ்திலீபன்