அரசே மதுவை விற்பதா..? மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற குரல்கள் நீண்ட காலமாக ஓங்கி ஒலித்தாலும் தமிழ்நாடு அரசின் வருவாயில் மது விற்பனை மிக முதன்மையான இடத்தில் இருக்கிறது.

வரலாறு

எம். ஜி. ஆர் முதலமைச்சராக இருந்த போது 1983 இல் டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation - TASMAC) தொடங்கப்பட்டது. இது இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. மது மொத்த விற்பனை மட்டுமே இந்த நிறுவனத்தின் பணியாக அப்போது இருந்தது.tasmac 400மதுவிலக்கு 2001 இல் நீக்கப்பட்டு சில்லறை மது விற்பனைத் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. தனியார் கூட்டணி அமைத்துக் கொண்டு முறைகேடுகளைச் செய்ததால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 29.11.2003 இல் அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 இல் திருத்தம் செய்து மது சில்லறை விற்பனையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்கலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது. மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படுகின்றன.

மது கொள்முதல்

தனியாரின் 11 மது உற்பத்தி ஆலைகளிடமிருந்து மது கொள்முதல் செய்யப்படுகிறது. MIDAS, SNJ, KALS ஆகியவை முதன்மையான நிறுவனங்களாக உள்ளன. விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா போன்ற வன் மதுவகைகள் 80 சதவீதமும் பீர் வகைகள் 20 சதவீதமும் கொள்முதல் செய்யப்படுகின்றன. சொந்த அல்லது குத்தகைக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு சரக்குந்துகள் மூலம் அரசு மதுக் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

வருவாய் 

தமிழ்நாடு அரசுக்கு மது மொத்த விற்பனையின் மூலம் 1983 இல் 183 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டில் 50,845 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தமிழ்நாடு அரசின் வருவாயில் 26 சதவீதம் மது விற்பனை மூலம் கிடைக்கிறது.

இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாகப் பல முறைகேடுகள் நடப்பது தணிக்கை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பணியாளர்கள் 

இந்த நிறுவனத்தில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 4,800 அரசு மதுக் கடைகள் உள்ளன. நகர்ப்புறங்களில் 60 சதவீதம் கடைகளும் கிராமப்புறங்களில் 40 சதவீதம் கடைகளும் உள்ளன. ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளுக்கு வருவாயில் 52 சதவீதம் செலவாகிறது.

கடை மேற்பார்வையாளருக்கு 33,023 ரூபாயும் விற்பனையாளருக்கு 30,284 ரூபாயும் உதவி விற்பனையாளருக்கு 28,680 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

தினசரி நிர்வாகச் செலவுகளுக்காக மாநகராட்சிகளில் ரூபாய் ஐயாயிரமும் நகராட்சிகளில் ரூபாய் நான்காயிரமும் ஊரகப் பகுதிகளில் ரூபாய் மூன்றாயிரமும் வழங்கப்படுகிறது.

ஏன் இந்தப் போராட்டம்..?

மதுக்கடைகளில் நிர்வாகச் செலவுகளுக்காகவும் இழப்புகளை ஈடு செய்யவும் மதுவின் விலையைவிட பத்து ரூபாய் அதிகமாக வாங்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனைத் தடுப்பதற்கான பல முயற்சிகளை தற்போதைய அரசு எடுத்து வருகிறது.

காலி பாட்டில்

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு காலி மது பாட்டில்களை ஸ்கேன் செய்து பெறப்படும் இணையத் தொடர்பில் தடை ஏற்படுகிறது. மேலும் அதிக நேரம் ஆவதால் வாடிக்கையாளருடன் மோதல் ஏற்படுகிறது. உடையும் பாட்டில்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்ற காரணங்களின் அடிப்படையில் காலி மதுப் பாட்டில்களைப் பெறும் பணியிலிருந்து விடுவிக்கக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கோரிக்கைகள்

பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் பணியாளர்கள் போராடி வருகின்றனர்:

  1. பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம்.
  2. அனைத்துக் கடை நிர்வாகச் செலவுகளையும் அரசு நிறுவனமே ஏற்க வேண்டும்.
  3. காலி மது பாட்டில் வாங்குவதற்கு இயந்திரங்கள் மற்றும் தனியான ஊழியர்களை அமர்த்த வேண்டும்.
  4. போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களைப் பணியில் சேர்க்க வேண்டும்.

தனியார்மயமா..?

சில்லறை மது விற்பனையைத் தனியாரிடம் விடுவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக இத்துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார். மது விற்பனையை அரசே தொடருமா அல்லது தனியார் கைகளுக்குத் தாரைவார்க்கப்படுமா என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது.

மது விற்பனையைத் தனியார்மயமாக்கினால் இங்கு பணியாற்றும் சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டப் பணியாளர்களின் நிலை கேள்விக்குறியாகும். மேலும் தனியார் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவர். இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படலாம். எனவே இது குறித்து அரசு சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும்.

மதுவிலக்கு

இந்த ஆட்சி பதவிக்கு வந்த பின்னர் 700 க்கும் மேற்பட்டக் மதுக் கடைகளை மூடியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதாகவும் மது இல்லாத் தமிழ்நாடே தங்கள் கொள்கை என்றும் ஆட்சிக்கு வருபவர்கள் கூறுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால் மதுவை ஒழிக்க எந்த அரசும் முன்வரவில்லை. பெரும்பாலான மக்கள் மது ஒழிக்கப்படுவதையே விரும்புகின்றனர்.  இவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் நலனை முதன்மையாகக் கருதி,மது இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்க அரசு ஆக்கப் பூர்வமான முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். 

- வழக்கறிஞர் தமிழகன், திருச்சிராப்பள்ளி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.