நூலகம் என்பது சிந்தனை குவியலின் சீர்படுத்தப்பட்ட வரிசை முறை. எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். முடிக்கவோ காலம் போதாது.

மழைக்கு ஒதுங்க பள்ளிக்கூட வராண்டாவுக்குள் நுழைந்தது போலவேதான் நான் நூலகத்திற்குள் ஒதுங்கியது. எங்களூர் நூலகம் ஒரு சின்ன கட்டடத்தின் ஊர்க்கோடியில் ஓர் ஒதுக்குப்புறமான ஓவியம் போல மறைந்திருக்கும். அந்த வழியாகத்தான் அதாவது குறுக்கு வழியில் செல்லக்குமாரா திரையரங்கத்திற்கு நான் வருவேன்.library 720சினிமாவுக்கு மட்டுமல்ல.. எந்த ஒரு சேருமிடத்துக்கும் நான் நேரத்துக்கு முந்தியே சென்று நின்று விடுவேன். அப்படி 10.30 மணி சினிமாவுக்கு 9 மணிக்கே சென்று விட்டு.. மிச்சம் இருக்கும் நேரத்தைக் கடத்த... அப்படி நுழைந்ததுதான் நூலகம். அப்படித்தான் நூலகமே அறிமுகம். நண்பர்களுக்கு காத்திருக்க.. வெயிலுக்கு ஒதுங்க... தண்ணி குடிக்க என நூலகம் சிறந்த இடமாக இருந்தது. முக்கியமாக நூலகத்திற்குள் மின்விசிறி இருக்கும். அடிக்கிற வெயிலுக்கு அது ஆனந்த குளுகுளு.

மேலும்.. நூலகத்திற்குள் இருக்கும் அந்த அமைதி என்னவோ பிடித்து விட்டது. மனதின் அடுக்கில் அமர்ந்து காலாட்டுவது போல பிற்காலத்தில் யோசித்திருக்கிறேன். மானுட ரகசியம் வரிசையாக அமர்ந்து அவரவர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டிருந்ததை உணர உணர உள்ளத்தில் அமைதிக்கும் உருவம் கிடைத்தது. ஆரம்பத்தில் நம்மை உள்ளே விட மாட்டார்களோ என்று தயங்கி தயங்கிச் சென்றிருக்கிறேன். பதுங்கி நின்று படித்திருக்கிறேன். பிறகுதான் தெரிய வந்தது... யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று படிக்கலாம். அதற்குத்தான் நூலகமே என்று.

போகிற போக்கில் ஆரம்பித்த வாரப் பத்திரிகைப் புரட்டல்... சின்ன சின்ன இணைப்புப் பத்திரிகைகளைத் தொடர்ந்து படித்து... என்னவோ சுவாரஸ்யம் அதில் கண்டு கொண்டிருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு போகத் தொடங்கி... ஓரமாய் நின்று கொண்டே படித்தவன் பிறகு அமர்ந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். நேரம் ஒதுக்கிப் போகும் அளவுக்கு... பிறகு.. சனிக்கிழமை விடுமுறையென்றால்... காலையிலேயே சென்று அமர்ந்து விடுதலும் நடந்தது. சினிமாவுக்குப் போக பாட்டியிடம் அனுமதி கேட்பதே.. பாட்டி லைப்ரரிக்கு போயிட்டு வந்தர்றேன் என்றுதான். பாட்டியும் ஆரம்பத்தில் லைப்ரரிதான் என்று நினைத்தது. பிறகு... சினிமாவுக்குத்தான் இவன் பொய் சொல்லிவிட்டுப் போகிறான் என கண்டுபிடித்து... என்ன மயிலு லைப்ரரி நல்லா இருந்துச்சா என்று பொடி வைத்துப் பேசும் அளவுக்கு ஆனது.

பிறகு மெய்மறந்து படித்துக் கொண்டிருந்துவிட்டு நேரம் போனதே தெரியாமல் சினிமாவுக்குப் போகும் திட்டம் உடைந்து நொறுங்கிய நாட்களும் உண்டு. இன்னொன்று ஊருக்குள் லைப்ரரி போவது தெரிந்து திடீரென கூடிய மரியாதையும் பிடித்திருந்தது. விஜி கைல புக் கிடைச்சிட்டா... போட்டு வைத்திருக்கும் திட்டமெல்லாம் காலி என்று ராஜா நிஜ கோபத்தோடு சொன்ன நாளும் இருந்தது. பிற்காலத்தில்... தம்பியும்கூட சொல்லி இருக்கிறான். குட்டிண்ணா புக் எடுக்காதீங்கணா.. ஜாலியா பேசிட்டே போலாம் என்று பயண நேரத்தில் மன்றாடியிருக்கிறான்.

அப்படி... நூலகத்திற்குள் நுழைந்த மனம் அதன் பிறகு வெளியேறவேயில்லை. சிறு சிறு இணைப்புகளில் இருந்து ரேக்கில் அடுக்கி இருந்த சிறு சிறு நூல்களை எடுத்துப் படிக்கும் அளவுக்கு அது என்னமோ ஒரு தீவிரம் தொற்றிக் கொண்டதை அப்போது உணரவில்லை. பிற்பாடு... கோவை வந்து கல்லூரி படிப்பு முடிந்த பிறகு சென்ட்ரல் நூலகத்தில் காலை 8 இல் இருந்து இரவு 8 ல்... அவர்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளும்வரை அங்கேயே கிடந்தபோது தீவிரத்தில் இருந்த தேடல் ஓரளவுக்கு புரிந்தது.

கல்லூரி நாட்களில் கல்லூரி நூலகத்தில் அவ்வப்போது இருக்க நேர்ந்திருக்கிறது. பிறகு புத்தகக் கடை எங்கெல்லாம் கண்ணில் படுகிறதோ அங்கெல்லாம் ஓடி ஓடி நின்று விடும் ஆசை அதிகமானதே தவிர குறையவில்லை. நூல்களின் வழியே ஓர் உலகம் நம்மை வந்தடைய வந்தடைய எழுத்தின் வழியே ஒரு வாழ்வு பிடிபடத் தொடங்கியது. அப்படி இப்படி என சின்னச் சின்ன நூல்களைப் படித்திருந்தாலும்... பளிச்சென நினைவில் இருக்கும்.. அல்லது நூலின் தீவிரத் தன்மையில் ஆட்பட்டு அலைக்கழிக்கப்பட்ட காலத்தை நினைவு படுத்துகையில்... முன்னால் வந்து நிற்கும் நூல்... "ஒடுக்கப்பட்டவன்" என்ற மராட்டிய நூல். அதுவே நான் முதன்முதலாக படித்த நாவல். அதை மொழிபெயர்த்திருந்த தோழர் பாலச்சந்திரன் அவர்களோடு பிற்காலத்தில் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. சாருவின் ஸீரோ டிகிரி இரண்டாவதாக படித்த நாவல். பிற்காலத்தில் அவரோடு கைகுலுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதன் பிறகு டேக் ஆஃப். இதோ இப்போது வரை நிற்கவில்லை. தஸ்தாயெவ்ஸ்கி துணை கொண்டு முரகாமியோடு மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறேன்.

நான் எப்போதுமே சொல்வதுதான். நான் சினிமா வழியாக இலக்கியத்துக்குள் வந்தவன். எழுத்து விவரம் தெரிந்த நாளில் இருந்தே இருந்திருக்கிறது. கடிதங்களின் வழியாக. அதே போல வாசிப்பும் கூட கடிதங்களின் வழியாகவேதான் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். சின்ன வயதில் பக்கத்து வீட்டுக்கு வரும் கடிதங்களை நான்தான் படித்துக் காட்டுவேன். என்னிடம்தான் கேட்பார்கள். எங்கள் வீட்டுக்கு வரும் கடிதங்களை தாத்தாவுக்கு ஒருமுறை மாமாவுக்கு ஒருமுறை என அடுத்தடுத்து வெளி வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறவர்களுக்கு நான்தான் படித்துக் காட்டுவேன். பைபிளைப் படிக்க நானே பணிக்கப்பட்டிருந்தேன். கவனமாகப் படிப்பேன். பாராட்டும் வாங்குவேன்.

ஆக... கடிதங்கள் வாழ்வின் அங்கமாகவே இருந்திருக்கின்றன. அப்பாவுக்கு எழுதிய கடிதங்கள்... அப்பா எழுதிய கடிதங்கள்... என் காதலுக்காக எழுதிய காதல் கடிதங்கள்... மற்றவர் காதலுக்காக எழுதிய காதல் கடிதங்கள்... ஏன் மொட்டைக் கடிதங்களுக்குக் கூட என்னிடம்தான் வருவார்கள். எனக்கு எழுத வேண்டும்... அதில் ஒரு திருப்தி. அதைத் தொட்டு நிறைய பஞ்சாயத்துகளில் குற்றவாளியாக நின்றிருக்கிறேன். அது தனிக்கதை.

எது கிடைத்தாலும் படிப்பது ஒரு காலம். தேர்ந்தெடுத்துப் படிப்பது ஒரு காலம். நாம் இப்போது இரண்டாம் காலத்தில் இருக்கிறோம். ஏனெனில் தேவையற்ற அர்த்தமற்றவைகளைப் படித்து நேரம் செலவழிக்க இயலாது. காலம் குறைவு. தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய. ஆக... தேடித் தேடி ஆனால் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த சின்ன வாழ்வில் தனி மனிதனின் அனுபவம் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குட்பட்டது. அதற்கு அத்தனை நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றவர் அனுபவங்களையும் சேர்த்து பெற்றிட நூல்களே வழி வகுக்கின்றன. அதுவே சிறந்த வழி. நூலகத்தில் அமர்ந்து தூங்குவோரையும் பார்த்திருக்கிறேன். சின்ன புன்னகை தோன்றும். என்றாவது ஒருநாள் அவன் விழித்துக் கொள்வான். விழித்துக் கொண்ட பிறகு படிக்காமல் இருக்க முடியாது. நூலகம் ஒருவனை ஏதோ ஒரு வழியில் செழுமைப்படுத்தும். நூலகம் நுழைந்து விட்டவன் வெறுங்கையோடு திரும்புவதில்லை.

ஓர் இனத்தை அழிக்கப் போர் தந்திரம் என்ற பெயரில் எதிரிகள் முதலில் கைக்கொள்ளும் வியூகம்.. அவ்வினத்தின் நூலகத்தை அழிப்பதே. உதாரணம் நிறைய பார்த்திருக்கிறோம். நூலகம் மனித சமூகத்தில் தவிர்க்கவே முடியாத வழிகாட்டியாக இருக்கிறது. வெறும் கல்லாய் சென்று அமர்ந்து விடு. நூலகம் உன்னைச் சிற்பமாக்கி வெளியே அனுப்பும். பாதி சிற்பம் சொல்கிறேன். மீதி சிற்பத்துக்கும் நூல்களே உளி.

நூலகம் வெறும் கட்டடத்தால் ஆன இடம் அல்ல. அது நூல்களால் பின்னப்பட்ட அறிவுக்களஞ்சியம். நேற்றைய வரலாறும் இன்றைய வாழ்நாளும் நாளைய மனிதனுக்கு நூலகமே காட்டிக் கொடுக்கும். ஆகவே மனித நாகரிகத்தின் அம்சம் நூலகம் என்றொரு வடிவத்தில் இன்னும் கம்பீரமாக நிற்கிறது. நிற்க வேண்டும். எப்படியாவது உள்ளே தள்ளி விட்டால் போதும்... பிறகு வெளியே வரும் போது வெற்றுக்கொம்புகளை விட்டொழிந்து விடுவான். தர்க்கரீதியில் நியாய தர்மங்களைக் கண்டெடுத்து விடுவான். சக மனிதனைக் கொண்டாடத் தொடங்கி விடுவான். சாகாவரம் கொடுமை என்று புரிந்து விடும். அன்றன்றைக்கே வாழ்ந்து விடுவான். மனம் பெரியதாகி விடும். கோபம் இயலாமை என்று புரிந்து விடும். கல்லாதது உலக அளவு என்று கையளவு கற்கும் போதுதான் புரிபடும்.

அறிவுப் பசிக்கு தீனி போடத் தொடங்கி விட்டால் அதனுள் இருக்கும் பிசாசு மீண்டும் மீண்டும் தீனி கேட்டு பிராண்டி எடுக்கும். அறிவு ஓர் அபாயகரமான கை. பற்றி இழுத்து... தன் தலை மேல் தன்னையே அமர வைத்து வேடிக்கை காட்டும். அதிலிருந்து தப்பி ஞானத்திடம் சென்று சேர்ந்துவிட வேண்டும்.

ஒருமுறை ஞானத்தைத் தொட்டு விட்டால்.. பிறகு வானம் போதியாகி விடும். சுய பொதி உதிர்ந்து விடும். ஞானத்திடம் சென்றடைய நூலகத்துள் நுழைந்து விடு. அதன் ஆயுதத்தை எடுத்து அதையே போடுவது போல அறிவு வளரும் போதே அதை ஞானத்துக்கான வழியாக மாற்றிக் கொள்வது.

மனிதன்... எப்போது வேண்டுமானால் காட்டுக்குத் திரும்பி விடும் மிருகத்தை மூலையில் எங்கோ ஒரு மூலையில் சுமந்தபடியேதான் இருக்கிறான். அந்த மிருக சிந்தனையைக் காணாமல் போகச் செய்து பேரன்பு மிக்க மனிதனாக மாற்ற நூலகமே சிறந்த வழி. நூலகமே மானுட கதி.

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.