பொதுவாக, ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) சீக்கிரத்தில் பிரிந்தால் நல்லது என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.

கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, சுயமரியாதையோ இல்லை; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை. மேலும், சென்னை மாகாணத்தில் 7ல் ஒரு பாகத்தினராக இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் - நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூட சொல்லவதற்கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் சீக்கிரம் பிரியட்டுமென்றே கருதி வந்தேன்; அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும், மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டுக் கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும், இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனியாக ஆகிவிட்டால், நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும், அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்குப் பலமும் ஆதரவும் இருக்காது என்றும் கருதுகிறேன்.

ஆனால், நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கின்ற குறைபாடு எனக்கு இருக்கிறது. ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போனபின்பு கூட, மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் 'சென்னை நாடு' என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும்; எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது. இதைத் திருத்தத் தமிழ் நாட்டு அமைச்சர்களையும், சென்னை, டில்லி சட்டசபை - கீழ் மேல் சபை உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?

('தனி அரசு', அறிக்கை 25-10-1955)

பெரியோர்களே! தோழர்களே!

திராவிட நாடு எது? இதற்கு முன் - 1956-க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நான் 'திராவிட நாடு' என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு வடநாட்டானும், இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி, நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த கள்ளிக்கோட்டை, மங்களூர் மாவட்டங்களும் மலையாளம், கன்னட நாடுகளுடன் சேரப்போகின்றன. இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகவிட்டோம். ஆகவே இதை இப்பொழுது 'தமிழ்நாடு' என்று சொல்லலாம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்து போய்விட்டார்கள்.

நாம் நிபந்தனையற்ற அடிமைகளாய் உள்ளோம். வெள்ளையர் ஆண்ட காலத்தில் பார்ப்பனரின் அக்கிரமங்களைச் சொல்ல வழி இருந்தது. அவர்களும் நாம் சொல்வதைக் கேட்டுச் சிலவற்றைக் கவனித்து வந்தார்கள். இப்பொழுது நம் நாடு வடநாட்டிற்கு நிபந்தனையில்லா அடிமை நாடாகிவிட்டது. நாங்கள் வெள்ளையரை அப்பொழுதே கேட்டோம்: 'நாங்கள், உங்களை யுத்த காலத்தில் ஆதரித்தோம். பார்ப்பனரும் வடநாட்டுக்காரரும் உங்களை எதிர்த்தார்கள்; எங்கள் இனம் வேறு; அவர்கள் கலை, பழக்க வழக்கங்கள் வேறு' என்று சொன்னோம். அதற்கு வெள்ளைக்காரர்கள், 'நீங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று நினைத்து இருந்தோம். இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நாங்கள் சீக்கிரத்தில் இந்த நாட்டை விட்டுப் போய்விடப் போகிறோம்' என்று கூறி, முஸ்லிம்களுக்கு சிறு இராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, நம்மைப் பார்ப்பனருக்கும், வடநாட்டவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டனர்.

இப்பொழுது நாம் வடநாட்டு ஆட்சியில் இருந்து பிரிந்து தனிநாடு ஆகவேண்டுமென்று கூச்சல் போடுகிறோம். தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக்கொண்டா போய்விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும்பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது. நமக்கு நாடு கிடைத்து வெள்ளையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் இந்த வடநாட்டான் ஓடிவிடுவானே!

(திருவண்ணாமலையில், 19-8-1956-ல் சொற்பொழிவு, 'விடுதலை' 29-8-1956)

Pin It