பார்ப்பனியம் எப்போதும் தனக்கான வேலையாட்களைப் புதியதாகப் பல்வேறு துறைகளில் உருவாக்கிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் பார்ப்பனியம் முதலாளித்துவ பணியாவுடன் கூட்டு வைத்துப் பின்னிருந்து இயக்கும் சக்தியாக இருந்து வருகிறது. பார்ப்பன இந்தியாவில் பொருளியல் சுதந்திரம், பொருளியல் சமத்துவம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒன்று. யாருக்கு நிலம், அதைச் சார்ந்த வணிக பொருளாதாரம் நிலைபெற வேண்டுமென்பதையும், யாருக்கு அவை எட்டாமல் வேலையாட்களாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் பல்வேறு விதிகளை கடவுள், சாதி, மதத்தின் பெயரால் மனுதர்மம் பிரிவினையைப் போதிக்கிறது.

periyar 312டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வரலாற்று மற்றும் சமூகப் பார்வையில் இந்தியாவை பிராமணிய இந்தியா, பௌத்த இந்தியா, இந்து இந்தியா என “மூன்று இந்தியாக்கள்” என்று குறிப்பிடுகிறார். தற்போது பௌத்த இந்தியா வீழ்த்தப்பட்டு பார்ப்பன இந்து இந்தியா கட்டமைப்பில் உள்ளதை நாம் பார்க்கிறோம். மேலே சொன்னது போல் பார்ப்பனியம் தனக்கான வேலையாட்களாக இந்துக்களைப் பயன்படுத்தித் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறது. பார்ப்பனியம் தனியாகத் தனித்து இயங்கக் கூடியதல்ல; அதனால் தான் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை இணைத்து இந்துக்கள் என்று ஒன்றுதிரட்டி, அதற்குள் அவர்களும் இருப்பதைப் போன்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. ஏனெனில் ஆட்கள் திரட்சியோ அல்லது பிரிவினையில்லாத கொள்கையோ பார்ப்பனியத்திடம் இல்லாததன் விளைவு, பெரும் கூட்டத்தைத் தனக்கு பாதுகாப்புக்காக நாடிச் செல்கிறது. அவ்வகை நாடலை அனைத்துப் புற அகச் சூழலில் இருந்து உருவாக்குவதும், அதைத் தொடர்ந்து இயங்கச் செய்யும் கட்டமைப்பை ஏற்படுத்துவதுமே பார்ப்பனியத்தின் நோக்கம். இதனை மையப்படுத்துதலே 'நாம் எல்லாம் இந்துக்கள்' என்ற உருட்டு, 'நாமெல்லாம் இந்நாட்டின் குடிமக்கள்' என்பது, 'நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்பது, 'நமக்கு ஒரே கடவுள், ஒரே மதம்' என்று அனைத்தும் 'ஒன்றே' என ஹிட்லரின் “ஏகத்தலைவன் கோட்பாட்டை”க் கட்டியமைக்கும் பணியே இராமராஜிய பணி. அதை நோக்கி நகர்த்தும் பணியில் திருத்தல்வாதம், திரிபுவாதம், வன்முறை, கொலை என அனைத்திற்கும் இடமளித்துத் தன் இலக்கை நோக்கி நகர்கிறது பார்ப்பனியம்.

இந்தியாவில் இத்தகைய பார்ப்பன இராமராஜ்யம் அமையத் தடையாக இருப்பது ஒன்றுதான்; அது அரசமைப்புச் சட்டம். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வஜ்பாயி தலைமையில் வெங்கடாசலையா ஆணையக் குழுவை அமைத்தும் தோல்வி கண்டது. அதற்குப் பிறகு மோடி தலைமையில் பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து, அரசமைப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் செயலில் ஈடுபட்டு, தேர்தல் ஆணையர் சட்டத் திருத்தம், தனக்கானவர்களை உச்சநீதிமன்றத் தலைவராக்குவது, மாநில அரசுகளை ஒடுக்குவது, பொதுச் சிவில் சட்டத்தை அனுமதிப்பது, மதச்சார்பற்ற தன்மையைச் சீர்குலைப்பது போன்ற எண்ணற்ற செயல்களைச் செய்து வருகிறது. இவ்வளவும் செய்த பிறகு பார்ப்பனிய ஜனதா கட்சி சொல்வது, 'நம் தேசத்தின் நலனுக்காக' என்றுதான். நாட்டு மக்களைச் சிந்திக்க விடாமல் ஏமாற்ற கடவுள், மதப் பெரும்பான்மை, நாட்டுப்பற்று, தேசியம் என்று சொல்லி மக்களை மடைமாற்றம் செய்யும் அரசியலாகப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் மக்கள் திரட்சியை ஏற்படுத்தி இயல்பாகத் தனக்குத் தேவையானவைகளைப் பார்ப்பனியம் சாதித்துக் கொள்கிறது. அதற்கு ஏற்ற வகையில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பது மேலும் வசதி சேர்க்கிறது. இதை இன்னும் புரிந்து செயல்படாமல் பார்ப்பனரல்லாத மக்கள் இரையாகிறோம் என்பதே கசப்பான உண்மை.

மேலே சொன்னது போல், வரலாற்றில் எப்போதும் பார்ப்பனியம் மக்களை ஏமாற்ற எடுத்துள்ள ஆயுதம் தேசியம். இக்காலகட்டத்தில் பார்ப்பனியமும் தேசியமும் கூட்டுச் சக்தியாக இருந்து, அதற்குப் பின்னுள்ளவைகளைப் புலப்படாமல் பாதுகாத்துக் கொள்கிறது. அதாவது, நாட்டின் கடன் சுமை, தாராளமயப் தனியார்மயம், ஒருசார்புப் பொருளியல் வளர்ச்சி, முதலாளிகள் மூலதனத்தின் பெருக்கம், உழைப்புப் பிரிவினை, சேமிப்புத் திருட்டு, கொடுத்தல் குறைந்து சேர்த்தல் வீதப் பெருக்கம், தொழிலாளர் நலன் மறுப்பு, உழைப்புச் சுரண்டல், தேர்தல் ஜனநாயகத் திருட்டு என்று மக்கள் மீது எண்ணற்ற வழிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது பார்ப்பனியம். இன்று பார்ப்பனியம் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளை அரியணையில் அமர்த்தித் தனக்கான வேலைகளைச் செய்து கொள்கிறது. இவைகளை மூடி மறைக்கவும், மக்கள் சிந்தனை ஓட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கவும் கையாளப்படும் அரசியல் கருவியே 'தேசியம்' என்பது.

பார்ப்பனியம் தன் தேவைக்காக 'இந்து' என்று ஒளிந்து கொள்ளும் போக்கை தற்போது வெளிப்படுத்தி, பார்ப்பன இந்து பாசிச எதிர்ப்பாக எழ வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் பார்ப்பனியம் மக்களைத் திரளச் செய்யாமல் இருப்பதற்கு இருதுருவப்படுத்துதல் எனும் நிலையைச் சரியாகக் கையாளுகிறார்கள். அதாவது ஒருபக்கம் RSS தலைவர் மோகன் பகவத் 'சாதி ஒழிய வேண்டும்' என்கிறார்; அதேவேளையில் மறுபுறம் 'வருணாச்சிரமத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்பார். மோடி அம்பேத்கரின் அரசமைப்பை வணங்கிவிட்டு அரசமைப்பைக் குப்பையில் வீசுவது போல! தேசிய விடுதலை எனக் கூறப்படுவது பார்ப்பனியத்தின் மற்றொரு நடவடிக்கையே. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திப் புதிய வடிவில் மேல்சாதி ஆதிக்கத்தை நிறுவுவதற்கான முயற்சியே தேசியம். பார்ப்பன இந்து மத ஆதிக்கம் சார்ந்த நலன்களைப் பேசும்போது 'தேசியமாகப்' பார்க்கப்படுவதும், அதன் மூலம் மக்கள் படும் துன்பங்களைக் குறித்துப் பேசும்போது அது 'தீவிரவாதமாகவும்' சித்தரிக்கப்படுவதே இங்கு தேசபக்தி, தேசியம் என்பது.

தேசியம் எனும் மோசடி பற்றியும் பார்ப்பனியம் பற்றியும் வாய் திறந்தால் 'இந்தத் தேசத்திற்கு எதிரானவராகச் சித்தரிக்கப்படுவோமே' என்கிற பயத்தில் கடந்து சென்றவர்களுக்கு மத்தியில், இத்தகைய தேசியக் கட்டுக்கதையைப் பெரியார் குடிஅரசு (12.06.1927) இதழில் எல்லோருக்கும் உரைப்பது போன்று இப்படிச் சொல்கிறார்:

"தேசியம் என்பதும் தேசிய ஸ்தாபனம் என்பதும் அஸ்திவாரத்திலிருந்தே புரட்டு என்றும், சிலர் வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகத்திற்குமென்றே ஏற்பட்டதென்றும், நமது நாட்டுப் பெரும்பான்மையான மக்களான அதாவது 100க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஜனசமூகத்திற்குக் கொஞ்சமும் நன்மை தரத்தக்கதல்லாததோடு பெருங்கெடுதி தரத்தக்கதென்றும் நான் கணக்குப் புள்ளிகளுடன் விளக்கி எழுதி வரும்போது, அவைகளுக்கு முதலில் கொஞ்சமாவது விபரமாகச் சமாதானம் சொல்லாமல் எவ்விதம் பார்ப்பனர்கள் அவர்களின் புரட்டுகளை எடுத்துச் சொன்னால், 'மதம் போச்சுது, மதஸ்தாபனம் போச்சுது, நாஸ்திகத்தனம் ஆச்சுது' என்று சொல்கிறார்களோ, அதுபோல் படித்த கூட்டத்தார், பணக்காரக் கூட்டத்தார் ஆகியவர்களின் புரட்டுகளை எடுத்துச் சொன்னால், 'தேசம் போச்சுது, தேசிய ஸ்தாபனம் போச்சுது, தேசத் துரோகம் ஆச்சுது' என்று சொல்வதால், அதற்குப் பயந்துகொண்டு உண்மையை வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமா?"

என்று பெரியார் கேட்கும் கேள்விக்குப் பதில் உண்டா?

குடிஅரசு இதழில் 19.05.1929இல்:

"மக்கள் சாதி பேதத்தையும், மத பேதத்தையும் ஒழிக்க தேசியவாதிகள் கவனிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல், அவற்றை நிலைநிறுத்தவும் வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதுமில்லை. இன்றைய தேசிய வாழ்வில் தேவஸ்தான மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? சாமிகள் பேரால் பெண்மக்கள் விபச்சாரத்தைத் தடைபுரியும் மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? மக்கள் எல்லோருக்கும் சமப்பிரதிநிதித்துவமும் சம சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும் என்னும் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் யார்? இவைகளை முந்தியவர்கள் யார் என்கின்ற விவரங்களைக் கவனிப்போமானால், 'தேசத் துரோகிகள்' என்பவர்களால் மசோதாக்கள் கொண்டு வரப்படுவதும், 'தேசியவாதிகள்' என்பவர்களால் எதிர்க்கப்படுவதேயல்லாமல் வேறு என்னவென்றுதான் கேட்கிறோம்"

என்று தேசியம் என்பது பார்ப்பன தேசியமாகத் தான் இருக்கும் என்பதைப் பெரியார் வெளிப்படுத்துகிறார்.

அரசியலைப் பற்றிய விவாதங்கள், குறிப்பாக இந்துத்துவவாதிகள் பற்றிய விவாதங்கள் பண்பாட்டை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. அதற்கப்பால் அடிப்படையான பொருளாதார அடிப்படையில் மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியதும் அவசியம். இந்துத்துவம் ஊடுருவவும் ஆதிக்கம் செலுத்தவும் பார்ப்பனப் பண்பாட்டுப் பரவலை இந்தியா முழுமைக்கும் விரிவாக அனைத்துத் தளங்களிலும் செய்திருந்தனர்.

பார்ப்பனர்களின் தேசியம் எனும் நோக்கத்தை மேலும் விரிவாகக் குடிஅரசு இதழில் (19.03.1933) :

"பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம், தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறோம். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. பழைய நாகரிகம், சனாதன தர்மம், பழைய பழக்கவழக்கம் என்பவைகளையே பிரதானமாகக் கொள்ளும்படிப் பிரச்சாரம் செய்து வந்ததும், அதற்காக இந்தியப் புராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக்காட்டிப் பிரச்சாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இந்தக் கருத்தைக் கொண்டேதான் கராச்சி காங்கிரஸ் சுயராஜ்யத் திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும், இந்திய நாட்டை பாரத மாதா (பூமிதேவி) என்று அழைப்பதும், பாரத தேசம் என்று சொல்லுவதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டதே ஒழிய வேறில்லை. தேசியம் என்பதற்கு அரசியலைச் சம்பந்தப்படுத்திய கருத்தும், இந்தியாவின் பழைய நாகரிகத்திற்கும் பழக்கவழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறல்ல"

என்று பெரியார் பண்பாட்டு அரசியல் தளத்திலும் சுட்டிக்காட்டுகிறார்.

பண்பாட்டு மாற்றம் பற்றி அம்பேத்கர் சொல்வது போல் ‘போல செய்தல்’ விதியால் மேலும் பரவலாக்கப்பட்டு அகப்பட்டுக் கொண்டோம். பண்பாட்டுக் களத்தைக் கைப்பற்றிய பின் இயல்பாகவே பொருளாதாரச் சூறையாடல் நடக்கத் தொடங்குகிறது. பொருளாதாரச் சுரண்டலைச் செய்பவர் அரசியலைத் தீர்மானிக்கும் இடத்திற்கு நகர்கிறார். கலப்புப் பொருளாதாரம், தாராளமயமாதல் அமைப்புக்குப் பின் முழுவதுமாக முதலாளித்துவமே அரசியலை வழிநடத்தும் நிலையை உருவாக்கி வைத்துள்ளது. இதற்கு மாறாக மக்கள் திரட்சி வெடித்தால், வெகுஜனப் போராட்டங்களால் ஒரு அரசாங்கத்தை வீழ்த்த முடியும். ஆனால், பெரும்பாலும் அந்த வீழ்ச்சியானது சமூகத்தின் அடிப்படை வர்க்க உறவுகளை மாற்றாமல், மற்றொரு தலைவரை மட்டுமே அதிகாரத்திற்கு கொண்டு வருகிறது. அரசு இயந்திரம் தலைகீழாக மாற்றப்பட்டு, புதிய சமூக உறவுகளை உருவாக்குவதற்கான சூழல் உருவாக்கப்படாவிட்டால், அங்கு நிகழ்ந்தது சமூகப் புரட்சி அல்ல; மாறாக ஒரு அரசியல் மாற்றம் மட்டுமே. அந்த அரசியல் மாற்றமும் முதலாளிகள் மூலமே நிகழுமே அன்றி வேறில்லை.

அதாவது 'நீட்' தேர்வு குளறுபடிக்கு எதிரான மாணவர் போராட்டம் ஒரு அமைச்சரை மாற்றி வேறு அமைச்சர் அங்கு வருவதுதான் மாற்றமா? இது வெறும் அரசியல் நகர்வுதான். ஆனால் நாம் செய்ய வேண்டியது அந்த அரசியல் அதிகாரம் உட்பட அனைத்து நிலைகளிலும் கோலோச்சும் முதலாளித்துவத்தை வீழ்த்துவது. மற்ற நாடுகளில் முதலாளித்துவம் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் மூலம் வளர்வதுதான் முதல் நிலை. ஆனால் இந்தியாவில் முதலில் சாதிய கட்டமைப்பு தொழிலாளர்களைப் பிரிக்கிறது; பிறகு தொழிலைப் பிரிக்கிறது; பிறகு அடிமைத்தனத்திற்குத் தலைவிதி, கடவுள், சம்பிரதாயம் என்று திட்டமிட்டுப் பிரித்தாளுதலையும் சுரண்டலையும் ஒருசேர இந்துமதம் செய்கிறது. ஒரு பிரிவினர் உண்டு கொழுக்கவும், ஒரு பிரிவினர் உழைத்துக் கொட்டவுமே இந்திய சமூகக் கட்டமைப்பு பார்ப்பன மனுவால் கடவுளால் உருவாக்கப்பட்ட சாதிய கோட்பாடு. இதை மீறினால் தண்டனை என்று உழைப்பாளர்களை ஒன்றுதிரள விடாமலும், கல்வி உள்ளிட்டவைகளைத் தடைசெய்து அறிவின்மை சமூகமாகக் கட்டமைக்கவும் அனைத்து வழிகளையும் கையாண்டு, பண்பாட்டு ரீதியில் மக்களை மக்களிடமிருந்தே பிரிப்பதில் வெற்றி கண்டது. அதற்குப் பிறகே பொருளாதாரச் சுரண்டலைச் சரிவரச் செய்து, இன்று பார்ப்பன-பனியா கூட்டுக் கொள்ளை நாட்டை நாசப்படுத்தி வருகிறது. இதற்குப் பார்ப்பனியம் சூட்டிக்கொள்ளும் பெயர்தான் தேசியம். இந்த தேசியத்தை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதும், உணர்வுரீதியாக அணிதிரட்டி வெறுப்பை விதைக்கவும் மட்டுமே மக்களைப் பயன்படுத்தி வருகிறது.

1953இல்:

"இன்று 'இந்தியா' தேசம் என்பதிலும் நமது நாட்டில் நடந்துவரும் புரட்டு - நீண்ட நாளாகப் பார்ப்பனர் கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றிவரும் இமாலயப்புரட்டும்; 'இந்துமதம்', 'மத ஆதார நூல்கள்', 'மதக்கடவுள்கள்', 'சமஸ்கிருதம்', 'இந்தி மொழி' ஆகியவை பற்றிய பெருமைகளுமாகும். நீண்ட நாளாகவே நமது நாட்டில் இவை பற்றிய உண்மையை உண்மையாய் அறிந்தவர்கள் மிக அருமை; அறிந்துள்ள சிலரும் கோழைகள், சுயநலத்திற்கு எதையும் விற்பவர்களாக இருந்து வருகிறார்கள். எந்த ஒரு நாட்டிலும் இப்படிப்பட்ட புரட்டுகள் இத்தனை நாட்கள் நின்றதில்லை. எந்த ஒரு நாட்டு மக்களும் இப்படி காட்டுமிராண்டிகள் போல் ஏமாற்றப்பட்டதில்லை"

என்று தேசியப் புரட்டை உடைத்துத் தள்ளியவர் பெரியார்.

இத்தகைய பார்ப்பன ஆதிக்க வளர்ச்சிக்கு எதிராக வெறும் பொருளாதாரச் சுரண்டலைக் காரணம் காட்டி நாம் அணுகுவது முழுமையானதல்ல. அதனால் தான் பார்ப்பனியத்தின் மூலத்தைப் பெரியார் சாடினார். பண்பாட்டுத் துறையிலிருந்து மாற்றம் உருவாக வேண்டும் என்று தன் அடிப்படைப் பணிகளைப் பார்ப்பனிய எதிர்ப்பிலிருந்து தொடங்கினார். அம்பேத்கர் சமூகப் பண்பாட்டு அரசியலை உணர்ந்துதான் நமது இரண்டு எதிரிகள் “பார்ப்பனியமும் - முதலாளித்துவமும்” என்றார். பெரியார் “பார்ப்பனியமும் - பணக்காரத் தன்மையும்” என்றார். "பார்ப்பனியம்தான் முதலாளித்துவத்தைக் கட்டமைக்கிறது; அதை ஒழிக்காமல் எப்படி முதலாளித்துவம் ஒழியும்?" என்று கேள்வி எழுப்பினார். முதலாளித்துவத்தை ஒழித்தல் என்பது சாதியின் மையக் கருவிலிருந்து தொடங்கும் சுரண்டல் முறை. இங்கு நிலவும் உற்பத்தி உறவுகள் முழுவதிலும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள ஓர் அம்சமே சாதிமுறை. அதில் கைவைக்காத காலம் வரையிலும், அதனை வேரோடு பிடுங்கி எறியாத வரையிலும் சாதிமுறையை அழித்தொழித்தல் என்பது சாத்தியமற்ற ஒன்றே என்பதில் பெரியார் திடமாக நின்றார்.

மார்க்சியம் வர்க்கத்தில்தான் நிலைகொண்டுள்ளது. ஆனால் அதேநேரம் மார்க்சின் கண்ணோட்டத்தில் 'மனித சாரம் என்பது சமூக உறவுகளின் கூட்டுத்தொகை' என்பதை உணர வேண்டும். சமூக உறவுகள் என்றால் என்ன? மனிதர் சார்ந்திருக்கும் சமூக உறவுகள் வர்க்கத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. வர்க்க எதார்த்தத்திலிருந்து மனித உறவுகள் வேறுபட்டதாகவும் அமைந்துள்ளன என்பதை மார்க்ஸே எடுத்துக்காட்டியும் உள்ளார்; வர்க்க உறுப்பினராகவும் அவ்வாறு அல்லாமலும் மனித உறவுகள் பிளவுபட்டு நிற்பதற்கான காரணிகளையும் மார்க்ஸ் உற்றறிந்து காட்டியுள்ளார். ஆகவே அந்த விளக்கத்தை மேலும் வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதைப் பெரியார் நிவர்த்தி செய்திருக்கிறார் என்பதை நம்மால் நடைமுறைச் செயல்பாடுகள் மூலமும், பெரியாரின் பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் மூலமும் அறியலாம். நாம் எவ்வகையில் பார்த்தாலும் பெரியாரின் பார்ப்பன-பணக்கார எதிர்ப்பு, மார்க்சிய பொருள்முதல்வாதக் கோட்பாட்டை ஒத்தே இருக்கும். ஒத்து இருப்பது மட்டுமின்றி, அதைக் களத்திற்குக் கொண்டு வந்து செயல்படுத்திக் காட்டிய இயங்கியல் தலைவராகவும் பெரியார் இருக்கிறார்.

"எந்தத் தேசத்திலும் எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலும் குடிஅரசு நாட்டிலும் ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இருந்துதான் வருகின்றது. நம் நாட்டில் இவைகள் மாத்திரம் அல்லாமல் பார்ப்பான் - பறையன், மேல்சாதி - கீழ்சாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான வித்தியாசங்களும் அதிகப்படியாக இருந்து வருகின்றன. இவைகளைங்கள் இருக்கின்றனவா என்று உங்களைக் கேட்கின்றேன். இப்படிப்பட்ட தேசாபிமானம், சுயராஜ்யாபிமானம் என்கின்ற சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் விட்டுவிட்டு 'மனித ஜீவ அபிமானம்' என்கின்ற தலைப்பின் கீழும் கொள்கையின் கீழும் எல்லோரும் ஒன்றுசேருகின்ற வரையில், நான் தேசத்துரோகியாக இருந்து தேசாபிமானப் புரட்டையும் சுயராஜ்யப் புரட்டையும் வெளியாக்கம் செய்யாமல் இருக்க முடியாது"

என்று (பகுத்தறிவு 21.10.1934) வெளிப்படையாக அறிவித்துவிட்டுப் புரட்டுகளுக்கு வெடி வைத்த தலைவர் பெரியார்.

சாதி முரண்களைச் சமன் செய்வதோ அல்லது வர்க்க முரண்பாடுகளைச் சீர்படுத்துவதோ பெரியாரின் நோக்கமல்ல; மாறாக அவைகளை அழித்தொழிப்பது. அதை இயக்கமாக நடத்திவரும் ஒரே தலைவர் பெரியார்தான். பெரியாரும் திராவிடர் கழகமும் பார்ப்பனியம் - முதலாளித்துவம் எனும் இரண்டு தத்துவங்களை ஒருங்கிணைத்து, 'இந்துத்துவம்' எனும் பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் ஆரிய அதிகாரத்தை எதிர்த்தும் ஒருசேரப் போராடிக்கொண்டிருக்கும் புரட்சி இயக்கமாகப் பெரியார் படைத்திருக்கிறார். இந்தியாவில் பார்ப்பனியம் - முதலாளித்துவம் என்று பிரித்து அணுகிக்கொண்டிருக்கும் இயக்கங்கள், கட்சிகளுக்கு மத்தியில் இரண்டையும் ஒழிக்கும் வரை "கருப்புச் சட்டைகளுக்கு வேலை உண்டு" என்று அறிவித்துவிட்டுக் களத்திற்கு வந்த பொருள்முதல்வாதத் தந்தை பெரியாரே!

- த.மு.யாழ் திலீபன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.