1967இல் காங்கிரஸை வீழ்த்தி திமுகவும், 1977இல் திமுகவை வீழ்த்தி அதிமுகவும் ஆட்சியைப் பிடித்தது போல, 2026இல் தவெக ஆட்சி அமைக்கும் என்று கூறி, வாடகை எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சியையும் ஒருவழியாகப் பிடித்து விட்டார். ஆனால் 1967இல் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் இருமொழிக் கொள்கை, தமிழ்நாடு பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணம் போன்றோ; அல்லது 1977இல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டத்தைச் சத்துணவுத் திட்டமாக மாற்றி விரிவாக்கம் மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு போன்றோ எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக, சத்துணவுத் திட்டத்தை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விரிவாக்கம் செய்ததைப் பெயர் மாற்றம் செய்ததைத் தவிர, தவெக அரசு எதுவும் செய்யவில்லை.
இது ஒருபுறம் இருக்க, குறிப்பாக 1967 – 1977 என்று நடிகர் விஜய் அவர்களால் சொல்லப்பட்டது, அவர்கள் போன்று எதிரிகளை வீழ்த்தி ஆட்சி அமைப்போம் என்பது மட்டுமே. மாறாக, அவர்கள் போன்று ஆட்சி நடத்துவோம் என்பதல்ல. ஏனெனில் நடிகர் விஜய் தெளிவாக ஆட்சி மாற்றத்திற்கு அண்ணா, எம்.ஜி.ஆர் என்று அறிவித்துவிட்ட போதிலும், ஆட்சி நிர்வாகத்திற்கு யார் போல் செயல்படுவோம் என்று அறிவிக்கவில்லை.
அறிவிக்கப்படாத இந்த இடத்தில் குள்ளநரிகள் குடிபுகுந்து நாடாக மாற்றத் துடித்த ராஜாஜியின் 1937 ஆட்சி நிர்வாகத் தலைமை தான் நடிகர் விஜய்யின் அரசியல் தலைமை. ஆட்சி எப்படி மாறும் என்று சொல்ல முடிந்தவர்களால் யாரைப் போல் ஆட்சி செய்யப் போகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாதற்குக் காரணம், தந்தை பெரியாரின் பார்ப்பனரல்லாத அரசியல் எழுச்சி வடிவம். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்வது போன்று "பார்ப்பனியம் நேரடியாக எதிர்க்காது; அரவணைத்து அழிக்கப் பார்க்கும்" என்பது போன்று நடிகர் விஜய்யின் அரசியல் அப்போக்கைத் தான் எட்டியுள்ளது.
ராஜாஜி – மோடி – விஜய்
"எல்லோரும் படித்து விட்டால் வேலை எங்கிருந்து கிடைக்கும்? அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்ய வேண்டும்" என்று 29.06.1952இல் திருவான்மியூரில் ராஜாஜி பேசிய பின் தான் தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படியென்றால் ராஜாஜியின் நோக்கம் எல்லோரும் படிக்கக் கூடாது என்பதுதானே?
இதே குரலில் மற்றொருவரும் பேசியிருக்கிறார்: "மலம் அள்ளுவது, சாக்கடைகளையும் குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள். அந்தப் பணியைச் செய்வோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பணியைக் கடமையாகச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்தமான சமூகத்திற்கும் கடவுள்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர்!" என்று இந்திய நாட்டின் பிரதமர் மோடி, 'கர்ம யோக்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியெனில் அம்மக்கள் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக இதே வேலையைச் செய்ய வேண்டும் என்றுதானே சொல்கிறார்? நீங்கள் செய்தது போதும், உங்கள் பிள்ளைகள் படிக்க வரட்டும் என்று ஏன் சொல்ல முடியவில்லை?
அடுத்தது, "ஏன் உன் மகனை எம்.ஏ., பி.ஏ. படிக்க வைக்கிறாய்? உங்கிட்டதான் தொழில் இருக்கே, அதையே செய்யச் சொல்" என்று ஒரு சலவைத் தொழிலாளியிடம் தான் அறிவுரை கூறியதைப் பெருமையாக மேடையில் விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் என்ற பார்ப்பனர் பேசுகிறார். ஏன், சலவைத் தொழிலாளி மகன் பட்டப்படிப்பு படிக்கக் கூடாதா? என்பதல்ல; இவர்கள் நாம் படிப்பதையே விரும்பவில்லை, அதனால் தான் தொழிலை நோக்கிச் செல்லச் சொல்கிறார்கள்.
அடுத்த தலைவர், "ஒரே ஒரு படிப்பை வைத்து மாணவர்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். நீட் மட்டும் தான் உலகமா? நீட் தேர்வைத் தாண்டி இந்த உலகம் ரொம்ப பெருசு" என்று நடிகர்-முதல்வர் ஜோசப் விஜய் பேசியிருக்கிறார். "உங்களால் முடியாது, அதை விடுங்கள்; வேறு படியுங்கள்" என்பதும், மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களை அதிலிருந்து வெளியேற்றும் செயல் அல்லவா?
அடுத்து, "நீ ஏன் மருத்துவம் படிக்கிறாய்? அது மட்டும்தான் படிப்பா?" என்று அமைச்சர் நிர்மல் குமார் பேசுகிறார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் "நீங்கள் படியுங்கள், நான் உங்கள் பின்னால் இருக்கிறேன்" என்று பிள்ளைகள் படிக்கத் திட்டங்கள் வகுத்து, அவர்களுக்கு இடையூறாக இருப்பவைகளுக்குச் சட்டப் போராட்டம் நடத்தி, நிதி அளித்து மாணவர்கள் பின்னால் நின்றார். NEP-யை ஏற்றுக் கொண்டால்தான் 2000 கோடி நிதியைத் தருவோம் என்று மிரட்டிய போது, "5000 கோடி தந்தாலும் எனக்கு எங்கள் பிள்ளைகள் படிப்புதான் முக்கியம்; NEP-யை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்ற தமிழ்நாட்டில், இன்று வாக்காளர்கள் செய்த பெரும் பிழையால் நம் உரிமைகளை அடகு வைத்திருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்து மக்கள், மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும்? ஏன் டாக்டராக வேண்டும்? ஏன் பிளம்பர் வேலை பார்க்கக் கூடாது? ஏன் எலக்ட்ரீசியன் ஆகக் கூடாது? என்னும் கேள்வியை இவர்கள் பார்ப்பனர்கள் கூடியிருக்கும் அவையில் கேட்பார்களா? பார்ப்பன மாணவர்களுக்கு அறிவுரை கூறுவார்களா? என்று 31-07-26 'விடுதலை' தலையங்கத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் உண்டா?
இவர்களின் பேச்சு ததேச்சையாகப் பேசுவதல்ல; தங்களின் தத்துவமே பேச்சாகப் பிரதிபலிக்கிறது. ஒன்றை மட்டுமே அழுத்தமாகச் சொல்கிறது; கல்வியை விட்டு வெளியேற்றுவதற்கான வழியாக வேறு படிப்பைப் படி, அதை விடு நமக்கு எதற்கு என்று புறந்தள்ள முயல்வது. அதாவது இவர்கள் சொல்லும் தகுதி இருந்தும் தேர்வு பெற்றிருந்தும், சூழ்ச்சியால் நீட்டை உருவாக்கித் தங்களால் அதில் நுழைய முடியவில்லை என்று மாணவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதால், அதை நீக்கம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த விஜய், இப்போது தன் முகத்தைக் காட்டியிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டு, திராவிடர் கழகம் நடத்தவிருந்த NEET – EWS எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணிக்குத் தடை விதித்துத் தன் விசுவாசத்தைப் பிஜேபிக்குக் காட்டி, தமிழ்நாட்டு மக்களிடம் மாட்டிக் கொண்டார்.
கல்வி ஒழிப்பில் ராஜாஜியுடன் போட்டி போடும் விஜய்
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் மூலம் தமிழர் கல்வியைக் கெடுக்க முதல்முறை 1937-39இல் 2500 பள்ளிக்கூடங்களையும், 1952-53இல் 6000 பள்ளிக்கூடங்களையும் பூட்டி மூடினார். இதற்குச் சொல்லப்பட்ட காரணம் போதிய நிதி இல்லை என்பது. இத்தகைய ஆட்சியின் தொடர்ச்சியாகத் தான் நடிகர் விஜய்யின் அரசியல் சுற்றிச் சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், 1920க்கு முன் கல்விக்கு 1 கோடியே 40 லட்ச ரூபாய் செலவு செய்தனர். ஆனால், ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபை வந்தவுடன், மேற்கூறிய திட்டங்களை எல்லாம் அமலாக்கி, சுமார் 2 கோடியே 25 லட்ச ரூபாய் கல்விக்காகச் செலவு செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் திராவிட இயக்கங்கள் கல்விக்கு எவ்வளவு முன்னுரிமையளிக்கிறது என்பதற்குச் சான்றாக, திமுக 2021இல் திராவிட மாடல் அரசு பதவியேற்ற போது கொரோனா இரண்டு அலைகளையும் உள்ளடக்கிய காலகட்டம். அப்படியிருந்தும் ஒரு அரசு கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு 2025-26 நிதியாண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.46,767 கோடி, உயர்கல்விக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் ரூ.44,527 கோடி மற்றும் ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் கடந்த நிதியாண்டை விட மொத்தமாக ரூ.2,341 கோடி குறைந்த பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பதை அறிவோம்.
மேலே சொல்லப்பட்ட நிதிப் பற்றாக்குறை என்பது திமுக ஆட்சியில் இருந்ததை விட மோசமான சூழலில் தமிழ்நாடு தற்போது இல்லை. ஆனால் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களில் கூட மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது திமுக. ஆனால் தவெக அரசு எந்த நிதி நெருக்கடியும் இல்லாத சூழலில் கல்விக்கான நிதியைக் குறைத்துள்ளது.
குலக்கல்வித் திட்டத்தின் போது மதுவிலக்கு இருந்தது; அதனால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை என்று ராஜாஜி காரணம் காட்டினார். ஆனால் இன்று தேர்தலில் வாக்குறுதியில் நடிகர் சொல்லியது போல பூரண மதுவிலக்கும் இல்லை. மாறாக TASMAC என்பதை எதற்கு அரசு கொண்டு வந்தது, அதன் பின்னணி என்ன என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாத கூட்டம், இன்று மது விற்பனையை முழுவதுமாகத் தனியாருக்குத் தாரை வார்த்திருக்கிறது. அந்த வகையில் மதுவிலக்கும் இல்லாத போது கல்விக்கான நிதியைக் குறைப்பதென்பது, ராஜாஜி நேரடியாகச் சொன்னார், விஜய் நேரடியாகச் சொல்லவில்லை; மாறாகச் செயல் ஒன்றே என்பது விளங்கும்.
பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்திற்குப் பெயரைத் தான் மாற்றினார்கள். அரசாணையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.217 கோடியில், ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல்திட்ட நிதியிலிருந்து ரூ.63.15 கோடி மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல்திட்ட நிதியிலிருந்து ரூ.6.11 கோடியும் பயன்படுத்தப்படாமலே இருப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
தி.மு.க. ஆட்சியில் 2025ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் 170க்கும் மேற்பட்ட தலித் மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்வி கிடைத்தது. 2026இல் 362 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், ₹131 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அரசு கூறுகிறது. ஆனால், லண்டன் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்ற 316 மாணவர்கள் இன்னும் CAS மற்றும் UK விசா பெற முடியாமல், தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு வழங்கிய உதவித்தொகை உறுதியளிப்புக் கடிதத்தை UK Visa & Immigration ஏற்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், அரசின் நிதி ஒதுக்கீடு நடைமுறையில் மாணவர்களுக்குப் பயனளிக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "8 தலித் அமைச்சர்களைக் கொடுத்தோம்" என்று தம்பட்டம் அடித்தால் மட்டும் போதாது; விஜய் ஆட்சியில் 316 தலித் மாணவர்களின் அயலகக் கல்வி பறிக்கப்பட்டதற்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இதுவரை முதல்வர் நடிகர் விஜய் எப்போதும் போல வாய் திறக்கவேயில்லை.
நவோதயா - PM SRI பள்ளிகள் நிலைப்பாடு என்ன?
"எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்?" என்ற கருத்தை முன்வைத்தார் ராஜாஜி. 29.06.1952 அன்று திருவான்மியூரில் ஒவ்வொருவரும் தங்களது குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், குலதர்மக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஆட்சியில் நிர்வாகக் குறைபாடுகள் வேறு; ஆனால் கல்வி மற்றும் சமூகநீதிப் பிரச்சினையில் ராஜாஜியும், நடிகர் விஜய்யும் ஒரே சிந்தனையில் உள்ளனர். அன்று உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்காக ராஜாஜியின் குரல் இருந்தது; இன்று முதலாளிகளுக்காக விஜய்யின் குரல் அப்படியே பொருந்திப் போகிறது.
- "ஏன் உன் மகனை எம்.ஏ., பி.ஏ. படிக்க வைக்கிறாய்? உங்கிட்டதான் தொழில் இருக்கே, அதையே செய்யச் சொல்" - வி.ஹெச்.பி.யின் பொறுப்பாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன்.
- "மலம் அள்ளுவது, சாக்கடைகளையும் குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள். அந்தப் பணியைச் செய்வோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பணியைக் கடமையாகச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்தமான சமூகத்திற்கும் கடவுள்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர்!" – மோடி (நூல் : 'கர்ம யோக்')
- "ஒரே ஒரு படிப்பை வைத்து மாணவர்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். நீட் மட்டும்தான் உலகமா? நீட் தேர்வைத் தாண்டி இந்த உலகம் ரொம்ப பெருசு" - ஜோசப் விஜய்.
என்ற பேச்சு எல்லாம் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் நிலை அல்லது "அதை விடுங்கள், மற்றவைகள் ஏராளம் இருக்கிறது" என்று மருத்துவம் படிக்கும் மாணவர்களை வேறு படிப்புகளுக்கு அழைத்துச் செல்வது என்று திட்டமிட்டுச் செய்வதாகும். இந்த வேலையைத் தான் ராஜாஜி வெளிப்படையாகச் சொல்லிச் செய்தார்; நடிகர் விஜய் சொல்லாமல் செய்து கொண்டிருக்கிறார். மேலே சொல்லப்பட்ட கருத்துகளையும் விஜய் கருத்துகளையும் வைத்துப் பாருங்கள், இது யாருடைய குரல் என்று தெளிவாகத் தெரியும்.
இந்த நிலையில் தான் ஜெர்சி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவங்களான நீட் பற்றியோ, புதிய கல்விக் கொள்கை பற்றியோ, நவோதயா பள்ளிகள் பற்றியோ வாயே திறக்காத நடிகர் விஜய் அவர்களிடம், ஒன்றிய அரசு PM SRI பள்ளிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற நிலையில் தவெக அனுமதியளிக்கத் தயாராகியிருக்கிறது. ஆனால் திராவிட மாடல் அரசில் ஸ்டாலின் ஆட்சியில் "PM SRI பள்ளிகளை அனுமதித்தால் தான் மாநிலத்திற்குத் தர வேண்டிய கல்வி நிதியை விடுவிப்போம்" என்று மிரட்டிய போதும் கூட, "எங்களுக்கு மாணவர்களின் கல்வி தான் முக்கியம்; 5000 கோடி கொடுத்தாலும் இதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்" என்று சொன்னவர் ஸ்டாலின். சமூக மற்றும் அரசியல் தெளிவற்ற கூட்டத்தால் மக்களின் உணர்வுகள் சார்ந்து முடிவெடுப்பது சிரமமான காரியம் என்பது, கொள்கை முடிவற்ற தன்மையில் தவழ்ந்து வரும் ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். ஒன்றிய அரசின் நவோதயா - PM SRI பள்ளிகளில் தவெக ஆர்வம் காட்டுவதாகவே தெரிகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் இந்த முடிவை எடுப்பது தவெகவின் அரசியல் இலக்கு. மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து, இருமொழிக் கொள்கையைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, மறுபுறம் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை மரபுகளைப் பின்னிருந்து குழிபறிக்கும் வேலைகளைத் தவெகவை வைத்து வேலை வாங்குகிறது ஒன்றிய பாஜக அரசு.
வந்தே மாதரம் பாட முன்னோடி யார்?
'வந்தே மாதரம்' பாடல், வங்கத்துப் பார்ப்பன எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' நாவலில் இடம்பெறும் பாடல் பகுதி. இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக "பன்றிகளோடு அவர்களைச் சிறைபிடிக்க வேண்டும் மற்றும் அழிக்க வேண்டும், நிர்மூலம் செய்துவிட வேண்டும்" என்ற கருத்துகள் இடம்பெற்றதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், எம்.என்.ராய் உள்ளிட்ட வங்காள அறிஞர்கள், முஸ்லிம் வெறுப்பைத் தூண்டும் அதன் பகுதிகளை ஏற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியினர் 1937இல் நடத்திய கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில், முஸ்லிம்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தக் கூடாது என்று, அப்பாட்டில் இரண்டு பத்திகள் (Two Stanzas) மட்டுமே பாட வேண்டும் என்று ராஜேந்திர பிரசாத் முன்மொழிய, சர்தார் பட்டேல் வழிமொழிந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். மற்ற பகுதிகளை விட்டுவிட்டனர்.
அதன்பிறகு 1937 – 39இல் ஆட்சி செய்த ராஜாஜி, வேண்டுமென்றே திட்டமிட்டு இந்துக்களும், முஸ்லிம்களும், இதர வகுப்பினர்களும் கலந்துள்ள சட்டசபையில் முஸ்லிம்களை அவமதிக்கக்கூடிய "வந்தே மாதரம்" பாட்டைப் பாடச் செய்து, அவர்களது உணர்ச்சியைப் புண்படுத்தியதோடு, இச்செயலுக்குக் கடுமையான எதிர்க்கிளர்ச்சி செய்த பிறகு, தனது பிடிவாதத்தைக் கைவிட்டார் என்பது வரலாறு.
அதனைத் தொடர்ந்து, வந்தே மாதரம் பாடலைப் பாட அதன் 6 பகுதிகளோடு அரசு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் பாட வேண்டியது கட்டாயமாகும் என்று 29.01.2026இல் சுற்றறிக்கை ஆணை ஒன்றினை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. அப்படி இருந்தும் திராவிட மாடல் அரசு அதை நிராகரித்துத் தான் வந்துள்ளது. ஆனால் புதியதாகப் பொறுப்பேற்ற தவெக அரசு, ஒன்றிய அரசின் எந்த நிர்பந்தமும் இல்லாமல் வந்தே மாதரத்தை வலிந்து திணித்து வருவதோடு தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கும் தள்ளி வைத்துள்ளது. விஜய் பதவியேற்ற போதும் சரி, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் போதும் தமிழ்நாட்டில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டதும் நடிகர் ஆட்சியில் தான். இதற்குக் கண்டனம் எழுந்த கையோடு அரசு சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தான் முதலில் பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த ஆணையும் இதற்கு முன் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆணை தான் என்பது மக்கள் அறிவர். ராஜாஜி கொண்டு வந்த அதே வந்தே மாதரம், எதிர்ப்புக்குப் பிறகு பின்வாங்கப்பட்டது போல் விஜய் வந்தே மாதர அரசியலை அதே பாணியில் தொடர்கிறார்.
மின்சாரம் மற்றும் நில வரி
மின்சார வரி (Electricity Duty) - The Madras Electricity Duty 1939. ஒவ்வொரு யூனிட் கரண்ட் (இரண்டணாவுக்கு மேல் விலையில் உள்ளதற்கு) அரையணா வரி என்றும், மோட்டார் எண்ணெய் வரி, தமாஷா வரி, புகையிலை வரி, பொது விற்பனை வரி என்றும் 1937-1939இல் ஆட்சியில் இருந்த வரியை ராஜாஜி உயர்த்தினார். அதாவது, வரி விதிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதே ராஜாஜி தான், ஆட்சிக்கு வந்த பின்னால் வரியைப் பற்றி வாய் திறக்காமல் மக்கள் மீது அதிக வரியைச் செலுத்தினார்.
அதே பின்னணியில் தான் திமுக அரசை விமர்சனம் செய்தும், "நாங்கள் வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம்" என்றவர்கள், இன்று மின்சாரமும் வரவில்லை, வராத மின்சாரத்திற்கு வரிக்கு மேல் வரியைப் போடும் விதமாக மூன்று மடங்கு அதிகக் கட்டணத்தை மக்கள் செலுத்தி வருகின்றனர்.
பத்திரப் பதிவு இலாகாவில் 1938 ஜனவரி முதல் புதிய வரியை உயர்த்தியவர் ராஜாஜி. இந்தியாவில் ரூபாய் மதிப்பு பணவீக்கத்தில் இருந்த போது ஆட்சி செய்த திராவிட மாடல் ஆட்சி கூட அதிக வரிகளை மக்கள் மீது திணிக்கவில்லை. மாறாக நில வரி மற்றும் பட்டா சம்பந்தமான வேலைகளுக்கான சில தளர்வுகளை ஏற்படுத்தி, மக்களின் பல ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றியது.
ஆனால் தவெக அரசு சென்னையில் சொத்துவரியை ஆட்சி ஏற்ற 80 நாட்களுக்குள் 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளனர். மின்சார உயர்வு பற்றியோ, சொத்துவரியை அதிகரித்தது குறித்தோ எந்த அறிவிப்பும் செய்யாமல் ஒரே சமயத்தில் வரிகளை உயர்த்தியிருப்பது மக்கள் மேல் பெரும் சுமையைச் சுமத்தியுள்ளது. ராஜாஜி சுமத்திய அதே வழியில் வேறுபாடு இல்லாமல் நடிகர் விஜய் தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகிறார்.
விவசாயிகள் வயிற்றில் அடித்த ராஜாஜியும் விஜய்யும்
ராஜாஜி, நடுத்தர விவசாயிகளான பெருவாரியான விவசாயிகளுக்குப் பெரும் கேட்டைத் தந்த விவசாயக் கடன் குறைப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். சென்னை அரசியலில் பெரும்பாலான அமைச்சர்கள் கடன்காரர்களாக இருந்து, கனவில் வாரண்டையும் சம்மனையும் எதிர்பார்த்த வண்ணமாக இருந்து வந்த நிலையிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள அனுகூலம் செய்யப்பட்டது இந்தச் சட்டமாகும். அதாவது பெருமுதலாளிகளும் பண்ணையார்களும் தான் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். அதனால் அவர்களைக் காப்பாற்றக் கடன் குறைப்புத் திட்டத்தை அறிவித்து அவர்களைத் தப்பிக்கச் செய்தார். ஆனால் உண்மையான சிறு விவசாயிகளுக்கு அது பயன்படவேயில்லை. மேலும் கடன் குறைப்பு என்று, அந்தத் திட்டத்தில் பயனடையாத விவசாயிகளின் வரிப்பணத்திலிருந்து தான் முதலாளிகளுக்குக் கடனைக் குறைத்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"ஆட்சி அமைந்தவுடன் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வோம்" என்று தேர்தல் வாக்குறுதியாக நடிகர் விஜய் அறிவித்தார். ஆனால் தற்போதைய அறிவிப்பில் ₹75,000 வரை மட்டுமே தள்ளுபடி, அதற்கு மேல் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தள்ளுபடி கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்; வணிக வங்கிகள், தனியார் வங்கிகள் மூலம் பெற்ற கடன்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிப்பு செய்துள்ளார்.
ராஜாஜி முதலாளிகளுக்காகக் கடனைக் குறைத்து விவசாயிகளைக் கைவிட்டார். விஜய் சொன்ன வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல் பல்வேறு வரம்புகளை விதித்தும், முழுமையான தள்ளுபடியும் இல்லாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். ராஜாஜி வழியில் விஜய் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வேலையைச் செய்து வருகிறார்.
அன்று சென்னை ராஜ்யத்தில் ராஜாஜி காலத்தில் பூணூல் தர்பாராகக் காட்சியளித்தது. இன்று தமிழ்நாடு ஆட்சியில் அரசுப் பணியில் தனக்கு விரும்பியவர்களை அமர்த்துவதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், ஊழலற்ற ஆட்சி என்று சொல்லிக் கொண்டு ஊழல்வாதிகளை மட்டுமே கட்சியில் வைத்திருப்பதும், ஊழல் செய்தவர்களைக் கட்சியில் இணைத்துக் கொள்வதும், தமிழ்நாட்டில் எவரும் கண்டிராத குதிரை பேரத்தை நடத்தி ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது நடிகர் விஜய்யின் தூய சக்தி தவெக ஆட்சி.
டாஸ்மாக் (TASMAC) நாடகம்
டாஸ்மாக் (TASMAC) — தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் — 1983இல் எம்.ஜி.ஆர். அரசால் தொடங்கப்பட்டது. போலி/கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்க மற்றும் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைப் பொதுநலத் திட்டங்களுக்கு (இடைவேளை உணவு போன்றவை) பயன்படுத்த TASMAC உருவாக்கப்பட்டது.
இந்த நோக்கத்தைப் புரிந்திடாத நடிகர் விஜய் தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதாவது "நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் இருக்காது, TASMAC கடைகள் அனைத்தும் மூடப்படும்" என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகிறது, எதுவும் நடக்கவில்லை. மாறாக அவர் சொல்லாதது எல்லாம் நடந்தது; ஏற்கனவே திராவிட மாடல் அரசில் மூடப்பட்ட கடைகளைக் கணக்கு காண்பிப்பது, மூடியதாகச் சொல்லிய கடைகள் தொடர்ந்து இயங்குவது போன்ற நகைச்சுவை தான் நடந்தது.
இதில் விஜய் சொல்லாத மற்றொன்றும் நடந்திருக்கிறது. அது 1937இல் ராஜாஜி "நாட்டில் பூரண மதுவிலக்கு அமலில் கொண்டுவர முயற்சிப்பதால், இப்போது வந்து கொண்டிருந்த வருமானம் குறைந்து விட்டது. அதனால் வரவு செலவைச் சரிகட்ட கல்விச் செலவைக் குறைக்க வேண்டியதாயிற்று" என்று ஆச்சாரியார் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டு பேசியுள்ளார். இதே நிலையை விஜய் எப்படி கையாண்டார் என்றால், மதுவை நிறுத்தினால் வருவாய் குறையும், அதனால் இழப்பு அரசுக்குத் தான்; அதைச் சரிகட்ட:
- மக்களை ரீல்ஸ் போட்டு ஏமாற்றி, மூடப்பட்டதாகச் சொல்லப்பட்டு நம்ப வைப்பது.
- அரசுக் கடைகளைக் குறைத்துவிட்டுத் தனியாருக்குத் தாரை வார்த்தது.
- ராஜாஜி பணம் இல்லையென்று பள்ளிக்கூடங்களை மூடியது போன்று, இந்த நிதியாண்டுக்கான கல்வி நிதியைக் குறைத்தது.
இந்தத் தில்லுமுல்லைத் தான் செய்து வருகிறார் விஜய். மக்களிடம் உணர்ச்சி ரீதியாக ஊழல், மன்னராட்சி, TASMAC கொள்ளை என்று "பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று பாட்டுப் பாடியவர் ஆட்சியில் "பாட்டிலுக்கு 20 ரூபாய்" வாங்குகிறார்கள். மேலும் தனியாருக்குத் தாரை வார்த்து முதலாளிகள் கொழுக்க வழிவகை செய்துள்ளார் நடிகர் விஜய்.
அரசுப் பதவிகளில் சினிமாக்காரர்கள்
தமிழ்நாட்டு அரசியலில் காமராஜரைத் தவிர்த்துப் பிற முதல்வர்கள் சினிமா துறையிலிருந்து தான் வந்தார்கள். ஆனால் நடிகர் விஜய் சினிமாக்காரர்களுக்கும், தன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் அரசுப் பதவிகளைக் கொடுத்திருப்பது ஊழலில் வராதா? ரசிக மோகத்தில் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தவர்களுக்குத் தெரியாது, ராஜாஜி காலத்திற்கு நம்மை விஜய் இழுத்துச் செல்கிறார் என்று.
ஊழல் என்பது பணம் பெறுவது மட்டுமல்ல; அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஊழல் தான். 1937இல் ஆட்சிக்கு வந்தவுடன் ராஜாஜி செய்தது, உள்ளாட்சித் துறை முழுவதிலும் அப்போது அமலில் இருந்த கம்யூனல் ஜி.ஓ.வைக் கொலை செய்யும் வகையில் தன் இனத்தாருக்கே எல்லாப் பதவிகளையும் தந்தார்.
அதுபோல ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள கோயில்களுக்குப் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து உரிய பெயர் பட்டியல் தயாரிக்க தமிழ்நாடு அரசு அமைத்த மாநிலக் குழுவில் உறுப்பினராக 'கோட்' (GOAT) படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார். மேலும் விஜய்க்காகப் பாடல் பாடியவரும், தேர்தலுக்கு முன் விஜய்க்கு ஆதரவாக இருந்தவருமான பாடகர் வேல்முருகன் இடம்பெற்றுள்ளார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ச்சியாகத் தேர்தலுக்கு முன் சமூக வலைதளங்களில் விஜய்யை ஆதரித்துக் காணொளிகள் வெளியிட்டவர். இதற்கான அரசாங்க ஆணையைப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசுப் பதவிகளில் தவெக ஐ.டி. விங் நிர்வாகிகளை நியமித்தது, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check Unit) 'தகவல் நம்பகத்தன்மை பிரிவு' எனப் பெயர் மாற்றப்பட்டு, அதன் தலைவராக விஜய்யின் இணையதள ரசிகர் மன்ற நிறுவனரான குரு என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவில், தவெக ஐ.டி. விங்கைச் சேர்ந்த திவ்யா என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் "பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உறுப்பினரைச் சேர்ப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது" என்பதால் அந்த முடிவை திமுக எடுக்கவில்லை; மாறாக விஜய் வந்ததும் பாஜக தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. விஜய் மாநிலச் சட்டத்தின் மூலம் திமுக ஆட்சியில் போராடிப் பெற்ற மாநில உரிமைகளை ஆளுநரிடம் விட்டுக் கொடுத்து, தமிழ்நாட்டை ஆளுநர் ஆளும் மாநிலமாக மாற்றி இருக்கிறார்.
மேலும் 'ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவிற்கு அமைச்சர் பதவிக்கு நிகரான 'தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி' பதவி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விஜய்யின் உதவியாளர் முதலமைச்சரின் தனிச்செயலாளர்; விஜய்யின் படத் தயாரிப்பாளர் டெல்லி பிரதிநிதி; விஜய்யின் வழக்கறிஞர் அரசின் தலைமை வழக்கறிஞர்; விஜய்யின் கேமராமேன் திரைப்படக் கல்லூரித் தலைவர் என்று நீள்கிறது பட்டியல்.
அமைச்சர் சரத்குமார் பவுடர் பயன்படுத்தி மாட்டிக் கொண்டிருக்கிறார். கேட்டால், 'மகளுக்கு மாத்திரையை நசுக்கிக் கொடுத்தேன்' என்கிறார். திருவைவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது த.வெ.க. கட்சியைச் சேர்ந்த மிக நீண்டகால விஜய் ரசிகையே பாலியல் புகாரைக் கொடுத்துள்ளார். 'இரண்டு பேர் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்; சரவணன் பெயரைச் சொல்லித் தான் அழைத்துச் சென்றார்கள்' என்று சொல்கிறார் அந்தப் பெண். இறுதியாகத் த.வெ.க. எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? புகார் கொடுத்த விஜய் ரசிகையைக் கட்சியிலிருந்து தூக்கிவிட்டார்கள்.
பழனி முருகன் சொத்தையே ஆட்டையைப் போட்டுவிட்டது ஒரு கும்பல். ரூ.100 கோடி சொத்தை ரூ.2 கோடிக்குத் தாரை வார்ப்பது அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிற்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஊடகங்களுக்கு முன்னால் வாயை மெல்லுகிறார் ரமேஷ். பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் சிறையில் உயிரிழந்தார்; இது யதேச்சையாக நடந்ததாம்!
அடுத்தது, அதே பாணியில் திண்டுக்கல் பெருமாள் கோயிலின் ₹400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனிநபர் அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் அழகர்கோயிலுக்குச் சேவை செய்வதற்காக 1930இல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமான ₹60 கோடி மதிப்புள்ள 1.73 ஏக்கர் நிலம், போலி வாரிசு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் தனியாருக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மடத்திற்குச் சொந்தமான ₹2 கோடி மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் ₹9 லட்சத்திற்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இவையெல்லாம் ஊழல் இல்லையா?
முதல்வர் விஜய் ஆகஸ்ட் 15, 2026 அன்று தனது முதல் சுதந்திர தின உரையில், "ஊழலிலிருந்து தமிழகத்தை மீட்பது சுதந்திரம் பெறுவதற்குச் சமம்" என்று உறுதிமொழி எடுத்தார். ஊழலில்லா ஆட்சியை அமைக்க மிஷன் முறையில் பணியாற்றுவதாகவும், மக்கள் ஊழலுக்கு எதிராகப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அரசு வருவாய் தனிநபர்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இந்த லட்சணம் தான் விஜய் ஊழலை ஒழித்த லட்சணம்!
அந்த வகையில் அதிகாரிகளுடன் 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யுடன் குடும்பத்தோடு பார்த்து ரசித்தனர். மேலும் பல துறை அமைச்சர்களும் திரைப்படம் பார்க்க அந்த ஒரு நாள் விஜய்க்காக என்று மக்கள் பணியை மறந்து சென்றது ஒரு பக்கம்; ஆனால் அதே நாளில் காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர முடியாத விஜய் அரசைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் போராடிக் கொண்டிருந்த சூழலில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் படம் பார்க்கச் சென்றுவிட்டனர். இந்த மாற்றத்தைத் தான் மக்கள் எதிர்பார்த்து வாக்களித்தனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆட்சிக்கு வந்த கையோடு முதல்வர் விஜய் "சாப்பாடு எடுத்து வந்து தன் கையாலேயே அள்ளிச் சாப்பிடுகிறார்" என்று விளம்பரப்படுத்திய ஊடகங்கள், ஏனோ சினிமாக்காரர்களுக்கு அரசுப் பதவிகளை வாரி வழாங்ம்போது வாய் திறக்கவில்லை.
அதுமட்டுமல்ல, ரத்தன் பண்டிட் என்பவர் நடிகர் விஜய்யின் ஜோதிட ஆலோசகர். ரத்தன் பண்டிட்டை விஜய் அரசு அரசியல் சிறப்புப் பணியாளராக அரசுப் பொறுப்பில் நியமித்தது. கடும் எதிர்ப்பு எழுந்ததன் விளைவாக 24 மணி நேரத்திற்குள் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது. தன் படத்திற்குப் பணம் கொடுத்தவர்கள், தன் கட்சியில் வேலை பார்த்தவர்கள், தனக்காகப் பேசியவர்கள் தொடங்கித் தன் ஜோசியருக்குக் கூட அரசு வேலையைக் கொடுக்கும் இடத்திற்குத் தமிழ்நாடு அரசு சென்றுள்ளது. இவையெல்லாம் ஊழலில் வராதா? அல்லது மன்னராட்சியில் இதெல்லாம் வராதா? தனக்குப் பிறகு தன் பிள்ளை வந்தால் மன்னராட்சி; அதே பிள்ளை வராமல் தனக்கு வேண்டியவர்களை எல்லாம் அரசுப் பதவி கொடுத்து அலங்கரித்துக் கொண்டால் அதற்குப் பெயர் என்ன?
கையூட்டு பெறாத தூய சக்தியா தவெக?
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த TVK வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எம். ஞானசௌந்தரி, அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு நியமனம் செய்ய ₹5 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாக ஜூலை 2026இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜூலை 17, 2026 அன்று நீதிபதி முகமது ஷபீக் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். "அரசியல்வாதிகள் இந்த வழக்கில் தலைப்புச் செய்திகளுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்; போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று நீதிபதி கருத்து தெரிவித்து இவ்வழக்கு முற்றிலும் முடிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் அருப்புக்கோட்டை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் டாஸ்மாக் பொருட்கள் போக்குவரத்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக உறுதியளித்து ₹22 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சியில் ₹9.80 லட்சம் மதிப்பிலான சிமெண்ட் சாலை ஒப்பந்ததாரரிடம் நிலுவை பில் பெற ₹1.30 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி TVK-விலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் லஞ்சம் வாங்கியவர் நீக்கப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கு அதே மாவட்டத்தில் கட்சிப் பொறுப்பு வழங்கி ஊழலை ஊக்குவித்தது தூய சக்திதான்.
முதல்வர் விஜய் அவர்களின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றும் பணிக்காக வழங்கப்பட்ட ₹5.54 கோடி டெண்டரில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்பட்டது. முறைகேடு நடந்ததோ இல்லையோ, ஆனால் ஜோசியர் சொன்னார் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தை வீணடித்துப் புதிய அலுவலகத்தை உருவாக்குவது ஊழல் இல்லையா?
TVK எம்.எல்.ஏ. மீதான லஞ்ச வழக்கை விசாரிக்கச் சென்னை போலிஸிற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தவெக தூய சக்தி என்றால் இதை எப்படிச் செய்ய முடியும்? பிஜேபி வழியில் 'வாஷிங் மெஷின்' அரசியலை இங்குச் செய்கிறார் விஜய். எவ்வளவு ஊழல் செய்திருந்தாலும் தவெக வந்தால் தூய சக்தியாக மாற்றும் வித்தையைக் கற்று வைத்திருக்கிறார் போல!
ஏற்கனவே ஊழலில் திளைத்து வழக்குகளைச் சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களையும், 'ஊழல் சக்தி' என்று முதலமைச்சர் விஜய்யால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில் பெருமளவில் சேர்த்து வருவதும், அதனை அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் பெருமையாகப் பேசி வருவதும், தமிழக வெற்றிக் கழகம் ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறத் தொடங்கவில்லை; மாறாக ஊழல் பேர்வழிகள் நிரம்பியவர்களை வைத்துத் தான் கட்சியே நடக்கிறது என்பதைக் காட்டுகிறது.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது 2022இல் புதுச்சேரியில் அவரது சொந்த சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி மீது தாக்குதல், வீட்டிற்குள் புகுதல், மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேரில் ஆஜராகாத அமைச்சரை நோக்கி உயர்நீதிமன்றம், "தமிழக நிதியமைச்சர் மரியா வில்சன் இங்கிலாந்து ராஜாவா? அப்படி என்றால் தான் நீதிமன்றத்திற்கு வராமல் தவிர்க்க முடியும். ஆனால் அவர் சாதாரண குடிமகன். அமைச்சர் பதவி அவருக்கு நீதிமன்றத்திற்கு வராமல் தவிர்க்கும் உரிமையைத் தராது" என்று கொட்டு வைத்தது.
MDA-வில் 3 நாளில் 130 கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து 100 கோடிக்கு மேல் வசூல், செங்கல் சூளையில் மிரட்டிப் பணம் பறிப்பு, மணல் அள்ளுவதற்குத் தவெக மாவட்டச் செயலாளருக்குக் கட்டாய மாமூல், நெல் கொள்முதல் செய்ய மூட்டைக்கு ரூ.60 லஞ்சம், சாலைப் பணிக்கான தொகையை விடுவிக்கத் த.வெ.க. ஊராட்சி மன்றத் தலைவரே கையூட்டு! இப்படிப்பட்டவர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டு விஜய் 'தூய சக்தி' என்பதும், ஊழலற்ற ஆட்சி, வெளிப்படையான ஆட்சி என்பதும் கேலிக்கூத்தாக உள்ளது. இப்படி ராஜாஜி பாணியில் விஜய் சத்தமில்லாமல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழலுக்கு வழி அமைக்கிறார்.
- த.மு.யாழ் திலீபன்