கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 'இந்திய தேசம் என்றும்', 'பாரத நாடு பழம் பெரும் நாடு ' என்றும் பலரும் விதந்தோதி வருகின்றனர்.

 இந்திய தேசம் என்று அரசியல் சட்டம் எங்கும் சொல்லவில்லை அதே போல இந்தியை தேசிய மொழி என்றும் சொல்லவில்லை.

 இந்தியா என்கிற பாரதம் என்றே உள்ளது. மேலும் சட்டப்படி இந்திய ஒன்றியம் (India union) என்றே உள்ளது.

 இந்திய அரசு பணிக்கு ஆள் சேர்க்கும் அமைப்பையே Union. Public Service Commission. -UPSC என வைத்துள்ளனர்.

 இவ்வாறு சட்டப்படி எங்கும் இந்திய தேசம் என்ற சொல்லாடல் கையாளப்படுவதில்லை.

 svr book on indiaமாறாக பள்ளிக்குழந்தைகளுக்கு இந்தியா என் தாய் நாடு என பொய்யான கருத்தை விதைத்துப் பதிய வைக்கின்றனர். தலைவர்கள், கவிஞர்கள் தமது பேச்சு எழுத்துக்களில் இந்தியா ஒரு தேசம் என்றும், நமது தாய்நாடு என்றும் பரப்பி வருகின்றனர்.

 தாய்மொழி தமிழாக, மலையாளமாக, குஜராத்தியாக இன்னும் பலவாக இருக்கும் ஒருவனுக்கு தாய்நாடு மட்டும் எப்படி இந்தியாவாக இருக்க முடியும்.

 உலகில் ஒருவனுக்கு எது தாய்மொழியோ அந்த மொழி பேசுகிற மக்கள். காலம் காலமாக இணைந்து வாழ்ந்து வரும் அந்த நிலப்பரப்பே அவர்களின் தாய் நாடாக உள்ளது.

 எடுத்துக்காட்டாக நாமும் ஈழத் தமிழர்களும் தாய்மொழியாக தமிழைக் கொண்டுள்ளோம். ஆனால் இரு வேறு நிலப்பகுதியில் பன்னெடுங்காலம் வாழ்ந்து வருகிறோம். எனவே தாய்மொழி தமிழாக இருக்கும் போதே இரு வேறு தாயகங்களைப் பெற்றிருக்கின்றோம்.

 தமிழ் நாடு, தமிழீழம் என்ற இரண்டு தாயகங்களை பெற்றுள்ள தேசிய இனமாக தமிழர்கள் உள்ளனர்.

 சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் மொழிவழித் தமிழர்கள் மட்டுமே.

 இவ்வாறு உலக வழக்கிற்கு மாறாக ஒரு தேசிய இனமாக இல்லாத மக்களையெல்லாம் பலாத்காரமாக இணைத்து உருவாக்கப்பட்டதே 'இந்திய தேசம்'.

 இப்படியொரு இந்திய நாட்டை இது தேசம் அல்ல என்று மிகத்துணிவாகக் கூறியவர் பெரியார் மட்டுமே.

 சமூக விதிகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தமது செயல் திட்டங்களை வகுத்து அந்த நாட்டின் சமூக அமைப்பையே புரட்சிகரமாக மாற்றியவர்கள் லெனின், மாவோ, ஹோசிமின் போன்ற பொதுமைய இயக்கத் தலைவர்கள்.

 லெனின் மா-ருசியராகப் பிறந்தபோதும், ருசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்று ஜாரை வீழ்த்திய போதும் அவர் தலைமையில் நிறுவிய நாட்டை ஒரு போதும் ருசிய தேசம் என நிறுவவில்லை. மாறாக பல் வேறு தேசிய இனங்களும் பிரிந்து போகும் உரிமையோடு(சுயநிர்ணய உரிமை) சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்-USSR Union of Soviot Socialist Republic என்பதாகவே இணைந்து இயங்கி வந்தனர். பல் வேறு தேசிய இனக்கங்களைக் கொண்ட ஒரு பொதுப் பெயரையே வைத்திருந்தனர். இந்தப் பெயரில் ஒரு இனமோ, மொழியோ, மதமோ குறிக்கப்படவில்லை. மாறாக அதன் அரசியல், பொருளாதாரத தன்மை குறிக்கப்பட்டுள்ளது. இது 1990 வரை நீடித்தது.

 ஆனால் இந்தியா இது போல தேசிய இனங்களின் விருப்பத்துடன் உருவாக்கப் பட்ட ஒன்றியம் அல்ல!

 மாறாக துப்பாக்கியாலும், பூநூலாலும் உருவாக்கப்பட்ட ஒரு சிறைக்கூடம்.

 இதை 1969களில் இ. பொ. க. (மா.லெ.) கட்சி உருவாகும் போது மிகச் சரியாக "இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக் கூடம் " என வரையறுத்து முன்வைத்தார்கள்.

இந்திய தேசியத்தின் அடிப்படையாக இருப்பது பார்ப்பனியமே!

இந்திய தேசிய உருவாக்கமே பார்ப்பனியத்தை மையமாக வைத்துக் கட்டப்பட்டது.

 இப்படி நாம் சொல்வதை பல இந்திய பொதுமை இயக்கத்தவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் அல்லது பரிசீலிக்க மறுக்கிறார்கள்.

 இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்கான முயற்சிகளே 1917 மாபெரும் ருசியப் புரட்சிக்கு பின்னரே தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-CPI) என்ற பெயரிலேயே இயங்கிவந்தது. இந்தக்கட்சியின் திட்டத்தில் தேச விடுதலைப் போராட்டம், தேசிய பிரச்சனைகள் என்று பாக்கிஸ்தானையும் உள்ளடக்கிய பகுதியையும் கொண்டே கட்சித் திட்டம் பேசும்.

 1947 களில் இந்தியாவின் ஒரு பகுதி முஸ்லீம் மதத்தை பெரும்பான்மை உள்ள மக்களைக் கொண்டது பாகிஸ்தான் எனப் பிரிகிறது.

 இந்தப் பிரிவினைக்கு மூலகாரணமே பார்ப்பனிய சக்திகள் இந்தியாவில் தாம் ஒரு இந்து ராஷ்ட்ரத்தை நிறுவப் போகின்றோம் என்ற அறைகூவலோடு 1920களில் ராஷ்ட்ரிய ஸ்யம் சேவக் சங்க் எனும் ஆர். எஸ. எஸ் அமைப்பை நிறுவுகின்றனர். இந்த ஆர். எஸ். எஸ் முழுக்க முழுக்க மனுநூலை ஆதாரமாகக் கொண்ட ஒரு பார்ப்பனிய ஆட்சியை நிறுவுவதை தனது திட்டமாக வெளிப்படையாக அறிவித்து செயல்படுகின்ற அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் என்பது நாக்பூரை தலைமையிடமாக் கொண்ட மராட்டிய சித்பவன பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட பார்ப்பனிய மீட்பு இயக்கமாகும். இதை வல்லபாய் பட்டேல் போன்ற பல தலைவர்கள் வெளிப்படையாகவே ஆதரித்தனர். அதன் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

 இந்திய தேசியக் கருத்தாக்கமே 1875 இல் அமெரிக்காவில் தியோசபிகல் சொசைட்டி(பிரம்ம ஞான சபை) என்ற அமைப்பை நிறுவிய கர்னல் ஓல்காட் , பிளாஸ்விட்ஸ்கி அம்மையார் போன்றோரிடமே தோன்றியது என்கிறார் ஆய்வறிஞர் எஸ். வி. இராஜதுரை.

 எஸ். வி. இராஜதுரை அவர்கள் தமது புகழ்பெற்ற இந்து, இந்தி, இந்தியா எனும் நூலில் இந்திய தேசிய உருவாக்கத்தின் அடிநாதமாக இருப்பது பார்பனியமே என்பதை பல்வேறு வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

 இந்திய தேசியம் என்ற கருத்தாக்கத்தையும் இந்தியா ஒரே தேசம் என்ற கருத்தையும் 1880களில் உருவாக்கிப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள் வங்காளத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களும் பத்ரலோக் என்றழைக்கப்படும் படித்த மேல்சாதி மத்தியதர வர்க்கத்தினரும் ஆவார்கள்.

 பார்ப்பனியத்தைப் பாதுகாக்க 1866 இல் வங்காளத்தில் கேசவசந்திர சென் என்பவரை செயலாளராகக் கொண்டு பிரம்ம சமாஜம் என்ற பெயரில் ஒரு சங்கம் அமைக்கப்பட்டது.

 இந்த பிரம்ம சமாஜம் அமைப்பிலிருந்த சிலர் இந்திய தேசத்தை உருவாக்கும் இலக்கோடு 1875ல் இந்திய சங்கம்(Indian Association) என்ற அமைப்பை நிறுவினர்.

 இந்திய தேசியத்தை நிறுவ ஒரு அனைந்திந்திய அமைப்பு தொடங்கப்பட வேண்டும் என்ற கருத்து வந்த போது அந்த அமைப்பிற்கு "இந்திய தேசிய காங்கிஸ்" அல்லது "இந்து மகாஜன சபை" என்ற பெயரை முதலில் முன்மொழிந்தவர் வழக்குரைஞரான என் சிவசாமி ஐயர். அனைத்திந்திய அளவிலான ஒரு அமைப்பை உருவாக்கும் கருத்தை அனந்தாசார்லு என்ற சென்னை மகாஜன சபை நிறுவனர் முன்வைத்தார். அதற்கு நாமகரணம் சூட்டிய பெருமை சிவசாமி ஐயரையே சாரும்.

 இதை வரவேற்று மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என அண்ணாவால் அழைக்கப்பட்ட' இந்து ' ஏடு 1883 ஜூலையில் தலையங்கம் எழுதியது.

 இருபத்தைந்து கோடிமக்களும் ஒன்றுபடும் காலம் வந்துவிட்டது என்று கூறியது.

 எஸ். வி. ஆர் அவர்களின் நூலை ஆதாரமாக் கொண்டு எழுதப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கியவர்கள் ஏகாதிபத்திய சக்திகளும், பார்ப்பனிய சக்திகளுமே!

காங்கிரஸ் கட்சி இந்திய விடுதலைப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது, தேசபக்தர்கள் காங்கிரஸ் கட்சியை வழி நடத்தினார்கள் என்ற ஒரு கருத்து வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

 வரலாற்று உண்மைகள் மேற்கண்ட கூற்றிற்கு நேர்மாறாக உள்ளது.

 வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

 இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்க முடிவெடுத்த ஆண்டு 1884.

 இந்தியாவின் வைசிராயாக இருந்த ரிப்பன் பிரபு 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு மாற்றலாகிச் சென்றார்.

 ரிப்பன் பிரபுவை வணங்கி வழியனுப்ப 'தேசாபிமானிகள்' என்று தங்களை அழைத்துக் கொண்ட உயர்சாதி மேட்டுக் குடியினர் பல்வேறு மாகாணங்களிலிருந்தும் பம்பாயில் ஒன்று திரண்டனர்.

 அங்கு திரண்டிருந்த அனைவரும் இது போல ஆண்டு தோறும் ஒன்று கூடி பொதுவான அரசியல் விசயங்களை விவாதித்து ஒன்றுபட்டு செயல்படலாம் என முடிவு செய்தனர்.

 முதல் கூட்டத்தை 1885 ஆம் ஆண்டு கூட்டுவது என்றும் அந்தக் கூட்டத்திற்கு "இந்தியன் நேஷனல் காங்கிரஸ் " என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தனர். இந்தக் கருத்தை முன்மொழிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழகத்தில் சுதேசமித்திரன் ஏட்டை நிறுவியரும் பின்னர் பம்பாய் சென்று செயல்பட்டவருமான ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆவார்.

 1885 ஆம் ஆண்டு முதலாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டை நடத்துவதில் முக்கிய பங்காற்றியவர்கள் தாதாபாய்நௌரோஜி, ரானடே, ஃபெரோஸ்ஷா மேத்தா, பத்ருதின் தியாப்ஜி, ஜி. சுப்பிரமணிய ஐயர், டபிள்யு சி. பானர்ஜி, சுரேந்தர்நாத் பானர்ஜி, முதலிய இ்ந்தியர்களும் ஆலன் ஆட்டேவியன் ஹயூம், வில்லியம் வெட்டர்பன், காட்டன் போன்ற ஆங்கிலேயர்களும் ஆவர்.

 காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக செல்வாக்குப் பெற்றிருந்த திலகர், அரவிந்தர், விபின்சந்திரபால், மதன்மோகன் மாளவியா, லாலலஜபதிராய் போன்றவர்கள் இந்தியாவை இந்துமத(பார்ப்பனிய) உணரவூட்டியே ஒன்றுபடுத்த வேண்டும் என தொடர்ந்து பேசியும், எழுதியும் பரப்புரை செய்தும் வந்தனர்.

 இவர்களது கருத்துக்களை ஒவ்வொரு தேசிய இன மொழி வட்டகையில் அங்கிருந்த பார்ப்பன, உயர்சாதி அறிவாளிகளும், எழுத்தார்களும், கவிஞர்களும் பிரச்சாரம் செய்தனர்.

 ஷிண்டே போன்ற பல சீர்திருத்தக்காரர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். 1918 ஷிண்டே அனைத்திந்திய தாழத்தப்பட்டோர் மாநாட்டை நடத்தி அதில தீண்டாமை ஒழிப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் , இதைத் திலகர் ஏற்றுக்கொள்ளவில்லை. லிங்காயத்துகள், மராத்தாக்கள் போன்ற பல பிற்படுத்தப்பட்ட சாதியினர் சட்டமன்றத்தில் பிரதிநித்துவம் கோரியபோது இதை திலகர் கடுமையாக எதிர்த்தார்.

 கைவினஞர் தொழில் செய்யும் சாதியினரைப் பார்த்து திலகர் இவ்வாறு கூறினார் "நீங்கள் அவரவர் தொழிலைப் பார்த்துக் கொண்டிருங்கள்; அரசியலைப் பார்ப்பனர்களுக்கு விட்டு விடுங்கள். "

 மற்றொரு முறை கிண்டலாக 'பார்ப்பனரல்லாதவர்கள் சட்டமன்றங்களில் கலப்பையையும் மளிகைக் கடைத் தராசையும் தூக்கப் போகிறார்களா?" என்றார்.

 ஷோலாப்பூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், செக்கு ஆட்டுகிறவன், வெற்றிலை பாக்குக் கடைக்காரன், வண்ணான் முதலியோரெல்லாம் ஏன் சட்டசபைக்கு போக விரும்புகிறார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என்று கூறினார். (இந்தி இந்தி, இந்தியா -பக101)

 திலகர் போன்ற காங்கிரஸ் தலைவர்களின் கருத்து ஆளுகின்றவர்களாக பார்ப்பனர்களும், உயர் சாதி பணக்காரர்களும் தான் இருக்க வேண்டும். சூத்திரர்கள், பஞ்சமர் என்கிற பிரிவிலுள்ள உழைக்கும் மக்கள் எப்பொழுதும் சட்டத்திற்கு அடங்கி நடக்கின்றவர்களாக மட்டுமே இருக்க வேண்டும், சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரத்திற்கு உரிமை கோரக் கூடாது என்ற மனுவாதக் கருத்துத்தான்.

 காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமே சாதியக் கட்டமைப்பைப் பாதுகாப்பது, ஏகாதிபத்தியத்தின் மூலதனத்திற்கு எவ்வகையிலும் ஆபத்து வராமல் தடுப்பது என்பதாக இருந்தது.

 இன்றும் காங்கிரஸ் தனது இந்த இலட்சியத்தில் ஊன்றி நின்றுகொண்டுள்ளது.

 சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மக்களைத் திரட்டி காங்கிரஸ் போராடுகிறது.

(தொடரும்)

- கி.வே.பொன்னையன்