இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகள் மக்கள்தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது என்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 82ஆவது பிரிவு, ஒன்றிய அரசுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை வரையறை செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது. அதில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு தொகுதிகளை மறுவரையறை செய்து, அதன் அடிப்படையில் தொகுதிகளைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

delimitation 5401971ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பலமுறை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்குப்பின் தொகுதி மறுசீரமைப்புகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கான முக்கிய காரணம் “மக்கள்தொகைக் கட்டுப்படுத்தும் திட்டம்” (குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்).

ஒன்றிய அரசின் வலியுறுத்தலின் பேரில் அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மக்கள்தொகைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மிகச் சரியாக மக்களிடம் கொண்டு சென்று, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, “கருவுறுதல் விகிதத்தை”க் குறைத்தும், குடும்பக் கட்டுப்பாட்டைச் சரிவரச் செய்தும் மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைத்தது தென்னிந்திய மாநிலங்கள்தான்.

குறிப்பாகத் தமிழ்நாடு ஆரம்ப காலங்களில் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்று தொடங்கி, பிறகு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற இடத்தை அடைந்து மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைத்துள்ளது.

1976இல் 42வது அரசியல் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. அதில் மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகைக்கு ஏற்ப மாற்றக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. இந்தத் திருத்தத்தில்தான் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று நிலைப்படுத்தப்பட்டனர். இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம், இந்திய மாநிலங்கள் அனைத்திலும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இந்தத் திருத்தம் நடைபெற்றது. மேலும் 2001இல் 84ஆவது சட்டத் திருத்தத்தில் (82ஆவது பிரிவின் கீழ்) 2026ஆம் ஆண்டு வரை இந்நிலையே தொடர வேண்டும் என்றும், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு கூறிய மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைத் தென்னிந்திய மாநிலங்கள் பின்பற்றினாலும், பல வட மாநிலங்கள் அதை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீராய்வை (delimitation) முன்னதாகவே கொண்டு வர முயன்றபோதும், அனைத்து மாநிலங்களும் சமமாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத காரணத்தால் அந்தச் செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சரிவரச் செய்யாவிட்டாலும் கூட, தொகுதி வரையறை மறுசீரமைப்பைச் செய்தே தீருவோம் என்று பாஜக வம்புக்கு நிற்கிறது.

தொகுதி மறுசீரமைப்பை இரண்டு வழிமுறைகளின் மூலம் மேற்கொள்ள இருக்கிறார்கள். முதலாவதாக, மக்களவைத் தொகுதிகளை 543 என்பதிலிருந்து 848ஆக அதிகரிப்பது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 10 இடங்கள் கூடுதலாகவும், உத்தரப் பிரதேசத்திற்கு 63 இடங்கள் கூடுதலாகவும், பீகாருக்கு 39 இடங்கள் கூடுதலாகவும், ராஜஸ்தானுக்கு 25 இடங்கள் கூடுதலாகவும் தொகுதிகள் வரையறுக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குக் குறைவான இடங்களும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு அதிகத் தொகுதிகளும் ஒதுக்கும் திட்டமாகும்.

இரண்டாவது, 543 மக்களவைத் தொகுதிகளை மாற்றாமல் மக்கள்தொகை அடிப்படையில் கூட்டுவது அல்லது குறைப்பதாகும். இந்த முறையில் தமிழ்நாட்டிற்கு 8 தொகுதிகள் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் உத்தரப் பிரதேசம் 11 தொகுதிகளையும், பீகார் 10 தொகுதிகளையும், ராஜஸ்தான் 6 தொகுதிகளையும் கூடுதலாகப் பெற முடியும்.

ஒன்றிய அரசு சொல்லும் இந்த இரண்டு முறைகளுமே தமிழ்நாட்டிற்கும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

மாநிலங்கள் அல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி

இவையெல்லாம் கடந்து மக்களவை மறுவரை திட்டம் செயல்படுத்தப்பட்டால், தென் மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் வட இந்தியாவின் உதவியுடன் மட்டுமே ஒருவரைப் பிரதமராக்கும் நிலை உருவாகும். நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும். அதிக உறுப்பினர்களைக் கொண்ட வடமாநிலங்கள் தங்களுக்கான உரிமையைப் பெரும்பான்மை பலத்தில் உள்ளவர்களின் ஆதரவில் சாதித்துக் கொள்ளும் நிலையை எட்டும். குறைந்த தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களின் தனித்தன்மையையும் குரலையும் நசுக்கும் செயலாகும் இது.

ஒன்றிய அரசு கொண்டுவரும் இந்தித் திணிப்பாக இருந்தாலும், தொகுதி மறுசீராய்வாக இருந்தாலும், ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் மாநிலங்கள் அல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சிதான். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தினால் அதிகாரமற்ற மாநிலங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்படும் நிகழ்வின் தொடக்கமே இது. பிறகு "மாநிலங்கள் எதற்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் இருந்தால் சரியாக இருக்கும்" என்ற நிலைக்குத் தள்ளுவர். பிறகு மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு மூலம் நாம் அனைவரும் ஒரே மொழி, ஒரே மதம் என்று மாற்ற முற்படுவதற்கான ஆரம்பம் இது.

இந்தியாவில் கட்டாயமாக இந்தியைத் திணித்து மற்ற மொழிகளை அழித்து, பெரும்பான்மை மக்கள் இந்தி பேசுகிறார்கள் என்பதால் இந்தியாவின் தேசிய மொழியாக்கும் நிலையும்; பெரும்பான்மை மக்கள் இங்கு இந்துக்கள்தான் அதனால் இது 'இந்து நாடு' என்று அறிவிக்கும் போக்கும்; 'இந்தியா' என்கிற பெயரை மாற்றி 'பாரத்' என்று வைக்கும் நிலைக்கு ஒன்றிய அரசின் இத்தகைய திட்டங்கள் வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தகைய திட்டங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே மதம் என்பதையெல்லாம் நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமலே அவர்களால் நிறைவேற்ற முடியும் என்ற சூழலை உருவாக்கச் செய்யப்படும் சூழ்ச்சி. ஒன்றிய அரசு சொல்லும் இரண்டு வழிகளிலும் தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிப் பங்கீடு குறைவு என்பதும், வட இந்திய மாநிலங்களின் தொகுதிப் பங்கீடு இரண்டு வழிகளிலும் மிக அதிகம் என்பதுமே ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்குப் போதுமான வாய்ப்பாக அமையும்.

இந்து ராஷ்டிரத்திற்கு அடிபோடும் பாஜக

இந்திய அரசியலமைப்பின் அடிப்படையைச் சிதைத்து, மனுஸ்மிருதியை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவான மாநிலங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க 131வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முனைகிறார்கள். இது மகளிர் இடஒதுக்கீட்டிற்காக அல்ல; நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தித் தென்னிந்திய அரசியல் வலிமையைக் குறைத்து, ‘இந்து ராஷ்டிரம்’ நோக்கத்தை முன்னெடுக்கும் முயற்சி.

இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, கடந்த ஆண்டு முதலே தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தென்னாட்டு முதலமைச்சர்களை ஒன்றுகூட்டி விவாதிக்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் அனைவரும் இணைந்து போராட வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். கேரளம், தெலுங்கானா, கர்நாடகமும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை, உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறுவரையறையை எதிர்க்கத் துணிவில்லாமல், "பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது திமுகவுக்குப் பிடிக்கவில்லை" என்று பொய் செய்திகள் பரப்பப்பட்டன.

33% இடஒதுக்கீட்டின் உண்மைத்தன்மை

1996ஆம் ஆண்டு கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலேயே பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது திமுக. அதன்பிறகு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மகளிர் இடஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது திமுக.

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2014லேயே கடிதம் எழுதியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இதே கோரிக்கைக்காகத் திராவிட மாடல் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 2017ஆம் ஆண்டே பிரதமருக்குக் கடிதம் எழுதினார். திருமதி கனிமொழி எம்.பி அவர்கள் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கூட்டத்தொடர்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுதான் இந்த இடஒதுக்கீடு.

திமுகவின் 25 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது ஒன்றிய அமைச்சரவை.

பெண்கள் இடஒதுக்கீட்டை எதற்குத் தேவையில்லாமல் தொகுதி மறுசீரமைப்போடு முடிச்சுப் போட வேண்டும்? திமுகவிற்குப் பெண்கள் இடஒதுக்கீடும் முக்கியம்; மாநில உரிமைகளும் முக்கியம்! ஆனால், இந்தச் சமயத்திலும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்காமல் மோடிக்குச் சேவகம் செய்வோருக்கு இந்த வரலாறு எங்கே தெரியப் போகிறது?

மாநிலங்களின் அரசியல் வலிமையைக் குறைக்கும் முயற்சி

நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 850ஆக உயர்த்தி, வடஇந்திய இந்தி மாநிலங்களுக்கு 77% அதிகரிப்பு வழங்கி, தென், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் வலிமையைக் குறைக்கும் செயல் இது. இதனால் எதிர்காலத்தில் வட இந்தியர் அல்லாதவர் பிரதமராக வர முடியாத நிலையைத் திட்டமிட்டு உருவாக்க முனைகிறது பாஜக.

மேலும், தொகுதி மறுவரையறை, மக்களவை இட அதிகரிப்பு, மகளிர் இடஒதுக்கீடு ஆகிய மூன்றும் வேறானவை என்றாலும், அவற்றை இணைத்துக் குழப்பம் ஏற்படுத்தி மசோதாவை விரைவாக நிறைவேற்ற முயற்சி நடந்திருக்கிறது. மகளிர் 33% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது போலத் தோன்றினாலும், பாஜக அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏன் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பதில் உண்டா?

தொகுதி மறுசீரமைப்பு உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநில உரிமைக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு, குரலற்ற மாநிலங்கள் என்ற நிலைக்குப் பின், மாநிலங்களே இல்லாமல் போகும் அபாயத்தின் அறிகுறி இது.

“இந்த அநீதியை எதிர்த்து ஒவ்வொரு தமிழன் குடும்பமும் வீதிக்கு வந்து போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை!” என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததோடு அல்லாமல் “இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை” என்றும் எச்சரித்திருந்தார். இந்தியாவில் இந்தத் துணிச்சல் மாநில உரிமை மீட்பின் இரும்புக்கோட்டையாம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருக்கு மட்டுமே இருக்கும் என்பதை அன்றே பறைசாற்றினார்.

தேர்தலுக்கு முன் என்ன கருத்தை முன்வைத்தது தவெக?

இத்தகைய சூழ்ச்சியிலிருந்து மாநில உரிமையை மீட்கத் திராவிட மாடல் அரசின் முதல்வர் அன்று கர்ஜனை செய்து அப்போதும், எப்போதும் களத்தில் நிற்கிறார். ஆனால் தொகுதி மறுவரையறை பற்றி எந்தக் கருத்தும் இல்லாத தவெக, 2026 தேர்தலுக்கு முன் என்ன கருத்தை முன்வைத்துள்ளது என்பது மிக முக்கியமான ஒன்று.

“மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவைதான். 'நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை' என்பது ஒரு பிரச்சினையே இல்லை. 'Shortage of MPs is not at all a problem being faced by an ordinary citizen. It is a democratic issue in principle and not a principal democratic issue.' மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சினைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்திருக்கிறேன். அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்” என்ற நிலைதான் தவெகவினுடையது.

அதாவது தொகுதி மறுவரையறை எல்லாம் பெரியதல்ல, அதைவிடப் பெரிய பிரச்சினை உள்ளது என்று கடந்து சென்றது. அதன் தொடர்ச்சிதான் தேர்தல் சமயத்தில் கூட தொகுதி மறுவரையறை அறிக்கையைத் தீயிட்டுக்கொளுத்தித் தன் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினார் அன்றைய முதல்வர் ஸ்டாலின். அன்று இன்றைய தவெக தலைவர் நடிகர் விஜய் தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மலேசியாவில் நடனமாடிக் கொண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்க.

இப்படி எந்த அக்கறையும் கொள்ளாதவர்கள் இன்றைக்குக் காவிரியில் தண்ணீர் வரவைக்க முடியவில்லை, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை என்ற தோல்வியை மறைக்க, அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டியது. தொகுதி மறுவரையறையில் திமுக அக்கறை காட்டவில்லை எனும் தவெகவின் இந்த நாடகத்தைப் புறந்தள்ளி, திமுக நாடாளுமன்றத்தில் எப்போதும் போலத் தன் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது.

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவைக் கண்டிக்கிறோம் என்று உச்சரிக்கக் கூடப் பயப்படும் தவெக தலைவர் தான் தமிழ்நாட்டிற்கு விடிவெள்ளி என்பது ஆகப்பெரும் நகைச்சுவை. பெரியார், அண்ணா வழிகாட்டி என்று குரளிவித்தை காட்டும் தவெக, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை அடகு வைத்துக்கூடப் பதவிக்காகவும் வழக்குக்காகவும் பாசிச பாஜகவின் காலைச் சுற்றும் பாம்பாக இருப்பது தமிழ்நாட்டிற்குப் பெரும் அவமானம்.

த.மு.யாழ்திலீபன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.