கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
வெற்றி விவரம்:
2014 தேர்தலில் பாஜக 282 இடங்கள், காங்கிரஸ் 44 இடங்கள்
2019 தேர்தலில் பாஜக 303 இடங்கள், காங்கிரஸ் 52 இடங்கள்
2024 தேர்தலில் பாஜக 240 இடங்கள், காங்கிரஸ் 100 இடங்கள்
கடந்த 2024 தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவின் செல்வாக்குக் கடுமையாகச் சரிந்திருப்பதையே இது காட்டுகிறது. 'இந்தியா' கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்றதன் விளைவாகவே பாஜகவின் வெற்றி சரிந்தது.
இந்நிலையில், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஆட்சியமைக்க பாஜக பல வியூகங்களை வகுத்து வருகிறது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பாஜக வெற்றி பெற முடியும் என்று கருதியபோதும், இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவரப் போதிய உறுப்பினர்கள் இல்லாததால், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுடன் பாஜக ஆளும் 22 மாநிலங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் நடத்தும் திட்டத்தைப் பாஜக பரிசீலித்து வருகிறது.
தேர்தல் ஆணையம்:
தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் பட்டியலை முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கருதப்படும் பல கோடி பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணிகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுவதாக, அதே வேளையில் தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தொகுதி மறுவரையறை (Delimitation):
தற்போது தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க பாஜக தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. இச்சட்டத்தோடு மகளிர் இடஒதுக்கீட்டையும் இணைத்து, இது மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் என்று பூச்சாண்டி காட்டி எதிர்க்கட்சிகளை ஏமாற்றி விடலாம் என்ற முயற்சி தோல்வியடைந்து விட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி இம்மசோதாவைத் தோற்கடிக்கும் முயற்சியில் அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றார். இது அரசியல் சட்டத்திருத்தம் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. இவ்வாறு ஆதரவு பெற முடியாத நிலையில் இம்மசோதா தோல்வியடைந்தது. மீண்டும் இம்மசோதாவைக் கொண்டு வரும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பாஜகவுக்கே லாபம்:
தற்போது உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் 543; இது 846 ஆக அதிகரிக்கப்படும். இவ்வாறு அதிகரிப்பது மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தால், இந்தி பேசும் வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகவும், மக்கள் தொகை குறைவாக உள்ள தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொகுதிகள் குறைவாகவும் இருக்கும் என்பதால் இலகுவாக பாஜக வெற்றிபெற முடியும். வடமாநிலங்கள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன.
தமிழ்நாட்டு அரசியல் சூழல்:
அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ்-திமுக இடையே கசப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இத்தேர்தலில் எதிர்பாராத விதமாக தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றது. உடனடியாகக் காங்கிரஸ் ஓடிப்போய் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தது. இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளும் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தன. இதன் விளைவாகக் காங்கிரசுடனான உறவை திமுக முறித்துக் கொண்டதுடன் 'இந்தியா' கூட்டணியிலிருந்தும் விலகியது.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்குரிய 7.2 சதவீத இடங்கள் தமிழ்நாட்டிற்கு உறுதிப்படுத்தப்பட்டால் இம்மசோதாவை ஆதரிப்பது என்ற நிலைக்கு திமுக வந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், தொகுதிகளின் எல்லைகளும் மாற்றியமைக்கப்படும். இந்த மாற்றங்கள் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் என்பதால், காங்கிரஸ் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், அதனால் காங்கிரஸ் இதனை மிகக் கடுமையாக எதிர்த்தும் வருகிறது.
தவெக-வின் நிலைமாற்றம்:
காங்கிரசின் தோழமைக் கட்சியான தவெக, தமிழ்நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இது தொடர்பாக ஒரு கூட்டம் நடத்தி, தொகுதி மறுவரையறை மசோதாவை முற்றிலும் எதிர்ப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இக்கூட்டத்தை திமுக புறக்கணித்தது. மேலும், "தவெக அரசு தொகுதி மறுவரையறையை முற்றிலும் கைவிட வேண்டும்; உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது" என்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
அண்மையில் தென்மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இம்மாநாட்டில் தொகுதி மறுவரையறையை தவெக முற்றிலும் எதிர்க்கவில்லை. மாறாக, உரிய சதவீத இடங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டையே தவெக முன்வைத்தது. இதன் விளைவாகத் தவெக - காங்கிரஸ் உறவில் சிறிய விரிசல் ஏற்பட்டது.
பிரதமர் விஜய்:
அண்மைக் காலமாக "இந்தியாவின் பிரதமராக விஜய் வரப் போகிறார்" என்று அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பேசிவருகின்றனர். சமூக ஊடகங்களில் பொய்களை 'ரீல்ஸ்'களாக லட்சக்கணக்கில் வீடியோக்களாக வெளியிட்டு, பொய்ப் பிரச்சாரம் செய்து, அரசியல் தெரியாத, பொதுஅறிவு இல்லாத இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மூலம் ஆட்சியைக் பிடித்தது போல... வடஇந்தியாவில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களின் மூலம் பொய்யைப் பரப்பி, விஜய் பற்றிய ஒரு மாயப் பிம்பம் பெரும் பணச்செலவில் உருவாக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இதனால் பிரதமர் கனவில் உள்ள ராகுல் காந்தி, தவெக மீது மிகவும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காக்ரோச் ஜனதா கட்சி (CJP):
இந்திய அரசியலில் புத்தெழுச்சியாக வந்துள்ள காக்ரோச் ஜனதா கட்சி நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது. இக்கட்சி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் ஆதரிக்கவில்லை. தனியாகக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல மாநிலக் கட்சிகள் இக்கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியத் தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பாஜக, காங்கிரஸ், காக்ரோச், விஜய் என்ற நான்கு முனைப் போட்டியில் யார் வெல்வார் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.
என்ன நடக்கும்? எப்படி நடக்கும்?
வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தல் மிகக் கடுமையான சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பாஜகவுக்கும் காக்ரோச் ஜனதா கட்சிக்கும் இடையிலான போட்டியாகவே இது அமையும். காக்ரோச் ஜனதா கட்சி வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. பல மாநிலக் கட்சிகள் காக்ரோச் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்புள்ளது.
மாநில அரசியலில் விட்டுக்கொடுப்பதன் மூலம் பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளை அரவணைத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பக்குவம் காங்கிரஸ் தலைமையிடம் இல்லை. திமுகவைப் பகைத்துக் கொண்டது போல, பல்வேறு முதன்மையான மாநிலக் கட்சிகளுடன் நல்லுறவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. எனவே, காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கே தள்ளப்படும்.
தமிழ்நாட்டைப் போல இந்தியா முழுவதும் சமூக வலைத்தளப் பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் செல்வாக்கு பெறுவது சாத்தியமற்றது. திரைப்பட ரசிக மயக்கம் வடஇந்தியாவில் அதிகம் இல்லை. எனவே, தவெக மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை.
இத்தகைய அரசியல் சூழலில் ஜனநாயக விழுமியங்களையும் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக் கொள்கைகளையும் இலக்காகக் கொண்ட ஒன்றிய அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- வழக்கறிஞர் தமிழகன், மாநில அமைப்பாளர், நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு