தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைக்கப் போவது போன்ற ஒரு புரளியை உருவாக்கினார் சு. சாமி. உடனே, தி.மு.க. எதிர்ப்பாளர்கள் அனைவரும் தங்கள்  கைகளுக்கு ஒரு புதிய ஆயுதம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கூத்தாடினார்கள். அதற்கு வலிமை சேர்க்கும் வகையில் அந்த வெள்ளை உடைச் சாமியார், நம் பாபநாசத்துப் பார்ப்பனர் ரவிசங்கர், தளபதி ஸ்டாலினை நேரில் வந்து சந்தித்தார். அதற்கும் ஏளனங்கள் கிளம்பின. பாருங்கள், ஸ்டாலின் சாமியார் பின்னால் போகிறார் என்றார்கள். (அவர் வந்து இவரைப் பார்த்தது குறித்துப் பேசியவர்கள் எவரும், வைகோ சென்று ரவிசங்கரைப் பார்த்தது குறித்து எதுவும் கூறவில்லை.)

karunanidhi stalin evks elangovan

சில நாள்களுக்கு முன், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதை முற்றிலுமாகத் தளபதி மறுத்தார். அவருடைய தனி நேர்காணல் ஆங்கில இந்துவில் வெளியானது. உடனே, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன், “தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை” என்று பேட்டி அளித்தார். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பது அதன் பொருள்.

இப்போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுள்ளது. விரைவில் தே.மு.தி.க.வும் கூட்டணிக்கு வந்து சேரும் என்பது பொதுவான நம்பிக்கை. அவ்வாறு அமைந்தால், இதுவே வெற்றிக் கூட்டணியாக மாறும் என்றும், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று புதிய ஆட்சியை அமைக்கும் என்றும் அனைவருக்கும் தெரியும் - அ.தி.மு.க. உள்பட!  

இந்த நிலை, தி.மு.க. எதிர்ப்பாளர்கள் அனைவரிடமும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி குறித்துக் கடுமையான விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர். நேற்றுப் பிரிந்தவர்கள் இன்று எப்படிக் கூடலாம் என்கின்றனர். எத்தனை முறை பிரிந்து பிரிந்து போய், பிறகு மீண்டும் கூட்டணியில் வந்து சேர்ந்துள்ளனர் என்று நம் பொதுவுடமைக் கட்சித் தோழர்களைக் கேட்டுப் பாருங்கள்!

அன்றைய சூழலில் ஈழம் உள்ளிட்ட சிக்கல்கள் சிலவற்றின் அடிப்படையில் பிரிய நேர்ந்தது. இன்று, தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கும், மதச் சார்பற்ற அணியை உருவாக்குவதற்கும் மீண்டும் இணைய நேர்ந்துள்ளது.

தி.மு.கழகம் என்ன செய்தாலும் விமர்சனம் வந்து கொண்டேதான் இருக்கும். அவைகளுக்கு விடை சொல்ல வேண்டியது நம் கடமைதான். ஆனாலும் இப்போது நம் முன்னால் அநீதியும், அடாவடியும் நிறைந்த ஆட்சியை அகற்ற வேண்டிய முதல் கடமை காத்திருக்கிறது. நம் கவனம் சிதறாமல், முழு மூச்சாய் அந்தப் பணியில் ஈடுபடுவோம்!!     

Pin It