மொழிப் போராட்டம் நமது உயிர்ச் சிக்கல்! தொகுதி மறுசீரமைப்பு, நம் உரிமைச் சிக்கல் என்று மிக எளிமையாகவும், அழுத்தமாகவும் விளக்கி இருக்கிறார், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர்!

மொழிச் சிக்கலை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். இந்திய விடுதலைக்கு முன் இருந்தே, இந்தச் சிக்கல் தொடங்கி விட்டது! 1926 ஆம் ஆண்டிலேயே இந்தியால் வரக்கூடிய ஆபத்தை மிகத் தொலைவில் முன் உணர்ந்து குடியரசு ஏட்டில் எழுதியவர் தந்தை பெரியார் ! இந்தியும், இராமரும் என்றென்றும் நமக்குச் சிக்கல்தான் என்று அவர் சொன்னது இன்றுவரையில் உண்மையாக உள்ளது!

இப்போது புதிதாக, தொகுதிகள் மறு சீரமைப்பு என்னும் புதிய சிக்கல் புறப்பட்டு இருக்கிறது! இதற்கு முன்பு இந்தச் சிக்கல் 1971, 2001 ஆம் ஆண்டுகளிலேயே பேசப்பட்டது என்றாலும், இப்போதுதான் அது முழு உருவம் பெற்று இருக்கிறது!

இதுகுறித்து முழு விவரங்கள் அடங்கிய கட்டுரை ஒன்று இந்த ஏட்டிலேயே இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாடு ஒரு பெரும் பின்னடைவைச் சந்திக்கும் ! இந்தியாவின் எதிர்கால முடிவுகள் எல்லாவற்றையும், வட மாநிலங்களே தீர்மானிக்கும் இடத்திலும், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் வெறுமனே வாய் பொத்திப் பின் செல்லும் நிலைக்கும் வந்து சேரும்!

இந்தக் கட்டத்தில்தான், இதனைக் கடுமையாக எதிர்க்கும் முதல் குரலை நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வெளியிட்டார்! இப்போது கர்நாடகத்தின் முதலமைச்சர் சித்தராமைய்யா அந்தக் குரலுக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார்!

தென்னகத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்தியாவில் தெற்கில் உள்ள ஐந்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து இந்த அறைகூவலை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்!

வடநாடு, தென்னாடு என்ற வேறுபாடுகளை மறந்து, மொழிவாரி மாநிலங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் நாட்டில், மீண்டும் வடக்குதான் வாழும் , தெற்கு தேயும் என்னும் உணர்வை இன்றைய ஒன்றிய அரசு ஏற்படுத்த முயற்சி செய்கிறது!

இது ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான போக்காக இருக்கிறது! இதனை முறியடித்தே தீர வேண்டும் என்று நம் முதல்வர் முன்னெடுத்து இருக்கும் வழியில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். இது கட்சிப் பிரச்சனை அன்று, தமிழ்நாட்டின் பிரச்சனை - தமிழர்களின் உரிமைப் பிரச்சனை!

ஐந்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று சித்தராமையா சொல்லி இருப்பது மிகச் சரியானது !

திமிறி எழட்டும் திராவிட நாடு!

- சுப.வீரபாண்டியன்