பௌத்த மரபு, வீர மரபு மற்றும் பாளையக்காரர் மரபை முன்வைத்து...

முன்னுரை

உலகத்திலுள்ள அனைத்துச் சாதிகளையும் பற்றிச் சமூக மானிடவியல், இனவரலாறு, வழக்காற்றியல் ஆய்வுகள் நிகழ்த்த வேண்டியது இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான ஒன்றாக உள்ளது. இத்தகைய ஆய்வு முயற்சிகளால்தான் ‘தலித்தியம்’ வளர்ந்து போராட்ட வரலாறாகப் பரிணமிக்க முடியும். தலித்தியம் தோன்ற இது போன்ற ஆய்வுகள் விதையாகலாம். ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறு என்பது பெரும்பாலும் அரசர் மற்றும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவே இருக்கிறது. தற்பொழுது எழுத்து வடிவில் இருக்கும் எழுதப்பட்ட வரலாறுகள் மிகுதியும் மேட்டிமைப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. உண்மையில், வரலாறு என்பது அரசர்களாலோ ஆட்சியாளர்களாலோ உருவாக்கப்படுவதில்லை; மாறாக அடித்தள மக்களிடமிருந்தே உண்மையான வரலாறு உருவாகிறது. ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வரலாற்றை எழுதப்பட்ட வரலாறுகளிலிருந்து காண்பது ஒரு பக்கச் சார்புடையதாகவே இருக்கும். மாறாகத் தலித் மக்களின் வரலாற்றைக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு மீட்டுருவாக்கம் செய்வதுதான் முறையானதாகவும் உண்மையானதாகவும் இருக்க முடியும்.

எழுதப்பட்ட தலித் வரலாற்றிலும் தமிழக ‘அருந்ததியர்’ வரலாறு அதிகமாக இடம் பெறவில்லை. ஆனால் அருந்ததிய மக்களுக்கென்று கௌரவமான கடந்த காலமும் தனித்ததொரு நீண்ட வரலாறும் இருந்திருக்கிறது. அதனை மீட்டெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆதிகுடிகளான அருந்ததியர்களின் பௌத்த மரபு, வேதமரபு, ஆன்மீக மரபு, வீர மரபு மற்றும் பாளையக்காரர் மரபைக் கட்டமைப்பதாக இக்கட்டுரை அமைகிறது. இவற்றின் வழி அருந்ததியர்களின் சமூக மற்றும் பண்பாட்டு வேர்களைக் கண்டறிந்து தமிழ்ச் சமூகத்திற்கு அறியச் செய்யலாம்.

அடித்தளத்திலிருந்து எழுகின்ற வரலாறு

இன்றைய சூழலில் வரலாறானது அடித்தளத்திலிருந்து (History From Below) எழுதப்பட வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அடித்தள மக்கள் வரலாறு, விளிம்புநிலை சனங்களின் வரலாறு என இவை அழைக்கப்படுகின்றன. “எழுதப்பட்ட வரலாறுதான் சரியானது, நம்பகமானது என்ற மதிப்பீட்டை வாய்மொழி வரலாறு உடைக்கிறது. அடித்தள மக்கள் நம்பும் வாய்மொழி வரலாறு எழுதப்பட்ட வரலாற்றைவிட நம்பகமானது” என்கிறார் மாற்கு. (2001: 33). வரலாறு எழுதுவதற்குக் கல்வெட்டு, தொல்லியல் ஆதாரங்கள், அயலார் பயணக் குறிப்பு மற்றும் ஆவணங்கள் முதலியன அடிப்படை ஆதாரங்களாக அமைகின்றன. வாய்மொழி வரலாறு என்னும் நாட்டார் வழக்காற்றியல் செய்திகள் மூலம் அவை வழங்கும் சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்ற மானிடவியல் கோட்பாட்டை முன் வைத்தவர் நா. வானமாமலை. வாய்மொழி வழக்காறுகள் அந்தந்தக் காலத்துச் சமுதாய மக்களை, அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகளாக விளங்குகின்றன.

எழுதப்பட்ட வரலாறுகளின் இயல்புகள்

பொதுவாகத் தமிழக வரலாற்றை எழுதியவர்கள் அரச மரபினரின் வரலாற்றைச் சொல்வதிலேயே அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர். சங்க காலம் குறித்து எழுதிய என். சுப்பிரமணியன், பல்லவர் காலம் பற்றி எழுதிய மா. இராசமாணிக்கனார், சோழர் காலம் பற்றி எழுதிய சதாசிவப்பண்டாரத்தார், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் பார்வைகள் தமிழக வரலாற்றை அரச மரபினரின் வரலாறாகவே சொல்லியிருக்கின்றன. விஜயநகரப் பேரரசைப் பற்றியும் நாயக்க மன்னர்கள் பற்றியும் எழுதிய டி. வி. மகாலிங்கம், எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரின் நூல்களிலும் அத்தகைய பார்வைகளே காணக் கிடைக்கின்றன. ‘அரசர்கள் வழங்கிய பிரம்ம தேயங்கள், தானங்கள், உரிமைகள், தண்டனைகள் பற்றிய செய்திகளைப் பதிந்து வைத்த கல்வெட்டுக்களையும், அரசர்களின் பரம்பரைகளைச் சொல்லும் செப்பேடுகளையும் பயன்படுத்தி எழுதப்பட்ட வரலாறுகள் அப்படித்தான் இருக்க முடியும்’ என்கிறார் அ. ராமசாமி. தமிழக வரலாற்றில் அரசர்களின் வரலாற்றைவிட அடித்தட்டு மக்களின் வரலாறுதான் உண்மையான மக்கள் வரலாறாக இருப்பதை அறிய முடிகிறது.

சக்கிலியர் பௌத்த மரபினர்

பௌத்த நெறி தோற்றம் பெற்ற போது, பௌத்த நெறியில் இணைந்த அருந்ததியர்கள், பௌத்த முறைப்படி சாக்கியர் என்று அழைக்கப்பட்டு பாலி மொழியில் ‘சக்கலா’என்ற பெயரில் பதிவானார்கள். மகாயான பௌத்தம் மறையும் நிலையில் பார்ப்பனர்கள் சக்கலா என்ற பெயரை இழிவுபடுத்த செத்த மாட்டு இறைச்சி தின்றவன் என்று பொருள்படும் ‘சக்குழி’ என்ற சமஸ்கிருதச் சொல்லை, சக்கலா என்ற பாலி மொழிச் சொல்லில் ஏற்றி சக்கிலி, சக்கிலியர் என்று அழைக்கத் தொடங்கினர். இதுவே சக்கிலியர்களின் பௌத்தம் சார்ந்த சாதிப்பெயர்’ எனக் கருதுகிறார் எழில் இளங்கோவன்.

‘சக்கிலியர்கள்’ என்ற சொல் பாலிச் சொல் என்பதும், அது சாக்கிய என்ற சொல்லின் தமிழ்ப் பெயர்ப்பு என்பதும், அந்தப் பெயரால் அழைக்கப்படும் மக்கள் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பதே சக்கிலியர்கள் பௌத்தர்கள் என்பதற்கு முதல் சாட்சி என்ற வாதத்தை முன்வைக்கிறார் புத்தமித்திரன். மற்றும் , ‘சக்கிலியர்’ என்ற சொல் விடுதலையைத் தரும் சொல்லாகவும், மிகப் பெரிய வரலாற்றைத் தன் கர்ப்பத்துள் கொண்டு 2,500 ஆண்டுகளுக்கும் மேலும் இதுவரை உறங்கி வந்திருக்கிறது, இன்று விழிக்கிறது என்றும் கருதுகிறார்.

சக்கிலியருள் ‘முக்காயனுவாரு’ என்னும் குலத்தினர் இருக்கின்றனர். இவர்கள், புத்த தத்துவ மரபுகளான தம்மம் , புத்தம், சங்கமம் என்னும் முக்காயங்களை உலகெங்கும் பரப்பியவர்களாகக் கருதப்படுகின்றனர். போதிமரத்தைப் புனிதமெனக் கருதியவர்கள், போதிமரத்தினடியில் இருந்த புத்தரைப் பின்பற்றியவர்கள் என்ற பொருள்பட ‘போதிவாரு’ என்றொரு குலம் சக்கிலியர்களுள் இருக்கிறது. ‘சக்கிலியர்கள் பௌத்தர்கள்’ என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் மற்றும் வாய்மொழி ஆதாரங்களைத் திரட்டியும், குலம், குடி போன்றவைகளைப் பற்றிய ஆதாரங்களைச் சேகரித்தும் மிகச் சிறந்த ஆவணம் ஒன்றை வெளியிட அமெரிக்கக் கொலம்பியப் பல்கலைக்கழக அறிஞர் முயன்று கொண்டிருப்பதாகவும், புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தோழர்கள் பலர் இப்பணியின் மீது உழைத்து வருவதாகவும் புத்தமித்திரன் தமது கட்டுரையில் பதிவு செய்கிறார். ‘தாழ்த்தப்பட்டவர்கள் எனக் குறிக்கப்படுகிறவர்கள் பூர்வத்தில் பௌத்தர்களாய் இருந்தவர்களே’ என்று கோபால் செட்டியார் தமது ‘ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதும் இவ்விடத்தில் எண்ணிப் பார்க்கத்தக்கது.

அருந்ததியர்களின் வீர மரபு

வீரம், புகழ், கல்வி, செல்வம் ஆகிய நான்கும் பண்டைத் தமிழகத்தின் மரபு வளங்களாகும். இந்த நான்கு கூறுகளில் வீரத்தை நிலைநாட்டும் வகையில் தமிழ் நாட்டில் வசிக்கும் அருந்ததிய இனத்தினர், தங்கள் ஆண் மக்களுக்கு ‘வீரன்' என்று பெயர் சூட்டுவது நீண்டகால மரபாக உள்ளது. ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரமங்கைகளாகத் திகழ்ந்துள்ளனர். அதற்குக் காரணமாக ‘அருந்ததியர்கள் வசிஷ்டரின் வம்சத்தில் வந்த அக்னி புத்திரர்கள்' (2019: 132) என்று கருதப்படுகிறது. குயிலி, மதுரைவீரன், ஒண்டிவீரன், சேர்வாரன் ஆகிய அருந்ததிய வீரத் திலகங்களின் வீர வரலாற்றைப் பதிவு செய்வதாக இப்பகுதி அமைகிறது.

kuyili 321வேலுநாச்சியாரின் வெற்றிக்காகத் தற்கொடைப் போராளியாக மாறிய தலித் பெண் குயிலி சிவகங்கைச் சீமையின் வீரமங்கையாகப் போற்றப்படுகிறாள். மதுரை மக்களைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்த ஒப்பற்ற வீரன் மதுரை வீரன். மதுரையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மதுரை வீரன் குலதெய்வமாக வணங்கப்படுவது தமிழரின் வீர மரபை வெளிப்படுத்துகிறது. அருந்ததிய மக்களின் மரியாதைக்குரிய தலைவராகவும், மதுரைப் பேரரசின் படைத்தளபதியாகவும் மாவீரன் மதுரை வீரன் திகழ்ந்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயர், கான்சாகிப் யூசுஃப்கான், தளபதி ஹெரான் ஆகியோரை வாள்முனையில் போர்க்களத்தில் வென்று வீர வாகை சூடிய ஒண்டிவீரன், ஒரு வீரனாக மட்டுமின்றி நெற்கட்டான் செவ்வாயல் பாளையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். சேர்வாரன் தாழ்ந்த சாதியான சக்கிலியர் இனத்தில் பிறந்தவன். அவனுக்கு வாய்த்த காதலியோ நடுத்தர இனமான வேளாளர் இனத்தைச் சார்ந்தவள். இவர்களுக்குள் ஏற்பட்ட காதல், குறிப்பிட்ட ஒரு காலத்தில் அவர்களை ஊரை விட்டுப் போகத் தூண்டுகிறது. அதன் விளைவாக அவர்கள் யாருமறியாமல் ஊரை விட்டுப் போய்த் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனை அறிந்த வேளாளர் சாதியைச் சார்ந்த அப்பெண்ணின் உடன்பிறந்தவர்கள் அவர்களை விரட்டிப் பிடித்துக் கொன்று விடுகின்றனர். இந்தச் சண்டையில் சேர்வாரன் தன்னைத் தாக்கியவர்கள் அனைவரையும் கொன்று வீர மரணம் அடைகிறார்.

அருந்ததியரின் விடுதலைப் போராட்ட மற்றும் பாளையக்கார வரலாற்றை இராசையாவும், அரசியல் வரலாற்றை பாதிரியார் மாற்கு (2001) அவர்களும், வீர மற்றும் இயக்க வரலாற்றை எழில். இளங்கோவனும் (2008), ஆன்மீக வரலாற்றை சதுர்வேதியும் (2019) பதிவு செய்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த அருந்ததியர் சமூக வரலாறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

பாளையக்காரர் மரபு: அறியப்படாத அருந்ததியர் பாளையங்கள்

தமிழர் பாளையங்கள் என்று அறியப்பட்டவற்றுள் நெற்கட்டும் செவ்வயலும் பொதிகை மலையும் அருந்ததியர் பாளையங்களாக இருந்து பின்னர் ஜமீன்களாக மாறியிருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் நெற்கட்டும் செவ்வயல், பொதிகைமலை என்னும் பகுதிகளுக்கு முறையே ஒண்டிவீரன் பகடையும் நீலகண்டப் பகடையும் தலைவர்களாக இருந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஒருங்கிணைந்த பிராந்தியமாக அமைந்திருந்த இப் பாளையங்களுக்கு நெற்கட்டும் செவ்வயல்தான் தலைமையிடமாக இருந்திருக்கிறது.Ondiveeran 2022 stamp of Indiaபொதிகை மலைப் பகுதியின் ராஜாவாக இருந்த நீலகண்டன் என்கிற அருந்ததியரைக் கொன்றுவிட்டு சிங்கம்பட்டி ஜமீனை உருவாக்கியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதை மதிவண்ணன் தமது பேட்டியில் சுட்டிக் காட்டியிருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். (உழைப்பவர் ஆயுதம், ஜனவரி-2010:19). நீலகண்டனைக் கொன்றுதான் நல்லக்குட்டி என்பவர் சிங்கம்பட்டி ஜமீனை நிறுவினார் என்றும் ‘நீலகண்டன் தலைவெட்டிப் பாறை’, “நீலகண்டன் கசம்’என்னும் இடங்கள் இப்போதும் அங்குள்ளதாகவும் சிங்கம்பட்டியைச் சார்ந்த சுப்பிரமணியக் கவிராயர், நா.வானமாமலையிடம் கூறியுள்ள செய்தியும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. (அருணன், 2006:181-182) மேலும், பாபநாச மலைப் பகுதியை நீலகண்டப் பகடை ஆண்டதாகத் தினகரன் நாளிதழ் வெள்ளிமலர் ‘வட்டாரச் செய்திகள்’ குறிப்பிட்டிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

திருநெல்வேலிச் சீமையின் மேற்குப் பகுதிப் பாளையங்கள் அனைத்தையும் கட்டி ஆண்ட ஒண்டிவீரனின் முன்னோர் வரலாறும், புகழ் மிக்க பொதிகை மலைப் பகுதியின் ராஜாவாக இருந்த நீலகண்டப் பகடையின் வரலாறும் வரலாற்றுப் பதிவாளர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரால் திட்டமிட்டே திரித்தும் மறைத்தும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

வட மாவட்டங்களிலுள்ள அருந்ததியர் பாளையங்கள்

வடமாவட்டங்களில் அருந்ததியர்கள் வசித்த பகுதிகள் பெரும்பாலும் ‘அருந்ததியர் பாளையம்’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. காலப்போக்கில் இந்த நிலை மாறி அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அவர்களுக்கான காலனி வீடுகள் என்று சொல்லப்படுகின்ற தொகுப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தரப்பட்டன. ஏற்கனவே இருந்த பூர்வீக அருந்ததியர் பகுதிகளும் தொகுப்பு வீடுகளும் கலந்து இந்திரா காலனி , எம்‌. ஜி. ‌ஆர் காலனி, காமராஜ் காலனி, முல்லை நகர் , குறிஞ்சி நகர் என நவீனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளன. சென்னை பூந்தமல்லி, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலுள்ள படுநெல்லி மற்றும் கோமங்கலம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்யாணக் குப்பம் ஊராட்சி, திருவண்ணாமலை மாவட்டம் அய்யாபட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் இன்னும் அருந்ததியர் பாளையங்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நெற்கட்டான் செவ்வயல் பாளையம் - இனவியல் வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலிலிருந்து வடமேற்கில் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தொலைவில், வாசுதேவநல்லூரிலிருந்து கிழக்கில் ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவிள்ள மேடான பூமியும், பெரிய நீர் நிலையும், கண்ணுக்கெட்டும் தொலைவில் ஊரைச்சுற்றி விளைச்சல் நிலங்களும் கொண்ட செழிப்பான பூமி நெற்கட்டும் செவ்வயல் என்னும் சிற்றூர் ஆகும். ’நெல்கட்டும் செவ்வல் கோட்டை’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது. பாண்டியர்களின் 22 கோட்டைகளில் ஒன்றான அரிநாட்டில் அமைந்துள்ள தேவதானம், சங்கரன்கோவில், தாருகாபுரம், தென்மலை மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய பஞ்சதலங்களுக்கு மையப்பகுதியாக நெற்கட்டும் செவ்வயல் திகழ்கிறது. அடர்ந்த வனப்பகுதியைத் திருத்தி விளைநிலமாக்கியவர்கள் சக்கிலியர்கள் என்னும் அருந்ததியர்கள். இவர்களிடமிருந்த வளமான விளைநிலத்தை அப்பகுதியில் வாழ்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த இருளப்ப பிள்ளை என்பவர் நயவஞ்சகமாகத் தன்வசமாக்கிக் கொண்டார். தங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறு அருகிலிருந்த ஆவுடையார்புரத்தில் கோட்டைகட்டி திசைக்காவல் செய்துவந்த பூலித்தேவரிடம் சக்கிலியர்கள் முறையிட்டனர். இருளப்ப பிள்ளையிடம் இழந்த வள நிலங்களை மீட்டு மீண்டும் சக்கிலியர்களிடம் ஒப்படைத்தார் பூலித்தேவர். இந்த நிகழ்வின் போது அப்பகுதியில் முயல் ஒன்று நாயை விரட்டிச் செல்லும் அதிசயத்தைக் கண்ட பூலித்தேவன் அப்பகுதி மண்ணின் அபூர்வ சக்தியை அறிந்து வியப்படந்தார். மட்டுமல்லாமல், அதே இடத்தில் புதிய கோட்டை ஒன்றையும் கட்டினார் பூலித்தேவர். அந்தக் கோட்டை அமைந்த இடம் நெற்கட்டான்செவல் என்றும் பூலித்தேவனின் தலமையிடமாகவும் மாறியது. ‘தன் முன்னோர் தலைநகரான ஆவுடையார்புரம் தலைநகரை மாற்றி நெற்கட்டுஞ் செவ்வலில் கோட்டை கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்’ என்ற பூலித்தேவன் காலச் செப்பேட்டுச் செய்தி இதை மெய்ப்பிக்கிறது.

நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நெற்கட்டும் செவ்வயல் ஜமீன் என்றும் அறியப்பட்டது. அதுவரை நெல்லைக் கப்பமாகக் கட்டி வந்த நிலையை மாற்றிக் கப்பம் கட்ட மறுத்ததால் ‘நெற்கட்டான் செவ்வயல்’ என்று மாறி இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. வெள்ளையருக்குப் பூலித்தேவன் மீதிருந்த தீராத ஆத்திரத்தால் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை அழித்துத் தரைமட்டமாக்கியதுடன் பூலித்தேவன் வாழ்ந்த ‘நெற்கட்டான் செவ்வல்’ என்ற ஊரின் பெயரைக்கூட ‘ஆவுடையாள்புரம்’ என்று மாற்றிக் கும்பினியர் ஆணை பிறப்பித்துத் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர். இச்செய்தியை ’திருநெல்வேலி மாவட்டம்’ என்ற நூலில் கால்டுவெல் பதிவு செய்துள்ளார். இந்த நெற்கட்டான் செவ்வயலும் அருந்ததியர் பாளையமாக இருந்தது மட்டுமின்றி புகழ்மிக்க ஜமீனாகவும் திகழ்ந்திருக்கிறது.

ஆவுடையார்புரம் பாளையம் - இனவியல் வரலாறு

பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்திலுள்ள இராமநாதபுரத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாகவும் அப்பகுதி மறவர்களுக்குள் ஏற்பட்ட பெருங் கலகத்திற்குப் பின்னரும் பூலித்தேவரின் முன்னோர்களாகிய முதலாம் சித்திரபுத்திரத் தேவன் இராமநாதபுரம் பகுதியை விட்டு வெளியேறி பிழைப்புத் தேடி திருநெல்வேலிச் சீமை நெற்கட்டும் செவ்வயல் அருகிலிருந்த ஆவுடையார்புரம் என்ற இடத்தில் முதன்முதலாகக் கோட்டைகள் கட்டிக் கூட்டம் கூட்டமாகவும் குடும்பமாகவும் வாழ்ந்து வந்தனர். வேற்றிடத்தில் புதிதாய்க் கோட்டை கட்டிக் குடும்பமாய்க் கூடி ஒற்றுமையுடன் புகழ் பெற வாழ்ந்ததால் அப்பகுதிக்குப் ‘புதுக்கோட்டை’ எனப் பெயரிட்டு அழைத்தனர். முதலாம் சித்திரபுத்திரத் தேவருக்குப் பிறகு (1610-1638) மூன்றாம் காத்தப் பூலித்தேவன் (1638-1663) இரண்டாம் சித்திரபுத்திரத் தேவர் (1663-1726) ஆகியோர் ஆவுடையார்புரம் பாளையத்தை ஆண்டனர். இவர்களுக்குப் பிறகு நான்காம் காத்தப்ப பூலித்தேவன் (1726- 1767) ஆவுடையார்புரம் கோட்டை மற்றும் பாளையத்தின் தலைவராக விளங்கினார். இவரையே ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுழக்கமிட்ட பூலித்தேவன் என்று வரலாறு பதிவு செய்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புக் கொண்டு விளங்கிய ஆவுடையார்புரம் பாளையம். மதுரை நாயக்கருக்குக் கப்பம் கட்டும் பாளையமாகவும் விளங்கியது. ஆதியில் வெகு நாளாகப் பாளையப்பட்டு இருந்து வந்துள்ளது, பின்பு அது மறைந்தது. பின்னர் நாகமநாயக்கன் விசுவநாத நாயக்கன் ஆகியோர் காலத்தில் மீண்டும் தொடர்ந்தது. இந்த ‘ஆவுடையார்புரம் விசுவநாத நாயக்கரால் ஏற்படுத்தப்பட்ட எழுபத்தியிரண்டு பாளையப்பட்டுக்களில் ஒன்றாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாளையமாகவும் திகழ்ந்திருக்கிறது’. (இராசையா. ந, 2005: 59 - 60).

திருநெல்வேலிச் சீமையிலிருந்த ஆவுடையார்புரம் ஜமீன், ஒரு காலத்தில் சக்கிலிய அரசர் கட்டுப்பாட்டில் இருந்த செய்தியை T. B. பாண்டியன் தமது ‘The slaves of the soil in southern India’ என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார். ‘The writer was once informed by the present Zamindar of Avidayapuram in the district Tinnevelly that his Zamindari was once under a chuckala king’. (1893: 3). பாளையங்கள் ஒழிக்கப்பட்டு ஜமீன்களாக மாறிய போதிருந்த ஆவுடையார்புரம் ஜாமீனை நெற்கட்டும் செவல் ஜமீன் என்றும் கூறுவார்கள்.

தமிழ் நாட்டின் ஆதிகுடிகளாக அருந்ததியர்கள் திகழ்ந்தமைக்கான மேற்குறித்த ஆதாரங்கள் வழி அவர்களின் உண்மை வரலாற்றை மாற்று சமூகத்தினர் விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழக அருந்ததியர்: பூர்வீகமும் புலப்பெயர்வும்:

தமிழகத்தில் சேர , சோழ பாண்டியர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் ஆட்சி செய்தனர். இவர்களில் வேளிர் பிரிவினரும் உண்டு. இந்த வேளிர் பிரிவினருள் 'அதியர்' என்ற பிரிவினரும் உண்டு. இவர்கள் தகடூர் பகுதியை ஆட்சி செய்தனர். இப்பகுதி ‘வடுகு நாடு' என்று அழைக்கப்பட்டது. இந்த அதியர் வழிவந்தவர்கள்தான் அருந்ததியர்கள். அதியர் என்ற பெயர்தான் மருவி அருந்ததியர் என்ற பெயரானது. அதியர் குலத்தின் சிறந்த மன்னனை மா + அதியர் = மாதியர் என அழைத்தனர். மாதியர் என்பது அருந்ததியருக்குக் கொடுக்கப்பட்ட மற்றொரு பெயராகும்.

அதியமான் என்பவர் மாதியர் குலத்தின் மிகச் சிறந்த மன்னராகத் திகழ்ந்தவர். மன்னன் அதியமானின் ‘அதியர் குடி’ வழி வந்தவர்களே ஆதித் தமிழர்கள் என்னும் அருந்ததியர்கள் ஆவர். அருந்ததியர்கள் ஆதித் தமிழர்கள் எனின் ஏன் அவர்கள் தெலுங்கும் கன்னடமும் பேசுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. கர்நாடகாவில் கன்னடப் பேச்சுமொழியானது தமிழும் தெலுங்கும் அதிகம் கலந்தே காணப்படுகிறது. அதற்காகக் கன்னடர்களைத் தமிழர்கள் என்றோ தெலுங்கர்கள் என்றோ கருதிவிட முடியாது. அருந்ததியர்களின் முன்னோர்கள் வாழ்ந்த தகடூர் என்பது தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் தர்மபுரி பகுதியாகும். இதனை ‘வடுகு நாடு’ என்றும் அழைப்பர். நாட்டின் தென்பகுதி ஒருங்கிணைந்த பிராந்தியமாக இருந்த காலத்தில் ஆந்திராவின் ஒரு பகுதியும் மற்றும் கர்நாடகாவின் ஒரு பகுதியும் இணைந்ததாகத் தகடூர் இருந்தது, வடுகு நாடு தனித்தனிப் பகுதிகளாகப் பிரிந்தபோது அதில் ஒரு பகுதி தமிழ் நாட்டோடும், இன்னொரு பகுதி ஆந்திராவோடும், மற்றொரு பகுதி கர்நாடகத்தோடும் இணைந்தது.

தர்மபுரிக்குச் சற்றுத் தொலைவில் கர்நாடகாவுக்குச் செல்லும் வழி இருந்தும் அருந்ததியர்கள் அங்கு அதிகம் செல்லவில்லை. குறைவான மக்களே கர்நாடக எல்லைக்குள் புலம்பெயர்ந்தனர். தருமபுரியை விட நிலவளம், நீர்வளம் மிக்க ஆந்திர எல்லைப் பகுதிகளுக்குள் மிகுதியான அருந்ததியர்கள் பிழைப்புக்காக வேலை தேடிச் சென்றனர். இன்னும் சில பேர் வியாபாரம் நிமித்தம் இடம்பெயர்ந்துள்ளனர். போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் சென்ற இடங்களிலேயே தங்கி வாழ்ந்திருக்கிறார்கள். போர், இயற்கைச் சீற்றம், பிழைப்பு, வேலை, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் சென்று தங்கும் மக்களை ‘புலம்பெயர் மாக்கள்’ என்று பட்டினப்பாலை, நற்றிணை, சிலப்திகாரம் ஆகிய இலக்கியங்கள் பகர்கின்றன.

அங்ஙனம் புலம்பெயர்ந்த அருந்ததியர்கள் ஆந்திரா, கர்நாடகாவின் மையப் பகுதிக்குச் செல்லாமல் ஆந்திர – கர்நாடக - தமிழக எல்லைப் பகுதிகளில் தங்கினர். அப்படி ஆந்திராவோடும், கர்நாடகத்தோடும் இடம்பெயர்ந்து வாழ்ந்த அருந்ததியர்கள் அங்கு தாய்மொழியாகத் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை அன்றாடத் தேவைக்காகக் கற்க நேர்ந்தது. ஆந்திர எல்லைப்புறப் பள்ளிகளில் சென்று கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை முறையாகக் கற்கவில்லை. மாறாக அங்குள்ள பேச்சு மொழியை மட்டுமே கற்றுக்கொண்டனர். தரமான செப்பம் செய்யப்பட கன்னடமோ, தெலுங்கோ அருந்ததியர்களுக்குத் தெரியாது. கன்னடம், தெலுங்கு முலாம் பூசப்பட்ட ஓசை - ஒலி கலந்த தமிழைத்தான் அருந்ததியர்கள் இப்போதுவரை பேசிவருகின்றனர். தமிழகத்தில் வாழும் அருந்ததியர் யாரும் கன்னட மற்றும் தெலுங்கு எழுத்து மொழி அறிந்தவர்கள் அல்லர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆந்திர மக்கள் பயன்படுத்தும் பேச்சு வழக்குச் சொற்களுக்கும் தமிழக அருந்ததியர்கள் பயன்படுத்தும் பேச்சு வழக்குச் சொற்களுக்கும் மிகுந்த வேறுபாடுகள் காணப்படுவதன் மூலம் இதை அறிய முடிகிறது. இடம்பெயர்ந்த தமிழர்கள் காலப்போக்கில் தமிழகத்தில் மழைவளம் பெருகி செழிப்புற்ற போதும், பல சூழ்நிலைகளின் காரணமாகவும் அருந்ததியர்கள் பல காலகட்டங்களில் தமிழகம் வந்தனர். இவர்கள்தான் இன்று தமிழகத்தில் கன்னடம் பேசும் அருந்ததியர்களாகவும், தெலுங்கு பேசும் அருந்ததியர்களாகவும் வாழ்கின்றனர். அதனால் தான் அருந்ததியர்கள் பேசும் தெலுங்கும் கன்னடமும் எல்லைப் பகுதிக் கன்னடம் மற்றும் தெலுங்கு பேச்சுமொழியாகத் திகழ்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் உள்மாவட்டங்களில் மக்கள் பேசும் தெலுங்கு மொழி வட்டாரவாரியாக வித்தியாசப் படுவது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆயின், தெலுங்கு மற்றும் கன்னட பேச்சு மொழியைத் தமிழக அருந்ததிய மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியினர் தமிழும் தெலுங்கும் கன்னடமும் கலந்த மொழியினையும், தென்மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்கள் கன்னடக் கலப்பில்லாத முழுக்க முழுக்கத் தமிழும் தெலுங்கும் கலந்த மொழியினையே பேசிவருவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் கன்னடம், தெலுங்கு பேசும் பிற சமூக மக்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இவர்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளைப் பேசுவார்களே தவிர அவற்றை எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அல்லர் என்பது இங்கே ஒப்புநோக்கத் தக்கதாகும்.

முடிவுரை

பிழைப்பு தேடி ஆந்திராவுக்குச் சென்று மீண்டும் தாயகம் திரும்பி வந்த, தெலுங்கு ஓசை மற்றும் ஒலிச் சாயலில் தமிழ் பேசும் அருந்ததியத் தமிழ்க் குடிகளைத் தெலுங்கர் என்று சொல்வதும் வந்தேறிகள் என்று முத்திரை குத்துவதும் ஆதித் தமிழரர்களாகிய அருந்ததியர்களை அந்நியர்களாக்கி ஆதாயம் தேடும் முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை. அருந்ததியர்கள் தமிழகத்தின் பூர்வ குடிகள், ஆதித் தமிழர்கள் என்பதே தமிழ் நாட்டின் வரலாறு. அருந்ததியர்களின் மூதாதையர்கள் யாரும் தெலுங்கு மொழியை எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை என்பதே அவர்கள் தெலுங்கர்கள் அல்லர் மாறாகத் தமிழ்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கான அப்பட்டமான சாட்சியாகும். ‘தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்கள் தமிழர்’ என வரையறுக்கிறார் வித்வான் பெ. கோவிந்தனார். கோவிந்தனாரின் வரையறைப்படி தமிழகத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அருந்ததியர்கள் அனைவரும் தமிழர்கள் என்றே கருதத்தக்கவர்கள். அருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுகின்ற காரணத்தினால் அவர்கள் தமிழர்கள் அல்லர் என்று கருதிவிட முடியாது.

நெறித்துணை நூல்கள்

தமிழ்:

 1. அருணன், 2006, கொலைக்களங்களின் வாக்குமூலம், மதுரை, வசந்தம் வெளியீட்டகம்.
 2. ஆனந்தராசன்.ஜே , 2002. பவுத்தமும் பழந்தமிழ்க் குடிமக்களும், சென்னை: அன்றில் பதிப்பகம்.
 3. இராசையா; ந. 1990. விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டோரின் பங்கு, அயன்கொல்லங் கொண்டான், ஞானமுருகன் எழுத்தகம்.
 4. இளங்கோவன்; எழில், 2002,. அருந்ததியர் வரலாறும் பண்பாடும், கோவை: ஆதித்தமிழர் பேரவை.
 5. ------------------. 1995. 17-ஆம் நூற்றாண்டில் அருந்ததியர், சென்னை: விந்தன் வெளியீடு.
 6. உழைப்பவர் ஆயுதம், ஜனவரி-2010, திருவண்ணாமலை.
 7. காசிநாதன். நடன. 2011. ‘தென்பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு ‘, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
 8. கிருஷ்ணமூர்த்தி. மு. அ, 2010, அருந்ததியர் சமூகத்தின் அரிய வரலாறு, சென்னை: காவ்யா.
 9. சதுர்வேதி சடானனார். 2019. வசிஷ்ட வம்சம், காரமடை: ஸ்ரீ அருந்ததி பொதுநல அறக்கட்டளை .
 10. தர்ஸ்டன், எட்கர். (தமிழில் க. ரத்தினம்) 2005, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - தொகுதி இரண்டு, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
 11. பன்னீர்செல்வம், வெ. 2008, அருந்ததியர் யார்?- ஒரு வரலாற்றுப் பார்வை, கோயம்புத்தூர்: வாகை பதிப்பகம்.
 12. மதிவண்ணன். 2023. சக்கிலியர் வரலாறு, சென்னை: கறுப்புப் பிரதிகள்.
 13. மாற்கு, 2001, அருந்ததியர்: வாழும் வரலாறு, பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.
 14. முத்தாலங்குறிச்சி காமராசு. 2013. ‘நெல்லை ஜமீன்கள்: சமஸ்தானங்களும் சரிவுகளும்’, சென்னை: விகடன் பிரசுரம்.
 15. ரவிக்குமார். 2007. தி.பெ. கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர், காலச்சுவடு, டிசம்பர், 2007, பக் . 68
 16. ராமசாமி. அ. 2009. ரவிகுமார், மீளும் வரலாறு: அறியப்படாத நந்தனின் கதை நூலுக்கு எழுதிய மதிப்புரை, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
 17. ராஜய்யன்.கே. 2012. (தமிழில்: நெய்வேலி பாலு). ‘தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்’, மதுரை: கருத்து பட்டறை.
 18. வைகை அனிஷ். 2014. ‘அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுகளும்’, தேவதானப்பட்டி: அகமது நிஸ்மா பப்ளிகேசன்ஸ்.

English

 1. Basil Xavier. S. 2020. Ethnophilophising in India; A Study on Arunthathiyars, New Delhi: Authors Press.
 2. Dumont, Louis (Translated from French by M.Moffatt.L, and A.Morton), 1986, A South Indian sub-caste: Social organization and religion of the Piramalai Kallar, Delhi; Oxford University Press.
 3. A. 2017. Arunthathiyar: The Grate Leather Workers of Tamil Nadu- Life & History, Chennai: Nagalagam Publication.
 4. Manikandan, S. 2013. ‘Contest for Power and Legitimacy; Little Kingdoms of Southern Tamil Country during the Eighteenth Century’ un published Ph.D thesis, Department of History, School of Social Sciences and International Studies, Pondicherry University.
 5. Moffat, Michael, 1979. An Untouchable Community in South India: Structure and Consensus, Princeton, New Jersey: Princeton University Press.
 6. Naik, C.D. Budhism and Dalits: Social Philosophy and Traditions, Delhi: Kalpaz Publications.
 7. T.B. 1893. The Slaves of the Soil in South India, Madras: The Cosmopolite Press
 8. Edger. 1975. Ethnographic Notes in Southern India, Part-II. Delhi: Cosmo Publications.

- முனைவர் ச.சீனிவாசன், பேராசிரியர் & தலைவர், தமிழ்த்துறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி (தில்லிப் பல்கலைக்கழகம்), புது தில்லி-110 021, இந்தியா

Pin It