tamil historyஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியான வரலாற்றை உள்ளடக்கியது, தமிழ்மொழி பேசும் சமூகம். இச்சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூற இயலாது. அண்மைக் காலங்களில், தமிழ்ச் சமூகத்தின் பல கூறுகள் குறித்த வரலாறுகள் பதிவு செய்யப்படுகின்றன.

மொழி என்பது அடிப்படையில் ஒலிக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டது. ஒலிக்கூறுகளுக்கான பதிவுகளாகவே குறியீடுகள் மற்றும் எழுத்துருக்கள் அமைகின்றன. மொழியின் முதன்மையான வடிவம் என்பது வாய்மொழி வழக்காறுதான். அவை, உணர்வுகள் சார்ந்த ஒலிக்கூறுகளால் பாடல்களாகவே வெளிப்படுகின்றன.

இவற்றுக்குப் பின்னர் ஒழுங்குபடுத்தப்பட்ட யாப்பு மரபுகள் உருவாக்கப்படுகின்றன. ஒலி யாப்பு சார்ந்த அடிப்படையில் செய்யுட்கள் உருவாக்கப்படுகின்றன. பாடல்கள் மற்றும் செய்யுட்களில் இடம்பெறும் பாடுபொருட்களே அவ்வடிவங்களைத் தீர்மானிப்பதில் முதன்மையான பங்களிப்பைச் செய்கின்றன. தமிழ் மரபில் இத்தன்மையிலான உருவாக்கப் போக்குகளைப் பின்கண்டவாறு தொகுக்கலாம்.

- தமிழின் தொடக்க காலப் பாடல்கள் உள்ளுணர்வுப் பாக்களாகவே உள்ளன. இதனை ஆங்கிலத்தில் Lyrics என்று அழைக்கிறார்கள். குறிப்பிட்ட சூழல், மனநிலை ஆகிய பிறவற்றை அடிப்படையாகக் கொண்ட மனித உயிரின் உணர்வுகள், பாடல்களாக வடிவம் பெறுகின்றன. இதில் பெண் - ஆண் எனும் பாலின வேறுபாடு முதன்மை பெறுகின்றது.

உயிர் மறுஉற்பத்தி சார்ந்த இணைவிழைவு குறித்த உணர்வுகள் தன்உணர்வுப் பாக்களாக வெளிப்படுகின்றன. இவற்றில் உணர்வுத்தளம் முதன்மையான வெளிப்பாடு. பாடுபொருள் என்பது முதன்மையாக அமையாது. இதனைப் புரிந்துகொள்ள குறுந்தொகை, நற்றிணைப் பாடல்கள் உதவும். இத்தன்மையே தமிழின் முதல்கட்ட வாய்மொழி மரபு சார்ந்த பாக்களாக அமைந்தன. இம்மரபில் உணர்வு, வாய்மொழி வழக்காறு, இசைக்கூறு, உயிரிகளின் வாழ்முறை ஆகியவை முதன்மையானவை. சொல்லப்படும் செய்தி இரண்டாம் தன்மையானது.

- தமிழ்ச் சமூகத்தில் மேற்குறித்த பா மரபுகளின் வளர்ச்சியாகவே நீண்ட பாடல்கள் உருப்பெற்றன. அதனைத் தொடர்நிலைச்செய்யுட்கள் என்றும் அழைத்தனர். இம்மரபில் பாடுபொருள் முதன்மை பெறும். கதைகள் இடம்பெறும். மனிதர்களின் கதைகள் நீண்ட வடிவில் பதிவாகும்.

பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி வடிவங்களிலிருந்து உருவான சிலப்பதிகார மரபை மேற்குறித்த வகையில் புரிந்து கொள்ளலாம். காப்பியங்கள் இவ்வாறுதான் உருப்பெற்றன. முதல்நிலையில் சொல்லியவை குறும்பாடல்கள் என்றால், பின்னர் அமைபவை நெடும்பாடல்கள். அவை நீண்ட கதை வடிவம் கொண்ட காப்பியங்கள். தமிழில் இம்மரபு முன் மரபின் வளர்ச்சியாகவே அமைந்தது.

- மேற்குறித்த இருமரபுகளின் தொடர்ச்சியாகவே தமிழ் ஆக்க இலக்கிய மரபு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை தொடர்ந்தது. பல்வேறு வடிவங்களில் மேற்குறித்த மரபுகள் ஒரே நேரத்தில் இருதன்மைகளும் தொடர்ந்தன.வடிவம் சார்ந்த வரையறைகளுக்கான இலக்கண நூல்களும் உருவாயின. அவை, பாட்டியல்கள் எனும் தனிமரபாகவும் இலக்கண நூல்களின் ஒரு பகுதியாகவும் அமைந்தன.

- பத்தொன்பதாம் நூற்றாண்டின் புத்தொளி மரபு பேச்சை முதன்மைப்படுத்தி, பேச்சைப் பதிவு செய்யும் புதிய மரபு உருவானது. இதனை எழுத்துப் பயிற்சிப் (எழுத்தறிவு) பரவல், அச்சுக்கருவி வருகை ஆகியவை மிகவும் பரவலாக்கின. இதனை வசனமரபு என்றும் அழைக்கலாம்.

தமிழில் இம்மரபைப் புனைவு உருவாக்கத்திற்குப் பயன்படும் ஒன்றாகப் புரிந்துகொள்ளலாம். பேச்சு எழுத்துரு பெறுகிறது. இதுவரை பேச்சு எழுத்துரு சார்ந்த வடிவமாக அமையவில்லை. உரை மரபு தனித்தது. அதற்கும் வசன மரபிற்கும் தொடர்பில்லை. (விரிவாகப் பேச வேண்டிய உரை மரபு - வசன மரபு குறித்து வேறு சந்தர்ப்பத்தில் பேசலாம்.)

தன் உணர்ச்சிப்பாடல் மரபு, தொடர்கதை சார்ந்த காப்பியப் பாடல்மரபு, பேச்சை முதன்மைப்படுத்திய வசன மரபு எனப்படும் மூன்று வகைமைகளில் (Genre) தமிழின் ஆக்க மரபுகளைப் புரிந்துகொள்ள இயலும்.

இந்தப் பின்புலத்தில் “தமிழில் வாக்கிய ரூபமாக பதினெண் பருவத்தையும், திருத்தமாக அச்சிட்டுத் தரும்படி நிலைபெற்ற சைவ, வைஷ்ணவ, ஸ்மார்த்த, மாத்துவ சமயப் பிரபுக்கள் கேட்டுக்கொண்டபடி, த.சண்முகக்கவிராஜரால்” உருவாக்கப்பட்ட மகாபாரத வசனம் எனும் ஆக்கத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழில் புதிதாக உருவான ஒரு மரபை இந்த ஆக்கம் எவ்வாறெல்லாம் பதிவு செய்திருக்கின்றது என்பது தொடர்பான உரையாடலை மேற்கொள்வது அவசியம்.

(இத்தன்மை தொடர்பாகப் பதிப்பாசிரியர் இரா. சீனிவாசன், தனது பதிப்புரையில் விரிவாகப் பதிவுசெய்திருக்கின்றார்.)வசனமரபு தமிழில் உருப்பெற்றிருப்பதை இந்த ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு புரிந்துகொள்ள முடிகிறது, என்பதைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

- வாய்மொழிக்கூறுகள் வசன மரபில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்த வசன காப்பியத்தில் வாய்மொழிக் கூறுகள் எவ்வாறெல்லாம் தொழிற்பட்டுள்ளது என்பது தொடர்பான உரையாடல் மேற்கொள்வது அவசியம்.

- வாய்மொழி மரபிற்கும் நிகழ்த்துமரபிற்கும் நெருக்கமான உறவுண்டு. இந்த வசன காப்பியம் நிகழ்த்து மரபுக்கான தன்மைகளை உள்வாங்கியுள்ள முறைமைகள் குறித்த உரையாடல் நிகழ்த்துவதும் தேவை.

- அச்சு மரபில் உருவான வேறுபிரதிகளிலிருந்து இந்த வசன காப்பியம், எவ்வகையான தனித்தன்மைகளைக் கொண்டுள்ளது என்பது தொடர்பாகவும் பேச வேண்டும்.

மனித சமூக வரலாற்றில், மனிதர்கள் தங்களது உணர்வு சார்ந்து எழுப்பிய ஒலிகளே, காலப் போக்கில் பேச்சுக்களாக வடிவம் பெற்றன. பேச்சுக்கள் என்பவை வாய்மொழி மரபின் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவமே. தொல்பழம் சமூகத்தின் ஒலிகள் மற்றும் பேச்சுக்கள், கால வளர்ச்சியில் பாடல்களாக, செய்யுட்களாக வடிவம் பெற்றன.

இவை, அரச உருவாக்க மரபில், ஆளுவோரின் அதிகார வெளிப்பாட்டுக் கருவிகளாகவும் வடிவம் பெற்றன. பிரபுக்கள், குருக்கள், புலவர்கள் ஆகியோரின் செயல்களை இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்ள முடியும். சமூகச் சூழலில் அதிகார வர்க்கம் சிதைவடையும்போது, பேச்சுக்கள் மீண்டும் வெகுமக்களிடத்தில் புத்துயிர்ப்புப் பெறுகின்றன.

புதிய வாழ்முறை மற்றும் புதிய கருவிகள் அதற்கு அடிப்படைகளாக அமைகின்றன. வசனமரபு இந்தப் பின்புலத்தில்தான் உருவாகிறது. சண்முகக் கவிராயரின் ஆக்கத்தில் மேற்குறித்த தன்மைகள் விரிவாக இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

கதைசொல்லல் - கதைகேட்டல் என்ற மரபு நமக்கு மிகப் பழமையானது. கதைகேட்டல் என்பது இப்போது கதை வாசித்தலாக வடிவம் பெற்றுள்ளது. கதை சொல்லுதல் என்னும் நிகழ்வில் இசைக்கருவிகளும் ஒரு கட்டத்தில் இணைந்து கொண்டன. அவை, கதைப்பாடல்கள் எனும் வடிவமாக வடிவம் பெற்றன.

கதைப்பாடல்களை நிகழ்த்துவதே வில்லுப்பாட்டாக நடைமுறையில் உள்ளது. காப்பியங்களைக் கதைசொல்லும் மரபாகக் கட்டமைத்தனர். அவைகளே ‘பிரசங்கம்’ ஆகின. பிரசங்கிகள் எனும் கதை சொல்லிகள், காப்பியங்களைச் சொல்லத் தொடங்கினர். இக்கதைகள் மாலைவேளையில் சொல்லப்படும்; இரவு வேளைகளில் அக்கதைகள் நிகழ்த்தப்படும்.

கடவுளை வழிபடும் முறைகளில் ஒன்றாகக் கலாட்சேபம் உருவானது. தொடர்ச்சியாக, கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டே இருப்பது இன்றும் கோயில்களில் நடைமுறையில் உள்ளது. இவ்வகையான கலாட்சேபங்களைக் கடவுள் தொடர்பான கதைகளோடு நிகழ்த்தப்படுமானால், அவை கதாகலாட்சேபமாக வடிவம் பெறுகிறது.

இவ்வகையில் கதைப்பாடல் மரபு, கதாகலாட்சேப மரபு, பிரசங்க மரபு ஆகிய அனைத்து மரபுகளும் வசன மரபு உருவாக்கத்திற்கு முன்வடிவங்களாக அமைந்தவை. பிரசங்கியான சண்முகக் கவிராயர் மேற்குறித்த அனைத்து மரபுகளையும் இயல்பாக உள்வாங்கியவர்.

இதன் வெளிப்பாடாகவே அவரது ஆக்கம் அமைந்திருப்பதை அவருடைய வசன காப்பியத்தை வாசிக்கும்போது உணரமுடிகிறது. தொன்மையான மரபுகள், கால வளர்ச்சியில் புதிய மரபாக வடிவம் பெறும்போது, பழைய மரபுகள் அதற்குள் தன்வயப்படுதல் சாத்தியமே. அந்த வகையில் இந்த வசன காப்பியம் அமைந்திருக்கிறது. வாசிப்பு அனுபவமே அதனை உணர வாய்ப்பளிக்கும்.

தமிழில் அச்சு மரபு உருவாக்கம் என்பது பதினேழாம் நூற்றாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இராபர்ட் - டி - நொபிலி (1577-1656), சீகன் பால்கு (1682-1719), அண்ட்ரிக் அடிகள் (1520-1600) ஆகிய கிறித்தவ தொண்டூழியப் பெருமக்கள் தமிழில் வசன மரபு உருவாக மூலவர்களாக அமைந்தனர். இவர்கள் உருவாக்கிய மரபில் மணிப்பிரவாளம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

கிறித்தவ சமயம் தொடர்பான கருத்தாடல்களைத் தமிழ் வசன மரபில் வெளிப்படுத்த புதிய முறைகளை அவர்கள் கைக்கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் வசன மரபு என்பது புராண இதிகாசங்களை கதையாக அச்சேற்றல், மேனாட்டு வரவான நாவல் உருப்பெறுதல், இதழ்கள் வெளியிடுதல் ஆகிய பல பரிமாணங்களில் வளர்ச்சியுற்றது.

‘தத்துவபோதினி’ (1864) போன்ற சமய இதழ்களால் மணிப்பிரவாள மொழியிலிருந்து விடுபடமுடியவில்லை. மேலும், அம்மொழி நடையை நியாயப்படுத்தும் போக்கும் இருந்தது. இந்தப் பின்புலத்தில், சண்முகக் கவிராயரின் அச்சுக்கான மொழி முற்றிலும் வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்தவத்திற்கு எதிரான செயல்பாட்டில் இந்து சமயம் அமைப்புகளை உருவாக்கி பழம் பிரதியை வசனமாக்குவதும் இதழ்களை வெளியிடுவதுமே முக்கியப் பணியாக இருந்துள்ளது. அந்த நூற்றாண்டில் பல்வேறு சமய இதழ்கள் வெளிவந்தன.

சென்னையில் சதுர்வேத சித்தாந்த சபை, திருநெல்வேலியில் விபூதிச் சங்கம் போன்ற அமைப்புகள் சமயப் பின்புலத்தில் செயல்பட்டன. பாரதப் பிரசங்கியான சண்முகக் கவிராயர் சதுர்வேத சித்தாந்த சபையினரின் வேண்டுகோளுக்கிணங்கப் படைத்த வசன காவியம் முக்கியப் பங்களிப்பாகும்.

இந்த வசன காப்பியத்தில் பேச்சுமொழி சார்ந்த சொற்கள், சிறிய சிறிய தொடர் அமைப்புகள், உணர்வுத்தளம் சார்ந்த சொல்லாட்சிகள், வாசிப்பவர், கேட்பவராக உணர்தல் ஆகிய பல தன்மைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் வசன மரபின் அரிய ஆவணமாக இது அமைந்துள்ளது எனினும் இதனைப் பற்றிப் பின்னர் வந்த இலக்கிய வரலாற்று நூல்கள் உள்ளிட்ட எவற்றிலுமே பதிவு இல்லாதது குறித்து விவாதிக்கும் தேவையுண்டு.

இதழியல் வழி வசன நடை உருவாகும் காலத்திற்கு முன்பாகவே சண்முகக் கவிராயரின் வளமான வசன காப்பிய ஆக்கத்தை (1860) இரா. சீனிவாசன் மீண்டும் புதிய பதிப்பாகக் கொண்டு வருவதற்கான அனைத்து நியாயங்களும் வளமாக இருப்பதாகவே உணர்கிறேன்.

எனது தலை மாணாக்கர் கூட்டத்தைச் சேர்ந்த இரா. சீனிவாசன் அவர்களின் பாரதம் தொடர்பான பணிகளை இங்கு வரன்முறையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். எண்பதுகளின் இறுதி தொடங்கி, தொண்ணூறுகளின் இறுதிவரை தெருக்கூத்துத் தொடர்பான மரபுகளில் ஓரளவு ஈடுபட்ட ஆசிரிய அனுபவம் உண்டு.

குறிப்பாக, அண்ணாவி இளைய பத்மநாதன் உறவாலும், கூத்து குறித்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் சிலர் என் மேற்பார்வையில் செயல்பட்டதாலும், கூத்தை நோக்கிய தேடலில் ஈடுபட்ட நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்ய ஏதுண்டு. இந்தக் காலங்களில் சீனிவாசன் கூத்துத் தேடலில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஆனால், விரிவான ஆய்வுகளையோ, களப்பணிகளையோ செய்யும் வாய்ப்பு அப்போது இல்லை; ஆனால், ஈராயிரமாம் ஆண்டுக்குப் பின்பு பாரத மரபில் அவர் முழுமையாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அவரது பாரதம் தொடர்பான தொழிற்பாடுகளைப் பின்கண்ட வகையில் தொகுக்கலாம்.

- 1888இல் அச்சான நல்லாப்பிள்ளை பாரத நூலை 120 ஆண்டுகளுக்குப் பிறகு 2007இல் மீண்டும் அச்சில் கொண்டுவந்தார். இதன் இரண்டாம் பகுதியை 2009இல் பதிப்பித்தார். 1608 பக்கங்களைக் கொண்டது முதல்பாகம், 640 பக்கங்களைக் கொண்டது இரண்டாம் பாகம். இவை ஏ4 வடிவத் தாளில் அச்சிடப்பட்டவை. தனது 42 வயதில் 10, 254 செய்யுட்களைச் சந்திபிரித்துப் பதிப்பித்தார். இரண்டாம் பாகத்தில் உள்ள 3, 695 செய்யுட்களையும் சந்திபிரித்துப் பதிப்பித்தார்.

- 1905இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்த மகாபாரதக் கீர்த்தனையை 2016இல் பதிப்பித்துள்ளார். 768 பக்கங்களைக் கொண்டது (ஏ4) இந்நூல். இப்பதிப்பில் இவரது மாணவர் க. வினாயகமும் செயல்பட்டிருக்கிறார்.

- சுப்பிரமணிய அய்யர் இயற்றிய ஐந்து பாரத நாடகங்களை இவரது மாணவர் ஏ.செல்வராஜ் என்பவருடன் இணைந்து பதிப்பித்துள்ளார். இப்போது பாரதக் கதையின் வசன வடிவத்தைப் பதிப்பிக்கிறார். செய்யுள், இசைப்பனுவல், நாடகப்பனுவல், உரைநடைப்பனுவல், ஆய்வு என எல்லா வகைகளிலும் செயல்பட்டு வருகிறார்.

- கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக, கூத்துக்கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மாணவர்களும் உடன் செல்கின்றனர். இப்பணிகளை முகநூலில் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். கூத்தின் ஆகப்பெரும் ஆளுமைகள் பத்துப் பேரைப் பற்றி மின்னம்பலம் இதழில் இவரும் இவரது மாணவர் மு. ஏழுமலையும் கட்டுரைகளாக எழுதி வந்தனர். அவற்றை ‘மின்னம்பலம்’ ஒரு நூலாகத் தொகுத்து இப்போது வெளியிட்டுள்ளது. 2011இல் தமிழகத்தில் பாரதம்: வரலாறு - கதையாடல் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளது.

நல்லாப்பிள்ளை பாரதம் பதிப்பு (2007, 2009), மகாபாரதக் கீர்த்தனைப் பதிப்பு (2016), அண்மைக்கால கூத்துத் தொடர்பான நூல்கள் என்று கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பாரதம் தொடர்பான ஆய்வுகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். மேற்குறித்த பணிகள் குறித்து மிக விரிவாகவே எழுத இயலும்.

அதனைப் பிறிதொரு வாய்ப்பில் செய்வேன். இப்பணிகள் மூலம் இரா. சீனிவாசன் தமிழ்ப் புலமைப் பரப்பில் பாரதம் தொடர்பான ஆவண முறைப்பட்ட ஆழங்கால்பட்ட ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார். தமிழ்ப்புலமை மரபு என்பது வாழையடி வாழையாகத் தொடர்கிறது என்பதற்கு இவர் உரிய எடுத்துக்காட்டு.

உச்சிமுகர்ந்து, மனமகிழ்வோடு இதனைக் கொண்டாடுகிறேன். இந்தப் பதிப்பில் எனக்கும் இவருக்கும் மாணவரான கடும் உழைப்பாளி த.குணாநிதியும் இணைந்துள்ளார். மாணவர்களோடு இணைந்து இப்படியான பணிகளைச் செய்வது ஆசிரியப் பணிக்கும் ஆய்வுப் பணிக்கும் கிடைக்கும் வெகுமதி. அடைந்தவர்களுக்கே அதன் அருமை புரியும்.

- வீ.அரசு