தொல்காப்பியம்:

 தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக்கொண்டது. தொல்காப்பியம் தமிழ்மொழிக்கான இலக்கணநூல் எனினும், இந்நூல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்வுக்கான இலக்கண நூலாகவும் திகழ்கிறது. தமிழ் மக்களின் வாழ்வியலைப் பேசும் இதன் பொருளதிகாரம் கீழ்க்கண்ட ஒன்பது இயல்களைக்கொண்டது. அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகியன அவை. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு அறிவியல் அடிப்படையை வழங்கிய தொல்கபிலரின் எண்ணியச்சிந்தனையைக் கொண்டதாக தொல்காப்பியம் விளங்குகிறது. இவ்வுலகத்திற்கான அடிப்படையாக விளங்கும் முதன்மைப்பொருட்கள் இடம், காலம் ஆகிய இரண்டும்தான் என்பதை விளக்குகிறது இதன் பொருளதிகாரத்தின் நாலாவது பாடல்.

kaniyan balan book on tamil history “முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

 இயல்புஎன மொழிப இயல்பு உணர்ந்தோரே” (அகத்திணையியல் - 4).

நவீன அறிவியல் இதனை வெளி, காலம்(TIME&SPACE) எனக்கூறுகிறது. எண்ணியச் சிந்தனைப்படி ‘வெளி’ என்பதுதான் ‘இடம்’ என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 507ஆம் பாடல், கரும நிகழ்ச்சியை இடம் எனக் கூறுகிறது.

 ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்

 கரும நிகழ்ச்சி இடம்என மொழிப (செய்யுளியல் – 197)

 ஒரு நிகழ்ச்சி நடப்பதை இடம் எனக்கூறும் தொல்காப்பியரின் அடுத்த பாடல்(செய்யுளியல்-18), நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது காலம் எனக்கூறுகிறது. ஆகவே இடம், காலம் ஆகிய இரண்டும் கரும நிகழ்வுகளுக்கு அடிப்படை என்பது தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்தியலாக இருந்துள்ளது. அதனால்தான் அவையிரண்டும் உலகத்திற்கான முதற்பொருளாக தொல்காப்பியரால் சொல்லப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 244ஆம் பாடல் நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் காலமும் இல்லை என்கிறது.

 இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

 அவையில் காலம் இன்மை யான (பொருளியல் – 52; கடைசிப்பாடல்)

 நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார். ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம் எனப்படும் வெளி, காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாக ஆகிறது. இவைகளின் மூலம் இவரது கருத்துக்கள், வெளி - காலம் குறித்த நவீனச்சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை குறித்து முன்பே முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 உலகாயதத்தின் ஐம்பூதக்கருத்துக்களை விளக்குவதாக பொருளதிகாரத்தின் 637ஆம் பாடல் இருக்கிறது.

 நிலம் தீ நீர் வளி விசும் போடு ஐந்தும்

 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

 இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

 திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும் (மரபியல் – 91)

 நிலம், தீ, நீர், வளி எனும் காற்று, விசும்பு எனும் வெளி ஆகிய ஐந்தும் சேர்ந்து உருவான கலவையால் ஆனது இவ்வுலகம் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். உயிரினங்களின் தோற்றத்துக்கான அறிவியல் அடிப்படையாக விளங்கும் பரிணாமக்கொள்கையைக் குறிப்பதாக பொருளதிகாரத்தின் 575ஆம் பாடல் இருக்கிறது.

 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

 இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

 மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

 ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

 ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபியல் – 27)

 தொடுதல் உணர்வு மட்டும் கொண்டவை ஓரறிவு உயிர் எனவும் அதனுடன் நாக்குச்சுவை கொண்டவை ஈரறிவு உயிர் எனவும், அத்துடன் மூக்கால் நுகரும் தன்மை கொண்டவை மூவறிவு உயிர் எனவும், இவையோடு கண்ணால் பார்க்கும் தன்மை கொண்டவை நான்கறிவு உயிர் எனவும், இந்த நான்குடன் செவியால் கேட்கும் திறன் கொண்டவை ஐந்தறிவு உயிர் எனவும், இந்த ஐந்துடன் மனம் கொண்டு அறியும் திறன் கொண்டவை ஆறறிவு உயிர் எனவும் இப்பாடலில் விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்.

 எல்லா உயிர்களும் இன்பத்தை அடைவதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் இன்பவியல் கோட்பாட்டை பொருளதிகாரத்தின் 219ஆம் பாடல் பேசுகிறது.

 எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

 தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். (பொருளியல் – 27)

அறம் சார்ந்த வாழ்வு:

 தனது பொருளதிகாரத்தின் 214ஆம் பாடலில் இலக்கியம் அறம் சார்ந்ததாக இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறார் தொல்காப்பியர். அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக்கொண்டு இலக்கியம் படைப்பது பழிக்குறியதாகும் எனத் திட்டவட்டமாக தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார்.

 அறக்கழிவு உடையன பொருட்பயன் வரினே

 வழக்கென வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).

 பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில், களவிலும், கற்பு வாழ்க்கையிலும், இன்பம் நுகர்ந்து, அறத்தோடு கூடிய பெருவாழ்வு வாழ்ந்த தலைவனும் தலைவியும், முதுமையில் தம் மக்களோடும் சுற்றத்தோடும் பாதுகாப்போடும், பெருமதிப்போடும் சிறந்தமுறையில் வாழ்ந்து இறத்தலே பேரின்ப வாழ்வாகும் எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.

 காமம் சான்ற கடைக்கோட் காலை

 ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

 அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்

 சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் – 51)

 இப்பாடல் துறவறம் குறித்தோ வீடு குறித்தோ பேசவில்லை. இந்த வாழ்வை மிகச்சிறந்தமுறையில் வாழ்வதே பேரின்ப வாழ்வு எனக் கூறுகிறது. பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதையும், இன்பமாக வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்த தமிழர்கள், பொருள் சேர்ப்பதிலும், இன்பமாக வாழ்வதிலும் அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தையும் தங்கள் வாழ்வின் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அறமற்ற பொருள் சேர்க்கையும், அறமற்ற இன்ப நுகர்வும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் தொல்காப்பியர் உலக வழக்கில் இருக்கும் அறம் சாராத நடைமுறைகள் இலக்கியப்படைப்புகளில் இடம்பெறுவதைக்கூட ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாகத்தெரிவிக்கிறார். இலக்கியப்படைப்புகளில் அறம் சாராத நடைமுறைகளைப் படைப்பது பழித்தலுக்குரியது எனக்கூறுகிறார். ஆகவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றிலும் அறத்தைக்கடைப்பிடித்தல் என்பது மிகமிக முக்கியமானதாக பழந்தமிழர்களால் கருதப்பட்டது எனலாம். ஆனால் வட இந்தியர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்விட வீடு என்பதையே தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். ஆனால் பழந்தமிழர்கள் வீடு என்பது குறித்தோ, இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கை குறித்தோ கவலைப்படவில்லை. அவர்கள் இந்த உலக வாழக்கையின் அனைத்து நடைமுறைகளிலும் அறத்தைக்கடைப்பிடித்து, பொருள் சேர்த்து, இன்பம் நுகர்ந்து வாழ்வதற்கே முக்கியத்துவம் தந்தனர்.

இன்பவியல் கோட்பாடு:

            தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படிமுறைக்கோட்பாடு முதல், இன்பவியல் கோட்பாடு வரையுள்ள மெய்யியல் கூறுகளே சங்க இலக்கியத்தின் மெய்யியல் ஆகும். அளவையியல் எனப்படும் தருக்கவியலை அடிப்படையாகக் கொண்டு மெய்யியல் கூறுகள் நிலை நாட்டப்பட்டன. அளவையியல் முறைகள் காட்சி அளவையில் தொடங்கின. தமிழ் அகத்திணை மரபுகளை – அளவையியலின் இலக்கிய வடிவமாகத் தமிழர்கள் அமைத்தனர். அகத்திணை மரபு என்பது,

            எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              

            தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்  -தொல்.பொருளதிகாரம்-219.

            என்கிற தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும். இவ்வின்பியற் கோட்பாடு, அடிப்படையில் கடவுள் மறுப்பையும் ஓர் அங்கமாகக் கொண்டதாகும். வள்ளுவரின்

            தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

            தாமரைக் கண்ணா னுலகு      -காமத்துப்பால், 1103.

            எனும் குறள் அதற்குச் சான்றாகிறது. “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை அடைவதைவிட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது எனக் கூறுவதன் மூலம் கடவுள் மறுப்பைக் கொண்டுள்ளது. சங்க இலக்கிய மெய்யியல் என்பது பகுத்தறிவு சான்றதும், மனித நேயம் மிக்கதும், அறிவியல் கோட்பாடுகள் நிறைந்ததும், மனித வாழ்வின் இன்ப நுகர்விற்குச் சிறப்பிடம் அளிப்பதும், அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியற் கோட்பாடுகளை வற்புறுத்துவதுமான ஓர் உன்னத நெறியாகும்-(1).

ஐம்பூதம்:

            தொல்காப்பியம் ‘உலகம் என்பது நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐந்தும் கலந்த மயக்கம்’ எனக் கூறுவது போலவே சரக சம்கிதையும் குறிப்பிடுகிறது. புறநானூற்றின் 2ஆம் பாடல்,

 மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்

 விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும்

 தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல

 என ஐம்பெரும்பூதத்து இயற்கை என்ற, இயல்புக்கோட்பாட்டை விளக்கும். ஐம்பெரும்பூதங்களை ஆய்வு செய்ததால் பூதவாதம் எனவும், உலகின் தோற்றத்தைப்பற்றி ஆராய்ந்ததால் உலகாய்தம் எனவும் இக்கோட்பாடு அழைக்கப்படுகிறது. உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர்கள்; உணவால் ஆனதுதான் உடம்பு; நிலத்தொடு நீர் சேருவதுதான் உணவு; ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்கள் உடலையும் உயிரையும் படைத்தவர்கள் ஆவர் என்கிற பொருள்தரும் பாடலை குடபுலவியனார் என்ற புலவர் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனிடம் கூறி அவனை நிலமும் நீரும் இணையத் தேவையான ஏரி, குளம், குட்டைகளை உருவாக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

 “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

 உண்டி முதற்றே உணவின் பிண்டம்

 உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

 நீரும் நிலனும் புணரியோர் ஈன்று

 உடம்பும் உயிரும் படைத்திசி னோரே” (புறம்:18, வரி: 19-23)

 இப்பாடலின் கருத்துக்கள் எண்ணியச் சிந்தனையின் அடிப்படைகளில் ஒன்றாக விளங்கிய ஐம்பூதக்கோட்பாட்டின்படி அமைந்தவைகள் ஆகும். திருமூலரும் உடம்பே உயிருக்கு அடிப்படை என்ற பொருளில் ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ எனக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் எண்ணிய, ஓக, உலகாய்த மெய்யியல்களுக்கு மூல ஊற்றாய் அமைந்த தந்திர மரபுக்குரியவை எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன்.

 ஐம்பெரும்பூதங்களின் ஒன்றிணைப்பால் உருவாகும் வேதியல் மாற்றத்தால் தோன்றுவதுதான் உயிர் என்பதே பூதவாதிகளின் கருத்தாகும். சாரக சம்கிதை அறிவுப்புலங்களால் அறியப்படும் ஐம்பூதங்களை, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என வரிசைப்படுத்தும். இவ்வரிசை முறை உலகத்தோற்றம் குறித்த தமிழியக்கோட்பாடாகும். பரிபாடலின் 2ஆம் பாடல்,

 “கருவளர்வானத் திசையுடன் தோன்றி

 உருவறி வாரா ஒன்றன் ஊழியும்

 உந்துவெளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்

 செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

 தண்பெயல் தலைஇய ஊழியும் அவையில்

 ஊண்முறை வெள்ள் மூழ்கி ஆர்தருபு

 மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்

 உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்” -

என அண்டவெளியின் தோற்றம் குறித்துப் பேசுகிறது. இப்பாடல் சங்கம் மருவிய காலத்துக்குரிய பாடலாகும். “அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் கரு நிலையில் இருந்த போது பெரிய வெடியோசையுடன் அவ்வணுக்கரு வெடித்துச் சிதறியது. அதுவே முதல் ஊழி எனப்படும். அந்நிகழ்வே வெளியின் தோற்றத்துக்குக் காரணமாக ஆகியது. அதன்பின் பொருள்களை இயக்கும் காற்று தோன்றி கிளர்ந்து வீசிய இரண்டாம் பூதத்து ஊழியும், அடுத்து சிவந்த ‘தீ’ சுடர் வீசி எறிந்த மூன்றாம் பூதத்து ஊழியும், அடுத்து பனியோடு குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும் அடுத்தடுத்துத்தோன்றின. இறுதியாக அந்நான்கு பூதங்களின் ஊடே வெள்ளத்தே முழுகிக் கரைந்து ஒழிந்த நில அணுக்கள், மீளவும் ஆற்றல் அதிகரித்துச் செறிந்து திரண்டு, முக்கூறிய நான்கு பூதங்களின் உள்ளீடாகக் கிடந்த ஐந்தாவதாகிய பெரிய நிலத்து ஊழியும் எனக்கூறப்பட்ட ஊழிகள் தோன்றின” இதுவே இப்பாடலின் பொருளாகும். இதன்படி வரிசைமுறை என்பது பெருவெடிப்பு, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என அமைகிறது. சரக சம்கிதை கூறும் இவ்வரிசைமுறை தொன்மைக்கால எண்ணியத்திற்கு உரியதாகும். எண்ணிய மெய்யியலின் ஒரு கூறாகவே மருத்துவம் தோன்றி வளர்ந்தது எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(2). மருத்துவம் மட்டுமின்றி பிற அறிவியல் துறைகளும் எண்ணியக் கருத்துக்களை அடித்தளமாக் கொண்டே பழந்தமிழகத்தில் உருவாகி வளர்ந்தன.

மெய்ப்பாடுகள்:

 தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் மெய்ப்பாட்டியலில் உள்ள சில மெய்ப்பாடுகள் குறித்தும், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றில் ‘நூல்’ குறித்து சொல்லப்பட்டுள்ளவை குறித்தும் இங்கு காண்போம். இவ்விடயங்கள் தொல்காப்பியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் எனலாம். மெய்ப்பாடுகள் என்பன உடல்வழியாக வெளிப்படும் மன உணர்வுகள் ஆகும். அடிப்படை மெய்ப்பாடுகள் எட்டு வகைப்படும். அவை ஒவ்வொன்றும் நான்கு மெய்ப்பாடுகளைக்கொண்டவை என்பதால் மொத்தம் 32 மெய்ப்பாடுகள் உள்ளன. அவை

1.நகை : எள்ளல், இளமை, பேதமை, மடன்.

2.அழுகை : இழிவு, இழவு, அசைவு, வறுமை.

3.இளிவரல்: மூப்பு, பிணி, வருத்தம், மென்மை.

4.மருட்கை: புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்.

5.அச்சம் : அணங்கு, விலங்கு, கள்வர், இறை.

6.பெருமிதம்: கல்வி, தறுகண், புகழ்மை, கொடை.

7.வெகுளி : உறுப்பறை, குடிகோள், அலை, கொலை.

8.உவகை : செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு.

 நகை என்ற மெய்ப்பாடு நான்கு வகையில் வெளிப்படும். பிறரை இகழும்போது தோன்றுவது எள்ளல், இளமையாக இருந்து முதியவரைக் கண்டு நகைப்பது இளமை, ஒருவரின் அறிவின்மை கண்டு நகைப்பது பேதமை, ஒன்றை உள்ளவாறு உணராமல் தவறாக உணரும் மடமை கண்டு நகைப்பது மடன். இவ்விதமாக எட்டு வகை மெய்ப்பாடுகளுக்கும் மேலே சொல்லப்பட்ட 32 மெய்ப்பாடுகளும் தோன்றும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 245 முதல் 255 வரையான பாடல்கள் (மெய்ப்பாட்டியல்:1-11) இவை குறித்துப் பேசுகின்றன. அதன் 256ஆம் பாடல் (மெய்ப்பாட்டியல்-12) இந்த 32 முதன்மை மெய்ப்பாடுகள் போக மீதி உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துப்பேசுகிறது. முதலில் உள்ள 32 முதன்மை மெய்ப்பாடுகள் உடம்பின் வழியாக உணர்வை வெளிப்படுத்துபவை. துணைமை மெய்ப்பாடுகள் என்பன மன அளவில் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.

 சான்றாக ‘உடைமை’ என்ற முதல் துணைமை மெய்ப்பாடு என்பது ஏதாவது ஒரு பொருளை உடமையாகப் பெறும்பொழுது மனதில் தோன்றும் மகிழ்ச்சி என்ற மன உணர்வைக் குறிக்கும். இப்படியாக உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துத் தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆகவே மொத்தம் 64 மெய்ப்பாடுகள் உள்ளன எனலாம். இந்த மெய்ப்பாடுகள் குறித்த கருத்துக்கள் தனது முன்னோர்களால் சொல்லப்பட்டவை என்பதையும் தொல்காப்பியர் ‘என்ப, மொழிப’ என்பதன் மூலம் கூறுகிறார். வடமொழியில் உள்ள ‘பரத நாட்டிய சாத்திரம்’ இவைகளுக்கு இணையான மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளது. அவை இரசங்கள் எனப்படுகின்றன. ஆனால் இந்த பரத நாட்டிய சாத்திரம் தமிழ் மூலத்திலிருந்து தோன்றிய ஒரு வழி நூல் ஆகும்(3). ஆகவே இந்த மெய்ப்பாடுகள் அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுக்குச் சொந்தமானவை.

 தலைவி, தலைவனைக்காண்பது முதல் கூடி மகிழ்வது வரையும் அதன் பின்னரும் ஆன உணர்வு நிலைகள், 24 மெய்ப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டு, பொருளதிகாரத்தின் 257 – 262 வரையான பாடல்களில்(மெய்ப்பாட்டியல்:13-18) சொல்லப்பட்டுள்ளன. இளம்பூரணர் தலைவிக்குரிய இந்த 24 மெய்ப்பாடுகளையும் ‘அவத்தை’ எனக்குறிப்பிடுகிறார். இவை போக பெருந்திணைக்குரிய 20 மெய்ப்பாடுகள் பொருளதிகாரத்தின் 266ஆம் (மெய்ப்பாட்டியல்-22) பாடலில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே இந்த மெய்ப்பாடுகள் குறித்த விளக்கம், பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை நுட்பமான முறையில் வகைப்படுத்தி, தொகுத்து வைத்தவர்கள் என்பதையும், தொல்காப்பியரின் நுண்மான் நுழைபுலச் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

நூல்:

 பொருளதிகாரத்தின் எட்டாவது இயல் செய்யுளியல் ஆகும். இந்த செய்யுளியலில் ‘மாத்திரை’ முதல் ‘இழைபு’ வரையான 34 செய்யுள் உறுப்புகள் குறித்து பொருளதிகாரத்தின் 310ஆம் பாடல்(செய்யுளியல்-1) பேசுகிறது. அதன்பின் அவைகளுக்கான விளக்கம் அச்செய்யுளியல் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. இந்த 34 உறுப்புகளில் ‘அளவியல்’ என்ற உறுப்பு பற்றிய விளக்கத்தில் ‘நூல்’ குறித்துப் பேசுகிறார் தொல்காப்பியர். நூல் குறித்த விளக்கத்தை பொருளதிகாரத்தின் 471ஆம் பாடல் தருகிறது.

 நூல்எனப் படுவது நுவலுங் காலை

 முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

 தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

 உள்நின்று அகன்ற உரையோடு பொருந்தி

 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே (செய்யுளியல்-162).

 நூல் என்பதில் தொடக்கமும் முடிவும் மாறுபாடில்லாமல் தெளிவாக இருக்கும்; தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டும்; தன்னுள் அடங்கிய தெளிவான, விரிவான உரையைப் பெற்றிருக்கும். இறுதியாக நூல் என்பது அந்நூலின் தன்மைக்கு ஏற்ப நுட்பமான பொருளை உணர்த்தும் பண்பைக்கொண்டது. இவை நூல் குறித்து தொல்காப்பியர் கூறுவதாகும். நூல், உரை, பிசி எனும் விடுகதை, பழமொழி எனும் முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி ஆகிய ஆறு இலக்கிய வகைகளுக்கும் அடி வரையரை கிடையாது என்பதை அதற்கு முந்தைய பாடலில்(செய்யுளியல்-161) தொல்காப்பியர் கூறுகிறார்.

 இலக்கிய வகைகளுள் ஒன்றான நூல் எனப்படுவது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளைக்கொண்டது. பொருள் எளிதில் அறியும் வகையில் யாப்பியல் நெறியில் அமைக்கப்படுவது சூத்திரம் ஆகும். ஒரே இனமாக வரும் பொருளை ஒருசேர வைத்துப் புனையப்படுவது ஓத்து(இயல்) ஆகும். ஒரு பொருள் நெறி என்றில்லாமல் பலவகைப்பட்டு விரவி வரும் பொருள்களை எல்லாம் தொகுத்துப் பொதுவாக அமைப்பது படலம் ஆகும். சூத்திரத்தின் ஒரு பொருளும், ஓத்தின் ஒரே இனப்பொருளும், படலத்தின் விரவிய பலபொருள்களும் சேர்த்துத் தொகுத்து அமைப்பது பிண்டம் ஆகும். இவை பொருளதிகாரத்தின் 472-477 வரையான 6 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே நூல் என்பது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளையும் கொண்டதாக அமையும் எனலாம்.

 செய்யுளியலில் நூல் என்பது நான்கு வகையான பாகுபாடுகளைக் கொண்டது எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், பொருளதிகாரத்தின் மரபியலில் முதல் நூல், வழிநூல் என இருவகையான நூல்கள் உண்டு என்கிறார். வினைகள் நீங்கிய அறிவு முதிர்ந்த முனைவனால் ஆக்கப்படுவது முதல்நூல் ஆகும். முதல் நூலை அடிப்படையாகக்கொண்டு அதனைப்பின்பற்றி ஆக்கப்படுவது வழி நூல் ஆகும். வழி நூல் தொகுத்து அமைத்தல், விரித்துக்கூறுதல், தொகுத்தும், விரித்தும் அமைத்தல், மொழிபெயர்த்தல் ஆகிய நான்கு நிலைகளில் அமையும். பத்துவகைக் குற்றங்களும் இல்லாது, 32 வகை உத்திகளும் பெற்று, உண்மைப்பொருள் விளங்கக் கூறுவதே நூல் ஆகும். பொருளதிகாரத்தின் 643-649 வரையான பாடல்கள்(மரபியல்:95-99) இவை குறித்துப் பேசுகின்றன. இலக்கண நூலின் அமைப்பு, நூற்பாவின் இலக்கணம், காண்டிகை உரை, உரைநூல் ஆகியன குறித்துப் பொருளதிகாரத்தின் 648-654 வரையான 7 பாடல்கள்(மரபியல்:100-106) ஓரளவு விரிவாகப் பேசுகின்றன.

 பொருளதிகாரத்தின் 658ஆம் பாடல்(மரபியல்-110), நூலில் ஏற்படும் பத்து வகையான குற்றங்கள் குறித்துப் பேசுகிறது. 1.கூறியது கூறல், 2.மாறுகொளக்கூறுதல், 3.குன்றக்கூறல், 4.மிகைபடக்கூறல், 5.பொருள் இல் மொழிதல், 6.பொருள் மயங்கக்கூறல், 7.கேட்போருக்கு இனிமை தராதவகையில் கூறல், 8.பழிமொழியால் இழுக்கு வருமாறு கூறல், 9.தொன்மையைவிட்டு விலகி தானே ஒன்றைக்கூறல், 10.படிப்போருக்கு விளங்காத வகையில் கூறல் ஆகியன அந்த பத்து வகையான குற்றங்கள் ஆகும். இந்தப்பத்து வகையான குற்றங்களும் இல்லாமல் படைக்கப்படும் படைப்புதான் நூல் என்ற தகுதியைப்பெறும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர்.

 நூலை எழுதும்பொழுது கையாள வேண்டிய உத்திகள் என்பன 32 எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 660ஆம் பாடல்(மரபியல்-112), அந்த 32 உத்திகளையும் வரிசைப்படுத்திக்கூறுகிறது. அவை ‘நுதலியது அறிதல்’ முதல் ‘உய்த்துக்கொண்டு உணர்த்தல்’ வரை 32 உத்திகள் ஆகும். நுதலியது அறிதல் என்பது ‘சொல்லக்கூடிய கருத்தைப் பிறர் தெளிவாக விளங்கிக்கொள்ளுமாறு கூறுதல்’ ஆகும். அதுபோன்றே, உய்த்துக்கொண்டு உணர்த்தல் என்பது ‘தெளிவில்லாத கருத்தை உய்த்து உணர்ந்து பொருந்தும் வகையில் விளக்கிக்கூறுதல்’ ஆகும். இப்படியாக நூல் எழுதுவதற்கான 32 உத்திகளையும் தொல்காப்பியர் பட்டியலிட்டுள்ளார். இந்த 32 உத்திகளையும் பின்பற்றி, முன்பு கூறிய 10 குற்றங்களையும் நீக்கிப் படைக்கப்படும் படைப்பு மட்டுமே நூல் என்ற தகுதியைப் பெறும். இந்த விலக்கப்படவேண்டிய 10 குற்றங்களும், பின்பற்றப்பட வேண்டிய 32 உத்திகளும் தமது முன்னோர்கள் கூறியிருப்பவை என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் இவை அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு உரியவை என ஆகிறது.

 தொல்காப்பியரால் நூலுக்குரிய இலக்கணமாகக் காட்டப்படும் 32 உத்திகள், பத்துவகைக்குற்றங்கள், சூத்திரம், காண்டிகை உரை, உரைநூல் முதலியன தருக்கவியலுக்குரியன எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். இந்த உத்திகள், குற்றங்கள் முதலியன குறித்து வடமொழியில் உள்ள சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் பேசுகிறது. அவற்றை அது பேச்சுக்கலைக்குரியதாகக் கூறுகிறது. ஆனால் அந்த மருத்துவ நூலும் தமிழ் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வழிநூல்தான் ஆகும்(4).

 பொருள்முதல் சிந்தனையாளர்கள் மூல எண்ணியத்திற்கும்(ORIGINAL SAMKYA), தொடக்ககால சிறப்பியத்திற்கும்(வைசேடிகம்) உரியன எனவும், ஓக, உலகாய்த மெய்யியல்களைச் சார்ந்தவை எனவும் எவற்றைக் குறித்துள்ளனரோ அவற்றை எல்லாம் தொல்காப்பியர் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறார் எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். மேலும் படிமுறைக்கோட்பாடு(THEORY OF EVOLUTION), ஐம்பூதக்கோட்பாடு(THEORY OF UNIVERSE), அளவையியல் கோட்பாடு(THEORY OF REASONING AND LOGIC), காரணகாரியக் கோட்பாடு(THEORY OF CAUSE AND EFFECT), இன்பியல் கோட்பாடு(THEORY OF HEDONISM) ஆகிய அறிவியல் துறைகளை தொல்காப்பியர் குறிப்பிடுவதோடு, அவை தமது முன்னோர்கள் கூறியுள்ளவை என்பதையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுவதாகக் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(5). மேலே சொல்லப்பட்டவைகளின் மூலம், தொல்காப்பியர் ஒரு தத்துவ அறிஞரும், அறிவியல் மேதையும் ஆவார் என்பதோடு அவர் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் ஆகிறார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் சிற்பிகளில் ஒருவராக அவரை ஆக்குகிறது.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை:

 வட இந்தியாவில் 16 சனபதங்கள் உருவாகி மகதப் பேரரசு உருவாகும் வரையிலான இடைக்காலத்தில்(கிமு.750-550) பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரளவு இருந்தது. ஆனால் அச்சூழல் அங்கு நீடிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தான் தமிழகத்தின் பொருள்முதல்வாதக் கருத்துக்களான பூதவாதமும், எண்ணியமும் அங்கு பரவின. அதனைக் கற்றுக்கொள்ளப் பல வட இந்திய அறிஞர்கள் தமிழகம் வந்தனர். தமிழறிஞர்கள் பலர் தங்கள் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பினர். புத்தர்கூட எண்ணியம் கற்றவர்தான். அப்பொழுது அதற்கானச் சமூகச் சூழல் அங்கு இருந்தது. அதன் பின்விளைவாகவே சமண, பௌத்த மதங்கள் அங்கு உருவாகின. ஆனால் கி.மு. 1000க்கு முன்பே கிரேக்க நகர அரசுகள் போன்ற பல சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் உருவாகிவிட்டன. அவை தங்கள் தமிழ் மொழிக்கான குறியீடுகள் என்ற ஒருவகை வரிவடிவத்தையும் கொண்டிருந்தன. முனைவர் கா. இராசன் அவர்கள் தனது தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் சொல்வதுபோல் கி.மு. 1000 வாக்கில் அல்லது அதற்கு முன்பே ஒரு பெரிய பண்பாட்டுப் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது. அப்பாண்பாட்டுப் புரட்சி தெற்கே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில் கி.மு. 1500 வாக்கில் நடை பெற்றுவிட்டது எனலாம். அப்பண்பாட்டுப் புரட்சி அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதன்பின் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி வேகம் பெற்றது.

            பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரிரு நூற்றாண்டுகள் கூட வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அச்சூழ்நிலை 1000 வருடங்களுக்கு மேல் இருந்துள்ளது. அதனால்தான் பூதவாதம், எண்ணியம், சிறப்பியம் போன்ற பல பொருள்முதல்வாத மெய்யியல்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன என உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதற்கானப் பல சான்றுகளை க. நெடுஞ்செழியன் அவர்கள் தமது நூல்களில் தந்துள்ளார்கள். அதனால்தான் தமிழ் மரபு அடிப்படையில் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்கிறோம். தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், பூரண காயபர், கணாதர், நருவெரூஉத் தலையார், கோதமனார் போன்ற பலரும் தமிழர்கள். தொல்கபிலரின் எண்ணியம், பக்குடுக்கை நன்கணியாரின் எண்ணிய அடிப்படையிலான சிந்தனை ஆகியவற்றின் தொடர்ச்சிதான் கணாதரின் சிறப்பியம் ஆகும். இந்தியத்தத்துவ மரபுக்குப் புதியதாகத் தோன்றுகிற சிறப்பியத்தின் அணுவியலுக்கும், நியாயவாதத்தின் அளவையியலுக்கும் உரியதுதான் தந்திர உத்தி ஆகும்.

 ஆகவே பூதவாதம் எனப்படுகிற உலகாயதமும், சாங்கியம் எனப்படுகிற எண்ணியியலும், சிறப்பியத்தின் அணுவியலும், நியாயவாதத்தின் அளவையியலும், தந்திர உத்திகளும், இன்ன பிற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் இருந்து தோன்றியவைதான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலம்-வெளி குறித்துத் தற்காலத்திற்குரிய, ஒரு வளர்ச்சிபெற்ற பொதுச் சார்பியல்(GENERAL RELATIVITY) கோட்பாட்டுக்குரிய கருத்தை அன்றே வெளிப்படுத்தியதற்கு, மிக நீண்ட நெடிய, தூய கலப்பற்ற அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபுதான் காரணம் எனலாம்.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை - வேறுபாடுகள்:

1.தமிழிய சிந்தனையின்படி பூதவாதம் எனப்படும் உலகாயதத்தில் நீர், நிலம், தீ. வளி, வெளி ஆகிய ஐந்து பூதங்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனையில் வெளி இல்லாத நான்கு பூதங்களே உண்டு.

2.எண்ணியம் எனப்படும் சாங்கியத்தில் தமிழியச்சிந்தனைப்படி 24 கூறுகள் மட்டுமே உண்டு. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி 24 கூறுகளுடன் புருடன் என்பது சேர்க்கப்பட்டு மொத்தம் 25 கூறுகள் உண்டு.

3.சிறப்பியம் எனப்படும் வைசேடிகத்தில் தமிழியச்சிந்தனைப்படி ஏழு பொருள்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனைப்படி ‘இன்மை’ இல்லாமல் ஆறு பொருள்கள் மட்டுமே உண்டு.

4.தமிழ் மரபு மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே கொண்டதாக உள்ளது. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி இந்த மூன்றுடன் வீடு என்பது சேர்க்கப்பட்டு மனித வாழ்வு நான்கு அடிப்படைகளைக்கொண்டதாக உள்ளது.

5.தொழில் முதல்நிலை எனப்படும் காரியாபினிவிருத்தி என்பது ஒரு தொழிலைச்செய்வதற்கான மூலவளங்களின் தொகுப்பு ஆகும். இது தமிழியச்சிந்தனைப்படி 8 வகைகளைக்கொண்டதாக உள்ளது. வட இந்தியச் சிந்தனைப்படி இந்த 8 வகைகளோடு முயற்சி, துணைக்கருவி ஆகிய இரண்டையும் சேர்த்து 10 வகைகளைக்கொண்டதாக அது உள்ளது.

6.தந்திர உத்திகள் என்பவை தமிழியச்சிந்தனைப்படி நூலுக்கான உத்திகளாக 32 உத்திகளைக் கொண்டுள்ளன. வட இந்தியச்சிந்தனைப்படி இவை பேச்சுக்கலைக்கான உத்திகளாக 36 உத்திகளைக் கொண்டுள்ளன.

 தமிழியச்சிந்தனைகளில் இருந்து தான் பெரும்பாலான அறிவியல், பொருள் முதல்வாத வட இந்தியச் சிந்தனைகள் உருவாகின என்பது முன்பே பலவிதங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் கூட தமிழியச்சிந்தனைகளின் அறிவியல், தத்துவார்த்த அடிப்படைகளை ஆழ்ந்து புரிந்துகொள்ளாததன் விளைவேயாகும் என்பதும் முன்பே சொல்லப் பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவ்விளக்கங்கள் தமிழியச் சிந்தனைகளின் அறிவியல் அடிப்படையிலான பொருள் முதல்வாத மெய்யியலை உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

பார்வை:

1.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:34-36

  1. “ “ “ பக்: 41-42.
  2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: பக்: 839, 840.
  3. தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:145.

5.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 33, 34.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It