சங்க காலத் தமிழ்ச் சமூக அமைப்பு, அதன் வரலாறு, வாழ்வியல், வேளாண்மை, வணிகம், மெய்யியல் முதலியவற்றின் சிறு கலைக்களஞ்சியம் போல் (Encyclopedia) “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற 896 பக்க நூலை ஆய்வறிஞர் கணியன் பாலன் அவர்கள் எழுதி, 2016இல் வெளியிட்டார். அப்பெரு நூலின் திரட்சிச் சுருக்கமாக இப்போது “பழம்பெரும் தமிழ்ச் சமூகம்” என்ற நூலை எழுதியுள்ளார்.

இந்நூல்களை எழுதுவதன் நோக்கத்தைக் கணியன் பாலன் இதற்கு முந்தைய பெரு நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“சங்க காலம் குறித்துத் தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வுகள்தான், பழந்தமிழர்களின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த முடியும். தமிழ்ச்சமூகம் இன்று ஒரு தன்னம்பிக்கை அற்ற சமூகமாக மாறிப் போயுள்ளது. இந்நிலை மாறுவதற்கு, பழந்தமிழர்களின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துவது ஒரு அவசியத் தேவையாகிறது. அதனை உணர்ந்து, தமிழ் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, நமது பழந்தமிழர்களின் பல்வேறு பரிமாணங்களை, அவர்களின் சாதனைகளை, அவர்களது பெருமைமிகு வரலாற்றை வெளிப்படுத்தி, இன்றையத் தமிழ் மக்களின் தன்னம்பிக்கையை வளர்க்கப் பாடுபடட்டும்”. - பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், பக்கம் – 851.

kaniyan balan book pazhamperum tamil samugamகணியன் பாலன் மேற்கண்ட பணியைத் தம்மளவில் செயல்படுத்திவிட்டு, மற்ற ஆய்வாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறார்.

பிற்காலச் சோழ, பாண்டிய ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஆப்கானிய, விசயநகர, ஆங்கிலேய, தில்லி ஆட்சிகளுக்குக் கீழ்ப்பட்ட குடிகளாகத் தமிழர்கள் வாழும் நிலை ஏற்பட்டது. சொந்த இனத்தின் இறையாண்மையும் ஆட்சியும் இல்லாத இந்த நெடிய காலம் தமிழர்களின் தற்சார்பையும் தன்னம்பிக்கையையும் சிதைத்துவிட்டன.

முன்முயற்சி எடுக்கத் தயக்கம், பொறுப்பேற்க அச்சம் என்ற உளவியல் பலவீனங்களுக்குத் தமிழர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இவற்றின் காரணமாக சரியான மாற்றங்களுக்குத் தலைமை தாங்கிட முன்வராமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இந்த பாதிப்புகள் இன்று அரசியல், தொழில், வணிகம், கலைத்துறை, ஆன்மீகம் என அனைத்திலும் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆதிக்கத்தின் முன்னால் பணிந்து போகும் பழக்கவழக்கங்களுக்கு எளிதில் ஆளாகிறார்கள்.

இவ்வாறான இன்றையச் சூழலில் தமிழர்களைத் தட்டி எழுப்பிட, மீண்டும் வரலாறு படைக்க அவர்களை அரங்கமேற்றிட, தமிழர்களின் பெருமைமிகு புகழ்பூத்த பழைய வரலாற்றைப் படிக்கத் தருவது பாராட்டிற்குரிய அறிவுப் பணியாகும். இப்பணியைத்தான் இந்நூலில் கணியன் பாலன் செய்துள்ளார்.

சங்க காலத்தை கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை என்று கணியன் பாலன் வரையறுத்துள்ளார். இந்த வரையறை புதிது. இலக்கிய நூல்கள் மட்டுமின்றி, கல்வெட்டுகள், செப்பேடுகள், கீழடி வரையிலான புதிய புதிய அகழாய்வுகள் எனப் பல தொல்லியல் சான்றுகளையும், வளர்ந்து வரும் மானிட இயலையும் கணக்கில் எடுத்து, சமகாலத்திற்குத் தம்மைப் புதுப்பித்துக் கொண்டு எழுதுகிறார் நூலாசிரியர். தொல்கபிலர் காலம் கி.மு. 750 என்று கணக்கிட்டு, அவர் காலம் முதல் சங்க இலக்கியக் காலம் தொடங்குகிறது என்று கூறுகிறார் கணியன் பாலன். (தொல் கபிலர் – வேள்பாரியின் நண்பர் கபிலர் அல்லர்; அவர்க்கும் முந்தைய தமிழ்ச் சான்றோர்).

சங்க காலத்தை 10 கால கட்டமாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து அதனதன் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். இந்தப் பகுப்பு மிகமிக முகாமையானது. கால வரையறையுடன் வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளவும், மனதில் பதிய வைத்துக் கொள்ளவும் இந்தப் பகுப்பு பயன்படுகிறது. ஒவ்வொரு கால கட்டத்தின் தொடக்கப் பக்கத்திலும் அக்கால கட்டத்தைச் சேர்ந்த புலவர்கள், அரசர்கள், அரசர்களாயிருந்து பா இயற்றியோர், இதர ஆட்சியாளர்கள், சான்றோர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. அவர்களின் காலம் தரப்பட்டுள்ளது.

இந்நூல் தமிழர் மெய்யியல், வேளாண்மை, வணிகம், இசை உள்ளிட்ட கலைகள் பலவற்றையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

முன்னவர் ஆய்வுப் பிழைகளை மறுக்கிறது 

தமிழர்களைத் திராவிடர்கள் என்றும், தமிழர் நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்றும் ஆரியர்களும், ஐரோப்பியர்களும், அவர்களைப் பின்பற்றி தமிழறிஞர்கள் சிலரும் செய்த வரலாற்றுப் பிழையை ஆய்வாளர் கணியன் பாலன் செய்யவில்லை. தமிழர்களைத் தமிழர்கள் என்றே குறிப்பிடுகின்றார்.

மூலத்தமிழ் எழுத்துகளைத் தமிழ்ப் பிராமி என்று குறிப்பிடும் “சூத்திர இழிவை”த் தூக்கி எறிந்துவிட்டுத் தமிழி எழுத்து என்று குறிப்பிடுகிறார். இதற்கான காரணத்தைத் தெளிவாக விளக்குகிறார்.

அசோக மன்னன் காலக் கல்வெட்டில்தான் வடநாட்டில் முதல் முதலாக எழுத்து வடிவம் வெளிப்பட்டது. எனவே அவர்கள் அதை அசோகன் பிராமி என்றார்கள். ஆனால், அசோகன் காலத்திற்கு முன்பே தமிழ் எழுத்துகள் உள்ள கல்வெட்டுகளும், பானை ஓடுகளும், கருவிகளும் கிடைத்துள்ளன. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த பொருட்களில் உள்ள தொல் தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு. 520; கொடுமணல் தொல் தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 480; ஆனால், அசோகன் காலமோ கி.மு. 273 முதல் கி.மு. 232 வரை என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறார்.

வீட்டுப் பாத்திரங்களிலும், வேட்டைக் கருவிகளிலும் பெயர் பொறிக்கும் வழக்கம் தமிழர்களுக்கு இருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பியன்கண்டியூரில் கிடைத்த கைக் கோடரியில் “முருகன்” என்ற பெயர் எழுதியிருப்பதை ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் படித்துக் காட்டியதைச் சுட்டிக்காட்டி, இதன் காலம் கி.மு. 1,500 முதல் கி.மு. 2,000 வரை இருக்கும் என அவர் உறுதி செய்ததையும் கணியன் பாலன் தமது கருதுகோளுக்குச் சான்று காட்டியுள்ளார்.

பண்டைக் காலத்தில் தமிழர்கள் ஆண் பெண் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்ததால்தான் அவர்கள் புழங்கும் கலன்களிலும் வேட்டைக் கருவிகளிலும் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர் என்று ஐராவதம் மகாதேவன் கூறியதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

“தமிழ் பிராமி” என்ற சூத்திர ஏற்பைத் தவிர்த்தது சரி. அதேவேளை, பிராமி – என்பதற்கு ஈடாக – அதே ஒலிப்பு முறையில் தமிழி என்று கூற வேண்டுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழை சரியாக எழுதாமல் தமிழி என்று வட ஆரியர் பழங்காலத்தில் குறித்தினர். பழந்தமிழ் எழுத்துகளை தொல்தமிழ் என்றோ அல்லது தமிழ் என்றோ அழைக்கலாம்.

சங்க காலம் வீர யுகமா? 

மானிட சமூகப் பரிணாம வளர்ச்சி, உலகம் முழுவதும் ஒரே வடிவ மாதிரியில் நடந்தது என்று கூறுவது ஐரோப்பியச் சிந்தனை மரபு! அவர்களின் அறிவாற்றலை – ஆய்வுகளை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. ஆனால், ஐரோப்பியச் சிந்தனையின் உள்ளீடாக ஓர் உளவியல் ஓடிக் கொண்டிருக்கும். உலகிற்கே வெளிச்சம் காட்டுபவர்கள் தாங்கள்தாம் என்று கருதிக் கொள்வார்கள். மின்சார வெளிச்சம் காட்டினார்கள். ஆனால் வாழ்வியல் வெளிச்சம் காட்டி விட்டார்கள் என்று கூற முடியாது!

அவர்களின் பங்களிப்பைப் பார்த்துத் திகைத்துப் போன தமிழ்நாட்டு அறிவுத்துறையினர் பலர் அப்படியே அதை நகலெடுத்துத் தமிழ்ச் சமூகப் படிநிலை வளர்ச்சிகளுக்குச் செயற்கையாகப் பொருத்துவார்கள். மார்க்சிய வழிச் சிந்தனையாளர்களும் இப்படியே பொருத்துவார்கள். அந்த வழியில்தான் முனைவர் கைலாசபதி அவர்கள், சங்க காலத்தை வீரயுகக் காலம் என்றார். “வீரயுகப் பாடல்கள்” (Heroic Poetry) என்ற நூலும் எழுதினார்.

வேளாண்மையும், வணிகமும், அரசுக் கட்டமைப்பும், ஆன்மீகமும், கலையும், பண்பாடும் வளர்ச்சியடைந்த ஒரு நிலையான சமூகம்தான் சங்ககாலச் சமூகம்! போர் வீரர்களின் – அவர்களின் தலைவர்களின் வெற்றி தோல்வியால் அவ்வப்போது கட்டமைக்கப்படும் ஒரு நிரந்தரமற்ற சமூகம் போல், வீரர்யுகச் சமூகம் என வரையறுத்தார் கைலாசபதி! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனின் புறநானூற்றுப் பாடலுக்குக் கூட அவ்வாறுதான் விளக்கம் கொடுத்தார். பகைவனிடம் தோற்றுப் போன பழங்குடிகள், தங்கள் தோல்வி குறித்தும் புதியவர் ஆட்சிக்குக் கீழ்பட்டது குறித்தும் துயரப்பட்டுக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக எழுதப்பட்ட பாடல் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றார். வளர்ச்சியடைந்த சமூகத்தின் மெய்யியல் பாடல் அது!

முனைவர் கைலாசபதி அவர்களின் ஆய்வைக் கணியன் பாலன் மறுத்துள்ளார். ஆய்வாளர் ஏ.கே. இராமானுசன் தமது “காதலும் வீரமும் பற்றிய கவிதைகள்” என்ற ஆங்கில நூலில், கைலாசபதிக்குக் கொடுத்த மறுப்புகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். “பல புறநானூற்றுப் பாடல்கள் மறைந்துவிட்ட ஒரு காப்பியத்தின் பல துண்டுகள்” என்ற கைலாசபதியின் கூற்றை ஏ.கே. இராமானுசன் மறுக்கிறார்.

“மேற்கத்திய “வீரயுகக் கவிதைகளில் இல்லாத ஐந்திணை மரபு சங்கப் பாடல்களில் இருக்கின்றன; சங்கப் பாடல்களில் 70 விழுக்காட்டிற்கு மேல், வீரர்களைப் பற்றியவை அன்று” என்று ஆய்வாளர் மருதநாயகம் கூறிய மறுப்பையும் இந்நூலில் குறித்துள்ளார்.

களப்பிரர் காலம் 

களப்பிரர் தமிழரல்லாதார்; அயலார்; தமிழ்நாட்டைப் பிடித்து ஆண்டனர். அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தரவுகள், அதிகம் இல்லாததால் அவர்கள் ஆட்சிக் காலம் இருண்ட காலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிட்டனர். ஆரியச் சார்பாளர்கள் அவ்வாறு கூறினார்கள் என்று சொல்லி, களப்பிரர் காலம் பொற்காலம் என்று வர்ணித்த தமிழின உணர்வாளர்கள் உண்டு.

பிராமணர்களுக்கு இலவசமாகப் பிரமதேயம் என்று நிலம் கொடுத்து சிறப்புச் சலுகைகள் வழங்கியோர் களப்பிரரே என்ற உண்மையையும் வெளிக் கொணர்ந்துள்ளார் கணியன் பாலன்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. மார்கன், ஏங்கெல்ஸ், டாங்கே ஆகியோர் வரையறுத்த பாதை வழியே – அப்படியேதான் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சமூகமும் வளர்ச்சியடைந்தது என்றும் கருத வேண்டியதில்லை.

உலக மானிட இயல் பல பன்மைகளைக் கொண்டுள்ளது. காரல் மார்க்சும், எங்கெல்சும் வகுத்த புராதனப் பொதுவுடைமைச் சமூகம், ஆண்டான் அடிமைச் சமூகம், நிலக்கிழமை சமூகம், முதலாளியச் சமூகம் என்பவை – இதே வரிசையில் ஒரே பாணியில் உலகம் முழுவதும் பரிணாமம் அடைந்தது என்று சொல்ல முடியாது.

பிற்காலத்தில் இந்தியாவைப் பற்றிக் கூறும்போது, “இந்தியாவில் ரோமாபுரியில், கிரேக்கத்தில் இருந்ததுபோல் ஆண்டான் அடிமைச் சமூகம் இல்லை; அங்கு அதற்கு மாற்றாக ஆசிய உற்பத்தி முறை (Asiatic Mode of Production) இருந்தது” என்றார்,

மெய்யியலிலும் “பொருள் முதல்வாதம் – கருத்து முதல்வாதம்” என்ற இரு முனைகளுக்குள் மட்டும் அடைபட வேண்டியதில்லை.

ஆய்வு இயலில் கணியன் பாலன் அவர்கட்கு, ஐரோப்பிய மையப் பார்வை (Euro Centric Views) இல்லை என்பதற்குப் பல சான்றுகள் இந்நூலில் உள்ளன. மழைப் பொழிவு பற்றி கிரேக்கர்களுக்கு கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அறிவியல் பார்வை இல்லை; ஆனால், தமிழர்களுக்கு இருந்தது என்று எடுத்துக் காட்டுகிறார் இந்நூலில்!

கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் குளிர்காலத்தில் காற்று உறைந்து மழையாகப் பெய்கிறது என்றார். ஆனால், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் கடல் நீர் ஆவியாகி, மேகமாகத் திரண்டு, மழை பொழிகிறது; பெய்த மழைநீர் ஆறுகளில் ஓடிக் கடலில் கலக்கிறது என்று நீர்ச் சுழற்சியைத் தெளிவாகக் குறிப்பிட்டார் என்கிறார்.

மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு 

இத்தலைப்பில் தனி நூலொன்று (2018) எழுதியுள்ளார் கணியன் பாலன். இந்நூலில் இத்தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது.

“பழந்தமிழகத்தின் தத்துவார்த்த அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம் என்று கூறுகிறார் கணியன் பாலன். இச்சிந்தனை மரபு பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை கொண்டது என்கிறார். இதில் பூதவாதம், எண்ணியம், சிறப்பியம், அளவியம், ஆசிவகம் முதலிய சிந்தனைகள் இருந்தன என்கிறார்,

தொல்கபிலர் தமிழர்; அவர் தோற்றுவித்ததே எண்ணியம் என்கிற சாங்கியம் என்கிறார். புறநானூற்றுப் பாடல் 366ஐ இயற்றிய கோதமனார் என்ற தமிழர்தாம் நியாயவாதத்தைத் தோற்றுவித்தவர் என்கிறார்,

தமிழர் மெய்யியல் சிந்தனையாளர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரண காயபர், அசிதகேச கம்பாளர் ஆகியோர் தமிழர்களே என்று அறுதியிட்டு உறுதி செய்யும் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களின் மேற்கோளை எடுத்துக் காட்டுகிறார் கணியன் பாலன்.

ஆரியப் படையை விரட்டிய தமிழர் 

இந்நூலாசிரியர் இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ள ஆரியப்(மௌரிய) படையெடுப்பையும் அதனை முறியடித்து விரட்டிய அதியமான் – பாண்டியன் – சோழன் கூட்டணிப் படையின் வெற்றியையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வடஇந்தியா முழுவதையும் கைப்பற்றி, தமிழ்நாட்டைக் கைப்பற்ற – சந்திர குப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் படையெடுத்து வந்தபோது முதலில் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் மேற்குக் கடற்கரையில் உள்ள குதிரைமலை முதல் கொங்குநாடு வரை ஆண்டுவந்த அதியன் மரபினர், சோழ அரசன் அழுந்தூர் வேள் திதியன், பாண்டியன் மோகூர் பழையன் ஆகியோரை இணைத்துக் கொண்டு மௌரியர்களைத் துரத்தி அடித்தனர்.

மீண்டும் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்தபோது, பாண்டியன் நெடுஞ்செழியனும், சோழன் இளஞ்சேட்சென்னியும் போரிட்டு மௌரியர்களை வென்று விரட்டினர். அப்போரில் பெற்ற வெற்றிக்காகத்தான் இளைஞனாக இருந்து போரிட்ட நெடுஞ்செழியனுக்கு ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பட்டம் கிடைத்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற ஊரில் நடைபெற்ற மௌரியர்களுக்கு எதிரான போரில் பெருவெற்றி பெற்றவன் சோழன் இளஞ்சேட்சென்னி என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கே இருந்து வந்த ஆரியப் படையை விரட்டிட அன்று தமிழ் மன்னர்கள் ஒருங்கிணைந்தனர். இந்தப் படிப்பினை என்றும் வேண்டும்!

தமிழர்களின் நகர அரசுகள் 

கிரேக்கத்தின் நகர அரசுகளான ஏதென்ஸ், ஸ்பார்ட்டா போன்றவற்றின் பெருமைகளை ரோம் நகர அரசுகளின் பெருமைகளை நம்மவர்கள் அறிவார்கள். ஆனால், தமிழர்களுக்கும் பண்டைக் காலத்தில் நகர அரசுகள் இருந்தன என்ற செய்தி நமக்குத் தெரியாது. நூலாசிரியர் கணியன் பாலன் அவர்கள் இலக்கியம் முதலான பல்வேறு சான்றுகளில் இருந்து தமிழர்களுக்கான பழைய நகர அரசுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் நகர அரசுகளை மக்கள் பிரதிநிதிகள் கட்டுப்படுத்தினர் எனறு மெகத்தனிசு கூறியுள்ளதாக நேரு கூறினார் என்று எடுத்துக் காட்டியுள்ளார் கணியன் பாலன். அகநானூற்றுப் பாடல் 77, குடவோலைச் சீட்டு மூலம் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்தனர் என்று கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

“நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,

துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்

பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்

சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற

இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்

குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,

கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,

பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,

உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த

தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,    

செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்

கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்

புல் அரை இத்திப் புகர் படு நீழல்

எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,

வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, 

ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்

பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த

திருந்துஇலை எஃகம் போல,

அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.

 - மருதனிள நாகனார், அகநானூறு 77: 4-9 வரிகள்.

அதே காலத்தில் வடக்கே இருந்த ஆரியர்களின் மகதப் பேரரசு அடுக்குமுறை அதிகார வர்க்கத்தின் அரசாக இருந்ததைத் தொட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர். மகதப் பேரரசில் அசோகன் காலத்தில்தான் – கி.மு. 250 வாக்கில் பிராகிருத மொழி பிராமி வரி வடிவத்தில் முதல் முதலாக எழுதப்பட்டுள்ளது. சமற்கிருதமோ கி.பி. 150-இல்தான் முதல் முதலாகப் பிராமியில் எழுதப்பட்டது என்ற உண்மையையும் இந்நூல் உரைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கி.மு. 600-லேயே தமிழ் எழுத்துகள் எழுதப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன என்று குறிப்பிடுகிறார்.

நகர நாகரிகம் என்று எடுத்துக் கொண்டால் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே, ஆதிச்சநல்லூர் நாகரிகம், மதுரை நாகரிகம், பூம்புகார் நாகரிகம், அரப்பா நாகரிகம் போன்றவை இருந்துள்ளன. 11,500 ஆண்டுகளுக்கு முந்தைய பூம்புகார் நகரம் காவிரிப் பூம்பட்டினம் அருகே கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது என்ற உண்மையை கடலியல் ஆய்வாளர் கிரகாம் அன்காக் கூறினார். அரப்பா நாகரிகம் 5,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. முசிறி, கொற்கை துறைமுக நகரங்கள், கீழடித் தொடர் நிலம் போன்றவற்றை மேலும் ஆய்வு செய்தால் தமிழர்களின் நகர நாகரிகத்தின் தொன்மை நன்கு விளங்கும்.

வரலாறு படைத்த இனம், வரலாறில்லாத இனங்களுக்குக் கீழ்ப்பட்டுக் கிடக்கும் அவலம் ஏற்பட்டதேன் என்று ஆராய வேண்டும்.

தமிழ் இனத்தின் பெருமிதங்களுக்கான ஊற்றுக் கண்கள் – அறிவுக் கூர்மை, வீரம், அறம் என்ற மூன்று ஆற்றல்கள்!

தமிழர் வாழ்ந்த வரலாற்றைக் கணியன் பாலன் அவர்களின் இந்நூல் தரவுகளுடன் சிறப்பாகக் கூறுகிறது. எளிய நடையில் குறைந்த பக்கங்களுடன் எழுதப்பட்ட உள்ளாற்றல் மிக்க நூல் இது! 

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Pin It