தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த காமராஜரை ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். காமராஜர் பிறந்த நாளான ஜ{லை 15 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றால் காமராஜரின் புகழ் எத்தகைய சிறப்புக்குரியது என்று புரிந்து கொள்ள முடியும்.

இத்தனை சிறப்புக்குரிய பெயர்களைப் பெற்ற காமராஜரின் இளமைக் காலத்தில் அவரின் நிலை என்னவாக இருந்தது என்பதை நாம் அவசியம் அறிந்து கொள்ளவதோடு, அவர் அரசியலில் ஈடுபட்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின்னர் அவர் ஏற்படுத்திய கல்விக்கூடங்கள் இன்றும் மிகப் பெரிய சாதனையாகப் பேசப்பட்டு வருகிறது. அவருக்குப் பின்னால் அத்தகைய சாதனைகளைப் புரிந்தவர்கள் யாரும் இலர் என்றே சொல்லலாம்.

இதற்கெல்லாம் காமராஜரின் இளமைக் காலத்தில் அவரின் தந்தையின் மறைவால் பள்ளிப் படிப்பைக்கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் இருந்த தாக்கம் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். அதுமட்டுமில்லாமல் அவரது ஆட்சிப் பொறுப்பில் மதிய உணவு திட்டம் முதல் அனைத்தும் மிகச் சீரிய திட்டங்களாகக் கருதப்படுவதற்கு அவரது பள்ளிப் பருவத்தில் அவர் பெற்ற அனுபவமே போதுமானதாக இருந்திருக்கிறது என்பதையும் சில சான்றுகள் பகருகின்றன.kamarajar with school studentsபள்ளிச் சேர்க்கை:

ஐந்து வயது ஆனதும் காமராஜரை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவு செய்தார்கள். காமராஜின் தந்தை குமாரசாமி வளர்பிறை வியாழன் அன்று காமராஜர் பள்ளியில் சேரும் நாளைத் தடபுடலாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். பாட்டி பார்வதியம்மாள், அன்னை சிவகாமி அம்மாள் அனைவரும் ஓடியாடி வேலை பார்த்தனர். அழைப்பின் பேரில் உற்றார் உறவினர்களுக்கும் தகவல் அளித்து வரவழைக்கப்பட்டனர். வீட்டில் கோலமிட்டு, தோரணம் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அக்காலத்தில் பள்ளியில் சேர்க்கும் நாளை வெகு சிறப்பாக கொண்டியிருக்கிறார்கள்.

காமராஜரை முதன் முதலில் பள்ளியில் சேர்த்த நாளன்று காமராஜருக்கு காசிப் பட்டாடை கட்டி, வெல்வெட் கோட்டு மாட்டி, கைகளில், கழுத்தில் தங்க நகைகள் அணிவித்து, காதில் வெள்ளைக்கல் கடுக்கண் மாட்டி, தலை வாரி, சடை பின்னி அழகு செய்திருந்தார் பாட்டி பார்வதியம்மாள். நாதசுரம் கெட்டிமேளம் உள்ளிட்ட இன்னிசை எழும்பியதும் உற்றார் உறவினர் முன்னிலையில் காமராஜரின் தாய்மாமா கருப்பையா நாடார் மலர்ந்த முகத்துடன் காமராஜரை தூக்கி பவளமணிப் பல்லக்கில் அமர்த்தினார். அத்துடன் முதல் பாரத்துக்கு அவரே தோள் கொடுத்து தூக்கவும் ஊர்வலம் புறப்பட்டது.

சிறுவரான காமராஜர் முதலில் சேர்க்கப்பட்டது ஏட்டுப் பள்ளிக்கூடத்தில்தான். காமராஜரின் முதல் ஆசிரியர் பெயர் வேலாயுதம். அங்கு குருக்கள் பக்திப் பாடல் பாடிய பின்னர் ஏடு வாத்தியார் தன் பீடத்தில் அமர்ந்தார். பனை குருத்தோலை ஏடு, வெள்ளிப் பூண் கொண்ட எழுத்தாணியை காமராஜரின் தாய்மாமா அவரின் கரங்களில் கொடுத்தார். ஏடு வாத்தியார் காமராஜர் கைப் பிடித்து அசைவுகள் கொடுக்க ‘அ’ என்ற எழுத்து சுவடியில் பதிவானது. கெட்டிமேளம் கொட்ட பெண்கள் குலவை போட, பூமாரி பொழிந்தனர். இப்படி பெரியவர்கள் நல்வாழ்த்துகளுடன் காமராஜரின் படிப்பு ஆரம்பமாகியது. ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் அரிச்சுவடியும், ஏட்டுக் கணக்கும் காமராஜருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன.

பள்ளிப் படிப்பு:

கொஞ்சநாள் கழித்து ஏட்டுப் பள்ளிக்கூடத்திலிருந்து விலகி விருதுநகர் காசுக் கடைத் தெருவில் முருக வாத்தியார் என்பவர் நடத்தி வந்த ஏனாதி நாயனார் வித்யாசாலாவில் காமராஜர் சேர்க்கப்பட்டார். இங்கு தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.

மறுஆண்டு காமராஜரை விருதுநகர் சத்திரிய வித்தியாசாலா உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். அந்தப் பள்ளிக்குப் ‘பிடி அரிசி பள்ளிக்கூடம்’ என்ற பெயர் இருந்தது. விருதுநகரிலுள்ள பெரும்பாலான குடும்பத்தினர் இப்பள்ளிக்கு நாள்தோறும் கைப்பிடியளவு அரிசியை இலவசமாக வழங்கினார்கள். அதனால் அப்பள்ளிக்குப் பிடி அரிசி பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த அரிசியை அவ்வப்போது மொத்தமாகப் போட்டு சமைத்து மாணவர்கள் அனைவருக்கும் வழங்குவதும் உண்டு.

அங்கு 1888 ஆம் ஆண்டில் இருந்தே இலவசக் கல்வி வழங்கப்பட்டது. இப்பள்ளியில் காமராஜர் படித்ததால் இத்திட்டத்தை பிற்காலத்தில் காமராஜர் முதல்வரானதும் தமிழகம் முழுவதும் இலவசக் கல்வி திட்டத்தைக் கொண்டுவர அடிப்படையாக அமைந்தது என்கிறார்கள்.

சத்திரிய வித்தியாசாலா பள்ளியின் மேற்குப்புற வாசல் பக்கமிருந்த காலி இடங்களில் தென்னங்கீற்றுக் கொட்டகைகள் அமைத்து, அதில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குத் தட்டி கிளாஸ் எனப் பெயர். அங்கு காமராஜர் மூன்றாம் வகுப்பு படித்தார். காமராஜர் ஐந்தாம் வகுப்பிலிருந்து வெற்றி பெற்று, ஆறாம் வகுப்புக்குச் சென்றார். நான்காம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டதாலும், அனேக பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டதாலும் அவருக்கு ஆங்கில மொழி ஆற்றலும் கிடைத்தது.

பள்ளிக்கூடம் செல்வதில் ஆர்வமும் படிப்பதில் அக்கறையும் காமராஜரிடம் நிறைய இருந்தது. பள்ளிப்படிப்பு மேலும் சிறக்க இராத்திரிப் பாடம் (பிரைவேட் டியூசன்) படிக்க ஏற்பாடு செய்திருந்தார் அவரது தந்தை குமாரசாமி. இப்படியாக காமராஜர் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் குமாரசாமி. காமராஜரின் தந்தை இறந்த பின்னர் பாட்டியின் பாசத்தாலும் அன்னையின் அக்கறையாலும் காமராஜரின் படிப்பு தொடர்ந்தது.

மாணவர் பருவத்திலேயே நேர்மை தவறாதவர்:

காமராஜர் படித்த சத்திரிய வித்யாசாலாவில் ஆயத பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். மாணவர்கள் அந்தப் பூஜைக்கு ஒன்றரை அணா கொடுக்க வேண்டும். பூஜை முடிந்ததும் மாணவர்களுக்குப் பிரசாதமாகப் பொரிகடலை, தேங்காய், பழம், பேரிக்காய் முதலானவை கொடுக்கப்படும். காமராஜர் இந்தப் பூஜைக்குத் தன் பங்குக் காசைக் கொடுத்திருந்தார். பூஜை முடிந்து பிரசாதம் வழங்கியபோது, மாணவர்கள் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு பிரசாதம் பெற்றுக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த காமராஜர் தனியாக ஒரு பக்கம் ஒதுங்கி நின்றார். கூட்டம் குறைய ஆரம்பித்ததும், ஒதுங்கி நின்ற காமராஜருக்கு கடைசியில் ஆசிரியர் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்.

காமராஜர் கொண்டு வந்த பிரசாதத்தைப் பார்த்த பாட்டி பார்வதியம்மாள், குறைவாக இருப்பதோடு அதிலும் சில பொருள் இல்லை. உடனே, “எல்லோரும் நிறைய அளவு பிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்கள். நீ மட்டும் கொஞ்சமாக வாங்கி வந்திருக்கிறாயே ஏன்?” என்று கேட்டார்.

“பாட்டி எல்லோரைப் போலவும் என் பங்கு காசை நான் கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் கொடுத்தைப் போல எனக்கும் என் பங்கை வாத்தியார் தரணும் இல்லையா? மற்றவர்களைப் போல் என்னைச் சண்டை போட்டு வாங்கச் சொல்கிறாயா? இதை வாத்தியார் தானே பொறுப்போடு செய்யணும், ஏன் செய்யலே. வந்து கேளு பாட்டி?” என்றார் சிறுவரான காமராஜர். அந்த வயதிலும் நேர்மை தவறாமல் காமராஜர் பேசிய பேச்சு பாட்டிக்குப் புதுமையாகப்பட்டது. சிறுவர்களின் தன்மையிலிருந்து தன்னுடைய பேரனின் செயல் வித்தியாசமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

மாணவப் பருவத்திலிருந்தே நேர்மையான அணுகுமுறையை தான் கையாள வேண்டும் என்ற பண்பை காமராஜர் பெற்றிருந்தார். இத்தகைய பண்பபே பின்னாளில் காமராஜர் பதவிக்கும் அந்தஸ்திற்கும் போட்டியிடாமல் சமதர்மத்தை நிலை நாட்டப் பேருதவியாக இருந்திருக்கிறது.

பள்ளி இடைநிறுத்தம்:

காமராஜரின் தந்தை மறைவிற்குப் பின்னர் குடும்பத்தில் வறுமையின் காரணமாக அவரின் பள்ளிப் படிப்பிற்குக் கொஞ்சநாள் கழித்து முடுக்குப் போட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். அதோடு அவரை சார்ந்த உறவினர்கள் அனைவரும் வியாபாரத்தில் மிகவும் அக்கறை செலுத்துபவர்கள் என்பதால், காமராஜருக்கும் வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து வியாபாரியாக்க வேண்டுமென வலியுறுத்தினார் அவரது தாய்மாமா கருப்பையா நாடார். ஆனாலும் வியாபாரத்தில் நாட்டமில்லாமல் அரசியல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திய பின்னர், முழுமையாக நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்பது என முடிவு செய்த காமராஜர் தன்னுடைய அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள அன்றாடம் நாட்டு நடப்பை படிக்கத் தொடங்கினார்.

விருதுநகரில் மக்கள் சேவை செய்த ராவ் பகதூர் டி. ரத்தினசாமி நாடார் என்பவரின் பெயரால் வாசகசாலை ஒன்று தொடங்கப்பட்டது. ஊர்ப் பிரமுகர்கள் பெயரால் பீரோக்கள் அன்பளிப்பாக வாசகசாலைக்குக் கிடைத்தன. புத்தக அன்பளிப்புகள் ஏராளம். அதன் மூலம் கல்கத்தாவிலிருந்து வந்த 'மாடர்ன் ரெவ்யூ, பம்பாயிலிருந்து வெளியான பிரி பிரஸ் ஜர்னல், சென்னையிலிருந்து பிரசுரமான இந்து, சுதேசமித்திரன், தேசபக்தன் முதலிய பத்திரிகைகளும் வாங்கப்பட்டன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜர் இந்த வாசக சாலைக்கு வந்து படிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். இந்த வாசக சாலையில் ஆண்டு சந்தாவாக ஒரு ரூபாய் செலுத்தி உறுப்பினராகவும் ஆனார். அதன் பின்னர் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கும் வசதியும் அவருக்குக் கிடைத்தது. இப்படியாக தடைப்பட்டுப் போன தனது படிப்பின் தாகத்தை தீர்த்து அறிவாற்றல் பெற்றார்.

கல்விப் புரட்சி

வருங்கால சமுதாயம் சிறப்பாக வாழ வேண்டுமானால் கல்வி முக்கியம் என நினைத்த காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் ராஜாஜியின் குலக்கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்ததோடு அவர் ஆட்சியில் மூடப்பட்ட 6 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளையும் திறக்க உத்தரவிட்டார். அதுமட்டுமில்லாமல் தேவையான அளவுக்குப் பள்ளிக்கூடங்களை புதிதாக உருவாக்கவும் திட்டங்களை வகுத்தார்.

காமராஜரின் ஆட்சிக் காலத்தின்; போது சென்னை மாகாணத்தின் பொதுக் கல்வித்துறை இயக்குனராக பொறுப்பேற்றிருந்த நெ.து.சுந்தரவடிவேலு என்பவரை அழைத்தார். ‘குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தால் போதாது. எல்லோரும் பத்தாம் வகுப்பு வரை படிக்க வேண்டும். வருமானம், ஜாதி போன்ற பாகுபாடு இன்றி அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அதற்காக போதுமான பள்ளிகளை திறக்க வேண்டும். தொடக்கக்கல்வி கற்க வரும் எந்த குழந்தையும் ஒரு மைல் தொலைவுக்கு மேல் நடக்கக்கூடாது. அதற்கு ஏற்ப பள்ளிகளை திறக்க வேண்டும். அதேபோல நடுநிலைப்பள்ளிகள் மூன்று மைல் தூரத்துக்கு ஒன்று என்ற விதத்திலும் இரண்டு உயர்நிலை பள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் 5 மைல் என்ற அளவிலும் இருக்க வேண்டும். இதை கட்டம் கட்டமாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக திட்டங்களை வகுத்துச் சொல்லுங்கள்’ என்றார்.

‘இத்திட்டத்தை செயல்படுத்த போதுமான நிதி இருக்குமா?’ என்று சுந்தரவடிவேலு கேட்டபோது, ‘அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார் காமராஜர். திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராஜாஜி மூடிய 6000 பள்ளிகளோடு புதிதாக 14,000 பள்ளிகள் கட்டி முடிக்கப்பட்டன. காமராஜர் பதவியேற்பதற்கு முன் 16,000 தொடக்கப்பள்ளிகள் இருந்தன. பதவியேற்ற பின் அதன் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்தது. 300 மக்கள் வாழும் ஊரில் தொடக்கப்பள்ளி, 2000 மக்கள் வாழும் ஊரில் நடுநிலைப்பள்ளி, 5000 மக்கள் வாழும் சிறிய நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டமிட்டு பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன.

முதல் திட்ட முடிவில் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 21,500 ஆக உயர்ந்தது. இரண்டாவது திட்ட காலத்தில் இது 26 ஆயிரத்து 750 ஆக உயர்ந்தது. அதன் பின் இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியது .

தொடக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவர் தொகை முதல் திட்டக் காலத்தில் 25 லட்சமாக உயர்ந்தது. இரண்டாவது திட்ட இறுதியில் 33.8 இலட்சமாக இருந்தது. பின்னர் 46.1 லட்சமாக உயர்ந்துள்ளது. மூன்றாவது திட்ட காலத்தில் மேலும் 14 லட்சம் சிறுவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற அளவுகோலும் நிர்ணயிக்கப்பட்டது.

பல முக்கிய தலைவர்களின் மாநிலங்களிலுள்ள கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்ற நிலை இருந்த சமயத்தில் பள்ளிக்கூடமே இல்லாத கிராமம் தமிழ்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் பெருமிதத்துடன் அறிக்கை வெளியிடும் நிலையில் தமிழ்நாடு திகழ்ந்தது என்றால் அது காமராஜரின் சிந்தனையால் உருவானது எனலாம்.

கட்டாய கல்வித் திட்டம்

கல்வியின் சிறப்பை உணராத மக்கள் சின்னஞ்சிறு குழந்தைகளை படிப்பதற்கு அனுப்பாமல் இருப்பதை கண்டு வெகுண்டார் காமராஜர். கட்டாய தொடக்கக் கல்வி திட்டத்தை உருவாக்கினார்.

மாநிலம் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கட்டாய கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. கட்டாய கல்வி அமலில் இருக்கும் பகுதிகளில் இயங்கிய கமிட்டிகள் பள்ளிக்குச் செல்லும் வயது வந்தும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்து, அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்தது. பெற்றோர்களிடம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பிரசாரம் செய்து அவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கியது. இத்தகைய பணிகளால் குழந்தைகள் பள்ளியை நோக்கி அழைத்து வர பெரிதும் உதவியிருக்கின்றன.

தொடக்கக் கல்வி சட்டத்தின் கீழ் குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதன் மூலமும் கட்டாய கல்வி பெறும் குழந்தைகளுக்கு பாடநூல்கள் சிலேட்டுகள் இலவசமாக வழங்குவதன் மூலமும் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வறுமை நிலையில் இருந்த போதும் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். பதினொன்றாம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி எழுத்தறிவின்மையை ஒழிக்கப் பாடுபட்டார் காமராஜர்.

பள்ளி சீரமைப்பு மாநாடுகள்

பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை பெருக்குவதற்காக உள்ளுார் மக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் மாநிலம் முழுவதும் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. அதன் முதல் மாநாடு 1958 பிப்ரவரி 20 அன்று கடம்பத்தூரில் நடைபெற்றது. இத்தகைய மாநாடுகளில் காமராஜரும் அவருடைய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் கலந்து கொண்டு மக்களிடமிருந்து நிதி திரட்டினர்.

1958 இல் தொடங்கி 1963 வரை நடத்தப்பட்ட 150-க்கும் மேற்பட்ட இத்தகைய மாநாடுகளின் மூலம் 6.47 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டு அவை பள்ளி சீரமைப்பு, மாணவர்களுக்கு இலவச மதிய உணவு மற்றும் சீருடை திட்டம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டன. இதுகுறித்து அறிந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், பள்ளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் ஆதரவை திரட்டும் இந்தத் திட்டம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுதவிர அந்தந்தப் பகுதி உள்ளுர் மக்களும் பள்ளிகளுக்குத் தேவையான இடவசதி, மேஜை மற்றும் நாற்காலி உள்ளிட்ட இதர உபகரணங்களையும் வழங்கி வந்தனர். இதனால் அனைவருக்கும் கல்வி என்ற காமராஜரின் கனவு மெல்ல மெல்ல நனவாக தொடங்கியது. ஒருவனுக்கு அழியாத செல்வமாக வாழ்நாள் முழுமைக்கும் இருக்கக்கூடிய கல்வியை எந்த வகையிலும் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார்.

1200 ரூபாய் வருட வருமானம் உள்ள அனைவரும் இலவச கல்வி பெறலாம் என அறிவித்தார். அதன்படி கணக்குப் போட்டு பார்த்ததில் வெறும் 17 சதவித மக்கள் மட்டுமே இதனால் பயனடைகிறார்கள் என்பதை அறிந்த காமராஜர் ஏழை குழந்தைகள் அனைவருக்குமே இலவச கல்வி என அறிவித்தார். இந்தியாவில் எவரும் செய்துவிடாத சாதனையாக அது அமைந்தது.

மதிய உணவுத் திட்டம்

இலவச கல்வி வசதி, கட்டாய கல்வித்துறை இரண்டும் இருந்தும் எல்லா குழந்தைகளும் படிக்கும் நிலை ஏற்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று கவலையுடன் சிந்தித்தார் காமராஜர். கிராமங்களில் உள்ள மக்களைச் சந்தித்தார். அதற்கான காரணங்களையும் அறிந்து கொண்டார்.kamaraja serves food to studentsகாமராஜர் ஒருமுறை கிராமங்கள் வழியே சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு சில சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதை கண்டார். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி அங்கிருந்த சிறுவனை அழைத்து, ‘ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?’ எனக் கேட்டார்.

‘பள்ளிக்கூடம் போனால் யாரு சோறு போடுவா?’ என அந்த சிறுவன் திருப்பி கேட்டான்.

‘அப்போ சோறு போட்டா பள்ளிக்கூடத்துக்குப் போவியா?’ என காமராஜர் கேட்டதும், ‘போவேன்’ என்றான். சட்டென காமராஜருக்கு மனதில் பொறி தட்டியது. அன்றாட கூலி வேலைகளுக்குச் செல்லும் மக்களால் எப்படி குழந்தைகளுக்கு மதிய உணவை கொடுத்து அனுப்ப முடியும் என்று.

பள்ளிக்கூடத்தை கட்டி விட்டால் மட்டும் போதுமா? குழந்தைகளின் பசியை ஒருவேளையாவது போக்க வேண்டாமா? என யோசித்த காமராஜர், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் அப்பொழுது ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை 1956 இல் அறிமுகப்படுத்தி பின்னர், அதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்த வேண்டும் என முடிவு செய்தார். அதன் முதல் கட்டமாக 1957ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியிலிருந்து மதிய உணவு திட்டம் அரசு நிதி உதவியோடு அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் தொடக்க விழாவை பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் தொடங்கி வைத்து பேசிய காமராஜர், ‘அரசாங்கம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே பல ஊர்க்காரர்கள் தாங்களே பகல் உணவு திட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள். மனிதன் வாழ்வதற்கு படிப்பு அவசியம். அதைப் பட்டினியாக இருந்து கொண்டு எப்படி செய்ய முடியும். எனவே பள்ளிக்கூடங்களில் ஏழை குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவதை முக்கியமாக கருதுகிறேன். அதற்காக எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஊர் ஊராக போய் பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன்’ என உணர்ச்சிகரமாகப் பேசினார்.

இதைக் கேட்ட மக்கள், ‘நீங்கள் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். நாங்கள் உதவி செய்கிறோம்’ என முழங்கினர்.

வசதி படைத்தவர்கள் பணமாகவும் விவசாயிகள் விளை பொருட்களாகவும் உதவிகள் வழங்க முதல் கட்டமாக 4,200 பள்ளிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு பகல் நேரத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. அது பின்னர் மாநிலம் முழுமைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ‘பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமை’ என்று நேரு பாராட்டினார்.

இலவச மதிய உணவு திட்டம் லட்சக்கணக்கான குழந்தைகளை பள்ளிக்கு வரச் செய்தது. 14 லட்சம் சிறுவர்கள் இத்திட்டத்தால் பயன் பெற்றனர். உலக நாடுகள் பலவும் இத்திட்டத்தை பாராட்டின. ஓர் அமெரிக்க அறிஞர் அமெரிக்காவில் இதை பிரபலப்படுத்தப்போவதாக ஒருமுறை அறிவித்தார்.

சீருடைத் திட்டம்

குழந்தைகள் மத்தியில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் தடுக்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று காமராஜர் சிந்தித்தார். அதன் பயன்தான் இலவச சீருடை திட்டம். இதனால் குழந்தைகள் மத்தியில் ஏற்றத்தாழ்வு எண்ணம் தலை காட்டாது என்று எண்ணினார். பணக்காரர், ஏழை, முதலாளி, தொழிலாளி என்ற வேறுபாடு இல்லாமல் மாணவர்கள் பழகிப் படித்ததால் ஜாதி, மத வேற்றுமை இல்லாத சமூகமாக உருவாக்க முடியும் என்று நம்பினார். அதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கிடையே மனதளவில் எந்தப் பாகுபாடும் வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்களுக்கான நலத்திட்டங்கள்

பள்ளிக்கூடங்களை திறந்தால் மட்டும் போதாதது. அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் வேலை நாட்களை 180 லிருந்து 200 நாட்களாக உயர்த்தினார். இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி நலன் மேம்படும் என இதைச் செய்தார். அதோடு பள்ளிகளுக்கு விடப்படும் தேவையற்ற விடுமுறைகளும் குறைக்கப்பட்டன.

பள்ளிகளின் வேலை நாட்களை உயர்த்தியதோடு ஆசியர்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்தார் காமராஜர். ஆசிரியர்களுக்கு பிராவிடண்ட் பண்ட், இன்சூரன்ஸ், ஓய்வூதியம் ஆகிய மூவகை சலுகை அளிக்கும் திட்டத்தை வழங்க உத்தரவிட்டார். 1955இல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்த இந்தப் பலன்களை 1958 முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தார். அதன் பின்னர் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கல்விக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும் போது அவர்களால் மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் செயல்பாடுகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை காமராஜர் பெற்றிருந்தார்.

தொடக்கக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தினார். அவர்களின் பிள்ளைகள் இலவச கல்வி பெறுவதற்கு வசதி செய்தார். அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு சம்பளச் சலுகை அளித்தார். 100 ரூபாய் வருமானத்திற்கு குறைந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.

உயர் கல்வி

கல்வி வளர்ச்சி என்பது ஒரு குறுகிய வட்டம் அல்ல என்பதை உணர்ந்திருந்த படிக்காத மேதையான காமராஜரின் ஆட்சி காலத்தில்தான் 10 பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. அரசாங்க கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. இதுதவிர மருத்துவ கல்லூரி, திரைப்பட கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, ஐ.டி.ஐ என்று அழைக்கப்படும் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவையும் உருவாக்கப்பட்டன. அதோடு இரண்டு உடற்பயிற்சி கல்லூரிகளும், 10 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும், 39 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் திறக்கப்பட்டன.

ஒருமுறை 20 பேருக்கு மட்டுமே இருந்த மருத்துவச் சீட்டுக்கு 40 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் கண் இமைக்கும் நேரத்தில் 20 பேரை தேர்வு செய்தார் காமராஜர். ‘எப்படி இவ்வளவு சீக்கிரமாக தேர்வு செய்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘அவர்களின் விண்ணப்பங்களில் எல்லாம் கைநாட்டு இருந்தது’ என்றார். கைநாட்டு வைக்கும் படிப்பறிவு இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம் போன்ற படிப்புகளில் முக்கியத்துவம் கொடுத்தார் என்றால் அது மிகையல்ல.

நூலகங்கள் திறப்பு

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் பொது நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏராளமான நூலகங்கள் திறக்கப்பட்டன. 1953 சென்னை மாகாணத்தில் மட்டும் இருந்த ஒரே ஒரு கிளை நூலகம் 1961இல் 454 கிளை நூலகங்களாக விரிந்தது. எதிர்கால சந்ததிகளுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான வாசலை மிகப்பெரிய அளவில் திறந்து விட்டு அதில் வெற்றியும் கண்ட காமராஜர் தொடர்ந்து மக்கள் நலனோடு மாநில நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறையும் கவனமும் செலுத்தினார்.

தமிழ் மொழிக்கு முன்னுரிமை

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்தால் மட்டும் போதாது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித்தர வேண்டுமென முனைப்பு காட்டினார் காமராஜர். அதோடு தமிழ்நாட்டின் எல்லா அரசு வேலைகளுக்கும் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்குத்தான் இடம் இருக்க வேண்டும் என்று காமராஜர் முடிவு செய்தார். அத்திட்டம் வெற்றி பெற திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் ஆட்சி சொல் அகராதி வெளியிட்டார்.

பாடத்திட்டம் அமைப்பு

தமிழின் நீதி நூலில் முதன்மையானதான திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளித்தார். பத்தாவது பாட புத்தகத்தில் திருக்குறள் இடம்பெறுவது கட்டாயம் இல்லை என்ற நிலையை மாற்றி கட்டாயம் இடம் பெறச் செய்தார். தமிழ் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக நிர்வாகம் செய்ய முடியாது என்ற நிலையை மாற்றி அமைத்தார்.

விஞ்ஞான நூல்கள் உள்ளிட்ட பரிந்துரை பாடங்களுக்கும் தமிழில் நூல்கள் இல்லாத நிலையில் தமிழில் பாடங்களை எப்படி போதிப்பது என்ற பேச்சு இருந்த போது அதற்கென தகுதியானவர்களைக் கொண்டு தமிழில் பரிந்துரை நூல்களை மொழி பெயர்க்கச் செய்ததோடு தமிழ்நாடு அரசு பாடநூல் விற்பனை கழகம் மூலம் அவை குறைந்த விலையில் கிடைக்கவும் வழிவகை செய்து கொடுத்தார். அதோடு பல்வேறு திறன்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

பள்ளியில் காமராஜர் வாழ்த்து

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் காமராஜர் போட்டியிட்ட போது ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளில் படிக்காத காமராஜரை பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் எனப் பிரசாரம் செய்யப்பட்டிருந்தது. இந்தச் செய்தியை பெரியாரிடம் தொண்டர்கள் சொன்ன போது, ‘சரியாத்தான் போட்டிருக்கானுங்க. ஆனால் படிக்காத காமராஜர் உருவாக்கிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராஜர் பேசுவார் எனப் போட்டிருக்கணும். அந்த ஒரு வார்த்தையை சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்’ என்றார். அந்தளவுக்கு பெரியார் காமராஜரின் மீதும் அவரின் செயல்பாடுகளின் மீது மரியாதை கொண்டிருந்தார்.

காமராஜர் கல்வியில் ஏற்படுத்திய புரட்சியை கண்ட பெரியார், கல்வி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியை தொடங்கினாலும் இனி கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு காமராஜருக்கு வாழ்த்து சொல்வதுதான் முறை எனக் கூறி காமராஜரை பெரியார் பெருமைப்படுத்தினார்.

இலவச கல்வி சிந்தனை

1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரிசா மாநிலத்தில் தலைநகரான புவனேஸ்வரத்தில் நடைபெற்ற 68வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு காமராஜர் அகில இந்திய தலைவர் என்ற முறையில் தலைமை வகித்தார்.

அம்மாநாட்டில் அவர் பேசுவதற்காக தயாரித்த உரையை பலமுறை திருத்தி சரிபார்த்த பின் அதை பிரதமராக இருந்த நேருவுக்கு காமராஜர் அனுப்பி வைத்து அவர் அபிப்பிராயத்தை கேட்டார். தங்கள் உரையில் ஒரு சிறு திருத்தம்கூட செய்ய விரும்பவில்லை எனப் பதில் எழுதினார். வரலாற்று சிறப்புமிக்க அந்த உரையை தன்னுடைய தாய் மொழியான தமிழிலேயே காமராஜர் நிகழ்த்தினார்.

இந்தியா முழுமைக்கும் எல்லா மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு வரை இலவச கல்வி முறையை அமலாக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டதோடு, மக்களுக்கு சேவை செய்வதையே தனது குறிக்கோளாக கொள்ள வேண்டும் எனக் கூடியிருந்த தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

விளம்பரத்தை விரும்பாதவர்

காங்கிரசுக்கு எதிராக அரசியல் களத்தில் அப்போது நின்ற திராவிட கட்சிகளின் வளர்ச்சியை கண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் கவலை கொண்டிருந்த நேரத்தில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் காமராஜரை சந்தித்து, ‘ஐயா நம் கட்சியின் சாதனைகளை விளக்கி ஒரு விளம்பர படம் எடுக்க வேண்டும். அதை தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் திரையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என்றும் கேட்டார்.

‘அதற்கு எவ்வளவு செலவாகும்?’ என்றார் காமராஜர். ‘சுமார் மூன்று லட்சம் வரை செலவாகும்’ என்றார் சுந்தரம். இதைக் கேட்ட காமராஜர், ‘ஏ… அப்பா. மூணு லட்சமா? அது இருந்தா மூணு பள்ளிக்கூடத்தை திறந்து விடுவேனே! விளம்பரமும் வேண்டாம். படமும் வேண்டாம்’ எனச் சொல்லி அனுப்பி விட்டார். மக்களின் வரிப்பணத்தை எக்காரணம் கொண்டும் தேவையில்லாத வகையில் செலவு செய்யப்படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்;டிருந்தர் காமராஜர் என்பதை இந்நிகழ்வு பறைசாற்றுகிறது. அதோடு விளம்பரப்படுத்திக் கொள்வதை துளியும் அவர் ஒருபோதும் விரும்பியதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு.

படிக்காத மேதை

காமராஜரின் நுண்ணறிவு மிகத் தெளிவானது. அதனால்தான் அவர் தமிழகத்தை ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகள் (1954—1963) தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. அவரின் அனுபவ அறிவைப் பலரும் போற்றிப் புகழ்ந்துள்ளார்கள்.

‘காமராஜர் தம்முடைய பணிகள் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றவர். மக்களுக்கு நற்பணி ஆற்றியவர். தமிழர்கள் பெருமைப்படத்தக்க நல்ல காரியங்களை செய்தவர். கல்லூரியில் அவர் படித்து பட்டம் பெறவில்லையே தவிர அவர் படிக்கவே இல்லை என்று எண்ணக்கூடாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் படித்துக் கொண்டுதான் இருப்பார். காமராஜர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கை படத்தை நன்றாக படித்தவர். மக்களின் புன்னகையை பெருமூச்சை கண்ணீரை படித்து பாடம் பெற்றவர். நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய வைர மணிகளில் ஒருவரே காமராஜர்’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டியிருக்கிறார்.

‘படித்தது ஆறாம் வகுப்பு என்றாலும் சிறைக்கூடத்தை கல்விக்கூடமாகப் பயன்படுத்தி அறிவாற்றல் பெற்றார். தலைவரின் ஆங்கிலம் எளிமையாக இருக்கும்’ என குமரி ஆனந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.

தினந்தோறும் வாசிக்க வேண்டும், புதிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் காமராஜர் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் காட்டியுள்ளார்;. அதற்காக அவர் இரவிலும் தன்னை பார்க்க வந்தவர்களிடம் பேசிவிட்டு புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ காமராஜர் படிப்பது வழக்கம். சில நாட்களில் இரவு இரண்டு மணி வரைகூட படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

கல்விச் சேவைக்கான புகழ்

காமராஜர் கல்விக்காக ஆற்றிய சேவையை பலவிதங்களில் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதேநேரத்தில் அவர் கல்விச் சேவையை தனது உயிர் மூச்சாகவும் கொண்டு செயல்படுத்தியிருக்கிறார் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு ஏராளமாக எடுத்துச் சொல்கின்றன. கல்வியின் அருமையை உணராத ஒருவர் இத்தகைய அருங்காரியங்களை செய்ய முடியாது. இளமைப் பருவத்தில் கல்வி கற்க முடியாமல் போன சூழல், காமராஜரை இத்தகைய கல்விச் சாலைகளை உருவாக்க உந்தித்தள்ளியிருக்கிறது எனலாம். கல்வி கற்க வேண்டிய பருவத்தில் தடைப்பட்டுப் போன கல்வியை, பல லட்சக்கணக்கான ஏழை எளிய குழந்தைகளுக்குக் கிடைக்க செய்து அவர்களின் வாழ்வில் அறியாமை எனும் இருளை அகற்றிய பெருமைக்குரியவர் அல்லவா காமராஜர்.

சமுதாயத்தில் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினையும் வழங்கி இருக்கிறது.

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை, மாநிலத்தில் கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

கல்விக்கண் திறந்த கர்ம வீரர், படிக்காத மேதை எனப் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர், தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி, ஆடம்பரம், பணம், புகழ், விளம்பரத்தை அறவே விரும்பாதவர் எனப் பல புகழுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் காமராஜர். அவர் ஆற்றிய கல்விச் சேவையின் புகழ் வருடந்தோறும் ஜ{லை 15, அவருடைய பிறந்தாள் அன்று என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்!

மு.தமிழ்ச்செல்வன்

Pin It