பள்ளிபாளையம் கழக மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானம்.

ஆரியர்களின் வேத காலத்திலிருந்தே, பெரும்பான்மை உழைக்கும் மக்களான ‘சூத்திர பஞ்சம’ மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை கல்வி உரிமை தடையின்றி கிடைக்கவும், உயர் கல்வியை நோக்கி அவர்கள் முன்னேறிச் செல்வதற்குமான இலகுவான சமூகச் சூழலை உருவாக்கி சமூக நீதி அடிப்படையிலான கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதை முழுமையாக சிதைத்து வெகு மக்களிடம் கல்வி சென்று அடைந்து விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் தடைகளை எழுப்பி கல்வி அனைவருக்கும் பரவிடாது தடுக்கவே புதிய கல்விக் கொள்கை வந்துள்ளது.

kamarajar nenavunal 600புதிய கல்விக் கொள்கையின் நோக்க உரையிலேயே இது வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எல்லோருக்கும் கல்வி - சமமான கல்வி வழங்குவதிலேயேதான் நாம் முயற்சித்தோமே தவிர, அதை விட முக்கியமான 'தரமான கல்வி' பற்றி கவலைப்படவே இல்லை என்று அறிக்கையின் நோக்கவுரையே வெளிப்படையாகவே பார்ப்பனிய மனு சாஸ்திரத்தை பச்சையாக வெளிப்படுத்தி இருக்கிறது. (In the decades since independence we have been preoccupied largely with issues of access and equity and have unfortunately dropped the baton with regard to quality of Education).

14 வயது உள்ள அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை உறுதி செய்யும் கல்வி உரிமைச் சட்டம் ‘சூத்திரர்களுக்கு கல்வியைத் தராதே’ என்ற மனு சாஸ்திரத்திற்கு எதிராக வந்தது தான். இந்த நிலையில், அதன் நோக்கத்தை சிதைக்க புதிய கல்விக் கொள்கை பல்வேறு சூழ்ச்சியான திட்டங்களை முன் வைத்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பதன் வழியாக வடிகட்டுதல், உயர்கல்விக்கான வழிகளைத் தடுத்து நிறுத்துதல், வேதப் பெருமைகளை கல்வித் திட்டத்தில் இணைத்தல் என பல்வேறு பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களை செயல்படுத்த வலியுறுத்துகிறது. மீண்டும் வேதகாலத்திற்கு இழுத்துச்செல்லும் இந்த ஆபத்தான கல்விக் கொள்கையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த மனுதர்ம கல்விக் கொள்கையைத் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை வெளிப்படுத்திட கல்விப் புரட்சிக்கு அடித்தளமிட்ட கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் நினைவு நாளான அக்டோபர் இரண்டாம் நாள் புதிய கல்வித் திட்ட நகல்களைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துடைய இளைஞர்கள், மாணவர்கள் அமைப்புகளைத் திரட்டி மாவட்டத் தலைநகரங்களிலும், வாய்ப்புள்ள பகுதிகளிலும் நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

Pin It