இந்திய சுதந்திரம் அடைந்துவிடக்கூடாது என்ற நோக்கில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஹிந்துத்துவா அமைப்புக்கள், சுதந்திரம் பெற்ற பின்னரும் நமது மூவர்ண கொடியையும், தேசிய கீதத்தையும் ஏற்கமாட்டோம் என்றும் நம் பாராளுமன்ற ஜனநாயகத்தை சிதைக்க வேண்டும் நோக்கோடு ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து அராஜகத்தை கையில் எடுத்துக்கொண்டு, அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத போக்கு தொடர்ந்து இருப்பதை சம காலத்திலும் கூட பார்க்க முடிகிறது..

சுதந்திர இந்தியாவிலே முதல் படுகொலை என்பது காந்தியின் கொலை தான். அந்த படுபாதகத்தை செய்தது ஹிந்துத்துவா தான். அதே போல இந்திய சுதந்திர வரலாற்றிலே முதன் முறையாக நம் இந்திய பாராளுமன்ற கட்டிடத்தை தகர்க்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியதும் இந்த ஹிந்தூத்துவா சக்திகள் தான்.

இந்த பாராளுமன்ற தாக்குதலின்போது தான் அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் அகில இந்திய தலைவராக இருந்த காமராஜர் மீதும் அவர் ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கும்போது அவரை உயிருடன் கொல்லும் நோக்கில் அவரது வீட்டை தீக்கிரையாக்கியதும் இந்த ஹிந்துத்துவா சக்திகள் தான்.

ஹிந்துத்தவ கும்பலுக்கு காமராஜர் மீது ஏன் இந்த வன்மம்?

தமிழகத்திலே 3 முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டவாரான காமராஜர், 1963-ல் அவர் நேருவிடம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு நிறுவனப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்த ஆலோசனையானது 'காமராஜ் திட்டம்' என்று அறியப்பட்டது, இது மூத்த காங்கிரஸ்காரர்களின் மனதில் இருந்து அதிகார மோகத்தை அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது, இதனால் அமைப்பின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள் மீது அர்ப்பணிப்பையும் பற்றுதலையும் உருவாக்க உதவியது. இந்தத் திட்டம் காங்கிரஸ் காரியக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டு இரண்டு மாதங்களில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 6 முதல்வர்கள் மற்றும் 6 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அந்த திட்டத்தின் படி காமராஜரும் 02-10-1963 லே (காந்தியின் பிறந்த தினம் அன்று) தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 09-10-1963 லே பொறுப்பேற்கிறார். இந்த கே பிளான் மூலம் லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ் கே. பாட்டீல், ஜெகஜீவன்ராம் ஆகியோர் அரசு பதவியை அப்படி ராஜினாமா செய்தவர்கள் தான்.

Kamarajar pho 292காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே 27-05-1964 லே அன்று நேரு மரணத்தை தழுவுகிறார். நேரு பிரதமராக மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமராக ஏறக்குறைய 17 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் திடீர் மரணம் அடுத்த பிரதமராக யாரை உருவாக்குவது என்ற கேள்வி காமராஜரை யோசிக்க வைக்கிறது. விவசாயியான லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக பரிந்துரை செய்து பிரதமர் பதவியை ஏற்கிறார்। . லால் பகதூர் சாஸ்திரியும் கூட பிரதமராக இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்தார். 11-01 -1966 அன்று மரணத்தை தழுவுகிறார். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த குழப்பமான சூழலிலே தான் காமராஜரால் முன்மொழியப்பட்டு பிரதமராக இந்திரா காந்தி 24-01-1966 அன்று பதவி ஏற்றார். இப்படி பிரதமர்களை தேர்வு செய்யக்கூடிய ஆளுமையாக காமராஜர் விளங்கினார்.

சுதந்திரம் பெற்ற பின்னர் தொடர்ந்து 20 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை, பாராளுமன்ற ஜனநாயகத்தினை சோசலிச பாதையில் நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் கடைபிடிக்க காமராஜர் தான் முக்கிய காரணம் என்பதாலும், குழப்பமான சூழலிலும் கூட இரண்டு பிரதமர்களை தேர்வு செய்து ஆட்சியை நடத்திட வழிகாட்டியாக இருந்தவர் காமராஜர் தான் இதற்கு காரணம் என்ற ஆத்திரம் ஒரு பக்கம். அதோடு காமராஜர் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்பட்டதாலும், பசு வதை தடுப்பு சட்டம் கூடாது என்பதில் உறுதியாக காமராஜர் இருந்தார் என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்த ஹிந்துத்துவ சக்திகள் செயல்பட்டு வந்தார்கள்.

முதலாவது காரணம் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வருவதை நேரு எதிர்த்தார். நேரு இறந்த பிறகு அச்சட்டத்தை எதிர்த்தது காமராஜர். பசுவதைக்கு எதிராக இருந்த நேரு இறந்துவிட்டார். காமராஜரையும் காணாமல் ஆக்கிவிட்டால் பிரச்சனை இருக்காது என்று ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கை ஆர்கனைசர் இதழில் கார்டூன் படம் வரைந்து மிரட்டியது ஆர்.எஸ்.எஸ்.

இரண்டாவது காரணம் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையால் பள்ளிகள் மூடப்பட்டது. இதனை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு வந்தவுடன், அனைத்து பள்ளிகளையும் திறந்தார் காமராஜர். அதுமட்டுமல்லாது, பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளின் வருகையை அதிகப்படுத்தும் விதமாக மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். இதனால் ஏழை, பணக்காரன், சாதி மற்றும் மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கிடைத்தது. ஒரு சூத்திரன் கல்வி கற்றால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று சொல்பவரை வழிகாட்டியாக நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட உயர் சாதியினர் நடத்தும் இந்துத்துவ இயக்கங்களுக்கு அது வெறுப்பை ஏற்படுத்தியது என்பதற்காகவும் குறி வைத்தார்கள்.

மூன்றாவது காரணம், 1966 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், பசுவதை தடை கிளர்ச்சியை காமராஜர் வன்மையாக கண்டித்ததோடு, அது சார்ந்து எந்த ஒரு தீர்மானத்தையும் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றவும் சம்மதிக்கவில்லை. மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த கமிட்டி கூட்டத்தில் பேசியது வெளியில் கசிந்ததால், பசுவதை தடை கிளர்ச்சி ஆதரவாளர்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் காமராஜர் மீது கோபம் இருந்தது. அவர் பேசியதாவது

“என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..! மனுசனுக்குக் குந்த குடிசையில்ல.. கட்ட துணியில்ல.. அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..! அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..! எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!'

நான்காவது காரணம்: 3.11.1966 யில் வெளியான நவசக்தி இதழில் காமராஜரின் பேச்சு பணக்காரனும், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் தான் சோசியலிசதிற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்க்கிறார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வரவிடாமல் தடுத்துவிட்டால், தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன? என்றார் காமராஜர்.

இந்த காலகட்டத்தில் தான் இந்திரா காந்தி அரசியலுக்கு புதியவர் என்பதாலும் எந்த வித அரசியல் அனுபவம் இல்லாமல் இருந்து நேரடியாக பிரதமர் பொறுப்பை ஏற்றவர் என்பதாலும் எளிதில் குழப்பங்களை விளைவிக்க முடியும் என்று ஹிந்துத்துவா அமைப்புக்கள் கருதி பதவி ஏற்று 10 மாத காலத்திலே நவம்பர் 7, 1966 அன்று ஆர்.எஸ்.எஸ் யின் பசு பாதுகாப்பு பிரிவான சர்வதலியா கோரகூஷா மகா அபியான் சமிதி அழைப்பு விடுக்கிறது.. இந்த அழைப்பை ஏற்று RSS யின் ஜனசங்கம், விஸ்வ ஹிந்து பரிசத், கோரக்சா சமிதி, அகில பாரதிய சாதுக்கள் சங்கம் என நாடு முழுவதும் உள்ள இந்துத்துவ இயக்கங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் தலைநகர் டெல்லியில் வந்திருந்தனர். அவர்களின் நோக்கம் பாராளுமன்றத்தை தாக்குவது, காமராஜரை கொல்வது மட்டும் தான்.

பாரதிய ஜன சங் அதாவது இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பை சார்ந்த அன்றைய ஒன்றுபட்ட பஞ்சாப் மாநிலத்தில், இன்றைய ஹரியானா மாநிலத்தில் இருக்கும் கர்ணால் தொகுதியின் பாரதிய ஜன சங் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுவாமி ராமேஷ்வர் ஆனந்த் தலைமையில் ஆயிரக்கணக்கில் நிர்வாண சாமியார்கள், மடாதிபதிகள் ஊர்வலமாக பாராளுமன்றத்தை நோக்கி தாக்குவதற்காக வந்தனர். இந்த தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு கூட்டத்தை கலைக்க பாராளுமன்ற காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் போராட்டக்காரர்கள் 7 பேர் இறந்தனர்.hindutva forces with weaponsகாமராஜரை பழி தீர்க்கவே பசுவதை தடை பேரணியை நடத்தியதை போல ஏராளமானோர் காமராஜர் வீடு முன்பு ஆயுதங்களுடன் நின்று கொண்டு, காமராஜர் எங்கே? வெளியே வா என்று அவரை தாக்க துடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் காமராஜர் இருந்தார். அவரை சந்திக்க வந்த ஒரு நண்பர் அவரை ஒரு அறையில் அடைத்து வெளியே பூட்டினார். நீங்கள் வெளியே வந்தால் உங்களை கொன்று விடுவார்கள் என்று அவர் கதவை திறக்கவே இல்லை.

இந்துத்துவ செயலால் கோபமடைந்த காமராஜர், வெளியே போய் நான் அவர்களிடம் பேசுகிறேன். என்னை என்ன செய்து விடப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டிக்கு தீ வைத்தது கலவர கும்பல். காமராஜரின் வீடு சூறையாடப்பட்டது. காமராஜரின் உதவியாளர் நிரஞ்சன்லால் இந்துத்துவ கலவர கும்பலால் தாக்கப்பட்டார். வீட்டை சூழ்ந்து கொண்டு கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர். காமராஜர் எங்கே என்று சொல்லப்போறியா இல்லையா என்று அங்கிருந்த அனைவரையும் தாக்கினர்

குளிர்சாதன கருவிக்கு வைத்த தீயால், வீடே புகை மண்டலம் ஆனது. காமராஜரின் வீட்டிற்குள் புகை வந்ததை பார்த்த, அருகருகே குடியிருந்தவர்கள் அனைவரும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறை கலவரக்காரர்களை அடித்து விரட்டியது. ஆனால் காவல்துறை வருவதற்குள் காமராஜரை உள்ளேயே வைத்து எரித்து விட வேண்டும் என்று வீட்டிற்கு தீ வைத்து விட்டார்கள் இந்துத்துவ இயக்கத்தினர். காமராஜர் அருகில் இருக்கும் எம்.பி கள் குடியிருப்பு பகுதிக்கு பின் வாசல் வழியாக அவரது ஆதரவாளர்களால் கொண்டு செல்லப்பட்டார். காமராஜர் வீடு மட்டுமல்லாது, அருகில் இருந்த சமூக நலத்துறை உதவி மந்திரி ரகுராமையா வீட்டுக்கும் தீ வைத்து சென்றிருந்தார்கள் கலவரக்காரர்கள். இந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் குன்சாரிலால் நந்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காமராஜரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற இந்துத்துவ கும்பலால் காமராஜர் பயப்படவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு சவால் விட்டு சேலம் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

குறிப்பாக அவர்களுக்கு (இந்துத்துவ இயக்கத்தினர்) பயம் என்னைப் பற்றி தான். இந்த காமராஜர் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கிறான் என்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான்.ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை செய்தே தீருவேன் என்று 11/12/66 அன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பேசினார் காமராஜர்.

இதை நவசக்தி 15/12/66 அன்று வெளியிட்டது. காமராஜரை பசுவதை தடைக்கு மட்டும் கொல்ல நினைக்கவில்லை,

  • அவர் ஏழைகளை படிக்க வைத்தார்
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தந்தை பெரியார் கொண்டு வர நினைக்கும் திட்டங்களை செயல்படுத்தினார்
  • சனாதன தர்மத்தின் குலகல்வி திட்டத்தை எதிர்த்தார்

உலகறிய நடந்த ஒன்றை செய்யவே இல்லை என்று மறுப்பதிலும், நடக்காத ஒன்றை நடந்ததற்கு நானே சாட்சி என்று வாதிடுவதிலும் திறமையானவர்களான இந்துத்துவ இயக்கத்தினர், தற்போது காமராஜரை தங்கள் அரசியல் வாழ்விற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

காமராஜரை கொல்ல முயற்சித்து விட்டு, அவர் சார்ந்த நாடார் சமூகத்தை விளக்கு பூஜை போன்றவற்றை நடத்தி ஏமாற்றி வருகிறார்கள் என்பதே உண்மையான வரலாறு அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது. காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை இந்துத்தவ இயக்கங்களை எதிர்த்து வந்தார் என்பதே உண்மையான வரலாறாகும்.

வரலாறை மறைக்கும் முயற்சியில் தான் இந்த கும்பல்கள் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கனார், பாரதியார், என்று இந்த தலைவர்களை தங்களவர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள்.

வேஷம் கலையவும் வீடு செல்லவும் நேரம் நெருங்கி விட்டது.

- ஆர்.எம்.பாபு

Pin It