மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத் தேர்வு என்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தத் தேர்வின் தேர்ச்சி தான் கல்லூரிக் கல்வி பயில்வதற்கான வாயிலாக அமைகிறது. அது மட்டுமல்ல, ஒரு மாணவனின் பதினோரு ஆண்டுக்கால உழைப்பின் பலனை அடைகின்ற தேர்வு என்பதும் இந்த இறுதித் தேர்வுதான். பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேர்ச்சி என்பதும் இந்தத் தேர்வுகளின் 60% சதவீத மதிப்பெண் தேர்ச்சியில் தான் அமைகிறது.

இப்படிப் பார்த்தால் தான் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வி பயணத்தில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடியும்.

மொழி பாடம் தானே, அலட்சியம் வேண்டாம்:

மேல்நிலை இரண்டாம் ஆண்டுத் தேர்விற்கு ஒரு மாணவன் மேல்நிலை முதலாம் ஆண்டின் இறுதியிலிருந்தே தயாராகத் தொடங்கியிருப்பார். குறைந்தது பதினைந்து மாத கால உழைப்பின் இறுதியில் தேர்வறைக்கு வருகிறார்.tamilnadu students 730அந்த மாணவர் ஐந்து பாடங்கள் படிக்கிறார். எனில், ஒவ்வொரு பாடத்திற்கும் நூறு மதிப்பெண்ணிற்குத் தேர்வு எழுதுவார். அவர் எழுதும் இந்தத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு முப்பத்து ஐந்து மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும். ஒரு மாணவர் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்திருக்கிறார். ஆனால் மொழிப்பாடத்தில் நூற்றுக்கு முப்பத்து நான்கு மதிப்பெண் பெற்று விட்டார். எனில், அவர் அந்தாண்டுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவார்.

உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். எல்லாப் பாடத்திலும் நூறு மதிப்பெண் எடுத்த மாணவர் தமிழில் முப்பத்துநான்கு மதிப்பெண் தான் எடுப்பாரா? என்று. இப்படி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். நூறு மதிப்பெண் எடுக்கின்ற மாணவர்களின் கவனம் முழுவதும் முதன்மைப் பாடங்களாகக் கருதப்படுகிற கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தின் மீதே குவிந்திருக்கிறது.

இவ்வாறான பாரபட்ச மனநிலை என்பது மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டு வெகுகாலம் ஆகி விட்டன. தமிழ்தானே படித்து விடலாம், கணிதம் படி, அறிவியல் படி என்று அறிவுறுத்துகின்ற பெற்றோரும் ஆசிரியருமே அதிகம். இந்தப் போக்குதான் மாணவர்களின் உள்ளத்தில் மொழிப்பாடத்தின் மீதான கவனத்தையும், முக்கியத்துவத்தையும் திசை திருப்பி வருகிறது.

ஐம்பதாயிரம் பேர் பங்கேற்கவில்லை :

இந்த மாதம் பதிமூன்றாம் தேதி நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மொழி பாடத்தை எழுதுவதற்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விண்ணப்பித்திருந்த மாணவ மாணவியரின் எண்ணிக்கை 8.75 லட்சம் பேர். இந்த 8.75 லட்சம் பேரில் தேர்வு எழுதுவதற்கு வராமல் போனவர்களின் எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்து எழுநூற்று நான்கு பேர். இந்த 50,704 பேரில் 49,559 மாணவ, மாணவிகளும் 1,115 தனித்தேர்வர்களும் அடங்குவர். தேர்வுக்கு வராதோரின் சதவீதம் என்பது 6% சதவீதம்.எனில், எழுதியிருப்போரின் தேர்ச்சி நிலை என்னவாக இருக்கும்?

நிலைக்குழுவின் பணி என்ன?

தேர்வு எழுத வருகின்ற மாணவர்கள் எந்த முறைக்கேடுகளிலும் ஈடுபடாமல் நேர்த்தியாகத் தேர்வை எழுதவும், அறிவுறுத்துவதோடு அல்லாமல் முறைகேடுகளில் ஈடுபடுகின்ற மாணவர்களைக் கண்காணிக்கவும் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் 4,235 நிலைக்குழுக்களையும் பறக்கும் படைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைத்துக் கண்காணித்திருக்கிறது. வியப்பு, “அறுக்க முடியாதவன் கழுத்தில் ஐம்பத்தியிரண்டு கருக்கு அரிவாள்” என்கின்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

நிலைக்குழுவின் பணி என்பது என்ன? 

தேர்வுக்கு வந்து தவறு இழைப்போரின் நிலையை மட்டுமே கண்காணிப்பதுதானா? இப்படித் தேர்வுக்கு வராமல், தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசவுகரியங்களைக் களைந்து மீண்டும் தேர்வறைக்குக் கொண்டு வந்து தேர்வு எழுத வைப்பது என்பது யாரின் பொறுப்பு? இதற்குப் பொறுப்பேற்க எந்தக் குழு முன்வரும் என்பது தான் விடையற்ற கேள்வியாக இருக்கிறது.

சேர்க்கையில் மட்டும் கவனம் போதுமா?

காரோனாவிற்குப் பின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அத்தனை மகிழ்வளித்தது. அதற்கு எதிர்மாறான ஒரு மனநிலையை இந்தச் செய்தி உருவாக்குகிறது.

இந்த வருகையின்மை, தேர்வு அன்று மட்டுமே நடந்திருக்க வாய்ப்பென்பது இல்லை. ஆண்டு முழுமைக்கான மாணவர் வருகையிலேயே இப்படியான மாணவரின் வருகையின்மையைக் கவனித்திருக்க முடியும். அப்போதே, அந்த மாணவர்களின் வருகையின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்திருக்க முடியும். விதைப்பதில் கவனம் செலுத்திய அரசு, அதன் பின் பராமரிப்பு என்பதில் கவனம் செலுத்தாமல், அறுவடைக்குத் தயாரானத்தின் பலன் தான் ஐம்பதாயிரத்து எழுநூற்று நான்கு (50,704) மாணவர்களின் வருகையின்மை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி என்ன செய்யலாம்?

மொழிப்பாடம் தானே என்கிற அலட்சியம் தாண்டி மொழிப்பாடத்தின் மீதும் முதன்மைப் பாடத்திற்குத் தரப்படுகின்ற கவனத்தையும் மதிப்பையும் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து மாணவர்களின் வருகை என்பது கவனிக்கப்பட வேண்டும். தொடர் விடுப்பில் இருக்கும் மாணவர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் வருகையின்மைக்கான காரணம் கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட வேண்டும்.

தேர்வு காலத்தில் நிலைக்குழு, பறக்கும் படை அமைப்பது போலவே ஆண்டு முழுவதும் மாணவர் ஒழுங்கு, வருகை பதிவு, காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதும் முறை, மாணவர்கள் பெரும் மதிப்பெண் என எல்லாவற்றையும் இந்தக் குழுக்கள் கண்காணிக்க வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என்றில்லாமல் இணைந்து செயலாற்றுவது ஒன்றே இது போன்ற மாணவர் வருகையின்மை, மாணவர் ஒழுங்கின்மை போன்றவற்றை எதிர்க்காலத்தில் சரி செய்ய முடியும்.

மகா.இராஜராஜசோழன்

Pin It