கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பல ஆண்டுகளுக்கு முன்பு (1947), இந்தியா விதியுடன் ஒரு ஒப்பந்தம் (a tryst with destiny) செய்தது. அந்த ஒப்பந்தத்தின் இறுதி நோக்கம் இந்திய குடிமக்களுக்கு அரசியல், சமூகப், பொருளாதார நீதியை வழங்குவதாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோடிகளால் அரசியல் நீதி இந்திய ஜனநாயகக் கட்டமைப்பின் மரபுரிமையாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 20, 22 உள்ளிட்ட பல பாதுகாப்புகள் மூலம் அரசியல் நீதி உறுதி செய்யப்பட்டது. அங்கு தொடங்கிய இந்தியாவின் துடிப்பான அரசியலின் விளைவாக, 1947 முதல் ஏராளமான சமூகங்களுக்கும் பரந்துபட்ட நிலப்பரப்பைச் சார்ந்த மக்களுக்கும் பயன்படும் வகையில் சமூக நீதித் தளம் விரிவடைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமய, தனியார்மய, உலகமய பொருளாதார கொள்கைகளின் ஊடாக இந்தியப் பொருளாதாரத்தில் சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்ததிலிருந்து, பொருளாதார நீதிக்கான விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய 10% EWS இட ஒதுக்கீட்டு வழக்கின் 3:2 பெரும்பான்மைத் தீர்ப்பு, தற்போதைக்கு இந்தக் கோரிக்கைகளை நிறுத்தி வைக்கிறது எனலாம்.Supreme Court 424அறிமுகம்

1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்தக் காலகட்டத்தின் நடைபெற்ற மூன்று நிகழ்வுகள் இன்றும் நம் வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கின்றன.

மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட OBC இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கான தளத்தை விரிவுபடுத்தி, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அரசியல் கதவைத் திறந்தது.

மண்டல் கமிஷன் அறிக்கையின் பிண்ணனியில் ஏற்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஒருங்கிணைப்பை எதிர்கொள்வதற்காக உயர்சாதி இந்துக்களால் வடிவமைக்கப்பட்ட கமண்டல் அரசியலின் விளைவாக் 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 'இந்துக்களை மத ரீதியாக ஒன்றிணைப்பதற்கான' களத்தை அமைத்தது.

1991 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல் கொள்கை எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து இந்தியர்களின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதலாளித்துவ தாராளமய, தனியார்மய கொள்கையை நோக்கிய இந்தியாவின் பயணம் பல உள்நாட்டு கோடீஸ்வரர்களை உருவாக்கியது. வறுமையை ஒழிப்போம் என்று கோஷம் மாறி, மூலதனக் குவியல், அதிகரித்து வரும் சமத்துவமின்மை ஆகிய புதிய சொல்லாடல்கள் தோன்றின. சமத்துவமின்மையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து விட்டது என்றார் தாமஸ் பிகெட்டி. ஏழை- பணக்காரர் இடைவெளி மிக அதிகமானது. சொத்து மதிப்பில் மேலே இருக்கும் 1 சதவீத பணக்காரர்கள் இந்தியாவின் சொத்துக்களில் 42.5 சதவீதத்தை வைத்திருக்கும் அதே வேளையில் கீழே உள்ள 50 சதவீதத்தினர் வெறும் 2.8 சதவீத சொத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள்.  

இந்தச் சூழலில்தான், 2019-ல் நரேந்திர மோடி அரசால் இயற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட, 10% EWS இட ஒதுக்கீடு வழங்கும், 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து பொருளாதார நீதியைப் பாதுகாக்குமெனச் சொல்லப்படுகிறது.

சமூகப் பின்னடைவா அல்லது பொருளாதார நிலையா?

1992 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பு "பொருளாதார அளவுகோலை மட்டுமே கொண்டு, பிற்படுத்தப்பட்ட நிலையை தீர்மானிக்க முடியாது" என்றது. அதன்பிறகு ஏராளமான நிகழ்வுகள் கடந்தோடின.

முதலாவதாக, 1990 ஆண்டுகளில் இருந்து சமூகப் பின்தங்கிய நிலைக்கும் பொருளாதாரப் பின்தங்கிய நிலைக்குமான இடையேயான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் வரலாற்று ரீதியாக சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் மேல்நோக்கிய பொருளாதார வளர்ச்சிக்கான கதவை திறந்துவிட்டிருக்கிறது.

இரண்டாவதாக, 1991 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் படிப்படியாக இந்தியர்களின் வாழ்க்கையில் பணத்தின் பங்கை அதிகப்படுத்த வழிவகுத்தது. பணம் முதன்மையானது. பணமிருக்கும் பட்சத்தில், சிறந்த கல்வியையும், தரமான சுகாதார வசதிகளையும் பெறுவது எளிதானது. அது முதல் இந்தியர்களின் வாழ்வில் பணம் முக்கியப் பங்காற்றத் தொடங்கியது.

இப்போது பணபலம் மற்ற எல்லா வகையான அதிகாரங்களையும் மறைத்து விடுவது போல் தோன்றுகிறது. சில சமயங்களில் அரசு அதிகாரத்தை கூட பணபலம் அடியோடு வீழ்த்துகிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு எவ்வளவு சமூகரீதியான வளர்ச்சியை வழங்கியதோ, அந்த அளவிற்கான வளர்ச்சியை உண்மையில் 1991 ஆம் ஆண்டுக்கு பிந்தைய பொருளாதார தாராளமயமாக்கலும் வழங்கியது என்றால் அது மிகையாகாது.

ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அறிக்கையின்படி, 2017ல் இந்தியாவில் உருவான சொத்தில் (wealth) 73 சதவீதம் 1 சதவீத பணக்கார வர்க்கத்தினரிடம் சென்றது. மாறாக அடிமட்ட 50 சதவீத மக்கள்தொகையின் ஒரு சதவீத சொத்தை மட்டுமே அதிகரித்துள்ளது. வறுமையின் கோரப்பிடியிலிருந்து ஏழைகள் வெளிவருவதைக் கடினமாக்கும் சில கட்டமைப்பு ரீதியான தடைகள் இருப்பதை இந்த ஏற்றத் தாழ்வு குறிக்கிறது.

தாராளமயமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் பொருளாதாரச் சமத்துவமின்மை, இந்தியாவின் சாதிய ஏற்றத்தாழ்வுகளின் இறுக்கமான தன்மையைப் போலவே, ஏழையாகப் பிறந்த குழந்தை வறுமையிலிருந்து வெளிவருவதை மிகவும் கடினமாக்கியுள்ளது.

இந்த கொடிய வறுமைதான், பொருளாதார நிலை மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கான ஒரு அளவுகோலாக இருக்க இயலாது என்ற நிலைப்பாட்டை எடுத்த இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தை, பொருளாதாரப் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற யோசனையை ஏற்கும்படி செய்தது.

EWS இட ஒதுக்கீட்டின் நோக்கம்: பொருளாதாரமா அல்லது சமூகப்பொருளாதாரமா?

ஏழ்மையில் இருந்து மக்களை உயர்த்துவதற்கான ஒரு கருவியாக EWS இட ஒதுக்கீடு பற்றிய இந்த யோசனை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. EWS இட ஒதுக்கீடு இயல்பாகவே SC, ST, OBC மக்களை ஒதுக்கித் தள்ளும் தன்மையுடையது.

EWS இட ஒதுக்கீட்டிற்காக புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15(6) & 16(6) SC, ST, OBC வகுப்பினரை ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் என்று சொல்லி EWS இட ஒதுக்கீட்டுப் பலன்களை மறுக்கிறது. அடிப்படையில், EWS இட ஒதுக்கீடு உயர்சாதியினருக்கு மட்டுமே பொருந்தும்.

பொருளாதார இட ஒதுக்கீடுகள் பொருளாதார சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட உயர் சாதியினரின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், சாதி ரீதியான இட ஒதுக்கீடுகள் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான வரலாற்று அநீதிகளை மட்டுமே சரி செய்வதாகவும் காட்சி அளிக்கின்றன.

நீதிபதி பட், EWS இட ஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்த தீர்ப்பில், பல நூற்றாண்டுகளாக சமூக அநீதிகளை எதிர்கொள்ளும், சாதி ரீதியாக இட ஒதுக்கீடு பெறும் SC, ST, OBC வகுப்பைச் சேர்ந்த ஏழைகளை EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்பதன் மூலம் 103 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் உருவாக்குகிற தடைசெய்யப்பட வேண்டிய பாகுபாட்டைச் சுட்டிக் காட்டினார்.

பொருளாதார இட ஒதுக்கீடு வறுமையின் காரணமாக உருவான பாகுபாட்டை போக்க முயல்கிறது என்றால், சாதி ரீதியான இட ஒதுக்கீடு பாகுபாட்டின் விளைவாக உருவாகும் வறுமையை போக்க முயல்கிறது எனலாம்.

இவ்விரு பிரச்சனைகளையும் ஒருசேரச் சந்திக்கும் சமூகங்கள் இரட்டிப்பு இழப்பைச் எதிர்கொள்கின்றன. எனவே 3:2 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பால் உயர்த்தப்பட்ட சிவப்புக் கொடிக்கு (தடைக்கு) மாறாக 'இரட்டை நன்மைகள் (இரட்டை இட ஒதுக்கீடு)' இச்சமூகங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ரோகினி கமிஷன் வெளிக்கொணர்ந்த செய்தி என்னவென்றால் சாதி அடிப்படையிலான OBC இட ஒதுக்கீட்டின் பலன்களை யாதவர்கள், ஒக்கலிகாக்கள் போன்ற சில சாதிகளும், SC இட ஒதுக்கீட்டை ஜாதவ்கள் போன்ற சில சாதிகளும் ST இட ஒதுக்கீட்டை மீனா போன்ற சில சாதிகளும் கைப்பற்றுகின்றன. இந்த முடிவுகள் SC, ST, OBC பிரிவுகளில் உள்ள சாதிகள் ஒரே மாதிரியானவை அல்ல என்பதைக் காட்டுகின்றன.

2015 ஆம் ஆண்டு EPW வார இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய காலத்தில் SC, ST ஆகிய இரு பிரிவினரின் கினி விகிதம் (Gini Coefficient) சற்று உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அதேவேளையில் சாதி ரீதியான பாகுபாட்டையும், ஏழ்மையையும் எதிர்கொள்ள நேரிடும் SC, ST, OBC வகுப்பைச் சார்ந்த ஏழைகள் இரட்டிப்பாக இழப்பைச் சந்திப்பதால், அத்தகைய சமூகங்கள் அரசின் உதவிக்கு மிகவும் தகுதியுடைவர்களாக இருக்கின்றனர்.

மேலும், சாதிய படிநிலை ஏற்றதாழ்வுகள் இறுக்கமானவை. அதோடு ஒப்பிடுகையில் ஏழ்மை நிலை நெகிழ்வுடையதாக உள்ளது. எளிதில் அடிக்கடி மாறுபடுகிறதாக இருப்பதால், தவறான பயனாளிகளுக்கு பயன்கள் சென்றடையக் கூடும். மேலும் சரியான இலக்குகளை அடைவதில் சிக்கல் இருப்பதால் நோக்கம் பயனற்றதாகிவிடும்.

EWS, கிரீமி லேயர் அல்லாத OBC ஆகிய இரு வகுப்பினருக்கும் 8 இலட்ச ஆண்டு வருமானம் என்ற ஒரே பொருளாதார அளவுகோல் பயன்படுத்தப் பட்டிருப்பதால், இரு குழுக்களும் இணையான சமூக நிலையில் இருப்பது போன்ற தவறான எண்ணத்தை அளிக்கிறது.

அரசியலில் EWS இட ஒதுக்கீட்டின் தாக்கம் 

இட ஒதுக்கீடுகளை சுயலாபத்திற்காக தவறாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று கூறிய3:2 பெரும்பான்மைத் தீர்ப்பு, 50 விழுக்காட்டு உச்சவரம்பை உடைத்ததன் மூலம், இந்தியாவில் இட ஒதுக்கீட்டை மையமாகக் கொண்ட அரசியலை மீண்டும் ஒருமுறை உயிர்ப்பித்துள்ளது என்பது நகைப்புக்குரியது.

ஒன்றிய பாஜக அரசின் EWS இட ஒதுக்கீட்டிற்குப் பின்னர் ஜார்க்கண்ட் மாநில அரசு 77 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான (SC-12%, ST-28, OBC-27, EWS-10%) மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதியினரை EWS வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக நீதிக் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாக்குறுதிகளாக மாறக்கூடும். முந்தைய ஒருங்கிணைந்த சாதிக் குழுக்களை பொருளாதார அடிப்படையில் பிளப்பதின் மூலம் புதிய வாக்கு வங்கிகளை உருவாக்கலாம்.

பா.ஜ.க.வின் (‘labharthi) பயனாளி அரசியல், பாஸ்மந்தா முஸ்லீம்களை கவரும் அதன் முயற்சி, ரோகினி கமிஷனை அமைத்து OBC சாதியினரை பிரித்து பிளவுபடுத்தும் முயற்சிகள் போன்றவை எதிர்காலத்தில் என்னவெல்லாம் வரவிருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன . SP, RJD, BSP, JD(S) போன்ற கட்சிகளின் பாரம்பரிய ஓட்டு வங்கியாக திகழ்ந்து வரும் சாதிகளில் வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மையின் விளைவாக சாதி அடிப்படையிலான அவர்களது வாக்கு வங்கியை சிதறாமல் வைத்திருப்பது சவாலாக இருக்கலாம். இந்திய அரசியலின் எதிர்காலம் ‘பொருளாதார நீதி’ என்ற களத்தில் நகர்வது போல் தெரிகிறது. 

நன்றி: ifp.co.in இணையதளம் (2022, நவம்பர் 15 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சேகர் கோவிந்தசாமி