இந்திய நீதித் துறை தனது நெறிபிறழ்வான (Perversion) செயல்களால் இந்திய அரசியலமைப்பின் சமூக நீதி கட்டமைப்பை குலைத்ததை கண்டறிவது மிக அவசியம். இந்தியச் சமூகமானது சாதி கட்டமைப்பின் அடிப்படையில் இயங்கும் சமூகம். பார்ப்பனர்களை உச்சாணி கொம்பிலும், மற்றவர்களை பார்ப்பனர்களின் காலுக்கு கீலும் வைத்திருக்கும், ஒரு படிநிலை சமூக அமைப்பு, அல்லது சாதிய அமைப்பு. இந்நாள் வரையிலும் தொன்றுத் தொட்டு பாரம்பரியமாக பேணப்பட்டு வருகிறது. பல நூறாண்டுகள் கடந்தும் இது ஒரு இயற்கையின் அங்கம் போலவே நிலைபெற்று நம் நாட்டில் இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகாலம் கடந்தும் சாதிய அமைப்பு உடைக்கப்படாமல் இருப்பது, சாதிய அமைப்பின் நிலைத்தன்மைக்கு ஒரு காரணம் போல் ஆகிவிட்டது. எனவே, இன்றைய சாதிகள் ஒவ்வொன்றையும் நால்வர்ண வேத முறைக்குள் வலுக்கட்டாயமாக பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இப்போது உள்ளது.

காரண காரியத்தோடு வரிசைப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள் கணிக்கப்படக் கூடியவை, எனவே ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியவை. அவை பெரும்பாலும் கடந்த கால நிகழ்வுகளைச் சார்ந்து தீர்மானிக்கப்படுகின்றன. கடந்தகாலப் பிறப்பின் கர்ம வினை பயன்தான், இந்த பிறப்பின் படிநிலையைத் தீர்மானிக்கும் என நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே சாதிய அமைப்பின் ஒழுங்கை வரையறுத்து நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியில் இன்றைய பிறப்பு, முந்தைய பிறப்பின் கர்ம வினையின் விளைவு என தெள்ளந்தெளிவாக வரையறுக்கிறது. இந்த தர்க்கம் இங்கு பல நூற்றாண்டுகளாக பரிணமித்தும், ஏற்றுக்கொள்ளப்பட்டும் வந்துள்ளது. கர்ம வினை விளைவுகளின் மிகவும் நுணுக்கமான விளக்கம் யாதெனில், சில சாதிகள் உயர்ந்தவர்கள், பல சாதிகள் தாழ்ந்தவர்கள் என நம்ப வைக்கும் கோட்பாட்டில் உள்ளது. உயர்சாதிகளுக்கு அதிக தகுதி உள்ளது, அதற்கான காரணம் அவர்களின் கடின உழைப்பும் அவர்களின் உள்ளார்ந்த திறமையின் வெளிப்பாடும் எனவும் நம்பப்படுகிறது. கீழ் சாதிகளால் அவர்களைப் போல் ஆக முடியாது என்ற தர்க்கம் தொடர்ந்து பரிணமித்து வளர்ந்துள்ளது. பிறப்பின் மூலம் வரும் தகுதி என வளர்ந்துள்ள பரிணாமத்தை விரிவாக விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் சாதிய உறவுகளில் ஏற்படுகிற மாற்றத்தின் விளைவுகளையும் விவாதிக்க வேண்டும்.

அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு: நீதித்துறையின் விளையாட்டு

சமத்துவத்தின் அடிப்படை உரிமை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதன்மையான ஒரு பிரகடனம், அனைத்து வகையான தன்னிச்சைத் தனங்களையும், நீதித் துறையில் இருந்து அகற்றுவதே. இது நீதித்துறைக்கு, அதன் மிக அடிப்படையான ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறது - தன்னிச்சைத் தனமான ஒவ்வொன்றையும், எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமின்றி களையெடுக்கப்படுவதை உறுதி செய்யக் கூறுகிறது. அதே சட்டப்பிரிவு 14 இன் இன்னொரு அடிப்படை அம்சம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவார்த்தம் ஆகும். அதுவே 'சட்டத்தின் படி ஆட்சி' என்ற கொள்கையின் ஓர் அங்கமாகும். ஏ.வி டைசி (AV Dicey) அவர்களின் 'சட்டத்தின் படி ஆட்சி' பற்றிய கருத்து மூன்று அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவை முறையே தன்னிச்சை அதிகாரம் இல்லாதது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவம், தனிநபர் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியன. இருப்பினும், இவைகளுள் கடைசியாக கூறப்பட்டிருக்கும் 'தனிநபர் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது' என்ற பிரகடனம் இந்தியச் சூழலுக்குப் பொருந்தாது. இந்திய அரசியலமைப்பின் சட்ட வரம்பிலிருந்து 'தனிநபர் உரிமைகளுக்கு முக்கியத்துவம்' விடுபட்டுள்ளதைப் புரிந்துகொள்வது அவசியம். பிரிட்டன் மற்றும் உலகின் பிற தாராளவாத மக்களாட்சி இருக்கும் நாடுகளைப் போலில்லாமல், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் இந்தியாவில் தனிநபருக்கு எந்த உரிமையும் இருந்ததில்லை. சமூக ஒப்பந்தம் இல்லாத, மேலும் கீழுமாக வரிசைப்படுத்தப்பட்ட சாதிய சமூகத்தில் தனிமனித உரிமைகள் பற்றிய கருத்து இந்தியாவிற்கு மிக அந்நியமாக இருந்தது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனிநபர் உரிமைகளின் விளைவல்ல. மாறாக தனி நபர் உரிமைகளின் ஆதாரமாக விளங்குகிறது. இந்தச் சூழ்நிலையில், பிரிட்டன் மற்றும் இன்னும் பிற நாடுகளில் உள்ளதை விட, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் மிகவும் புரட்சிகரமான பங்கைக் கொண்டுள்ளது.Supreme Court 424இந்திய அரசியலமைப்பில் விளக்கப்பட்டுள்ள அதிகாரப் பிரிவினைக் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இறுதிப் பாதுகாவலராக செயல்படவும், அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பாதுகாவலராக செயல்படவும், சட்டத்தின் பாதுகாவலராகவும், கண்காணிப்பாளராகவும் செயல்படவும் நீதித்துறையை கட்டாயப்படுத்துகிறது. இந்தியாவின் ஊடகங்களாலும் அறிவுசார் நிறுவனங்களாலும் கட்டமைக்கப்பட்ட கற்பனைகளின் படி, நீதித்துறையே மக்களாட்சியின் மூன்று முக்கியத் தூண்களில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய அமைப்பின் முதல் தூணான சட்டமன்றங்களும் பாராளுமன்றமும், கவர்ச்சிகர, வாக்கு வங்கியை மையப்படுத்திய, திறமையற்ற வாய்வீச்சாளர்களால் உருவாக்கப்பட்டதாகப் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. திறமையின்மை, ஊழல் காரணமாக, இந்திய அரசியலமைப்பின் மற்றொரு தூணான நிர்வாகத்துறையின் இமேஜ் மிகவும் களங்கமாக உள்ளது. நீதி கிடைப்பதில் கிடைக்கும் தாமதம், சிக்கலையும் மீறி, நீதித்துறையால் மட்டுமே ஓரளவு அதன் கெளரவத்தைப் பாதுகாக்க முடிகிறது. எனவே, இந்திய ஜனநாயக அமைப்பில் சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான போராட்டம் பெரும்பாலும் நீதித்துறை வரம்புக்கு உட்பட்ட எல்லைகளுக்குள்ளேயே நடத்தப்படுகிறது.

சமூக நீதியில் நீதித்துறை, பாராளுமன்றத் தலையீடுகள்:

இந்தியாவின் சட்ட வரையறைக்குள் சமூக நீதியின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்ய, கடந்த எழுபது ஆண்டுகளில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான செயல்பாடுகளில் நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தின் தலையீடுகளை விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும். 

இந்தியா குடியரசாக மாறியவுடனேயே முதன்முறையாக இட ஒதுக்கீடு நீதித்துறையின் விசாரணை எல்லைக்குள் சென்று, விவாதங்களையும் மோதல்களையும் உருவாக்கியது. இதில் பார்ப்பனர்கள் தம் எதிர்ப்பை பதிவு செய்வதில் சற்று பின் தங்கினர். 1951 ஆம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் அரசாங்கத்திற்கு எதிராக சம்பகம் துரைராஜன் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(2) க்கு எதிரானது என தீர்ப்பளித்தது. நீதிக்கட்சி அறிமுகப் படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அன்று நடைமுறையில் இருந்தது. இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த பார்ப்பனர். அவர் இரவீந்திரநாத் தாகூரின் மாணவரும் ஆவார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தந்தை பெரியார், டாக்டர். அம்பேத்கரின் முயற்சியினால், 1951 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் நிறைவேற்றப் பட்டது. இச் சட்டத்திருத்தம் சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசுகளுக்கு அதிகாரம் அளித்தது இச்சட்டத்தை, நீதித்துறையின் மறு ஆய்வில் இருந்து பாதுகாக்க ஒன்பதாவது அட்டவணையிலும் (Ninenth schedule of Constitution) சேர்க்கப்பட்டது.

அதன் பின்னர் பத்தாண்டுகளுக்குப் பிறகு, எம். ஆர். பாலாஜி மைசூர் அரசாங்கத்தை எதிர்த்து தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. கஜேந்திரகட்கர், ஒரு புதிய வாதத்தை முன்வைத்தார். இட ஒதுக்கீட்டுக்கு சாதி ஒரு பொருத்தமான காரணியாக இருக்கலாம் என ஒத்துக்கொண்ட அவர், ஒருவரின் பின்தங்கிய தன்மையை வரையறுக்க சாதி மட்டுமே ஓர் அளவுகோலாக இருக்க முடியாது என்றும் கூறினார். சாதியுடன், ஏழ்மை, தொழில், இருப்பிடம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். மேலும், பின்தங்கிய நிலையை கண்டறிய சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், இந்திய சமூகத்தில் சாதி அமைப்பு மேலும் நிலைத்திருக்கும் எனவும் கூறினார். பின்தங்கிய நிலையானது, சாதியைக் குறிப்பிடாமல் வரையறுக்கப்படவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இவர் சமஸ்கிருத பண்டிதர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பார்ப்பனர். இவரே ஓய்வு பெற்ற பிறகு வேதாந்த மற்றும் மீமான்ச தத்துவங்களில் தனது குடும்பத்தின் பாரம்பரியத்தை மேலும் சிரத்தையோடு முன்னெடுத்துச் சென்றவர்.

காக்கா காலேல்கரின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எம்.ஆர் பாலாஜி வழக்குத் தீர்ப்புக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டிருந்தாலும், அது பற்றி தீர்ப்பில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆணையம் பின்தங்கிய நிலையை கீழ்வருமாறு பரிந்துரைத்தது.

அ) ஜாதியப் படிநிலை

ஆ) கல்வி நிலை

இ) அரசு வேலைகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் உள்ள பிரதிநிதித்துவம்

பொருளாதாரப் பின்தங்கிய நிலை குறித்து ஆணையம் விரிவாக ஆராய்ந்தது. அதன்படி, சமூகப் பின்தங்கிய நிலைக்குக் பொருளாதாரம் காரணம் அல்ல. மாறாக சமூகப் பின் தங்கிய நிலைமையின் வெளிப்பாடே பொருளாதாரப் பின்தங்கிய நிலை என்று தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு யு.பி.வி பிரதீப் டாண்டன் வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.மிஸ்ரா பின்தங்கிய நிலையை கண்டறிய ஒரு புதிய வரையறையைக் கையிலெடுத்தார். இவர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த ஜமீன்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் மிஸ்ராவின் தந்தை. அதாவது, மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள், அவர்கள் வாழிடத்தின் காரணமாக தகவல் தொடர்பு சாதனங்கள், தொழில்நுட்பம், கல்வி வசதிகள் இல்லாததால், ஏழைகளாகவும், படிப்பறிவற்றும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. 1976ஆம் ஆண்டு கேரள மாநில அரசுக்கு எதிராக ஜெயஸ்ரீ தொடுத்த வழக்கில் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் அதிகாரப்பூர்வமாக முதன்முதலாக நுழைந்தது. இதை கொண்டு வந்தவர், எமர்ஜென்சியை செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி ஏ.என்.ரே. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்கள் மட்டுமே சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர் என்றும், ஒரு குறிப்பிட்ட அளவு வரை, பொருளாதாரப் பின்தங்கிய நிலை கல்வி ரீதியான பின்னடைவிற்கு வழிவகுக்கிறது என்றும் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது மண்டல் கமிஷன் அறிக்கை. இது சமர்ப்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட உடன் முதலில் அரசு வேலை வாய்ப்புகளில் மட்டும் 49.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் பட்டியலின, பழங்குடியினருக்கு 22.5% சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. உயர்கல்வித்துறையில் மண்டல் ஆணையப் பரிந்துரையை நடைமுறைப்படுத்த இந்திய அரசுக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் தேவைப்பட்டது. இருப்பினும், பரிந்துரையை நிறைவேற்றுவதற்கு முன்பு, 1993ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் அதை மறு ஆய்வு செய்தது. இந்தத் தீர்ப்பின் முக்கியமான அம்சம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில் கிரீமி லேயர் (Creamy layer) என்னும் வருமான உச்சவரம்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டது; பதவி உயர்வுகளில் OBC வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அனுமதிக்கப்படவில்லை. அசாதாரண விதிவிலக்கான சூழ்நிலைகளை தவிர 50% இட ஒதுக்கீட்டு வரம்பை மீற முடியாது என்றும், நிரப்பப்படாத பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதிலும் கூட 50% வரம்பு விதியை மீறக் கூடாது எனவும் கூறப்பட்டது.

மேலும் ஆட்சேர்ப்பு கண்டிப்பாக தகுதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் எனவும், சில பதவிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படத் தேவையில்லை என விதிவிலக்கும் வழங்கப்பட்டது.

இவ்வகையான நீதித்துறை தீர்ப்புகளின் பிண்ணனியில், பல்வேறு அரசியலமைப்பு திருத்தச் சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றியது. 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 76 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 69% இட ஒதுக்கீடு சட்டத்தை உள்ளடக்கியது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நீதித்துறை மறு ஆய்வில் இருந்து பாதுகாக்க ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அடுத்ததாக, 1995 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 77வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் பட்டியலின, பழங்குடியினருக்கு அரசு வேலைகளில் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தந்தது. இந்தச் சட்டத் திருத்தம் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தொடர்பான இந்திரா சஹானி தீர்ப்பை ரத்து செய்தது.

அடுத்ததாக, 2000 ஆம் ஆண்டில், 81 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களை நிரப்பும்போது ஏற்கனவே இருந்த 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு உடைக்கப்பட்டது.

மேலும், 2001 ஆம் ஆண்டில், நிறைவேற்றப்பட்ட 85 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பட்டியலின, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளில் 'தொடர்ச்சியான மூப்பு' (Consequential seniority) வழங்கியது. ஜூன் 1995 முதல் கணக்கிடப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட்டது.

சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த கொள்கையில் நீதித்துறையை எதிர்த்து பாராளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியது. 2004 ஆம் ஆண்டு இனாம்தார் (Inamdar) வழக்கில், மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் அரசு தன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை ரத்து செய்யும் விதமாக, 93 ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டம் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத் திருத்தம், பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கும் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கும், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்த, தனியார் கல்வி நிறுவனங்களில் (அரசின் உதவி அல்லது உதவி பெறாதது எதுவாயினும்), இட ஒதுக்கீடு வழங்க அரசுகளுக்கு ஓரளவு அதிகாரம் அளித்தது.

1973 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்புநீதித்துறையின் மிகப்பெரிய பாய்ச்சல் என்று அறியப்படுகிறது. இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்திற்கு நீதித்துறையால் அசைக்கமுடியா கடிவாளம் இத்தீர்ப்பு மூலம் போடப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடிய வாய்ப்புள்ள பாராளுமன்றத்தின் பிடியில் இருந்து இந்திய மக்களாட்சியின் மாண்பைக் காப்பாற்றிய வழக்கு இது. பாராளுமன்றத்தின் வரைமுறையற்ற சட்டமியற்றும் அதிகாரத்தை கேள்வி கேட்டது இத்தீர்ப்பு. அதே வேளையில், இத்தீர்ப்பின் மூலம் உருவான அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டின் (Basic structure doctrine) தெளிவின்மை பல ஆண்டுகளாக பட்டை தீட்டப்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு 2015 ஆம் ஆண்டு இயற்றிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் நீதித்துறையின் தன்னிச்சையான சுதந்திரத்தில் தலையிடுகிறது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இதன் மூலம் நீதித்துறையும் அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதை மேலோட்டமாக நீதித்துறையின் செயல்பாட்டுக்கும் ஆர்வக் கோளாறுக்கும் இடைப்பட்ட விஷயமாக புரிந்து கொள்ள முடியாது. மாறாக, நீதித்துறையின் எதிர்காலம் குறித்த கவலை, முன்கணிப்பு, முன்னெச்சரிக்கை என்றே புரிந்து கொள்ள வேண்டும். 

ஏழைப் பார்ப்பனர்கள் என்னும் கட்டுக்கதையும், 10% EWS உயர்சாதி இட ஒதுக்கீடும்

10% EWS இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் (பகுஜன் கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களின் ஆதரவுடன்) நிறைவேற்ற காட்டிய வேகத்தை விட, மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திடீரென்று இந்தச் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப் படுத்திய வேகம்.

பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, ஊடகங்கள், பதிப்பகங்கள், சிவில் சமூக குழுக்கள், என்.ஜி.ஓ க்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், அதன் உச்சமாக இந்திய நீதித்துறை மூலமாகவும் 'ஏழைப் பார்ப்பனர்கள்' என்ற வியாக்கியானம் மிகத் தந்திரமாக முன் வைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு, திட்டமிட்டு மிக கவனமாக கட்டமைக்கப்பட்ட அறியாமை இது. இது பண்டைய காலம்தொட்டே வைக்கப்பட்டு வருகிறது. ஆரம்பகால விஷ்ணு சர்மா எழுதிய பஞ்சதந்திர கதைகள் வழியாக பரப்பப்பட்ட 'ஏழைப் பார்ப்பனர்' என்ற கருத்தாக்கம் சத்யஜித் ரேயின் அபு டிரையாலஜி (Apu Trilogy) வரை தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்தாக்கத்தின் மூலம் நாட்டில் உள்ள பார்ப்பன புரோகித வர்க்கத்தின் ஏழ்மை தொன்று தொட்டுத் தொடரும் துயரம் என்ற ஒருமித்த சிந்தனை உருவாக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பற்றி கேள்வி கேட்கையில், மூச்சு விடாமல் நழுவிச்செல்லும் சமூகவியலாளர்கள் முதல், ஏழைப் பார்ப்பனர்களே புதிய தலித்துகள் என்று தொடர்ந்து செய்திகளை தங்களுடைய ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் ஊடகவியலாளர்கள் வரை, நமது சமூக யதார்த்தம், அதைக் கேள்வி கேட்கக்கூட முடியாத அளவுக்கு பொறுப்பற்ற முறையில் குழப்பமடைந்துள்ளது. கர்மவினை (Karma) பற்றிய பழைய புனைகதைகளைப் போன்று 'தகுதி, தரம்' பற்றிய புதிய புனைகதைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அதற்கு வலு சேர்க்க 'கந்தலிருந்து வசந்தம்' (Rags to Riches) எனும் முன்னேற்றக் கதைகள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் அடோர்னோ கூறியது போல், "விதிவிலக்காக முன்னேறிய விளிம்புநிலை மனிதர்களை விதந்தோதுவது, விளிம்பு நிலை மனிதர்களை உருவாக்கிய அமைப்பினை விதந்தோதுவதே அன்றி வேறில்லை"

இன்று தகுதி, தரம் எனக் கட்டமைக்கப்படும் கருத்தாக்கம், அறிவுப் பரவல், அறிவு ஒருங்கிணைப்பு மற்றும் அறிவை உள்வாங்குதல் ஆகிய செயல்முறைகளில் உள்ள அகநிலைத் தன்மையை (intersubjectivity) முற்றிலும் குறைத்து மதிப்பிடுகிறது. 

ஜனவரி 7, 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 10% EWS இட ஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நாற்பது ஆண்டு காலமாக நீதித்துறையில் ரகசியமாகப் புழங்கும் பிரச்சாரம், பாராளுமன்றத்தின் பொறுப்பின்மை ஆகியவற்றின் பின்னணியில் இயற்றப்பட்டது. நீதித்துறையில் பிரச்சாரம் தந்திரமாக கட்டமைக்கப்பட்டது போலவே, பாராளுமன்றத்தின் பொறுப்பின்மையும் கவனமாகக் கையாளப்பட்டது. இரண்டும் ஒன்றுக்கொன்று வலுவூட்டியும் உரமூட்டியும் வந்தன. அடிப்படையில் தனது தீர்ப்புகள் மூலம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஆதாரமாகவும் செயல்பட வேண்டிய உச்ச நீதிமன்றம் சமத்துவ அடிப்படையிலும் நீதி குறித்த சட்ட ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் தவறான வாதங்களுக்கு இடம் அளித்தது மூலம் இந்திய அரசியலமைப்பின் முதன்மையான வாதமான 'பிரதிநிதித்துவத்தை' அழித்து விட்டது. இந்திய அரசியலமைப்பின் முதன்மையான வாதம் 'பிரதிநிதித்துவம்' என்பதே. டாக்டர்.அம்பேத்கர், 'வெறும் திறமையான அரசை விட, பிரதிநிதித்துவ அரசே சிறந்தது' என்று சொல்லும் அளவிற்கு பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். பார்ப்பனர் அல்லாத நீதிபதியான பிபி சாவந்த் "அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16 (4) வறுமை ஒழிப்பு திட்டம் அன்று, அது கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவில் பின்தங்கிப் போன சமூகங்களின் துயரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அரசு எந்திரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களுக்கு அரசு அதிகாரத்தை மறு பங்கீடு செய்யும் ஒரு பிரிவே ஆகும் என்றார்.

நீதித்துறையும் நாடாளுமன்றமும் இயங்கியல் முறையை முழுமையான கேலிக்கூத்தாக மாற்றியுள்ளன. ஏனெனில் வெளிப்படையாக முரண்படும், அனைத்துவிதக் கருத்துக்களின் கதம்பமாக அவை உள்ளன. சிம்பொனியைப் போல திருப்பங்களும் மாற்றங்களும் நிறைந்த நீதித்துறை-நாடாளுமன்றத்தின் இணக்கமான இயங்கியல் முறை சமூக முன்னேற்றம் பற்றிய மாயையை உருவாக்கியுள்ளது. சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பாத பாராளுமன்றத்தின் செயலற்றத் தன்மை பாராளுமன்ற நடவடிக்கைகளில் தலையிடும் வாய்ப்பை நீதித்துறைக்கு வழங்குகிறது. நீதிமன்றத்தின் ஒவ்வொரு பிற்போக்கான தீர்ப்பும் புரட்சிகரமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் வாய்ப்பை பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது. ஆனால் இவற்றின் விளைவாக எவ்வித சமூக மாற்றமும் ஏற்படுவதில்லை. மாறாக சமூகத்தின் பழைய நிலையே தொடர்கிறது.

2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சாதிகளின் சமூகப் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்புத் தரவுகளை வெளியிட மறுக்கும் அரசை நிர்ப்பந்திப்பதில் நீதித்துறை காட்டிய ஆர்வமின்மையின் மூலம் தரவுகளின் அடிப்படையில் செயல்பட நீதித்துறை காட்டும் தயக்கம் வெளிப்பட்டது. இந்தியாவில் பொதுவாக தரவுகளின் பற்றாக்குறை எவ்வாறு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, நீதி வழங்குவதற்கான முழுமையான அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிறுவனம் (உச்ச நீதிமன்றம்) சரியாக இயங்குமானால், அந்நிறுவனத்தால் சமூகப் பொருளாதார நிலை குறித்த மிக முக்கியமான பல விஷயங்களை சாதிக்க முடியும்.

உத்தரகாண்ட் விவகாரம்: குழப்பமும் முரண்பாடும்

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1960 களில் நடந்த இட ஒதுக்கீடு குறித்து வரலாற்றுச் சம்பவங்களை மீளாய்வு செய்வதின் மூலம் 10% EWS இட ஒதுக்கீடு மசோதாவின் கேலிக்கூத்தையும் எதிர்காலத்தில் இது இன்னும் மோசமான ஒன்றாக பரிணமிக்கும் என்பதையும் கண்டறிய உதவும்.

ஜான்சர்-பாவர் (Jaunsar-Bawar) பகுதி (இப்பகுதி முன்பு சிர்மூர் சமஸ்தானத்தின் அங்கமாக இருந்தது, பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் சிர்மூர் மாவட்டத்தில் இருந்தது) உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1967ஆம் ஆண்டில், முழுப் பகுதியும் பழங்குடியினப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த மொத்த மக்களும் பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும்

அரசு உதவிகளையும், இட ஒதுக்கீடு உள்ளைட்ட அனைத்துப் பயன்களைப் பெறத் தகுதியுள்ளவர்களாக மாறினர். உண்மையில், ஜான்சாரி-பாவர் பகுதியில் வாழும் சமூகங்கள் நாட்டின் மற்றப் பகுதியைப் போலவே பல்வேறு சாதிய அடுக்குகளைக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. பெரும்பான்மையான பட்டியலின, பழங்குடி மக்கள் நிலமற்றவர்கள். ஆச்சர்யத்திற்கு இடமில்லாமல், பழங்குடியின இட ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களை பார்ப்பனர்களும் இராஜபுத்திரர்களால் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மூன்று விஷயங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் -

1. கடுமையான சாதியப் படிநிலையானது இன்றுவரை அப்படியே நடைமுறையில் உள்ளது. கொத்தடிமைத் தொழிலாளர் முறை இன்றும் பின்பற்றப்படுகிறது.

2. பின் தங்கிய சமூக நிலை காரணமாக பட்டியலின மக்களால் அரசியல், அரசு வேலைகள், கல்லூரிச் சேர்க்கை ஆகியவற்றில் பார்ப்பனர், இராஜபுத்திரர்கள் உள்ளிட்ட உயர்சாதியினரோடு போட்டியிட்டு வெல்ல முடியவில்லை.

3. ஒட்டுமொத்த பகுதியும் பழங்குடியினப் பகுதி என அறிவித்து விட்டதால், அவர்களால் பட்டியலினச் சான்றிதழ் பெற முடியவில்லை.

இந்த அபத்தமான 'பழங்குடியினர்' பகுதி என்ற கருத்தாக்கத்தை விட மிகவும் கொடூரமான இன்னொன்று என்னவெனில் அந்த கருத்தாக்கம் எப்படி உயர் சாதியினரால் சட்டபூர்வமாக நிறுவப்பட்டது என்பதுதான். இப்பிரச்சனையின் தொடக்கம் அன்றைய காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களையும் ஒரே 'காசா' இனம் (Khasa race) என தவறாக அடையாளம் பிறப்பித்த பிரிட்டிஷ் மானுடவியலாளர்களிடம் இருந்து ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதன் உச்சம், 1967ஆம் ஆண்டில் இப்பகுதியைச் சார்ந்த பார்ப்பன, இராஜ்புத்திர எம்.எல்.ஏ.க்கள் ஆணையத்தின் முன்னர் சாட்சியமளித்த போது நடந்தது.

1. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் நடைமுறை 'பழங்குடி கலாச்சாரத்தின்' அடையாளமாக இருந்த பொதுப் பழக்கம். இதை ஆங்கிலத்தில் பாலியாண்டரி (Polyandry) என்று அழைப்பார்கள்.

2. தற்போது தீண்டாமை இல்லை.

3. தீண்டத்தகாத கோட்லா சமூகத்திடம் இருந்து இராஜபுத்திரர்கள் கடன் வாங்கினார்கள் என்ற மூன்று பொய்களைக் காட்டி முழுப் பகுதியும் 'பழங்குடியினப் பகுதி' என்று அழைக்கப்பட்டது. பொய்களைக் கலந்து கட்டி, ஆணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல், இந்த கேலிக்கூத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மாநில சட்டசபை, பாராளுமன்றம் என பல்வேறு தீர்மானங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆயினும், எதுவும் பலனளிக்கவில்லை.

அபத்தம் இத்துடன் முடிந்துவிடவில்லை. கடந்த ஆண்டு, பார்ப்பனர் ஒருவர் (அவர் பெயர் சேஷாத்ரி என வைத்துக் கொள்வோம்) இன்னொரு பார்ப்பனர் (Nautiyal Saheb) மீது உத்தரகாண்ட மாநிலத்தின் நைனிடால் உயர் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (SC/ST Act 1989) கீழ் பதிவு செய்யப்பட்டது. அதற்கு எதிர்வினையாக நாட்டியால் சாகேப், சேஷாத்ரி பழங்குடி அல்ல, பழங்குடி அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதாக வழக்குப்பதிவு செய்தார். உடனே சேஷாத்ரி தனது ஜான்சாரி-பாவர் வசிப்பிட சான்றிதழை வழங்கினார். உயர்நீதிமன்றம் இதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு நாட்டியால் சாகேபுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து நாட்டியால் சாகேப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. மற்றொரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், உத்தரகாண்ட் மாநிலத்தின் பட்டியலின, பழங்குடியின ஆணையத்தின் தலைவராக உள்ள பார்ப்பனர் தான் நாட்டியால் சாகேப் என்னும் இன்னொரு பார்ப்பனர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தவர்.

இவை அனைத்தும் இரண்டு விஷயங்களை தெளிவாக்குகின்றன. ஒன்று, இட ஒதுக்கீட்டிற்காக பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வ பழங்குடியின வரையறை வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act, 1989) போன்றன பிற விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள பார்ப்பனர்கள் விரைவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவார்கள். இரண்டு, மாநில சட்டமன்றமும் ஒன்றிய பாராளுமன்றமும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய அமைப்புகளுக்கு இக்கேலிக்கூத்துகள் எல்லாம் நன்றாகவே தெரியும். இருந்தும் அவற்றை கண்டு கொள்வதில்லை.

உத்திர பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு புதிய பிரச்சனை இருந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் உத்திர பிரதேசத்தில் இருந்து பிரிந்து செல்ல காரணம் மண்டல் ஆணைய அறிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டதாகும். முலாயம் சிங் யாதவ் ஆட்சியின் போது உத்திர பிரதேசத்தின் கர்வால்-குமாவோன் பகுதிகளில் நடந்த மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து தனி உத்தரகாண்ட் மாநில கோரிக்கை தொடங்குகிறது. 3% க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு நியாயமற்றது என்று உயர்சாதிகள் வாதிட்டனர். 1990 கள் முழுக்க இது தொடர்பான போராட்டங்களின் விளைவாக பதட்டம் அதிகரித்தது. தனி உத்தரகாண்ட் மாநில கோரிக்கை வலுவடைந்த பின்னரே OBC இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்ட வலு குறைந்தது. புதிதாக உருவாக்கப் பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் பகுதியை இணைத்த உடன் OBC மக்கள் தொகை 14 விழுக்காடாக உயர்ந்தது. தற்போது உத்தரகாண்ட மாநிலத்தில் 14% OBC இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் இன்னொரு கேலிக்கூத்து ஆரம்பித்தது. மலைப்பகுதி மாவட்டங்களான பித்தோராகர், உத்தர்காஷி, சாமோலி ஆகியவை பிற்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதால், இந்தப் பகுதியை சார்ந்த அனைத்து மக்களும் OBC இடஒதுக்கீடு பெற தகுதியுடையவர்களாக மாறிவிட்டனர். ஜான்சர்-பாவர் பகுதியில் நடத்தப்பட்ட பழங்குடியின கேலிக்கூத்து, OBC விஷயத்திலும் முழுமையாக பின்பற்றப்பட்டாலும், கடந்த சில பத்தாண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முழு மலைப் பகுதியையும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க சட்டமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் கோரிக்கைகள் எழுப்பப் பட்டு வருகின்றன.

பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதிகளுக்கு பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட அந்தஸ்து வழங்கும் இது போன்ற கேலிக்கூத்துகள் எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கான அறிகுறிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு உள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு கிடைத்த உரிமைகளை ஒழிப்பதற்கான சதி பொருளாதரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் நடக்கிறது. சமீபத்தில் (2018) உச்ச நீதிமன்றம் SC/ST வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தீர்ப்பளித்தது. இவை அனைத்தின் நிகர விளைவு என்னவாக இருக்குமெனில், அரசியலமைப்புச் சட்ட காலத்திற்கு முன்சென்று, படிப்படியாக நம்மை வேத காலத்திற்கு அழைத்துச் செல்வதாகும். வேத காலத்தில் அதிகாரப்பூர்வமான அரசியலமைப்புச் சட்டமாக மனுதர்மம் இருக்கும். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ST, OBC கேலிக்கூத்துகளும், 10% EWS கேலிக்கூத்தும் மனு தர்மத்தின் பதிமூன்றாவது அத்தியாயமாகக் கருதப்பட வேண்டும்.

நன்றி: Round Table India இணையதளம் (2019, மார்ச் 12 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: ஈஷ்வர் ஜி

Pin It