இரண்டாயிரம் ஆண்டுகளாக அழுகி நாறிக் கொண்டிருக்கும் சனாதனத்தை இன்னும் புதைக்காமல் பிணங்களை நுகர்ந்து கிளர்ச்சியடையும் மனப்பிறழ்வுவாதிகள் அந்த துர்நாற்றத்தை நம்மையும் முகர்ந்து பார்த்து மகிழ்ச்சியடையுமாறு கட்டாயப் படுத்துகின்றார்கள்.

அதுவும் பார்ப்பன எதிர்ப்பு மரபின் தளப்பிரதேசத்தில் நின்று கொண்டு அவர்களால் எந்த கூச்சமும் இன்றி தங்களின் வெட்கக்கேடான மனித மாண்புகளுக்கு எதிரான செயல்பாடுகளை நிகழ்த்த முடிகின்றது.

அவர்கள் சவால் விடுகின்றார்கள்! பல ஆயிரம் மைல்தூரங்களுக்கு அப்பால் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் தங்களால் ஒரு சனாதன அணிச்சேர்க்கையை ஏற்படுத்தி ஒரு முற்போக்கு சமூகத்தை பல நூறாண்டுகள் பின்னுக்கு இழுக்க முடியும் என்று.

அவர்களால் இந்த இழிவான செயலை எந்த தடையுமின்றி செய்ய முடிகின்றது. அதுவும் சட்டத்திற்கு உட்பட்டல்ல, சட்டத்திற்கு வெளியே அராஜகமான முறையில்.rn ravi at vallalar meetingமக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஓர் அரசு சனாதனத்தின் பிணநாற்றத்தை ஊரெல்லாம் பரப்பும் கொடியவர்களை அடக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றது. அவர்கள் சட்டத்திற்குப் பயப்படுகின்றார்களா? சனாதனத்திற்குப் பயப்படுகின்றார்களா? என்று இன்னும் நமக்கு உறுதியாக தெரியவில்லை.

சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்ற சனாதன சங்கிகளை கண்டு கொள்ளாமல் விடபோகின்றார்களா? அல்லது சனாதனத்தை ஒழித்துக்கட்ட முற்போக்கு சக்திகள் கொஞ்சம் சட்டத்தை மீறத்தான் அனுமதிக்கப் போகின்றார்களா?

ஆளுநரை மட்டும் சட்டம் கட்டுப்படுத்தாது என்றால் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் மக்களை மட்டும் அது எப்படி கட்டுப்படுத்தும்?

சனாதன சங்கிகளை நாம் கட்டுப்படுத்தாமல் விட்டோம் என்றால், நாளை வள்ளுவனை மனுவின் மகன் என்பார்கள். வள்ளலாரை சவார்க்கரின் கொள்ளுதாத்தா என்பார்கள். சித்தர்கள் எல்லாம் கோல்வாக்கரின் சித்தப்பா என்பார்கள்.

பல பேர் சொந்தமாக குழந்தை பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அடுத்தவனுக்குப் பிறந்த ஆரோக்கியமான குழந்தையை தனது குழந்தை என்று உரிமை பாராட்டுவதோடு, அந்த ஆரோக்கியமான குழந்தையை முடமாக்கி அதை வைத்து பிச்சை எடுத்து தின்னும் கூட்டம்தான் சனாதனக் கூட்டம்.

அப்படி தமிழ்நாட்டின் ஆரோக்கியமான முற்போக்கு சிந்தனை மரபின் கன்னிகளை எல்லாம் ஒவ்வொன்றாக உடைத்து அதை சனாதனத்திற்குப் பிறந்தது என்று சொல்வதோடு அதை எல்லாம் இழிவுபடுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி வயிறு வளர்க்கப் பார்க்கின்றது உழைத்து சோறுதின்னாத கூட்டம்.

அந்தக் கூட்டத்தின் நான்காம்தர குப்பைப் பேச்சாளர்தான் ஆளுநர் ரவி அவர்கள்.

வள்ளுவனுக்கு சிலை வைத்து அவரை சிக்க வைக்கப் பார்த்தார்கள். ஆனால் வள்ளுவன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று செவிட்டிலேயே அடித்துவிட்டுப் போய்விட்டான்.

வாங்கிய அடியின் வீக்கம் குறைவதற்குள் மீண்டும் வள்ளலாரை வம்புக்கு இழுத்திருக்கின்றார் ‘வம்ப வேந்தர்’.

வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருக்கின்றார்.

கூச்சமோ, குறுகுறுப்போ, குற்ற உணர்வோ இன்றி அவரால் இந்த அபத்தமான பொய்யை சொல்ல முடிந்திருக்கின்றது. அதற்குக் காரணம் அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருமே அம்மணப் பேர்வழிகள் என்பதால்தான்.

ஆனால் வள்ளுவரைப் போன்றே வள்ளலாரும் சனாதனப் பேய்களை சவுக்கால் அடித்தவர் என்பது இந்த உருட்டு, புரட்டு கும்பலுக்குத் தெரியவில்லை.

தன்னுடைய வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு போட்டுக் கொண்டு கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் மானம்கெட்ட பிறவிகளால் வேறு எப்படி யோசிக்க முடியும்?

பித்தலாட்டத்தைப் பேசி மாட்டிக் கொண்டால் தங்களை பிராண்டி விடுவார்களே என்ற பயம் சுத்தமாக அந்த சங்கிக் கூட்டத்திற்கு இல்லை. பல முறை அடிவாங்கி உடல் மரத்துப்போன திருடன் எப்படி திருடுவதற்கு அஞ்சுவதில்லையோ, அதே போன்ற அல்ப நிலையை சனாதன சங்கிக் கும்பல் அடைந்திருக்கின்றது.

பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்கின்றார் ரவி.

ஆனால் வள்ளலாரோ,

“வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை." (5516)

என்று செருப்பைக் கழற்றி சனாதன சங்கிகளிடம் காட்டுகின்றார். அதாவது வேதம் என்றும் ஆகமம் என்றும் வீணே வாதம் புரிகின்றீர்கள். அவற்றின் விளைபயனை நீங்கள் அறிய மாட்டீர்கள். அவை பொய்யாகச் சொல்லப்பட்டனவே அன்றி உண்மையை வெளிப்படையாகத் தோன்றும்படி உரைக்கவில்லை. ஆகவே அவற்றால் ஒரு பயனுமில்லை என்று ஒரமாக காறித் துப்புகின்றார்.

அதுமட்டுமா

“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே'' (5566)

சாதி, மதம், சமயம், சாத்திரம், கோத்திரம் உள்ளிட்ட குப்பைகளில் உழன்று உழன்று அழியாதீர்கள் என்று சனாதனத்தின் சங்கில் ஏறி மிதிக்கின்றார் வள்ளலார்.

அத்தோடு விட்டாரா?

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே" (4174)

அதாவது நால்வருணம், ஆசிரமம் (பிரமச்சரியம், கிருகத்தம், வானப் பிரகத்தம், சந்நியாசம்) ஆசாரம் உள்ளிட்டவையில் கூறப்பட்டவையெல்லாம் பிள்ளை விளையாட்டு. பிறர் மேல் கூறப்படும், வருண வகைகளை உடம்பின் தோல் வருணம் கொண்டு அறிகின்றவர்கள் யாருமில்லை. எனவே இவற்றில் மயங்காமல் நீ விழித்துப் பார்ப்பாயாக என்று வெள்ளைத்தோல் வந்தேரிகளுக்கு கட்டம் கட்டுகின்றார்.

சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகவே சுரணையற்ற பேர்வழிகளை பார்த்து எச்சரிக்கின்றார்.

“மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது

வருணாச் சிரமம் எனுமயக்கமும் சாய்ந்தது" (4503)

மதம் சமயங்களின் பெயரால் நடத்தப்படும் தீய செயல்களையும் நடைமுறைகளையும் மனிதர்களிடையே சாதி, தீண்டாமை பிரிவினைகளை ஏற்படுத்தும் வர்ணாசிரமத்தை பொய் என்றார்.

அதுமட்டுமா சகமனிதனை தொட்டால்தீட்டு பார்த்தால் தீட்டு என்று இழிவு செய்து அவர்களை உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கி மனிதகுல விரோதிகளாய் நடந்து கொண்டவர்களுக்கு மத்தியில் தன்சக மனிதனை வாரி அனைத்து அவன் வாடிய போதெல்லாம் வாடி அவர்களுக்கு வயிறார சோறுபோட்டு தன்னுடைய இழி நிலையைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பை மூளைக்கு வழங்கினார்.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"

வள்ளலார் இப்படி சனாதனத்திற்கு எதிராக சவுக்கை சுழற்றிக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் இருந்த சைவ மடங்களும், நாவலர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய சைவ சமயப் பிரச்சாரகர்களும் பார்ப்பனியத்துக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருந்தார்கள்.

வைவமா, வைணவமா என்று சல்லிப்பைசாவுக்கு பிரயோஜனமற்ற தத்துவ சண்டையைக் கிளறிவிட்டு நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை சைவ மடங்களும் வைணவ மடங்களும் ஏற்படுத்திக் கொள்ள முற்பட்ட காலத்தில் அதில் இருந்து மாறுபட்டு ஒலித்தது வள்ளலாரின் குரல்.

வள்ளலார் தமிழ்மொழி மீது மிகப் பெரும் பற்று கொண்டிருந்தார். அவர் சமஸ்கிருதத்தைக் கற்று வேதங்களையும் படித்திருந்தார். அதனால்தான் வேதத்தின் பித்தலாட்டத்தை அவரால் அம்பலப்படுத்த முடிந்தது.

மேலும் சென்னையில் சங்கராச்சாரியாரை சந்தித்தபோது, சங்கராச்சாரியார் சமஸ்கிருதமே மாத்ரு பாஷை என்று சொல்ல, அதாவது, அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று கூற, அதை மறுத்த வள்ளலார், ‘தமிழ் பித்ரு பாஷை’ அதாவது தந்தை மொழி என்று மறுத்து வாதிட்டுள்ளார். மேலும், தமிழ் என்ற பெயருக்கு விரிவான விளக்க உரையும் எழுதியுள்ளார்.

"இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் போது போக்கையும் உண்டு பண்ணுகிற, ஆரிய, முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது. பயிலுதற்கு அறிதற்கும் மிகவும் இலேசமுடையதாய்ப் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய் திருவருள் வலர்த்தாற் கிடைத்த தென்மொழி யொன்றி நடந்தே, மனம் பற்றச் செய்து அத்தென் மொழிகளாற் பலவகை தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்து அருளினீர்" என்று தமிழ் மீது உள்ள தனது பற்றையும் ஆரிய மொழியான சமஸ்கிருத்ததின் மீதான தனது ஆழமான வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றார்.

இப்படி வள்ளலார் சனாதன வர்ணாசிரமத்தின் மீதும் அதன் வேதங்களின் மீதும் பெரும் தாக்குதல் தொடுத்தாலும், இவை எதைப் பற்றியுமே அறியாத அல்லது அறிந்தும் தங்களது ஈனத்தனமான புத்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காக சில பல சில்லரைகள் திட்டமிட்டே வரலாற்றைத் திரிக்கின்றார்கள்.

ஆனால் இந்த திரிக்கும் வேலை எல்லாம் தமிழ்நாட்டில் இனி செல்லுபடியாகாது என்பது அந்த செல்லாக் காசுகளுக்குத் தெரிவதில்லை.

கெட்டிக்காரனின் புளுகே எட்டு நாளைக்கு தாங்காத போது, சங்கி முரட்டு முட்டாள் கூட்டத்தின் புளுகு முற்போக்கு தமிழ் மண்ணில் எத்தனை நாளைக்கு தாங்கும்? அரை நிமிடம் தாக்குப் பிடிக்கும் பொய்யைக் கூட சொல்ல வக்கற்ற கூட்டம் இப்படித்தான் அசிங்கப்பட்டு நிற்கும்.

- செ.கார்கி

Pin It