விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்களை வன்னியர்கள் வழிபட அனுமதிக்கவில்லை. அறநிலையத் துறைக்குக் கட்டுப்பட்ட இக்கோவிலில் பட்டியலின மக்களின் உரிமையைக் காக்க தமிழ்நாடு அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. முடிவு எட்டப் படாததால் 07.06.2023 அன்று காலை திரவுபதி கோவில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
அதில் அரசின் நடவடிக்கை சரியில்லை, அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படவில்லை என சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தேர்தல் அரசியலில் உள்ள ஒரு கட்சியால் எந்த எல்லை வரை நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை தி.மு.க. அரசு செய்து வருகிறது. தொடர்ந்து கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும்.
இந்து மத ஆதிக்கத்திலுள்ள இந்தியா முழுவதும் அரசியல் சட்டங்களைவிட, இந்துச் சமுதாயச் சட்டங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஜாதி, தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கும் போராட்டங்களில் அரசியல் சட்டங்களைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிடக் கூடுதலாக, இந்துச் சமுதாயச் சட்டங்களைத் தகர்க்கும் பெரியாரிய, அம்பேத்கரியக் கருத்துக்களைப் பயன்படுத்துவது மட்டுமே நிரந்தரத் தீர்வுகளைக் கொடுக்கும்.மேல்பாதி வன்னியர்கள் இஸ்லாமாகவோ, புத்தர்களாகவோ மாறியிருந்தால் அங்கு திரவுபதி கோவிலே உருவாகியிருக்காது. அங்குள்ள பட்டியல் ஜாதி மக்கள் இஸ்லாமாகவோ, புத்தர்களாகவோ மாறியிருந்தால் திரவுபதி கோவிலுக்குள் நுழைய வேண்டிய எண்ணமே தோன்றியிருக்காது.
மேல்பாதி கிராமத்து வன்னியர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்துக்களாக இருப்பதால் தான், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சூத்திரன் என்ற இழிநிலை பற்றி அறியாமல், தங்களுக்குக் கீழே ஒரு ஜாதியை அடக்கி வைத்துக் கொள்ளத் துடிக்கிறார்கள். தங்களைச் சூத்திரனாக, தேவடியாள் மகனாக அறிவித்துள்ள பார்ப்பனர்களுக்கும், இந்து மதத்திற்கும் அடிமை வேலை பார்க்கிறார்கள்.
பார்ப்பன இந்து மதத்தின் சூழ்ச்சிகளை அறிந்த தோழர் பெரியார், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் அனைவருமே இந்து மதத்தைவிட்டு வெளியேறுங்கள் என்றார். மதங்கள் இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் என்றார். மதத்தைக் கைவிட முடியாது என்பவர்களிடம், இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாம் மதத்திற்கோ, புத்த மதத்திற்கோ மாறுங்கள் என்றார்.
பிற்படுத்தப்பட்டோரும் மதம் மாற வேண்டும் என்றார் பெரியார்
ஜாதி ஆதிக்கச் சிந்தனையில் புதைந்திருக்கும் வன்னியர், தேவர், கவுண்டர், செட்டியார் போன்ற எல்லா வகையான பிற்படுத்தப்பட்ட மக்களையும் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாமாகுங்கள் என்றார்.
திராவிடன் எல்லாத் தகுதியையும் இந்து சமயம் என்னும் ஆரியப் பாம்பு விழுங்கி விட்டது. அதனால்தான் சிவபக்தனாகவும், வைணவ பக்தனாகவும் இருந்து கொண்டு மொட்டையும் பட்டையும் அணிந்து ஆரியத்திற்குச் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறான். அதனால்தான் நல்ல வீரமுள்ள திராவிடன் வெட்கம், மானம், சொரணை, சூடு இல்லாமல், நான் சத்திரியன், நான் வைசியன், நான் நல்ல இந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பானுக்குக் (பிராமணனுக்கு) கீழ்ஜாதியாய் இருப்பதைப் பெருமையாய்க் கருதுகிறான்.
சத்திரியன் என்றாலும், சூத்திரன் என்றாலும், பிராமணனுக்குக் கீழானவன் என்று தானே கருத்து. அதைத் திராவிடன் தானாகவே சொல்லிக் கொள்கிறான் என்றால் சமநிலைக்குத் தகுதி அற்றவன் என்று தானே கருத்து?
சிந்தித்துப் பாருங்கள் திராவிடத் தோழர்களே, இஸ்லாம் என்றால் உங்களுக்கு ஆத்திரம் வருகிறது; சத்திரியர், வைசியர் என்றால் பெருமை அடைகிறீர்கள். சூத்திரர் என்பதை இழிவு என்று கருதமாட்டேன் என்கிறீர்கள். இப்படிப்பட்ட நீங்கள் இந்துவாய் இருக்கும்வரை மானத்துக்கும், மனிதத்தன்மைக்கும் தகுதி அற்றவர்கள் என்பது கல்போன்ற உறுதியாகும். ஆகவே இந்து மதத்தை விட்டு வெளிவாருங்கள்; உடனே நீங்கள் தகுதி ஆனவர்கள் ஆகிறீர்களா இல்லையா என்று பாருங்கள். - தோழர் பெரியார் - குடிஅரசு -5.04.1947
பட்டியல் ஜாதி மக்களும் இந்துக்களாக இருப்பதாலேயே, தம்மை நேரடியாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் வன்னியர்களோடு மோதிக் கொண்டு இருக்கிறார்கள். வன்னியர்கள் ஒடுக்குவதற்குக் மூல காரணமாக உள்ள பார்ப்பனர்களுக்கும், அந்தப் பார்ப்பனர்களின் கருவியான இந்து மதத்திற்கும் இவர்களும் அடிமையாகவே இருக்கிறார்கள்.
எனவே தான் 1926 ஆம் ஆண்டிலிருந்தே நான் இந்துவாக இறக்கப் போவதில்லை என அறிவித்த பெரியார், அந்தக் காலகட்டத்திலேயே ஆயிரக்கணக்கான பட்டியல் ஜாதி மக்களை இந்து மதத்திலிருந்து வெளியேற்றி, இஸ்லாமியர்களாக மாற்றினார். அதை அவரே தனது குடி அரசு எட்டில் பதிவு செய்துள்ளார்.
சமீப காலம்வரை தீண்டாமை விலக வேண்டும், தீண்டத்தகாதவர்கள் என்கின்ற தன்மை மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் உடனே இஸ்லாமாக ஆக வேண்டும் என்று சொல்லி 20 வருட காலம் பிரசாரம் செய்து அந்தச் சமுதாயத்தாரையும் ஒப்புக் கொள்ளும்படி செய்தேன்.
மலையாளத்திலும் (திருவாங்கூர், கொச்சியிலும்) 1924 முதல் 34 வரை பிரசாரம் செய்து மலையாள ஈழவர்களையும், மற்றும் தீண்டப்படாத மக்கள் என்பவர் களையும் ஒப்புக்கொள்ளச் செய்தேன். இவர்கள் ஒப்புக்கொண்டு தங்கள் மகாநாட்டில் தீர்மானங்கள் செய்து சுமார் மொத்தத்தில் இங்கு 2000, 3000 பேரும் மலையாளத்தில் சுமார் 600, 700 பேர்களும் இஸ்லாத்தைத் தழுவியதுடன் அவர்கள் இழிவுகள் சிறிது சிறிதாக நீக்கப்பட்டு அவர்களது உரிமைகள் இன்று வழங்கப்பட்டுத் தீரவேண்டிய அளவிற்கு வெற்றி ஏற்பட்டு விட்டது. – தோழர் பெரியார், குடிஅரசு, 12.04.1947
மேல்பாதிகளுக்கு வழிகாட்டும் சுசீந்திரம்
இந்தியாவிலேயே முதன் முதலாக நடந்த கோவில் நுழைவுப் போராட்டம் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டமாகும். அப்போராட்டத்தின் வெற்றி குறித்து தோழர் பெரியார் பேசிய உரையானது 1961 இல் திராவிடர் கழகம் சார்பில், தீண்டாமையை ஒழித்தது யார் என்ற நூலாக வெளிவந்தது. அந்த உரை,
“அந்தக் காலத்தில் கோட்டயத்தில் என் தலைமையில் ஒரு சுயமரியாதை மாநாடு போட்டார்கள். அதில் ஜாதி ஒழிப்பு சம்பந்தமாகவும், கோயில் நுழைவு உரிமை சம்பந்தமாகவும் பலவிதத் தீர்மானங்களையும் போட்டார்கள்.
அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் ஜாதி ஒழிப்புக்காக, “ஜாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்தில் இந்துக்கள் சேர்ந்து விடுவது” என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. மாஜி மந்திரி அய்யப்பன் அவர்கள் ‘இஷ்டப்பட்ட மதத்தில்’ சேர்ந்து கொள்ளலாம் என்று திருத்திப் போட வேண்டுமென்று சொல்லி ஏக மனதாய்த் தீர்மானம் நிறைவேறச் செய்தார்.
“இஸ்லாத்தில் சேருவது” என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஒரு 50 பேர்கள் போல முஸ்லீமாகி விட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறி விட்டார்கள். இது ஒரு பெரிய கலக்குக் கலக்கிவிட்டது….
பிறகு திருவாங்கூர் இராஜாவுக்கு சி.பி.இராமசாமி அய்யர் சொன்னார், “ஈழவர், புலையர்களெல்லோரும் துலுக்கராக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மருந்து கோயிலைத் திறந்து விட்டுவிட வேண்டியது தான்” என்று கூறினார். இராஜாவின் பிறந்தநாள் செய்தியாக, “கோயில் எல்லா இந்துக்களுக்கும் திறந்து விடப்படும்” என்று அறிவிப்பு வந்தது. இப்படித்தான் ஆலயப் பிரவேச உரிமை கிடைத்தது. – தோழர் பெரியார், ‘தீண்டாமையை ஒழித்தது யார்?’ நூல்.
ஏற்கனவே, மேல்பாதி கிராமத்து வன்னியர்கள் சிலர் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டங்களின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலான சட்ட மற்றும் சமுதாய நடவடிக்கைகளை நடத்தி, பட்டியல் ஜாதி மக்களைக் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும்.
அதே சமயம், அதே வன்னியர்களும், பட்டியல் ஜாதி மக்களும் இந்து மத இழிவிலிருந்து வெளியேறி விடுதலை பெற திராவிடர் இயக்கங்களின் பிரச்சாரங்களை நடத்த அனுமதிக்க வேண்டும். மேல்பாதி, திருமோகூர், வேங்கை வயல் போன்ற வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகளில் மட்டும் இந்து மத இழிவுகளை விளக்குவதால் பயனில்லை. தமிழ்நாடு முழுவதும் எல்லா நாட்களிலும், எல்லா ஊர்களிலும், எல்லாத் தளங்களிலும் இந்து மத, ஜாதிய எதிர்ப்புப் பரப்புரைகள் தடையின்றி நடக்க அரசு வழிசெய்ய வேண்டும்.
உண்மையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காவல் துறையின் அனுமதி பெற்று கூட்டம் நடத்துவது என்பது மிகவும் அரிய செயலாகிவிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்தச் சிக்கலைக் கட்டாயம் சரி செய்ய வேண்டும். தி.மு.க.பொறுப்பாளர்கள் பங்கேற்றால் மட்டுமே திராவிடர் இயக்கங்களின் கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. ஆனால் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு ஜாதி, மதங்கள் குறித்துப் பேசுவது தி.மு.க.வுக்கும் சிக்கலாக மாறும்.
எனவே, முற்போக்காளர்கள் இந்து மத ஒழிப்பு – இந்து மத வெளியேற்றப் பரப்புரைகளைக் தொடங்க வேண்டும், தொடர வேண்டும். திராவிடர் இயக்கங்களின் கூட்டங்களுக்கு நடைமுறையில் உள்ள காவல்துறைத் தடைகளை அரசு விலக்க வேண்டும்.
- அதிஅசுரன்