parliament 600

சமமானவர்களுக்கு இடையில்தான் சமத்துவம் இருக்கிறது. சமமற்றவர்களை சமமாக நடத்துவது, சமமின்மையை நீடித்திருக்கச் செய்வதற்கேயாகும். There is equality only among equals. To equate unequals is to perpetuate inequality.–  B.P.MANDAL

கிரீமி லேயர் என்றால் என்ன?

இந்தியாவின் பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் மறுக்கப்பட்டு வந்தது. தேசிய முன்ணனி அரசு பதவியில் இருந்தபோது 1990ல் வி.பி.சிங் அவர்களால் மண்டல் குழு பரிந்துரை ஏற்கப்பட்டது. மத்திய அரசு வேலை வாய்ப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோருக்குகான (OBC) இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள் இவ்வாணையில் கையெழுத்திட்டார் என்பது கூடுதல் வரலாற்றுச் செய்தி.

இந்திரா சகானி வழக்கு

மண்டல் குழு அமலாக்கத்தை ஒட்டி உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில் (1992), சமூக ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார, கல்வி ரீதியாக உயர்ந்தவர்களும் உயர் வருமான வகுப்பினராக அதாவது கிரீமி லேயர் பிரிவினராக கண்டறியப்பட்டனர் (some members of a backward class who are highly advanced socially as well as economically and educationally.) பொருளாதார வரம்புகள் உள் நுழைக்கப்பட்டு அவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கக் கூடாது, இடஒதுக்கீட்டிற்கு வெளியே நிறுத்த வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இது அரசியல் சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், இந்திரா சகானி வழக்கு அதிகபட்ச 9 பேர் கொண்ட ஆயத்தின் தீர்ப்பாக (Nine member Bench) அமைந்து விட்டதால், இதை மறுதலிக்க எதிர்காலத்தில் 11 பேர் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டு, கிரீமி லேயர் நீக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும், அதற்கான வாய்ப்பு சமீபத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசமைப்பு சட்டமும் கூறுவது என்ன?

இந்திய அரசியல் சட்டத்தில் Socilay and Educationally Backward Class சேர்ந்தவர்களுக்குத்தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக உள்ளது (பிரிவு 15(4), பிரிவு 340), பொருளாதார நிலை அதற்கான தகுதி என்று அரசமைப்பு சட்டத்தின் எந்தக் கூறிலும் இல்லை.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 1971 திமுக ஆட்சில் அமைக்கப்பட்ட சட்டநாதன் குழுவின் தலைவர் நீதிபதி சட்டநாதன் அவர்கள் தான், இக்கிரீமி லேயர் என்ற பதத்தினை நாட்டிலேயே முதன் முதலாகப் பயன்படுத்தியவர்.

இடஒதுக்கீட்டில் வருமான வரம்பினைக் கொண்டு வரலாமா இல்லையா என்பது குறித்த விவாதமானது அரசியல் சட்ட அவையில் நடைபெற்றபோது தற்போதைய பாஜக-வின் தாய் அமைப்பான ஜன சங்கத்தின் தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பொருளாதார வரம்பு வேண்டும் எனக் கொண்டு வந்த தீர்மானமானது தோற்கடிக்கப்பட்டு, எதிராக 243 வாக்குகளும், ஆதரவாக 5 வாக்குகளும் கிடைத்தன. அப்போதே இடஒதுக்கீட்டுக் கொள்கையில், பொருளாதார வரம்பு சரியாக இராது எனப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் முடிவுக்கு எதிராக இருந்தனர்.

மேலும் அரசமைப்பு சட்டமானது உரிமைகள் அளிக்கப்படும்போது எந்த ஒரு இடத்திலும் தனிநபராகப் பார்க்கவில்லை, குழுக்களாக அதாவது Classess, Castes என்றுதான் பார்க்கிறது, கிரீமி லேயரில் மட்டும் தனிநபரின் ஊதியம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகிறது.

கிரீமி லேயர் உருவாக்கம்

1993 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நீதிபதி ஆர்.என்.பிரசாத் அவர்கள் தலைமையில் 22.2.1993-ல் குழு அமைக்கப்பட்டு 16 நாட்களில் அதாவது 10.03.1993 அன்று யார், யார் கிரீமி லேயர் வரம்பில் வருவார்கள் என அறிக்கை அளித்தது. இவ்வறிக்கை 16.03.1993 அன்று பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, 08.09.1993 அன்று வேலைவாய்ப்பில் மட்டும் 27% பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. (இதற்குப் பரிசாக நீதிபதி ஆர்.என் பிரசாத் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டார்)

கிரீமி லேயரை வரையறுக்கும் முக்கிய ஆறு பிரிவுகள்

08.09.1993 தேதி ஆணையின் படி யார், யார் கிரீமி லேயர் வரம்பிற்குள் வருவார்கள் என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை.

1. அரசமைப்பு சட்டப் பதவிகள் (Constitutional Posts)

2. பணியாளர் பிரிவு (Service Category) – இது மூன்றாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

3. இராணுவப் (படைத்துறை) பதவிகள் (Armed Forces including Para Military Forces)

4. வாழ்வியல் தொழில்சார் மற்றும் தொழில் முறையாளர்கள் (Professional Class, Traders and Industry)

5. சொத்துடைமையாளர்கள் (Property Owners)

6. வருமான/சொத்து மதிப்பிடல் (Income/Wealth Test)

இதில் ஆறாவது பிரிவான வருமானம் மற்றும் சொத்து மதிப்பினைக் கணக்கிடும்போது, ஊழியர்களின் சம்பள வருமானமும், விவசாய வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது (Income from Salary or Agricultural land shall not be Clubbed) என தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஊழியர்களின் பதவிகளைக் கொண்டு பிரிவு இரண்டில் தெளிவாக பிரிக்கப்பட்டு விட்டதால், மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என சம்பள வருமானம் நீக்கப்பட்டு விட்டது,

இதில் இரண்டாவது பிரிவான பணியாளர், மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிக்கலே இப்பிரிவில்தான் உள்ளது.

  1. நேரடி மத்திய மாநில அரசுகளில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் பதவி வகிப்பவர்களை விலக்குகிறது.
  2. 40 வயதிற்கு முன் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் போன்ற முதல் நிலை பதவிகளுக்கு பதவி உயர்வில் செல்பவர்களை விலக்குகிறது.
  3. பொதுத் துறை நிறுவனங்களான வங்கிகள், இன்சூரன்சு, பெரு நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை மத்திய மாநில அரசில் பதவிகளை வகிக்கக்கூடிய அதிகாரிகளுக்கு சமமாக, இணையாக வகைப்படுத்தி ஆணை பிறப்பிக்கப்படும் வரை வேண்டிய மாறுதல்களுடன் இணையாக நடத்திக் கொள்ளளாம் (Mutatis Mutandis).

பொதுத் துறை ஊழியர்களுக்கான 2017 ஆம் ஆண்டு உத்தரவு

மத்திய, மாநில அரசுத் துறை பதவிகளுக்கு இணையான சமமான பதவிகளை பொதுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வகைப்படுத்தி முறையாக ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என 1993ல் இருந்தே பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் 6.10.2017ல் அதாவது 25 ஆண்டுகள் கழித்து மத்திய பணியாளர் நலத்துறை சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையானது குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழி பறித்த கதையாகப் போடப்பட்டது. அவசர கோலத்தில் இதில் நிபுணத்துவம் வாய்ந்த யாரையும் கலந்து ஆலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், சமூகநீதி ஆர்வலர்களிடமோ, பொது மக்களிடமோ அல்லது பொதுத்துறை OBC ஊழியர் சங்கங்களிடமோ கருத்து கேட்காமல் இவ்வாணை பிறப்பிக்கப் பட்டதால், பொதுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லாத இடைநிலை ஊழியர்களும் கிரீமிலேயர் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கான ஓபிசி சான்றிதழ் மறுக்கப்பட்டு இடஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி வருடத்திற்கு எட்டு இலட்சம் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருமானம் இருந்தால் அவர்களுக்கு NCL எனப்படும் Non Creamy Layer சான்றிதழ் அளிக்கப்படாது. அதனால் அப்பொதுத்துறை ஊழியர் 27% இடஒதுக்கீட்டில் விலக்கி வைக்கப்படுகிறார். இம்முடிவினை எதிர்த்து பல பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தினை நாடி உள்ளன.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இதர பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு

2015, 2016, 2017 ஆண்டுகளில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தேர்ச்சியடைந்த 56 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தர வரிசையில் கீழிறக்கப்பட்டார்கள். ஒரு சிலருக்கு பதவிகள் கிடைக்காமலும் ஆனது. இவர்களின் பெற்றோர் அனைவரும் பொதுத் துறையில் பணியாற்றியவர்களே. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தினை நாடியபோது சம்பள வருமானம் கணக்கில் கொள்ளப்படக் கூடாது என மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 31.02.2017 அன்றும், டெல்லி உயர் நீதி மன்றம் 22.03.2018 அன்றும் மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் மத்திய பணியாளர் துறை இதைக் கணக்கில் கொள்ளாமல் உச்ச நீதி மன்றத்தில் எதிர் மனு செய்துள்ளது. இவ்வழக்கின் முதல் மனுதாரர் தமிழகத்தில் காவல் துறை துணை ஆணையாராக தற்போது பணியில் இருக்கும் திரு.ரோகித் நாத் IPS ஆவார் (Rohinath Vs Union of India)

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்

இது மட்டுமல்லாமல் Siddharth Saini Vs Union of India, Nair Society Vs State of Kerala (2000), Ashok Kumar Thakku Vs State of Bihar (1995), Ashok Kumar Thakku Vs Union of India (2008) ஆகிய வழக்குகளின் தீர்ப்பும் சம்பள வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என உள்ளது.

திரு.கணேஷ் சிங் MP அவர்களின் தலைமையிலான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு 9.03.2019 அன்று மக்களவை சபாநாயகரிடம் அளித்த தனது 21வது அறிக்கையில் பல்வேறு கருத்துக்களை அலசி ஆராய்ந்து சம்பள வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது எனத் தெளிவாக 142 பக்க அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

குழப்பங்களுக்கு காரணமான 2004 ஆண்டு விளக்க ஆணை

இதற்கெல்லாம் அடிப்படையாக மத்திய அரசு நீதி மன்றங்களில் குறிப்பிடும் ஆணையானது மத்திய பணியாளர் நலத் துறையால் கையெழுத்திடப்படாமல் 14.10.2004 ஆம் ஆண்டு கிரீமி லேயருக்காக பிறப்பிக்கபட்ட விளக்க ஆணையாகும் (Creamy Clarification OM). இவ்வாணையின் Para - 9 மற்றும் Para -10 ல் உள்ள முரண்பட்ட விளக்கங்களே அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். இவ்வாணை பிறப்பிக்கப்படும்போது தற்போது புதுச்சேரி முதல்வராக உள்ள திரு.நாராயணசாமி அவர்கள் மத்திய பணியாளர் நலத் துறையின் அமைச்சராக இருந்தார் என்பதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

வருமான வரம்பு உயர்த்துவதில் அரசுகளின் மெத்தனம்

1993 ஆணையின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரீமி லேயர் வருமான வரம்பு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணவீக்கத்திற்கு தகுந்தாற்போல் மாற்றப்பட வேண்டும் என உள்ளது. அவ்வாறு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு இருந்தால் 1993 முதல் இன்று வரை 9 முறை வருமான வரம்பு உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். தோராயமாக அவ்வாறு உயர்த்தப்பட்டு இருந்தால் இன்று குறைந்தது 15 இலட்சங்களாக இருந்து இருக்கும். ஆனால் அய்ந்து முறை மட்டுமே கிரீமி லேயர் வருமான வரம்பு உயர்த்தப்பட்டு இன்று 8 இலட்சமாக இருக்கிறது. இதனால் மிகப் பெரும்பான்மையான இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் வரம்பிற்குள் வராமல் வெளியே தள்ளப்பட்டுள்ளனர்.

கிரீமி லேயரில் பாகுபாடு - EWS பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கும், OBC பிரிவினருக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள்

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்ததைப் போல அரசமைப்பு சட்டக் கூறுகளில், இடஒதுக்கீட்டிற்கு பொருளாதார நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இருந்தும், ஆளும் பாஜக அரசானது தனது சித்தாந்த முடிவான உயர் வகுப்பினருக்கு நன்மை பயக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, கோரிக்கைகள் இல்லாமல், போராட்டங்கள் இல்லாமல், மாநாடுகள் ஏதும் இல்லாமல் கல்வியில், வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீட்டினை ஒரு மாதத்திற்குள் 103 வது சட்ட திருத்ததின் மூலம் 2019ல் நடைமுறைப் படுத்தியது.

SC/ST/OBC பிரிவுகளில் வராதவர்களுக்கு  மட்டும் EWS பிரிவில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டு உள்ளது.

இந்த 10% இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு இரண்டு வரம்புகள் உள்ளன. அவை

I. ஆண்டு குடும்ப மொத்த வருமானம் 8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது மாத வருமானம் ரூ.66,666/-.

II. சொத்து வரம்புகள்

  1. விவசாய நிலம் 5 ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  2. மாநகராட்சி/ நகராட்சிப் பகுதியில் 1000 சதுர அடிக்கு மிகாமல் சொந்த வீடு இருக்க வேண்டும்.
  3. மாநகராட்சி/ நகராட்சிப் பகுதியில் சொந்த குடியிருப்பு மனை 900 சதுர அடிக்கும் கீழ் இருக்க வேண்டும்.
  4. மாநகராட்சி/ நகராட்சி இல்லாத பகுதியில் சொந்த குடியிருப்பு மனை 1800 சதுர அடிக்கும் கீழ் இருக்க வேண்டும்.

OBC பிரிவினருக்கு 6 வகையான வரைமுறைகளை விதித்து, பல குழப்பமான விளக்க ஆணைகளை பிறப்பித்த  இவ்வரசுகள், EWS இடஒதுக்கீட்டில் இரண்டு வரம்புகளை மட்டும் வைத்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டினைப் பெற மிகவும் எளிதாக மாற்றி உள்ளன.

இதனால் EWS பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலோர்க்கு, பெரிய போட்டி ஏதுமின்றி வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்பட்டு இருப்பது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் நடத்தப்பட்ட எழுத்தர் பணிக்கான தேர்வுகளின் முடிவில் வெளிப்பட்டது. இத்தேர்வின் உச்ச வரம்பு மதிப்பெண்கள் (Cut-off)  EWS – 28.5%, OBC - 61.25%, SC/ST – 53.75%. இவ்வளவு குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற அரிய வகை ஏழைகளுக்கு வேலை உத்திரவாதத்தினை இவ்வரசு செய்து கொடுத்து இருக்கிறது. ஆக வெண்ணெய் ஒரு கண்ணிலும் சுண்ணாம்பு ஒரு கண்ணிலுமாக இக் கிரீமி லேயர் வரம்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன என்பதை நாம் உணர வேண்டும்.

23 ஆண்டுகளாகியும் 27% எட்டாத இடஒதுக்கீடு

மிக முக்கியமாக 1.1.2016 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இடஒதுக்கீடு 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தும், மத்திய அரசின் 73 துறைகளில் OBC பிரிவினரின் பங்களிப்பு இன்னும் 27 சதவீதத்தை எட்டவில்லை என்பது தெளிவாகிறது. Group A – 13.01%, Group – B 14.78 and Group C - 22.65% .

அதே போல் 10.07.2019 நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில் Secretary, Addl.Secretary, Under Secretary பதவிகளில் ஒருவர் கூட OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வருகிறது.

இதில் மேற்கொண்டு தனிநபர் ஊதியமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் இடஒதுக்கீட்டு எல்லைக்குள் வராமலே அல்லது உரிமையைக் கைக்கொள்ளாமலேயே மிகப் பெரிய அநீதி OBC பிரிவினருக்கு இழைக்கப்படும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதிகாரமற்றதா?

1993 அமைக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சட்டப்பூர்வமாக இயங்கி வந்ததே தவிர அரசியல் சட்ட அதிகாரமற்ற, பல் இல்லா அமைப்பாகவே இயங்கி வந்தது. எந்தெந்த சாதியை மத்திய பட்டியலில் இணைக்கலாம், நீக்கலாம் என்ற அதிகாரமும், கூடுதலாக ஊதிய வரம்பு உயர்த்தத் தேவையான அறிக்கைகளையும் அவ்வப்போது அரசுக்கு அளித்து வந்தது.

ஆனாலும் கூட வட இந்தியாவில் முன்னேறிய நிலையில் உள்ள ஜாட் பிரிவினரை ஓபிசி பிரிவில் இணைக்க அப்போதைய காங்கிரசு அரசு முடிவு செய்தபோது, அது தவறு என சுட்டிக் காட்டி, தரவுகளுடன் கூடிய அறிக்கையை மத்திய அரசுக்கு 2011ல் அளித்தது. இவ்வறிக்கையை உதாசீனப்படுத்திய மத்திய அரசு 2014ல் ஜாட் பிரிவினரை ஓபிசி பட்டியலில் இணைத்தது. இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றமானது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, மத்திய அரசின் உத்திரவைத் தள்ளுபடி செய்தது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

123வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின்படி 2019 ஆம் ஆண்டு அரசமைப்பு அதிகாரம் பெற்று உள்ள நிலையில், தனிநபர் ஊதியம் வருமான வரம்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் நெருக்குதலுக்குப் பணிந்தும், சர்மா கமிட்டியின் நெருக்குதலுக்குப் பணிந்தும் சமூக நீதிக்கு எதிரான நிலை எடுக்கவா தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது?

சர்மா கமிட்டி அதிகாரம் மிக்கதா?

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஆசியர்கள், தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக, தனிநபர் ஊதியத்தையும் இணைத்து வருமான வரம்பினைக் கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசின் முடிவாகவும், அம்முடிவினை அறிவிக்கும் குழுவாகவும் முன்னாள் பணியாளர் மற்றும் நலத்துறையில் IAS அதிகாரியாக இருந்த பானு பிரசாத் சர்மா அவர்கள் தலைமையிலான குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் டாக்டர் ஜே.கே.பஜாஜ், திருமதி.கட்டரியா ஆகிய மூவரும் பிற்படுத்தப்பட்டோர் இல்லை என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். மேலும் இவற்றையெலாம் தீர்மானிக்க அரசமைப்பு சட்ட அதிகாரம் உள்ள ஆணையம் இருக்கும்போது, இது போன்ற குழுக்களின் அறிக்கைகள் சட்டப்படி செல்லுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

மாற்று வழிகளையும் மறுக்கும் மத்திய அரசு

கிரீமி லேயர் என்பதைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டாலும் கூட இம்முறை வேலை வாய்ப்பு பெறுவதற்கு வேண்டுமானால்கூட இருக்கலாம், ஏனெனில் கல்வி கற்று முடித்த பின் வேலையில் அமர்வது என்பது வருமானம் ஈட்டும் படிநிலை. ஆனால் கல்வி கற்க விண்ணப்பிக்கும்போதே கிரீமிலேயர் முறை என்பது தொடக்க நிலையிலேயே தடை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதைப் போலவே பணி நியமனங்களோ அல்லது கல்விக் கூடத்தில் இடங்களோ அளிக்கப்படும்போது OBC பிரிவில் நிரப்பப்படாத அல்லது காலியாக உள்ள இடங்களை கிரீமி லேயர் பிரிவில் உள்ள OBC பிரிவினருக்கே அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ஆனால் இக்கோரிக்கைகளை மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை.

இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு

நீதிபதிகள், அய்.ஏ.எஸ் அதிகாரிகளின் பிள்ளைகளே இடஒதுக்கீட்டால் மீண்டும் நீதிபதி, அய்.ஏ.எஸ். ஆகிறார்கள், ஆகவே இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என்று பொதுமக்களில் சிலர் கூறி வருகிறார்கள். இது ஒரு தவறான கற்பிதமாகும்.

நடைமுறையில் உள்ள ஆணைகளின்படி Group-A எனப்படும் அய்.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் உள்ளிட்டவர்களும், அரசமைப்புப் பதவி வகிக்கும் நீதிபதிகள், கவர்னர்களும், அய்.நா அவையில் பணி புரிபவர்களும், எட்டு லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், தொழில் முனைவோர் ஆகியோரும் ஓபிசி இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போது குடும்ப வருமானத்தில் தனிநபர் ஊதியத்தையும் கொண்டு வந்தால், சாதாரண குடும்பங்கள் கூட இடஒதுக்கீட்டிற்கு வெளியே தள்ளப்படும் நிலை உருவாகும். ஏனெனில் இன்று கணவன், மனைவி ஆகிய இருவரும் தனியார் துறையில் அல்லது பொதுத்துறையில் பணியாற்றினாலே மாத ஊதியம் ஒரு இலட்சத்தை மிக எளிதாகக் கடந்து விடும். அதுமட்டுமல்லாமல் முதல் தலைமுறையாக உயர் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்று தனக்கு அடுத்த தலைமுறையை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு உரிமையை மறுப்பதாக இம்முடிவு அமையும்.

ஆக ஏற்கெனவே அதிகாரம் உள்ளவர்கள், வசதி படைத்தவர்கள் விலக்கி வைக்கப்பட்டு உள்ள நிலையில், ஓரளவிற்கு படித்த, வருமானம் உள்ள நடுத்தர வர்க்கமாக உள்ளவர்களையும் ஊதிய வருமானத்தை கணக்கு காட்டி விலக்கி வைப்பது இட ஒதுக்கீட்டின் தத்துவதையே கேள்விக்கு உரியதாக மாற்றும் செயலாகும். மோடி அரசின் இச்செயலை சமூக நீதி அக்கறை உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வருமான வரம்பு இடஒதுக்கீடு

இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு அல்லது பொருளாதார நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 15(4) தெளிவாகக் கூறி இருந்தாலும் அரசுகளினாலேயே இது அடிக்கடி மீறப்படுவதும், பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் அல்லது சமூகநீதி இயக்கங்களின், மக்களின் கடும் எதிர்ப்பால் திரும்பப் பெறப்படுவது அடிக்கடி நிகழ்கிறது.

தமிழகத்தில் அவ்வாறான ஓர் ஆணை அதாவது ரூ.9000 வருமான வரம்பு ஆணையானது எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது பிறப்பிக்கப்பட்டது. அனைத்து விதமான இடஒதுக்கீட்டிற்கும் ரூ.9000/- வருமான வரம்பு பின்பற்றப்பட வேண்டும் என 02.07.1979 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இது இடஒதுக்கீட்டிற்கு அடிக்கப்படும் சாவுமணி என்று விழித்துக் கொண்ட சமூகநீதி அமைப்புகளான குறிப்பாக திராவிடர் கழகம், தி.மு.க உள்ளிட்ட பல அமைப்புகளும், அய்யா ஆனைமுத்து போன்றவர்களும் கடுமையாக இவ்வாணையை எதிர்த்தார்கள். இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகள் இதை ஆதரித்தனர். 

பொருளாதார வரம்பு என்பது நிலையில்லாதது, அடிக்கடி மாறக்கூடியது, குழப்பம் உண்டாகக் கூடியது, இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது வருமானத்தாலோ, சொத்து வைத்திருப்பதாலோ அல்லது செல்வத்தாலோ தீர்மானிக்கப்படுவது அல்ல; சாதியே இன்றளவும் பிற்படுத்தப்பட்ட தன்மைக்கு அளவுகோலாக இருக்கிறது என்பதே இவ்வாணையை எதிர்ப்பவர்களின் வாதமாக இருந்தது.

அதற்கு பல உதாரணங்கள் எடுத்துக் காட்டப்பட்டன. சென்னையில் ஓர் அரசு உழியர் பணியாற்றுகிறார் என்றால் அவருக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, பயணப்படி என கூடுதல் படிகள் அளிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.9000-ற்கும் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவர் இடஒதுக்கீட்டின் வரம்பிற்குள் வர மாட்டார். ஆனால் அதே ஊழியர் காஞ்சிபுரத்திற்கு மாற்றல் பெற்றுச் சென்றால் அவருக்கு கிடைக்கும் மாதாந்திர சம்பளத்தில் மேற்படி படிகள் கிடைக்காது. அவரின் வருமானம ரூ.9000ற்கும் கீழ் இறங்கிவிட வாய்ப்புகள் அதிகம். அவர் இடஒதுக்கீட்டி வரம்பிற்குள் வருவார். ஆகவே இது பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல் பணியாளர்கள் அல்லாத வருமான ஈட்டுபவர்களின் வருமானத்தை முறையாகக் கணக்கிட தெளிவான ஒரு நடைமுறையானது நமது நாட்டில் இல்லை. பொய்யாக வருமானச் சான்றிதழகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் இவ்வெதிர்ப்பை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் 02.07.1979 அன்று ஆணையைப் பிறப்பித்தார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் இவ்வாணையை எரித்து, சாம்பலை முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தை அறிவித்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், சாம்பலை தலைமைச் செயலகத்தில் உள்ள குரோட்டன்ஸ் செடிகளுக்கு உரமாகப் போடுவோம் என ஆணவத்துடன் பதிலளித்தார். அதற்கு வீரமணி அவர்கள் நகைச்சுவையாக, "நாவலர் அவர்கள் எம்.ஜி.ஆர் அரசில் கல்வி அமைச்சராகத்தான் இருக்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் தலைமைச் செயலகத்தின் தோட்டக்காரராகத்தான் பணிபுரிகிறார் போலும்" எனப் பதிலளித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

பொருளாதார அளவுகோல் ஆணையில் பிடிவாதமாக இருந்த எம்.ஜி.ஆர் அரசானது 1980ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. பின்னர் , சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த ஆணையை 01.02.1980 அன்று திரும்பப் பெற்றது மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டின் அளவினை 31ல் இருந்து 50 ஆக உயர்த்தினார் என்பது இடஒதுக்கீட்டின் மாபெரும் தடையை தமிழகம் தகர்த்து மேலும் முன்னேறியது என்பதற்கான சிறந்த வரலாற்று உண்மையாகும்.

SC/ST பிரிவினருக்கும் ஏன் கிரீமிலேயர் கூடாது. உச்ச நீதிமன்றம் கேள்வி.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கும் இந்த கிரீமி லேயரை ஏன் SC/ST பிரிவினருக்கு விரிவுபடுத்தக் கூடாது எனவும், ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் Jarnail Singh Vs Lacchmi Narain Gupta (2018) மற்றும் PK Pavithra Vs Union of India – II ஆகிய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்டு, இதற்கான மறு ஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆகவே உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கிரீமி லேயர் என்ற பெயரில் ஆபத்து காத்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

- கு.தனசேகர், பொதுச்செயலாளர், பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் தேசிய பேரமைப்பு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கட்டுரைக்கு உதவிய புத்தகங்கள் :

  • வகுப்புரிமை மலர் – கலச இராமலிங்கம்
  • சமூகநீதி – எஸ்.கே.கார்வேந்தன்
  • இடஒதுக்கீட்டு போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி
  • 21 st Report by Parliamentary Committee On Welfare of OBSs
  • இணைய தளங்கள் : 1. ncbc.nic.in 2. dopt.gov.in