சமூகம் எந்த அளவிற்கு அறிவியலால் நவீனப்படுத்தப் படுகின்றதோ, அதே அளவுக்கு ஆளும் வர்க்கம் சமூகத்தை பிற்போக்குத்தனத்தில் இருந்து விடுபட்டு விடாமல் இருத்தி வைத்துக் கொள்ள முற்படுகின்றது.

பாம்பும் சாகாமல், தடியும் ஒடியாமல் பார்த்துக் கொள்ளும் வித்தை அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

இந்திய தேர்தல் அரசியலே சாதியின் கட்டுமானங்களின் மீது வலுவாக கட்டமைக்கப் பட்டிருப்பதால்தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆன பின்னாலும் இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமை இன்னும் நீக்கமற நீடித்துக் கொண்டு இருக்கின்றது.

தலித் அரசியலின் எழுச்சிக்குப் பின்னால் கூட சாதியின் இறுக்கம் குறைந்ததா, தீண்டாமைக் கொடுமைகள் குறைந்ததா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

எல்லா மக்களுக்குமான கட்சிகள் என்று சொல்லிக் கொண்டவை, சாதிவெறியர்களை ஆதரித்துப் போகும் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன.melpathi templeமற்ற முதலாளித்துவ நாடுகளில் வெறும் முதலாளித்துவ ஜனநாயகமாக மட்டுமே இருந்தது இங்கே சாதிய ஜனநாயகமாக, அதாவது குறிப்பிட்ட சில ஆதிக்க சாதிக்கு ஜனநாயகமாகவும், மற்ற சாதிகளுக்கு ஜனநாயக மறுப்பாகவும் இருப்பதைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், தேர்தல் அரசியலில் அனைத்து சாதி ஓட்டுக்களையும் பெற சாதி, தீண்டாமை ஒழிப்பு என்பதை எல்லாம் தேய்ந்து போன வெற்று முழக்கமாக மாற்றிக் கொண்டார்கள்.

ஒவ்வொரு முறையும் தலித்துக்கள் மீது மூர்க்கமாக சாதிய தீண்டாமை கட்டவிழ்த்துவிடப்படும் போதும் பாதிப்பை ஏற்படுத்திய சாதிவெறியர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் துப்பில்லாத அரசு அவர்களை மயிலிறகால் வருடிவிடும் வேலையைத்தான் செய்கின்றது.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்படாத பிரச்சினையில் தமிழக அரசு சம்மந்தப்பட்ட கோயிலைப் பூட்டி சீல் வைத்திருக்கின்றது.

இந்தாண்டு கோவில் திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டி அவமானப்படுத்தப் பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை தாக்குதல் தொடுத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

2024 ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதால் இந்தப் பிரச்சினையை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி ஓட்டு பொறுக்க முடியுமா என பாமக பார்த்துக் கொண்டிருக்கின்றது. அங்கு கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே வழக்கறிஞர் என்ற போர்வையில் இருக்கும் சாதி வெறியர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

செய்தியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பேட்டி எடுக்க மறுக்கும் காவல்துறை, சாதி கலவரத்தை தூண்டுவதற்காகவே இந்த உலகில் அவதரித்த அருவருப்பான மிருகங்களை உள்ளே அனுமதிக்கின்றார்கள்.

இந்த நிலையில்தான் பாம்பும் சாகாமல் தடியும் ஒடியாமல் தமிழக அரசு கோயிலை பூட்டி சீல் வைத்திருக்கின்றது.

தலித்துகளை கோயிலுக்குள் விட மறுக்கும் சாதிவெறி பிடித்த காலிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனே கைது செய்து சிறையில் அடைக்காமல் கோயிலைப் பூட்டுவதால் என்ன நடந்துவிடப் போகின்றது?

அதே போல கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வீரணம் பட்டியில் காளியம்மன் கோயிலின் திருவிழாவின் போது கோயிலுக்கு பட்டியிலின இளைஞர்கள் வந்து சாமி கும்பிட்டுள்ளனர். சாமி கும்பிட்ட பின்பு திருநீறு கேட்டுள்ளார்கள். கோயில் பூசாரி திருநீறு தர மறுத்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட பிரச்சினையில் கோயில் சீல் வைக்கப்பட்டிருக்கின்றது.

மேல்பாதி மற்றும் வீரணம் பட்டியில் மட்டுமா தீண்டாமை கொடுமை உள்ளது? தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை. இவை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசே கொடுத்த உறுதியான தகவலாகும்.

அப்படி இருக்கும் போது சாதி வெறியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாமல் கோழைத்தனமாக கோயிலைப் பூட்டுவதா? இதற்கு பெயர்தான் தீண்டாமை ஒழிப்பா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் வைகுந்த ஏகாதசி தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தீண்டாமை என்ற சூழ்நிலை நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சியில் இருக்காது” என்று உறுதியாகக் குறிப்பிட்டார்.

ஆனால் இதுவரை வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அந்த கொடூர சாதிய சைக்கோக்கள் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளைப் போல அரசு நடத்திக் கொண்டு இருக்கின்றது.

தலித்துக்கள் கோயிலில் நுழையும் உரிமையைக் கேட்டால் கோயிலை மூடி சீல் வைக்கின்றார்கள். தீண்டாமையை ஒழிக்கும் திராவிட மாடலின் லட்சணம் இதுதானா?

இன்னும் எத்தனை நூறாண்டுகள் அவர்கள் தங்களையும் ஒரு மனித உயிராக மதிக்கச் சொல்லி போராடுவார்கள்? இன்னும் எத்தனை பெரியாரும் அம்பேத்கரும் தோன்றி உங்களின் செவிட்டில் அறைவார்கள்?

இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் நீங்கள் சாதியை ஒழிப்போம், தீண்டாமையை ஒழிப்போம் எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவீர்கள்? இட ஒதுக்கீட்டை மட்டும் கொடுத்துவிட்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவர்களின் வழிபாட்டு உரிமையைக்கூட அங்கீகரிக்காமல், அவர்களை கோயிலுக்கு வெளியே நிற்க வைக்கப் போகின்றீர்கள்?

எதையும் செய்யும் வல்லமை படைத்த அரசின் கரங்கள் ஏன் சாதிவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது? உங்களைத் தடுப்பது எது? ஓட்டுப்பொறுக்கி அரசியலின் வெற்றியா? அதன் மூலம் கிடைக்கும் கொழுத்த வருமானமா?

தீண்டாமையைக் கடைபிடிக்காத கிராமங்களுக்கு அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கொடுக்கின்றோம் என்று சொன்னீர்களே! ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை கிராமங்கள் அந்தப் பணத்தை வாங்க தகுதியுடையதாக மாறியிருக்கின்றது?

வாங்கவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தீண்டாமை நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா?

உங்களின் குருட்டுக் கண்களுக்கும், செவிட்டுக் காதுகளுக்கும், சுரணையற்ற மனங்களுக்கும் சாதி ஒழிப்பு பற்றியோ, தீண்டாமை ஒழிப்பு பற்றியோ எதாவது பிரக்ஞை இருக்கின்றதா?

தமிழ்நாட்டின் முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தை ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர் (07.02.1927) நடத்தி 96 ஆண்டுகள் ஆகிவிட்டது. திருவண்ணாமலை கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றதற்காக அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினார்கள் அன்றைய பார்ப்பன கேடிகள். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. (ஆதாரம்: ‘குடிஅரசு’ 6. 5. 1928).

96 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முடிந்த நம்மால் இன்று அழைத்துச் செல்ல முடியாமல் கோயிலைப் பூட்டி சீல் வைத்திருக்கின்றோம் என்றால் இது வளர்ச்சியா? அவமானகரமான தோல்வியா? இது எல்லாம் பார்ப்பன பாசிசத்தின் கணக்கில் வராதா? என்பதை திமுகதான் சொல்ல வேண்டும்.

அனைத்து முற்போக்கு இயக்கங்களும் கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் ஒன்று பட்டு தமிழகம் முழுக்க சாதிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக உள்ள சக்திகளை எல்லாம் திரட்டி பெரும் போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டும்.

சட்ட மன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் மட்டுமே சாதியை, தீண்டாமையை ஒழிக்கும் என இன்னும் சொல்லிக் கொண்டிருந்தால் நாளை வரலாற்றில் நாம் அனைவரும் காறி உமிழப்படுவோம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

முற்போக்கு அரசு என சொல்லிக் கொண்டிருக்கும் திமுகவை முற்போக்காக செயல்பட வைக்க சட்டமன்றத்திற்கு வெளியேயான மக்கள்திரள் போராட்டங்களால் மட்டுமே முடியும்.

- செ.கார்கி

Pin It