மாநில அமைப்பு கமிட்டி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) தமிழ்நாடு என்ற அமைப்பின் முன்னாள் செயலாளரான தோழர் கணேசன் என்கிற அன்பழகன் கடந்த மாதம் 28ஆம் தேதி திருச்சியில் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். அன்று மாலையே மா.அ.க.இ.பொ.க.(மா-லெ) தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு படம் முகநூலில் வெளியிடப்பட்டது. அதில் "இந்திய புரட்சிக்காக மக்கள் திரள் வழியை வடிவமைத்தவர்களில் ஒருவரும் இ.பொ.க (மா-லெ) மாஅக-வை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களின் ஒருவருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கணேசன் என்ற அன்பழகன்" என்றும், அதே பெயரில் 29.06.2022 அன்று 'மக்கள் அதிகாரம் தமிழ்நாடு' என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அஞ்சலிக் குறிப்பில் எமது அமைப்பின் முதல் தலைமைக் கமிட்டியில் இருந்து தொடர்ச்சியாக அங்கம் வகித்ததுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

29.06.2022 அன்று ,'மக்கள் அதிகாரம்' (ராஜூ குழு) என்ற இணையதளத்தில் மாஅக பெயரில் வெளியிடப்பட்ட  அஞ்சலிக் குறிப்பில் "இத்தகைய புரட்சிகர அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டு எழுபதுகளில் கட்சியில் செயல்படத் துவங்கிய தோழர் கணேசன் வேறுசில புரட்சிகரத் தோழர்களுடன் இணைந்து இந்திய சமூக அமைப்பிற்கு பொருத்தமான மக்கள்திரள்வழி ஒன்றை உருவாக்கி செயல்படவேண்டும் என்று முன்வைத்தார். இதனடிப்படையில் இந்திய சமுதாய அமைப்பை மார்க்சிய லெனினிய அறிவியலைக் கொண்டு ஆய்வுசெய்து புரட்சிகரமான முன்னுதாரணமிக்க அரசியல் கோட்பாட்டு முடிவுகளை வகுத்தவர்களுடன் முன்னணி தோழராக செயல்பட்டார். அந்த அரசியல் கோட்பாட்டு முடிவுகளுடைய சாராம்சத்தின் அடிப்படையில் கட்சித் திட்டத்தை அறிவியல்பூர்வமாக செழுமைப்படுத்தி முன்னணித் தோழர்களுடன் இணைந்து  செயல்படத் தொடங்கினார்."  என்று குறிப்பிட்டுள்ளனர்.

soc posterவினவு இணையதளத்தில் 04.07. 2022 அன்று 'வீரவணக்கம் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய சில குறிப்புகள்' என்ற தலைப்பில் மா.அ.க.இ.பொ.க.(மா-லெ) தமிழ்நாடு பெயரில் ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் "அன்பழகன் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், நக்சல்பாரி புரட்சிகர அரசியலை ஏற்று 1970-களின் தொடக்கத்தில் நாட்டையும் மக்களையும் விடுதலை செய்யும் இலட்சியத்தோடு முழுநேர ஊழியராகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அன்று, இடது சந்தர்ப்பவாத வழிமுறையாலும் அரசின் கொடூர அடக்குமுறையாலும் இ.பொ.க. (மா-லெ) பிளவுபட்டிருந்த சூழலில், மாற்று வழியை – மக்கள்திரள் வழியை முன்வைத்து 1977-இல் மாநில அமைப்புக் கமிட்டி உதித்தெழுந்தபோது, மா.அ.க.வின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவரும் குறிப்படத்தக்க பங்காற்றினார். பின்னர் 1981-இல் நடந்த மா.அ.க.வின் மூன்றாவது பிளீனத்தில் அவர் எமது அமைப்பின் நான்காவது செயலராகப் பொறுப்பேற்றார்." என்று எழுதியுள்ளனர்.

இவையில்லாமல் முகநூலிலும் வலைப் பூக்களிலும் மாஅக-வின் முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள்/ஆதரவாளர்கள் தோழர் கணேசனின் மரணம் குறித்து பல செய்திகளை எழுதியுள்ளனர். ஆனால் இவை எவற்றிலும் முழுமையான உண்மையான வரலாறு எழுதப்படவில்லை.

மாஅக என்ற பெயரில் மூன்று அறிக்கைகள் முரண்பாட்டுடன் - திரிபுகளுடன் வெளிவந்துள்ளன. ஆனால், இந்த வரலாற்றுத் தவறுகளை விமர்சித்தோ சுட்டிக் காட்டியோ யாரும் எழுதியது போலத் தெரியவில்லை.

இ.பொ.க.(மா-லெ)-வில் தோழர் சாருமஜூம்தாரின் தனிநபர் அழித்தொழிப்பு மற்றும் இடது தீவிரவாத வழிமுறையை எதிர்த்துப் மக்கள்திரள் வழியை முன்வைத்துப் போராடியதால் 1975 இல் தமிழ் மாநிலக் குழுவின் கீழ் மேற்கு மண்டலத்தில் இயங்கிய கட்சி குழு வெளியேற்றப்பட்டது. இதன் பின்னர் மேற்குப் பிராந்தியக் குழு தன்னை தற்காலிக அமைப்புக் குழுவாக 1976 இல் அமைத்துக் கொண்டு செயல்பட்டது. பின்னர் 1977-ல் தனது முதல் பிளீனத்தைக் கூட்டி 'மாநில அமைப்பு கமிட்டி, 'இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) தமிழ்நாடு' என அமைத்துக் கொண்டது. அப்போது மேற்கு பிராந்தியக் குழுவில் இருந்தவர்கள் 1.கபிலன், 2.கருணா மனோகரன், 3.எம்எஸ், 4.செந்தில், 5.சுந்தரம் ஆகியோர். மாஅக-வின் முதல் தலைமைக் குழுவில் இருந்தவர்கள் 1.கபிலன் (செயலாளர்) 2.கருணா மனோகரன் 3.கனி என்ற நல்லசிவம் 3.செந்தில், 4.சுந்தரம் ஆகியோர். இந்த காலகட்டத்தில் தோழர் கணேசனின் பங்களிப்பு என்ன?  மக்கள் திரள் வழியை உருவாக்கியதில் அவர் என்ன பங்காற்றினார்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

ஏதோ போகிற போக்கில் கணேசன் தான் மக்கள் திரள் வழியை வடிவமைத்தார், இ.பொ.க.(மா-லெ)வை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவர் என்று சொல்வது யாரை ஏமாற்ற? மக்களுக்காக இறுதிவரை வாழ்ந்த ஒருவரைப் பற்றி மிகையாகவோ குறைவாகவோ எழுதுவது அவரையும் அவர் சார்ந்த அமைப்பு - மக்கள் - தோழர்கள் அனைவரையும் இழிவுபடுத்துவது ஆகாதா?

மாஅக-வின் முதல் தலைமைக் குழுவில் தோழர் கணேசன் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்கள் வரலாற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய உறுப்பினர்கள் அதனைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.  இங்கு புதியவர்கள் கேள்வியே கேட்பதில்லை (கேட்கவும் விடுவதில்லை). பழைய முன்னாள்/ இந்நாள் உறுப்பினர்கள் உண்மையைச் சொல்வதும் இல்லை.

தலைமைக் குழுவில் இருந்த கபிலன், செந்தில் என்ற இருவரும் தற்போது கட்சியில் இல்லை என்பதற்காக அவர்களது பங்களிப்பை மூடி மறைக்கப் பார்க்கிறார்களா? கருணா மனோகரன், கனி போன்ற பலர் மரணமடைந்து விட்டதால் யாரும் வந்து கேட்க மாட்டார்கள் என்று தைரியத்தில் வரலாற்றை இருட்டடிப்பு செய்யப் பார்க்கிறார்களா?

இதற்கெல்லாம் முதன்மைக் காரணம் கட்சியின் தலைமை யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்காதது தான். உலகிலேயே தலைவர் யார் என்று அறிவிக்கப்படாமல் இயங்கும் ஒரே அமைப்பு மாஅக தான். தலைவர்/செயலாளரை அறிவிக்காமல் செயல்படுவது என்பது தன்னுடைய தவறுகளை மூடி மறைப்பதற்கும், தவறுகளுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதற்கும் மிகவும் வசதியாக உள்ளது. அதைத்தான் சில ஆண்டுகளாக மாஅக-வில் வெளிப்டையாக நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தன்னை வழிநடத்தும் கட்சியின் தலைமை யார் என அணிகளுக்கே தெரியாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தைவிட மிகக் கடுமையான அடக்குமுறைகள் உள்ள பல மாநிலங்களில், நாடுகளில் செயல்படும் அமைப்புகள் அனைத்துமே (கட்சி கமுக்கமாக இருந்தாலும்) வெளிப்படையாக தன்னுடைய தலைமை யார் என அறிவித்துவிட்டுதான் செயல்படுகின்றன. ஆனால் மாஅக மட்டும்தான் 'தனித்துவமான' அமைப்பு முறையை வைத்துள்ளது. தலைமைக் குழுவில் உள்ளவர்களுக்கும், போலீசு உளவுத்துறைக்கும் மட்டும் தான் மாஅக தலைமைக் குழுவில் யார் யார் உள்ளார்கள் என்பது தெரியும் போல. சிதறுதேங்காயைப் போல பல குழுக்களாக சிதறுண்டு போனாலும் இந்த ,'தனித்துவமான அமைப்பு முறை'யில் மட்டும் அவர்களிடம் சிதறலே இல்லை.

இறுதியாக, இவர்களின் வரலாற்றுப் புரட்டுகளை யார் சரி செய்யப் போவது? கபிலனும், செந்திலும் வந்து உண்மைகளைச் சொல்லப் போவது இல்லை? கேள்வி கேட்டால் அணிகள் வெளியேற்றப்படுவார்கள். ஓடுகாலிகள், கலைப்புவாதிகள், சந்தர்பவாதிகள், சீர்குலைவுவாதிகள் என முத்திரைக் குத்தப்படுவார்கள். செக்குமாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருக்கிறது மாஅகவின் 'வரலாறு'.

- குமரவேல்

Pin It