“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாரதியின் கூற்றுக்கு இணங்க தமிழ் மொழி உலகின் மூத்த மொழி யாகவும் முதன்மை செம்மொழியாகவும் பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தனித்தன்மையுடன் விளங்கி வருவதை நாம் அறிய முடியும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பல மொழிகள் இன்று வழக்கில் இல்லை தோன்றிய பல மொழிகள் எழுத்து வடிவமே இல்லாதும் இருந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டு முதல் இன்று வரையும் தனித்த சிறப்புடைய மொழியாய் தமிழ்மொழி விளங்குவதற்கு அடிப்படைக் காரணம், அம் மொழியின் இலக்கண இலக்கிய வளமையே ஆகும்.

kapilar 450பண்டைய காலத்திலேயே இலக்கியத்தை கற்பனைத் திறனோடு மட்டுமின்றி அறிவியல் பார்வையோடு ஆராய்ந்து புலவர்கள் இலக்கியத்தை படைத்தப் பாங்கு மிகுந்த சிறப்புடையது. காதலையும் வீரத்தையும் இருகண்கள் என கொண்டு தமிழர்கள் இயற்கையை நன்கு புரிந்து அதற்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். சங்ககால தமிழ் இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் சமூகம் மற்றும் இயற்கை புரிதலோடு அழகுற புனையப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டுத்தொகை தனிப்பாடல் திரட்டு இருந்திட அதனை தமிழறிஞர்கள் தொகுத்தனர் ஆனால் அக்காலத்திலேயே 782 அடிகள் வரையும் தனி ஒரு தனி ஒரு நூலும் எழுதப்பட்டது என்றால் இலக்கியத்தினை புலவர்களால் எப்படி படைக்க முடிந்திருக்கும். அதனை எவ்வாரு படிக்கவும் முடிந்திருக்கும் என்பது வியப்பே ஆகும்.

குறிப்பாக பத்துப்பாட்டு நூல்கள் அனைத்துமே தனிப்பாடல் திரட்டு அல்ல தனி நூல்கள் ஆகும் அவற்றுள் இறைவழிபாட்டை மையமிட்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட திருமுருகாற்றுப்படை கூட மிகச் சிறந்த இயற்கை நெறி கொண்ட படைப்பாக இருக்கிறது. உலக ஆய்வாளர்கள் கிரேக்கத்தைப் போல தமிழர்களும் மிகச் சிறப்பான வாழ்வை வாழ்ந்து வந்தனர். அவர்கள் இயற்கையை மிகுந்து நேசித்தனர். இயற்கைக்கு ஏற்பவே தங்கள் வாழ்வை அமைத்து மட்டுமின்றி வீரயுகமாகவும் அக்காலம் விளங்கி இருக்கிறது என்றால் இயற்கையையும் சமூகப் பார்வையையும் புரிந்துகொண்ட பண்டைய புலவர்கள் அதனை நன்கு எடுத்து விளக்கினர்.

“ இயற்கை அழகு மனித அரங்கு ஆக்கி இரண்டு கலங்களில் கவிஞரின் தொழிற்சாலைகள்”(aspects of poetry.p70)

 என்று கவிஞரின் தொழிற்சாலையாக அமைந்தது இயற்கையும் மனித செயலுமே என்கிறார். அதற்கேற்ப தமிழரின் சிந்தனைகள் யாவும் இயற்கையோடே அமைந்திருக்கிறது மேற்கூறிய கருத்தை ஏற்று ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' எனும் நூலில் மு. வரதராசனார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். அதாவது “

 “இயற்கையியல் விருந்தியல் (Naturalism and Romantism) ஆகிய இரண்டும் சங்க இலக்கியத்தின் பண்புகளாக உள்ளன” என்று குறிப்பிடுவார். குறிப்பாக பண்டைய தமிழர் இயற்கையின் கதிரவன், மதி நிறைந்த நட்சத்திரங்கள், பூக்கள், மரங்கள், செடிகள், கொடிகள், நீர் நிலைகள், மலைகள், காடுகள், சமவெளிப் பகுதி, கடல் பகுதி, மணல் பரப்பு என யாவற்றையும் எடுத்துரைப்பதில் வல்லமயையைக் காட்டியுள்ளனர். தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் மனிதன் வாழ்வதற்குரிய முதல் பொருளே! நிலமும் பருவகாலமமுமே என்று உரைத்தார். அதேபோல நிலம் பருவ காலத்திற்கு ஏற்ப அமைந்த இயற்கை சுற்றுப்புறச்சூழல் தாவரங்கள் விலங்குகள் என பலவற்றையும் எடுத்துரைத்தார். சங்க இலக்கியத்தில் தொல்காப்பிய நெறிப்படியே சங்க இலக்கியங்கள் பாடல்கள் பெரும்பாலும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்பது நமக்குப் புலப்படுகிறது. அதில் ‘குறிஞ்சிப்பாட்டு' என்கிற ஒரு நூல் தனித்த அடையாளம் மிக்க நூலாக விளங்குகிறது. பழந்தமிழக புலவர்கள் இயற்கையை நேசிப்பதில் சிறந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டே குறிஞ்சிப்பாட்டு.

 மிகச் சிறந்ததாக அமைந்த நூலில் அறுபத்தி ஒன்றாம் பாடல் தொடங்கி தொண்ணூற்று ஏழாம் பாடல் அடிகள் வரை கவிஞர் அவர்கள் 96 வகை பூக்களை தொடர்ச்சியாக எழுதி இருப்பது நமக்கெல்லாம் மிகுந்த வியப்பை தருகிறது.

 மலையும் மலை சார்ந்த பகுதியில் உள்ள பூக்களை எல்லாம் ஒருங்கே தொகுத்து அவற்றை பின்வர காண்போம்.

 “பெரிய இதழ்களையுடைய ஒள்ளிய சிவந்த கோடற் பூ, ஆம்பல் பூ, அனிச்சம் பூ, குளிர்ந்த குளத்தில் அழகுற மலர்ந்த செங்கழுநீர்ப் பூ, குறிஞ்சிப்பூ, வெட்சிப் பூ, செங்கொடு வேரிப் பூ, தேமாம் பூ, நறுமணமுடைய விரிந்த கொத்தினை உடைய பெருமூங்கில் பூ, வில்லப் பூ, நெருப்பை ஒத்த எறுழம் பூ, மராமரப் பூ, கூவிரம் பூ, வடவனப் பூ, வாகைப் பூ, வெண்மையான பூக்களை உடைய வெட்பாலைப் பூ, பஞ்சாய் கோரைப் பூ, வெண் காக்கணம் பூ, நீலமணி போன்ற கருவிளம் பூ போன்றவையும்,

 பயினிப் பூ, வானிப் பூ, பல இதழ்களையுடைய குரவம் பூ, பச்சிலை பூ, மகிழம் பூ, பல கொத்துகளை உடைய காயாம் பூ, விரிந்த பூக்களையுடைய ஆயிரம் பூ, சிறு மூங்கில் பூ, சூரைப் பூ, சிறுபுளைப் பூ, குன்றிப் பூ, முருக்கிலை எனும் பூ, மருதப் பூ, விரிந்த பூக்களை உடைய கோங்கம் பூ, மஞ்சாடிப் பூ, தேன் வாசனை போன்று மணம் தரும் பரிதிப் பூ,

 செருந்திப் பூ, புனலிப் பூ, பெரிதாகவும் குளிர்ந்தும் காணப்படும் செண்பகப் பூ, நறுமணமுடைய கரந்தைப் பூ, காட்டு மல்லிகை பூ, மணம் பெறுகின்ற தழைத்த மாம் பூ, தில்லைப் பூ, பாலைப் பூ, கல்லில் படர்ந்த முல்லைப் பூ, கஞ்சங்குல்லைப் பூ, பிடவம் பூ, செங்கருங்காலிப் பூ, வாழைப் பூ, வள்ளிப் பூ, தென்னம் பாளை, செம்முல்லைப் பூ, முற்களைக் கொண்ட நாளம் பொருந்திய தாமரைப் பூ,

 ஞாழல் பூ, மெளவல் பூ, நறுமணம் மிகுந்த கொகுடிப் பூ, மல்லிகைப் பூ, சாதிப் பூ, கருந்தாமக் கொடிப் பூ, வெண்கோடல் பூ, தாழம் பூ, தாது முதிர்ந்த நறுமணமிக்க சுரபுன்னைப் பூ, காஞ்சிப் பூ, நீலமணி போன்றகொத்துக்களை உடைய தேன்மணம் கமழும் கருங்குவளைப் பூ, பாங்கர்ப் பூ, மரவம் பூ, பல பூக்கள் கொத்தாக இருக்கின்ற தணக்கம் பூ, இண்டம் பூ, இலவம் பூ, தூங்குவது போல பூங்கொத்துக்களை உடைய கொன்றைப் பூ, அரும்பப் பூ, ஆத்திப் பூ , நீண்ட கொடியை உடைய அவரைப் பூ, பகன்றைப் பூ, பலாசம் பூ, பல் பூக்கள் மிகுந்த அசோகம் பூ,

 வஞ்சிப் பூ , பிச்சிப் பூ, கரு நொச்சிப் பூ, தும்பைப் பூ, திருத்துழாய்ப் பூ, விளக்கு போன்று இருக்கக்கூடிய தோன்றிப் பூ, நந்தியா வட்டப் பூ, நறைகொடி, வாசம் மிகுந்த புன்னகம் பூ, பருத்திப் பூ, பீர்க்கம் பூ, பசியை தன்மையை உடைய குருக்கத்திப் பூ, சந்தப் பூ, அகிற் பூ, பெரும் புன்னைப் பூ, சிறு புன்னைப் பூ, நார்த்தம் பூ, நாகப் பூ, இருள்வாசிப் பூ

 போன்ற இன்னபிற பூக்களை எல்லாம் ஒருங்கே ஆராய்ந்து எண்ணி எடுத்துரைத்து சிறப்பே இயற்கையோடு பண்டையோர் வாழ்வதற்கு முதன்மைச் சான்றாக அமைகிறது. பூக்களெல்லாம் ரசித்து தெளிவுற தொகுத்து பல காலம் ஆய்ந்து நின்று விளக்கும் கபிலரின் தனித்திறமை எத்தகைய சிறப்பிற்குரியது. சில பூக்களைத் தவிர பெரும்பாலான பூக்களை மறந்து இயற்கையை மறந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பண்டைய புலவர் ஒருவர் இயற்கையின் அனைத்து பொருட்களையும் நுணுகி ஆராய்ந்து அவற்றை எல்லாம் நூலில் தொகுத்து உரைப்பதும், குறிப்பாக மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின்கண் பலகாலும் திரிந்து கண்டு கேட்டு நுகர்ந்து மரமும் கொடியும் செடியும் புல்லும் பூண்டும் முதலுமாய் அடர்ந்து காட்டுள் சென்று வண்ண வண்ண மலர்களை மனத்தாலும் விளங்கிக் கொண்டு பெருமையை வியந்து குறிஞ்சிப் பாட்டு நூலின் உரையாசிரியர் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

 இயற்கையின் கருப் பொருட்களான மரம், செடி கொடி, பூக்கள் என தாவரங்களையும் இன்ன பிறவற்றையும் இயற்கையின் அழகு ஓவியங்களையும் எடுத்துரைத்த புலவர்களில் கபிலர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராக காணப்படுகிறார். குறிப்பாக இயற்கையை கற்பனையுடன் வடித்து பெறுவதற்கும் கற்பனை இல்லாமல் பாடுவதற்கும் உள்ள வேறுபாடுதான் (Some Principles of Literary Criticism.p.69) என்று வின்செஸ்டர் எடுத்துரைக்கிறார். அடிப்படையில் ஒரு கவிஞன் தான் கண்டதை எல்லாம் எடுத்துரைக்காமல் தன் மனம் கவர்ந்தவற்றையே எடுத்துரைப்பான். அப்படி எடுத்துரைக்கும் இலக்கியமே வெற்றி பெறுகிறது. அவையே சிறந்த இலக்கியமாகவும் அமைகிறது. தாவரவியல் பற்றி இன்றைய காலத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கிற சூழலில் பழங்காலத்திலேயே அரிஸ்டாடில் போல கபிலரும் ஒரு தாவரவியல் வல்லுனராக விளங்கியிருக்கிறார். ஆக இயற்கையோடு ரசிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையோடு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கூறப்பட்டு உள்ளது. தமிழக வரலாற்றில் இயற்கையியல் புரிதல் கொண்ட சமூகமாக பழந்தமிழகம் விளங்கி இருக்கிறது என்பதற்கு மேற்கூறிய கருத்தியலே எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எவ்வித வியப்பும் இல்லை.

முனைவர் பா.பிரபு
உதவிப் பேரசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீமாலோலன் கலை அறிவியல் கல்லுரி,
மதுராந்தகம்-603306

Pin It