வட வேங்கம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு எனத் தமிழ் மொழியினால் அடையாளப் படுத்தப்பட்ட பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பு நுண்ணரசியல் பின்புலமுடையது. சங்கப் பாடல்கள் மொழியின் வழியே இயற்கைச் சூழலில் வாழ்ந்துவந்த மக்களை வெளியுடனும் காலத்துடனும் ஒருங்கிணைக்கும் பணியை நுட்பமாகச் செய்துள்ளன. பரந்துபட்ட நிலப்பரப்பில் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்த தமிழர்களைப் பற்றிய பேச்சுகளை உருவாக்கியுள்ள சங்க இலக்கியப் படைப்புகள் எவற்றை வலியுறுத்த முயலுகின்றன? யோசிக்க வேண்டியுள்ளது. நினைவுகளின் வழியே தமிழர் வரலாற்றினைச் சாத்தியப்படுத்துகின்ற தமிழ் மொழியானது, மனிதர்களை நிலத்துடனும் சமூகத் துடனும் பிணைக்கின்றது.

மனதின் நினைவுகளின் வழியே வரம்பற்று விரியும் நிலப்பரப்பானது, குறிஞ்சி முதலான ஐவகை நிலப்பாகுபாடுகளாகத் தகவமைக்கப் பதற்குச் சங்கப்பாடல்கள் பெரிதும் உதவின. மலையில் வேட்டையாடிய வேடர்களையும், முல்லை நிலத்தில் ஆநிரை மேய்த்த ஆயர்களையும், கடல்பரப்பில் மீன் பிடித்த மீனவர்களையும் ஏதோவொரு கண்ணியில் இணைக்க வேண்டிய தேவையினைச் சங்கப்பாடல்கள் நிறைவேற்றியுள்ளன. இனக்குழு வாழ்க்கை சிதை வடைந்து, புதிய வகைப்பட்ட அரசியல்நிலை உருவாகும் போது, அதற்கேற்ற வகையில் மக்களின் வாழ்க்கைமுறை மாற்றமடைந்தது. பல்வேறு குடிகளுக்கான மரபுகள், பழக்கவழக்கம், சடங்குகள் போன்றன மாற்றத்திற் குள்ளாகிப் புதிய நிலம் பற்றிய தேடல் விரிந்தது.

இனக்குழுத் தலைவனின் அதிகாரத்தினுக்குட்பட்ட  சிறிய நிலப்பரப்பு சிதைக்கப்பட்டு, பெருநிலப்பரப்பு உருவாக்கப்பட்டது. இனக்குழுவினராக வாழ்ந்துவந்த நிலைமை மாறி, குறுநில மன்னர்கள் வலுவடைந்தனர். மூவேந்தர் என்ற அரசியல் நோக்கிய செயல்பாட்டினை ஊக்குவிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றதற்கான சான்றுகள் சங்கப்பாடல்களில் நிரம்ப இடம் பெற்று உள்ளன. வேந்தர்களின் ஆளுகையின்கீழ் தமிழ் நிலப்பரப்பில் அரசியலதிகாரம் பற்றிப் படர்ந்தது. இத்தகு சூழலில் தமிழ் நிலவெளியில் சுற்றித் திரிந்த பாணர்கள், கருத்தியல்ரீதியில் வேந்தனின் அரசியல் அதிகாரத்தினுக்குத் தளம் அமைத்தனர்.

சங்கத்திணைசார் வாழ்க்கையில் தொன்மையான பழங்குடியினரான பாணர்கள் இடம் விட்டு இடம் பெயரும் இயல்பினர். அவர்கள் இசை, பாடுதல், மந்திரம், குறிசொல்லுதல், மருத்துவம் போன்றவற்றில் திறமையானவர்கள். யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டியவாறு இசைப்பாடல்களைப் பாடி, புரவலர் களிடம் பரிசில் பெற்ற பாணர்கள் கூடி வாழ்ந்தனர். வல்லாண் முல்லை சார்ந்த பாடல்களைப் பாடிய வாய்மொழி மரபினரான பாணர்களுக்கும், இனக்குழுத் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

முதுவாய்ப்பாணர் என அழைக்கப்பெற்ற பாணர் மரபினர், பழந்தமிழர் இனவரைவியல் வாழ்க்கையில் முக்கிய இடம் வகித்தனர். அரசியல் மாற்றத்தினால் வேந்தர்களின் அதிகாரம் வலுவடைந்த நிலையில், பாணர் மரபு வீழ்ச்சியடைந்தது. புரவலர் ஆதரவின்றி, பாணர்கள் அடுத்தவேளை உணவுக்காக வாடி வதங்கி வறுமைக்குள்ளாயினர். இத்தகைய பாணர்களில் ஒருவன் சோழன் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பு கையில், எதிரே வறுமையான நிலையில் வரும் பாணனுக்குச் சொல்வதாக அமைந்துள்ளது பெரும் பாணாற்றுப்படை. கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் தொண்டை நாட்டை ஆண்ட திரையனின் புகழையும் ஆற்றலையும் போற்றிப் பாடியுள்ள பெரும்பாணாற்றுப்படையில் அன்றைய நிலவெளி நுட்பமாகப் பதிவாகியுள்ளது. வேந்தனான திரையனைக் காணச் செல்லும் வழி பற்றிய வருணனை சுற்றுச்சூழல் பற்றிய பதிவாக விளங்குகின்றது.

பண்டைத் தமிழரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாக அமைந்திருந்தது. உயிரற்ற பொருட்கள், உயிருள்ள பொருட்கள் என்றிருக்கும் சூழலில், மனிதனும் இயற்கையின் அங்கம் ஆவான். தாவரங்கள், விலங் கினங்கள் உயிர்த்திடும் பூமியில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவை வாழும் சூழ்நிலை பற்றியும் அவற்றுக்கிடையில் நிலவும் உறவைப் பற்றியும் அறிதல் சுற்றுச்சூழலில் முக்கிய மானது. சுற்றுச்சூழல் ஆரோக்கியமானதாக விளங்கிடும் நிலையில், அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ வழியேற்படும்.

தொல்காப்பியர் உலகம் எவற்றால் ஆனது என்பதை நுணுக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலந்தீ நீர் வளி விசும் போடைந்துங்

கலந்த மயக்க முலகம்

(தொல்காப்பியம், பொருளதிகாரம்,மரபியல்:89)

நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் ஆகிய வற்றின் கலவையாலான உலகம் என்ற கருத்தியல் பண்டைத்தமிழரின் சூழலியல் பற்றிய அறிவுக்குச் சான்றாக விளங்குகின்றது. மேலும்  உயிரினங்கள் வாழ் வதற்கேற்ற வாழிடம் பற்றிய புரிதல் ஐந்திணை நிலப் பாகுபாடாக வெளிப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தை ஐந்தாகப் பகுத்த துடன், அங்கு வாழும் உயிரினங்களையும் தனியாகக் குறிப்பிட்டுள்ளது அறிவியல் அடிப்படையிலானது. திணைப் பாகுபாட்டில் இடம்பெற்றுள்ள கருப் பொருளானது, ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தில் தோன்றி யுள்ள உயிரினங்களின் கூட்டான வாழ்நிலையையும் உயிரற்ற பொருட்களும் இணைந்து செயல்படுவதையும் குறிக்கின்றது.

சங்ககாலத் தமிழர்கள் சக உயிரினங்களுடன் எங்ஙனம் ஒத்திசைந்து வாழ்ந்தனர் என்பது சங்கப் பாடல் களில் வெளிப்பட்டுள்ளது. சங்க இலக்கியம் பெரிதும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தந்துள்ளதைப் பெரும் பாணாற்றுப்படை மூலம் அறிய முடிகின்றது. மரத் தினை நெருங்கிய உறவாகக் கருதிடும் சங்க மரபில், பெரும்பாணாற்றுப்படை சித்திரிக்கும் சுற்றுச்சூழலைக் கண்டறிய வேண்டியுள்ளது.

குறிப்பிட்ட நிலப்பரப்பில் இனக்குழுவினராக வாழ்ந்து வந்த சங்கத் தமிழர்களின் நிலம் சார்ந்த புரிதல் வரையறைக்குட்பட்டது. தகவல் தொடர்பு, போக்கு வரத்து வசதிகள் அற்ற காலகட்டத்தில், வேறுபட்ட நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறையினை அறிமுகப்படுத்தும் நோக்கில் பயணநூலாக ஆற்றுப் படை நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம்.  மலையில் வாழும் வேடரையும், கடல்பரப்பில் வாழும் பரத வரையும் பற்றிய பேச்சுகளை உருவாக்கியுள்ளதில் அன்றைய வேந்தர் ஆட்சியின் நில விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் பொதிந்துள்ளது. 

புரவலரிடமிருந்து பரிசில் பெற்று வளமுடன் திரும்பு கின்ற பெரும்பாணன், வழியில் பசியுடன் வாடியுள்ள பாணனை நோக்கிச் சொல்வதாகப் பாடப்பெற்றுள்ள பெரும்பாணாற்றுப்படை நூலானது, நிலவெளிக் காட்சிகளின் தொகுப்பினைப் பதிவு செய்துள்ளது. திரையனைக் காணச் செல்லும் வழியில், குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல், பாலை நிலப்பரப்பின் இயல்பு, அங்கு வாழும் மக்களின் உணவு, பழக்கவழக்கம், உயிரினங்கள் பற்றிய விவரிப்புகள் சூழலியல் அடிப்படையில் முக்கியமானவை.

எயினர் குடியிருப்பு: காட்டு வழியில் எயினர்கள் வாழும் குடியிருப்பு உள்ளது.  நீண்டு உயர்ந்த இலவ மரத்தில் அசைகின்ற கொம்புகளில் காய்த்த பஞ்சை யுடைய பசுமையான காய், முதிர்ந்து விரிந்து பஞ்சு தோன்றியது போன்ற வரியை முதுகில் உடைய அணிலோடு எலியும் திரியாதவாறு, வேல் போன்ற நுனியை உடைய ஈந்தின் இலையால் வேயப்பட்ட நெடிய முகட்டையும், எய்ப்பன்றியின் முதுகு போன்ற புறத்திணை உடைய குடிலில் மான் தோலினாலான படுக்கையில் அண்மையில் குழந்தை ஈன்ற பெண் படுத் திருக்கின்றாள். 

வெண்மையான பற்களையுடைய வேடர் குலப் பெண்கள் நிலத்தைக் கொத்தி எடுத்த புல்லரிசியை உரலில் குற்றி அரிசியாக்கிச்  சமைத்து, உப்புக் கண்டத் துடன் தேக்கிலையில் வைத்துச் சாப்பிடுவதுடன், வழிப் போக்கர்களுக்கும் வழங்கும் இயல்பினர். இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு கட்டப்பெற்ற குடில், படுக்கை, உணவு என எல்லாம் சூழலில் இருந்து பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டை பற்றி விவரிக்கும் வரிகள்:

அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல்நாள்

பகுவாய் ஞமலியோடு பைம்புதல் எருக்கித்

தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி

முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்

நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்

நள்ளிரவில் பன்றி வேட்டை, பகலில்  வேட்டை நாய்களுடன் புதர்களில் முயல் வேட்டை என வேடர் களின் வாழ்க்கை கழிகின்றது. மேட்டு நிலத்தில்  விளைந்த செந்நெல் சோற்றுடன், நாய்கள் பிடித்து வந்த உடும்பினைக்கொண்டு சமைத்த பொரியல் வேடர்களின் உணவாகின்றது.

இயற்கையான முள்வேலியையும் அதனைச் சூழ்ந்த காவல் காட்டினையும் உடைய எயினர் குடியிருப்பு பற்றிய விவரிப்பு, நிலக்காட்சியாக விரிந்துள்ளது.

ஆயர் குடியிருப்பு: ஆடுகள் தின்பதற்காகக் கட்டித் தொங்க விடப்பட்டுள்ள தழைகள். கழிகளால் சேர்த்துக் கட்டப்பட்ட கதவு. கிடாய்களைக் கட்டிய நீண்ட தாம்புக் கயிற்றின் குறிய முளைகள் உள்ள முற்றத்தில் செம்மறியாடுடன் வெள்ளாடும் கிடக்கும். இடையர் குலப் பெண்கள் பொழுது புலர்ந்திடும் வேளையில் எழுந்து, மத்தினால் தயிரினைக் கடைந்து, மோரினை விற்று, அதனால் கிடைக்கும் வருவாயில் நெல் முதலான பொருட்களை வாங்கி வருவர். மாமை நிறமுடைய மேனி, சிறிய குழை அசைகின்ற காது, மூங்கில் போன்ற தோள், சுருள் முடி எனப் பெண் பற்றிய வருணனை அழகியலானது. நண்டின் பார்ப்பை ஒத்த பசிய தினையால் ஆக்கிய சோற்றைப்  பாலுடன் பிறருக்குத் தருவர். ஆயர்கள் குழல் ஊதி ஆநிரைகளைக் காட்டில் மேய்க்கின்ற சூழல், இயற்கைக்கும் இடையர் களுக்குமான நெருங்கிய உறவினைப் புலப்படுத்து கின்றது முள்ளுடைய காடுகள் சூழ்ந்த நிலத்தில், பெண் யானை போன்ற தானியக் குதிர்கள், யானையின் காலைப் போன்ற வரகு திரிகை, ஏர் சாத்திய நெடிய சுவர், வரகு வைக்கோலினால் வேயப்பெற்ற குடில் என ஆயர் வாழ்க்கைச்சூழல் பதிவாகியுள்ளது.

மருத நிலம்: கொல்லனுடைய கொடிற்றை ஒத்த பிளந்த காலையுடைய நண்டின் வளைகள் சிதை வடையுமாறு ஏறுகள் பொருதிய சேற்று நிலத்தில், களை பறிப்போர் பறித்துப்போட்ட தேன் நாறும் நெய்தற் பூவைச் சூடினர். வளம் மிக்க வயல் வரம்பிடத்தே, புதிய வைக்கோலால் வேயப்பெற்ற குடிலின் முற்றத்தில் அவல் இடிக்கின்ற உலக்கையின் ஓசை கேட்கும். மருத மரத்தின் நிழலில் உழவர்கள் அறுத்துக் குவித்த செந்நெல்லின் தாள்கள் போராகக் குவிந்திருக்கும். நெற்பொலிகள் செம்பொன் மலையெனத் தோன்றும். குளிர்ந்த வயலையுடைய மருதநிலம் சார்ந்த குடியிருப்பு களில் பசு, எருது, கன்று கட்டப்பட்டிருக்கும். வறுமையே அறிந்திராத அந்த ஊரில் தங்கினால், எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படுகின்ற உழவர்கள், வெள்ளிய சோற்றினை, மனையில் இருக்கும் கோழிப் பெடையின் பொரியலுடன் தருவார்கள். கருப்பஞ்சாறினைக் காய்ச்சுகின்ற ஆலையில் விரும்பியவாறு கரும்பின் இனிய சாற்றினைப் பருகலாம்.

வலைஞர் குடிச்சிறப்பு: மூங்கில் கழிகளைப் பரப்பி, வெள்ளிய மரக்கொம்புகளை இடை இடையே கலந்து, தாழை நாரால் கட்டி, புல்லைப் பரப்பி வேயப்பட்ட குடிலில், மீன் பிடிக்கின்ற பறி தொங்குகின்ற முற்றத்தில் பசுமையான காய்கள்  தொங்குகின்ற பந்தல் இருக்கும். நறிய கள்ளினைப் பச்சை மீன் சூட்டுடன் உண்ணத் தருவர்.

அந்தணர் இல்லம்: கிளிகளுக்கு வேதத்தைக் கற்பிக்கின்ற மறையவரின் இல்லம் பசுஞ் சாணத்தினால் மெழுகப்பட்டிருக்கும். அங்கு நெற்சோறும், வெண்ணெயில் வெந்த மாதுளைக் கறியும், ஊறுகாயும் கிடைக்கும்

தண்டலை உழவர் இல்லம்: யானையின் உடம்பு போன்ற தெங்கின் மடலால் வேயப்பட்டனவும், மஞ்சளை யுடைய முற்றத்தினையுடையனவும், மணக்கின்ற பூந்தோட்டங்களையுடையனவும் தோப்புகளில் தனியாக உழவர் இல்லம் உள்ளது. அங்கு பலாப்பழம், வாழைப்பழம், நுங்கு, கிழங்கு தின்பதற்குக் கிடைக்கும்.

செல்லும் வழிச் சிறப்புகள்: பாணரைப் போற்று கின்ற திரையன் வசிக்கின்ற பெரிய நகரமான காஞ்சிபுரம் செல்லுகின்ற வழி பற்றிய விவரிப்பு ஒருவகையில் புலவரின் கற்பனை கலந்தது. எல்லாவிதமான மக்களும் வாழ்கின்ற நிலம், தாவரம், விலங்குகள் என விரியும் சொல்லாடலின் வழியே உருத்திரங்கண்ணனார் சித்திரிக்க முயலும் காட்சிகள் சுற்றுச்சூழல் பற்றிய பதிவு களாகியுள்ளன. தொண்டை நாட்டுக் கடற்கரைப் பட்டினத்திற்குச் செல்லும் வழி, அங்கிருந்து காஞ்சி புரத்திற்குச் செல்லும் வழி என இரு வழிகளைப் பற்றி விவரிப்பதுதான்  புலவரின் முதன்மை நோக்கம். அந்த வழிகளின் நிலத்தோற்றம், நில அமைப்பு, மக்களின் வாழ்க்கைமுறை பற்றிக் குறிப்பிடுகையில், உமணர் வணிகம், மிளகு வணிகம், எயினர், வலையர்,  இடையர், உழவர், பார்ப்பனர், பரதவர் போன்றோரின் வாழ்க்கை முறை, சிற்றூர்களின் நிலை போன்ற பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. திரையனின் புகழைப் பாடுவதற்குப் பின்புலமாகப் பல்வேறு இயற்கைக் காட்சிகளை உருத்திரங்கண்ணனார் சித்திரித்துள்ளார் என்பது கவனத்திற்குரியது.

பெரும்பாணாற்றுப்படையில் பதிவாகியுள்ள உயிரினங்கள் பற்றிய அட்டவணை வியப்பைத் தரும்.

 மரங்கள்: கடம்பம், இலவம், கமுகு, ஈந்து, காஞ்சி, கொன்றை, தென்னை, தேக்கு, தாழை, பலா, பனை, புன்னை, மருதம், மா, மூங்கில், வாழை, வேம்பு, வேங்கை, கறிவேப்பிலை.

செடிகள்: கரும்பு, கோரை, மஞ்சள்.

மலர்கள்: கமுகம் பூ, காந்தள், குவளை, தாமரை, நெய்தல், பாதிரி, முள்ளி, வாகை, வேங்கை.

விலங்குகள்: அணில், ஆடு, உடும்பு, எருமை, கழுதை, காளை, குதிரை, குரங்கு, நண்டு, நாய், பசு, பன்றி, பாம்பு, புலி, மான், முயல், யானை.

பறவைகள்: கிளி, குயில், குருகு, கோழி, பருந்து, புறா, மயில், வண்டு.

மீன்கள்: கயல், இறா, வாளை.

தமிழக நிலப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில்  பல்வேறு உயிரினங்கள் இருத்தல் என்பது, சூழலின் பன்முகத்தன்மையைக் காட்டுகின்றது. அன்றைய தமிழக நிலமானது, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் வளமாக இருந்ததனை அறிய முடிகின்றது. கடுமையான கோடையிலும் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழல் என்பது சுற்றுச்சூழல் நோக்கில் முக்கியமானது.

இன்றைய சுற்றுச்சூழல் நோக்குடன் பெரும் பாணாற்றுப் படை நூலினை அணுகினால், அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மையினரான மக்களின் வாழ்க்கை மாசுபடாமல் இருந்துள்ளது. ஒவ்வொரு நிலத்திற்கும் எனத் தனித்த நிலையில் வாழும் மக்கள், சூழலில் இருந்து தங்கள் உணவைப் பெற்று, உண்டு வாழ்ந்துள்ளனர். விலங்குகளை வேட்டை யாடுதல், மீன்களைப் பிடித்தல் போன்ற  செயல்களும் கூட உயிர் வாழ்வதற்கான ஆதாரமானவைதான். இன்னொருபுறம் நிலத்தில் உழுது வாழும் மருத நில மக்களின் உழைப்பு ஒருவகையில் நாகரிகத்திற்கான முதற்படி ஆகும்.

தயிரினைக் கடைந்து மோர் எடுத்து பண்டமாற்று செய்யும் இடையர் பெண், குழல் ஊதி ஆநிரை மேய்க்கும் இடையர் என வாழ்க்கை சக உயிரினங்கள் சார்ந்து உள்ளது. முயல், உடும்பு வேட்டைக்குப் பயன்படும் நாய், வீட்டுக் காவலுக்கும் பயன்பட்டுள்ளது. பூமியானது மனிதனுக்கு மட்டும் உரிமையுடையது என்ற கருத்தினில் இயற்கையை நாசமாக்கும் போக்கு எதுவும் நூலில் இல்லை.

புலவர் உருத்திரங்கண்ணனார் பாணனின் வாய்மொழி மூலம் வேந்தனான திரையனின் வீரத்தையும் கொடையையும் சிறப்பிப்பதற்காகப் புனைந்துரைத்த நீண்ட பாடலில், சங்க காலத்தில் நிலவிய சுற்றுச்சூழல் பற்றிய குறுக்கு வெட்டுத் தோற்றம் காத்திரமாகப் பதிவாகியுள்ளது.

Pin It