சங்கப் பனுவல்களில் இருநூற்றைம்பதிற்கும் மேலான மன்னர்கள், நானூற்று எழுபத்து மூன்று இருபாற் புலவர்கள் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. நடைமுறை வாழ்வில் நின்றுகொண்டு தான் கண்டவற்றையும் அனுபவித்தவற்றையும் சங்கப் பனுவல்களில் தேடி அவை இல்லை, இவை இல்லை, தற்காலமே பொற்காலம் என்போரும் உண்டு. நடைமுறை வாழ்வில் இருக்கும் குழறுபடிகளைக் கண்டு மனம் வெதும்பி சங்கப் புலவர்களின் கூற்றுக்களையோ அல்லது திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட அறநூல்களின் கருத்துக்களையோ எடுத்தியம்பி ஆறுதலடைவோர் நிறைய உண்டு. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. தேவை கருதி மனித வாழ்வில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகளிலும் பழக்க வழக்கப் பண்பாட்டு நிலையிலும் நாம் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளோம். இன்றைய வணிகமயமான வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் அன்பு, நட்பு, கருணை இவைகளெல்லாம் நம் கண்களுக்குப் படுவதில்லை. இயந்திர பொறிகளோடு கொண்டிருக்கும் உறவைவிட மனித உறவு மேலானதில்லை என்கிற மனப்போக்கிற்கிடையில் சங்கப் புலவர்களின் சமூக உறவுநிலை எத்தகையது என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.

நட்பின் இலக்கணம்

நடைமுறை வாழ்வில் நாம் பலரோடு நட்பு கொண்டிருக்கிறோம். அதில் நலம்தரும் நட்பும் உண்டு. நலத்தைக் கெடுக்கும் தீயநட்பும் உண்டு. நட்பு எனும் சொல்லிற்கு நா.கதிரைவேற்பிள்ளை உறவு, சிநேகம், சுற்றம் ' என்று கூறுகின்றார். வடமலை நிகண்டு நட்பு என்பதற்கு,

“நயந்தோ னெனும்பெயர் நட்புடை யோனும்

கணவனு மெனவே கருதப் பெறுமே2

எனக் கூறுகின்றது.

நட்பின் இலக்கணம் குறித்து அறஇலக்கியங்கள் அதிகம் பேசுகின்றன. இதில் திருக்குறளும் நாலடியாரும் முன்னிலை வகிக்கின்றன. புணர்ச்சியோ, பழகுதலோ வேண்டாம். நட்பிற்கு மனமொத்த உணர்ச்சியே போதும் என்கிறார் வள்ளுவர். இதனை,

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்" 3

என்னும் குறட்பா வழி கூறுகின்றார்.

துன்பம் வரும் நேரத்தில் ஓடிவந்து உதவுவதே கொள்ளவேண்டிய சிறந்த நட்பு. புறத்தே எவ்வளவு பழகினும் பலனில்லை. உள்ளம் சார்ந்த நட்பே உதவக்கூடியது. பயன்தரக் கூடியது. துன்பமற்றதும் தொடரக்கூடியதுமாகும். வள்ளுவர்,

'அகநக நட்பது நட்பு'3

'இடுக்கண் களைவதாம் நட்பு'4

என்று உரைப்பதன் வழி அறியலாம்.

புறத்தில் நட்புடையவர்களாகத் தோன்றினும் அகத்தில் ஒத்த உணர்ச்சியில்லாதவர்களின் நட்பு பயனற்றது. இத்தகைய தெளிவற்ற நட்பைவிட பகை மேலானது. நாயின் கால் விரல்கள் போல் நெருங்கியவர்களாக இருந்தும், ஈயின் கால் அளவுகூட உதவி செய்யாதவர்களின் நட்பு பயனற்றது. பலநாள் பழகி பக்கத்திலிருப்பினும் சிலநாள் கூட மனம் ஒட்டாமல் இருப்போரின் நட்பும் அவசியமற்றது என்பன போன்ற கருத்துக்களை நாலடியார்,

'தெளிவிலார் நட்பின் பகை நன்று' 6

"நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்”7

"பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்”8

என்று வரும் பாடலடிகளால் முன்வைக்கிறது. திருக்குறளும் நாலடியாரும் கூடா நட்பு, நட்பாராய்தல் போன்ற தலைப்புகளில் மேலும் நட்பு குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றன. அறநூற்கருத்துக்களை அடியொன்றி நோக்குகையில் சங்கப் புலவர் மன்னரிடையே மலர்ந்த நட்பு உணர்ச்சி பூர்வமானது. உள்ளம் கடந்து உயிர் சார்ந்தது. தன்னலமற்ற தகைமையது. காலங்கடந்து நிற்கும் மேன்மையது.

சங்கப் புலவர்கள்

சங்க காலம் மன்னர் ஆட்சிமுறை கொண்டதாக இருப்பினும் மக்களும் கற்றறிந்த சான்றோர்களும் தங்கள் கருத்தை எளிதில் வெளிப்படுத்தும் நிலை இருக்கப் பெற்றதை சங்கப் பனுவல்கள் வழி அறியமுடிகிறது. டாக்டர் மு.வ.,

“எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலுமாகச் சங்க இலக்கியப் பாடல்கள் மொத்தம் இரண்டாயிரத்து முந்நூற்று எண்பத்தொன்றாகும். இவற்றுள் நூற்றிரண்டு பாடல்களில் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எஞ்சிய 2279 பாடல்களைப் பாடியவர்கள் 473 புலவர்கள் ஆவர்"

என்றும்,

"பலர் தாம் பாடிய பாடல்களின் தொடர்களாலும் தாம் பாடிய பாடல்களின் பண்பாலும் பெயர் பெற்று விளங்குகின்றனர். ஏறத்தாழ நாற்பத்து மூன்று புலவர்கள் தாம் பாடிய பாடற்றொடராலும் திணை முதலியவற்றாலும் காலத்தை வென்று விளங்குகின்றனர்" 10

என்றும் சங்கச் சான்றோர்கள் குறித்துப் பேசுகின்றார்.

சங்கப் புலவர்கள் பலரும் அகம், புறம் என்னும் பாகுபாட்டின் அடிப்படையில் தங்கள் பாடல்களைப் புனைந்துள்ளனர். இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்வியலையும், மன்னர்களின் ஆட்சி நெறிமுறைகளையும், சமூகத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும், தமது அனுபவத்தோடு கலந்து பாடியுள்ளனர். சங்கப் புலவர்களின் பாடற்பொருளைக் கொண்டே பழந்தமிழ்ச் சமூக மக்களின் வாழ்வியல் போக்குகளை ஒருவாறு உய்த்துணர முடிகிறது. சங்கப் புலவர்கள் மக்களாலும் மன்னர்களாலும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப் பெற்றுள்ளனர். புலவர்கள் “சான்றோர்' என அழைக்கப்பட்டனர். மா.ரா.போ. குருசாமி,

"எட்டுத்தொகை, பத்துப்பாட்டுள் குறிப்பிடப்படும் புலவர்களைச் சான்றோர் எனவும் சங்கத்துச் சான்றோர் எனவும் உரையாசிரியர்கள் குறிப்பது நினைவுகூர்தற்குரியது”11

என்று, சங்கப் புலவர்களுக்கு இருந்த நன்மதிப்பை விளக்குகிறார். கடைச்சங்க காலமே சங்க காலம் என்று வரையறை செய்யப்படுகிறது. இக்காலகட்டத்தில் வாழ்ந்த நல்லிசைப் புலவர்களே சங்கப் புலவர்கள் என்னும் சிறப்புக்குரியவர்கள் ஆவர்.

சங்கப் புலவர்களின் நோக்கம்

சங்கப் புலவர்கள் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்களாக இருந்தபோதும் தாம் பாடிய பாடற்பொருளில் ஒருமித்த போக்குடையவர்களாக இருந்தமை அறிய முடிகிறது. தமது நோக்கத்திலிருந்து விலகாத கொள்கையுடையவர்களாகவும், மனதில் பட்டதை எடுத்துரைக்கும் திறமுடையவர்களாகவும் இருக்கப் பெற்றனர். அறவழி நின்று உண்மையை உரைப்பதை அவர்கள் தங்களது கடமையாகக் கொண்டிருந்தனர். க.வெள்ளைவாரணர்,

“பழந்தமிழ்ப் புலவர்கள் தாம் கற்ற பெருங்கல்வியை தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தினர். தம் அறிவுரைகளை மகிழ்ந்து கேட்போரை மதித்தனர். தாம் கூறும் அறிவுரைகளைக் கேட்டுணரும் அறிவைப் பெறாதார் மன்னராயினும் அவரை மதியாது இகழ்ந்தனர்" 12

என்று, சங்கப் புலவர்கள் குறித்த தமது கருத்தைப் பதிவு செய்கின்றார். சங்கப் புலவர்கள் குறித்து உ.வே.சா.

“சங்க காலத்துப் புலவர்கள் ஒரு காலத்தினரல்லர்; ஒரு தேயத்தரல்லர்; ஒரு சாதியரல்லர்; ஒரு குலத்தினரல்லர்; ஒரு தொழிலினரல்லர்; ஒரு மதத்தினரல்லர்" 13

என்று கூறுகின்றார். இவ்வாறு இருந்தபோதும் சங்கத்துச் சான்றோர்கள் ஒருமித்த கருத்துடன் நாடும், மன்னரும், மக்களும் எந்நாளும் துன்பமின்றி இன்பமுற்று வாழ வேண்டுமென வாழ்த்திப் பாடினர். வறுமையில் இருந்தபோதும் பொருள்பெறும் நோக்கோடு இவர்கள் பாடல் புனையவில்லை என்பதை அறியமுடிகிறது. தாம் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாயச் சூழலையும் மக்களின் பழக்க வழக்கப் பண்பாடுகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும், மன்னர்களின் போர், வீரம், கொடை, நாட்டுவளம், ஆட்சித்திறம் போன்றவற்றையும் நாளைய சமுதாயம் அறிந்து கொள்ளும் நோக்கில் தமது பாடல்களை இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வ.சுப. மாணிக்கனார்,

“சங்கப் புலவர் எல்லார்தம் பாடல்களும் காலங்கடந்த ஞால மதிப்பைப் பெற்று வழிவழி வாழ்கின்றன” 14

என்றும், சி.இலக்குவனர்,

“சங்ககாலப் புலவர்கள் இனிய இலக்கியங்களை இன்றும் போற்றிப் புகழும் வகையில் இயற்றித் தந்துள்ளனர். இவர்கள் இன்றைய உலகப் பெரும்புலவர்களோடு ஒப்பிடத்தக்க புலமையும் பெருமையும் உடையவர்கள். இவர்கள் அமைச்சர்களாகவும் தூதர்களாகவும், ஆளுநர்களாகவும், மெய்யுணர்வாளர்களாகவும், மக்கள் துயர் போக்கும் சான்றோர்களாகவும், பிறர்க்கென வாழும் பெரியோர்களாகவும் வாழ்ந்து, நாட்டுத் தொண்டும் மொழித் தொண்டும் மக்கள் தொண்டும் ஆற்றினர்" 15

என்றும் கூறுவதிலிருந்து பழந்தமிழ்ப் புலவர்களின் பெருமையை உணரமுடிகிறது.

சங்கச் சான்றோர்கள் மன்னர்களைப் பாடி மகிழ்வித்தலை நோக்கமாகக் கொண்டவரல்லர். மக்களின் நலன் கருதிப் பாடியவர்கள் என்பதை அவர்களின் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தியிரண்டு அகப்பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகைச் சமுதாய மக்களின் வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் அழகுற தமது பாடல்களில் காட்சிப்படுத்தினர். சங்கச் சான்றோர்களுக்கு நாடாளும் மன்னர்களிடம் மட்டுமல்ல நாட்டு மக்களிடமும் நன்மதிப்பு இருக்கப் பெற்றது என்பதை சி.இலக்குவனார்,

"புலவர்களைக் கடவுளர் எனக் கருதிப் போற்றி வழிபட்டுள்ளனர். இறைவனை வணங்கும் திருக்கோயில்களில் புலவர்களின் வடிவங்களை வைத்து வழிபட்டனர். இன்னும் ஒண்தமிழ்க் கூடலாம் மதுரையில் அங்கயற்கண்ணியின் துங்கநாற்கோயிலில் நாற்பத்தொன்பது புலவர் படிவங்களும் இறைவன் படிவத்துடன் இணையாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாமே. ஆங்காங்குச் சில ஊர்களில் நக்கீரர்க்கும் ஔவைக்கும் பிறருக்கும் எடுத்த கோயில்கள் கால வயப்பட்டுக் காணாமற் போகாமல் எஞ்சி நின்று ஏத்துமின் என்று அழைக்கின்றனவே. ஆகவே, மக்களும் புலவர்களைப் போற்றினர் என்பது வெற்றுரையன்று என்று தெளியலாம்”16

என்று உரைப்பதின் வழி அறியலாகிறது.

மன்னர் புலவர் நட்புறவு

சங்ககாலம் மன்னராட்சிக் காலமாதலால் சில சமயங்களில் போரும் பூசலும் நிலவின. இக்காலகட்டத்தில் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டது. மன்னரது வெற்றிக்கு வீரர்கள் பலர் தம் இன்னுயிரை இழக்க வேண்டியிருந்தது. முறைதவறிச் செருக்குற்று பிறர் நாட்டை கைப்பற்றும் நோக்குடன் செயல்பட்ட மன்னர்களுக்குத் தமது கூர்ந்த மதிநுட்பத்தால் அறிவுரை செய்து போரைக் கைவிடச் செய்த பெரும் புகழ்ச் சங்கப் புலவர்களைச் சாரும். புலவர்கள் பலர் மன்னரது அவைக்களத்தில் இருக்கப் பெற்றனர். அக்கால மன்னர்களும் தாம் புலவர்களின் நாவால் பாடப்படுவதை பெருமையாகக் கருதினர். தாம் வாழும் காலத்தில் புலவர்களின் வாழ்த்துதலைப் பெற்றால் இறந்த பிறகு மறுமை உலகத்தில் நற்கதி பெறலாம் எனும் நம்பிக்கை அன்றைய மன்னர்களிடையே நிலவியது என்பதை,

"புலவர் பாடும் புகழுடையோன் விசும்பின் வலவனேவா வான வூர்தி

எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தென"17

என்று வரும் முதுகண்ணன் சாத்தனாரின் பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்குச் செல்லும் முன்,

“உலகமொடு நிலைஇய பார்புகழ் சிறப்பிற்

புலவர் பாடாது வரைகவென் நிலவரை” 18

எனக் கூறும் வஞ்சின உரையால் சங்கப் புலவர்களின் பெருமை வெளிப்படுகிறது. சங்கப் புலவர்களுக்கும் மன்னர்களுக்கும் இருந்த நட்புறவை அரங்க. இராமலிங்கம்,

“பழந்தமிழ் வேந்தரிடம் புலவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு புகழத்தக்கது. தம்மை நாடிவந்த புலவர் பெருமக்களை அன்புடன் வரவேற்று, வேண்டியன நல்கிப் போற்றினார் வேந்தர். தம்மை விட்டுப் பிரியும் பொழுது ஏழடி புலவரின் பின்சென்று வழியனுப்பும் பண்பாட்டையும் பெற்றிருந்தனர்” 19

என்று கூறுகின்றார்.

மன்னர்களது வெற்றியைப் பாடிப் பரிசில் பெறும் நிலையைக் கடந்து, அவர்களது வாழ்வில் ஏற்படும் துன்ப நிலை கண்டு இரங்குபவர்களாகவும் சங்கப் புலவர்கள் இருக்கப் பெற்றனர். மன்னன் வடக்கிலிருந்து உயிர் துறந்தபோது தாமும் உயிர்துறந்து அழியாப் புகழ் பெற்றனர். முரசுக் கட்டில் என அறியாது துயில்கொண்ட மோசிகீரனாருக்கு தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசினான் என்பதிலிருந்து அக்கால மன்னர்கள் புலவர்கள் மீது கொண்டிருந்த நன்மதிப்பு விளங்கும். கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பு, பாரிக்கும் கபிலருக்கும் இருந்த நட்பு பொருள் பெறும் நோக்குடையது அல்ல. தன்னலமற்றது. தம் இன்னுயிரையே துறக்குமளவிற்கு ஆழமானது.

“பழந்தமிழ் வேந்தரிடம் புலவர்கள் கொண்டிருந்த தொடர்பு புரவலர் இரவலர் என்ற நிலையினைக் கடந்து உள்ளம் உணர்ந்த உயிர்நட்பாக விளங்கியது. வேந்தன் உயிர் துறக்கும்பொழுது தாமும் உயிர்துறக்கும் அளவிற்கு அன்பு பூண்டொழுகினர்”20

எனக் கூறும் அரங்க. இராமலிங்கம் கூற்றும் சங்கப் புலவர்களின் பெருமையை உணர்த்துகிறது. சங்கப் புலவர்களுக்கும் மன்னர்களுக்கும் இருந்த நட்புறவை மா.இராசமாணிக்கனார்,

"கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றபடி கல்வி நலம் வாய்க்கப்பெற்ற தமிழ் வேந்தர் முத்தமிழ்ப் புலவர்களை நன்கு போற்றினர். அவர்களைத் தம் உற்ற நண்பராகக் கொண்டனர். தம் இன்ப துன்பங்களில் பங்குகொள்ளச் செய்தனர்" 21

எனக் கூறுகின்றார்.

புலவர்கள் தம்மினும் சிறப்புடையோர் என மன்னர்கள் கருதினர். அதேபோல் புலவர்களும் வறுமைக்குத் தளராதவர்களாகவும், அநீதிக்கு அஞ்சாதவர்களாகவும் உண்மையை உரைக்கும் இயல்பினராகவும் இருக்கப் பெற்றனர். அதியமான், குமணன் போன்றோரும் பதிற்றுப்பத்தில் வரும் மன்னர்களும் புலவர்களுக்குச் செய்த சிறப்புகளால் அழியாப் புகழடைந்தனர்.

நிறைவுரை

பழந்தமிழ்ப் புலவர்களின் நற்கருத்துக்கள் யாவும் காலங்கடந்து வாழும் பெருமதிப்புடையன. மனதில்பட்டதை மதிநுட்பத்தோடு உரைத்தனர். மன்னர்களிடம் மட்டுமல்ல, நாட்டு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். அவர்களின் கூற்றுக்களை மன்னர்கள் கடைபிடித்தனர். மன்னன் தவறிழைத்த வழி இடித்துரைக்கவும் செய்தனர். மக்கள் நலனில் அக்கறை செலுத்திய மன்னர்களைத் தம் பாடல்கள் மூலம் அழியாப் புகழடையச் செய்தனர். பொருள் பெறும் நோக்கம் சங்கத்துச் சான்றோர் எவரிடமும் இருக்கப்பெறவில்லை. மாறாக அறஇலக்கியங்கள் கூறும் நட்பின் இலக்கணத்தை உணர்ச்சி கலந்த உள்ளத்துடன் மன்னர்கள் மீதும் மக்கள் மீதும் செலுத்திய செம்மாந்த புகழுக்குரியோர் சங்கத்துச் சான்றோர்கள் ஆவர்.

குறிப்புகள்

1.        நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ப.857.

2.        வடமலை நிகண்டு, செய்யுள் 938.

3.        குறள். 785.

4.        குறள். 786

5.        குறள். 788

6.        நாலடியார், 29:11.

7.        நாலடியார் 218:1-2

8.        நாலடியார், 213:1-2

9.        மு. வரதராசன், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, ப.235.

10.     மே.கு.நூ. ப.236

11.     மா.ரா.போ.குருசாமி, சங்க காலம், ப.16

12.     கோ. தனபாலன் (தொ.ஆ), கட்டுரைச் செல்வம், பக். 22-23.

13.     உ.வே.சாமிநாதையர், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப.89.

14.     வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப.28

15.     சி. இலக்குவனார், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், பக். 157-158.

16.     மே.கு,நூல். ப.147.

17.     புறம். 27:7-9.

18.     புறம். 72:15-16

19.     அரங்க. இராமலிங்கம், சங்க இலக்கியத்தில் வேந்தர், ப.58.

20.     மே.கு.நூல், பக் 79-80

21.     மா.இராசமாணிக்கனார், தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.120

- முனைவர் சு.சதாசிவம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சென்னைக் கிறித்தவக் கல்லூரி (தன்னாட்சி), தாம்பரம், சென்னை