‘குமரி மூத்தால் கிழவி’ என்று தமிழில் ஒரு தொடர் இருக்கின்றது. குமரி - இளமை; கிழவி - முதுமை எனும் பொருளமைந்து, இளமை மூத்தால் முதுமை என்ற பொருளில் இத்தொடர் வழங்குகின்றது. இளம் பெண்ணைக் ‘குமரிப்பெண்’ என்றும் வயது மூத்த பின்னர் ‘கிழவிப்பெண்’ என்றும் அழைப்பது வழக்கு என்பதை இத்தொடர் வெளிப்படுத்துகின்றது. இளம் பெண்ணைக் ‘குமரிப்பெண்’ என்று அழைப்பதைப்போல் வயது மூத்த பெண்ணைக் ‘கிழவிப்பெண்’ என்று அழைக்கும் வழக்கம் நம்மிடம் இல்லை. ‘கிழவி’ எனும் வழக்கு மட்டுமே இருக்கின்றது. ஆண்பாலில் ‘கிழப்பையன்’ என்று பேச்சு வழக்கில் மட்டும் இருக்கின்றது.
குமரி என்ற சொல் அஃறிணை, உயர்திணை ஆகிய இருதிணை இளமைப் பொருளையும் குறிக்கும். சங்க இலக்கியங்களில் வரும் குமரி வாகை (குறு. 347), குமரி ஞாழல் (நற். 54), குமரி மகளிர் (புறம் 301) என்பன அதைத் தெளிவுபடுத்துகின்றன. ‘குமரிப்படை’ என்றும் புறநானூற்றில் (294) ஒரு சொல் வருகின்றது. இளம் வீரர்களைக் கொண்ட படையைக் ‘குமரிப்படை’ என்று சுட்டியிருக்கலாம். புறநானூற்றிற்குள்ள உரை களெல்லாம் ‘புதுமையுறச் செம்மை செய்யப்பெற்ற கருவிகளைக் கொண்ட படை’ என்று சுட்டுகின்றன.
பெரும்பாணாற்றுப்படையில் ‘உழவனின் வீடு’ பற்றி குறிப்பிடும் பாடலடிகளில் ‘குமரிமூத்தகூடு’ என்றொரு சொல் வருகின்றது. உழவனின் வீடு பகட்டுஆஈன்ற கொடு நடைக் குழவிக்கவைத்தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் ஏணி எல்தா நீள்நெடு மார்பின்,முகடுதுமித்து அடுக்கிய பழம்பல் உணவின் குமரி மூத்த கூடு ஓங்கு நல்இல் (பெரும். 243 - 247) என அமைந்திருந்ததாம்.
‘அழகிய பசு ஈன்ற, வளைந்த கால்களையுடைய கன்றுக் குட்டிகள் கயிறால் கட்டப்பட்டு நெற்குதிரின் பக்கத்தில் நின்றிருந்தன. ஏணி வைத்து எட்டிப் பார்க்கக்கூடிய அளவு உயர்ந்த நெற்குதிரில் நெல்லைப் போட்டு வைத்திருந்தனர். அது குமரி மூத்து இருந்தது. அத்தகைய நெல் குதிர்களையுடைய நல்ல இல்லம் உழவர் வீடு’ என்கின்றது பெரும்பாணாற்றுப்படை. குமரிமூத்தகூடு என்பதை ‘அழியாத் தன்மைய வாய்ந்த முதிர்ந்த கூடு’ என்கிறார் நச்சினார்க்கினியர்.
தானியங்களைச் சேமித்து வைப்பதற்காக உழவனின் வீட்டிலுள்ள இளமை மூத்த பழமையான குதிர் ‘குமரி மூத்தகூடு’ எனப்பட்டுள்ளது. பண்டைத் தமிழர்களிடம் தானியங்களைச் சேமித்து வைக்கின்ற வழக்கமிருந்ததை இச்சொல்லாடல் வெளிப்படுத்துகின்றது. தனியுடைமைச் சிந்தனை வளர்ச்சியுற்றிருந்ததையும் காட்டுகின்றது.
நெல்லைச் சேமித்து வைப்பதற்காக உழவர்கள் வீடுகள்தோறும் நெற்குதிர்கள் இருந்தன. எங்கள் ஊரில் (கோட்டாங்கல் கிராமம் கொத்தாங்கல் என்பதன் மருவிய பெயர், திருவண்ணாமலை வட்டம்). இவற்றை ‘ஒற’ (உறை) என்பார்கள். உழவனின் வீடுகள்தோறும் இருந்த உறைகளெல்லாம் (நெற்குதிர்கள்) இப்போது பயன்பாடு இன்றி உடைபட்டு அல்லது உடைக்கப்பட்டு காணாமல் போய்விட்டன. இன்னும் கொஞ்ச காலத்தில் உழவனிடமிருந்து நிலமும் காணாமல் ஆக்கப்பட்டு நெல்லும் நம்மைவிட்டு காணாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது.
பண்டைக் காலத்தில் உயர்திணை, அஃறிணை ஆகிய இருதிணை இளமைப் பொருளையும் சுட்டிய ‘குமரி’ என்ற சொல் நம் காலத்தில் உயர்திணை பெண்பாலை மட்டுமே சுட்டிநிற்கின்றது. இளம் பெண்ணைக் ‘குமரிப்பெண்’ என்று சுட்டும் வழக்கு மட்டுமே இருக்கின்றது. அதுவும் கிராமங்களில் மட்டுமே இச்சொல் பேச்சு வழக்கில் வழங்கிவருகின்றன. பெண் பருவ வயதைத் தொட்டுநிற்கும் நாளில்
‘குமரியாயிட்டா’ என்று சொல்லுவார்கள். வளமான பழைய பண்பாட்டு மரபுகளெல்லாம் கிராமங்களில் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. கிராமங்களில் வழங்குகின்ற சொற்கள் ஆழமான பொருள் பொதிந்தவை ஆகும். அறிவுலகம் (அறிவுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் உலகம்) அவற்றைக் ‘கொச்சை மொழி’ என்று கொச்சைப்படுத்துகின்றது. பாவம் அவர்கள் பண்பாடு அறியாதவர்கள்.