பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த அறிவியல் கோட்பாடுதான் சாங்கியம் எனப்படும் எண்ணியம். இதனைத் தோற்றுவித்தவர்தான் தொல்கபிலர். தமிழின் சங்க இலக்கியமான புறநானூறு தனது 166 ஆம் பாடலில் தொல்கபிலரை முதுமுதல்வன் என்கிறது. அவர் எழுதிய நூலை 24 கூறுகளை விளக்கும் மிகத் தொன்மையான நூல் எனக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத் தொகுப்புகள் அவரைத் தொல்கபிலர் என்கின்றன. சித்தர் பத்ரகிரியார் அவரை ஆதிகபிலர் என்கிறார். வடமொழி நூல்கள் அவரை கபிலர், கபிலமுனி எனக் குறிப்பிடுகின்றன. சில வடமொழி நூல்கள் அவரை ‘அசுரர்’ என்கின்றன. பாகவத புராணம் அவரைக் கடவுளின் அவதாரம் எனக் கூறுகிறது. ஆதிசங்கரர் அவரை மகாமேதை எனக் குறிப்பிடுகிறார் (1).
தொல்கபிலர் குறித்து விவேகானந்தர், “இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மெய்யியலும், ஒவ்வொரு சமயநிறுவனமும் கபிலர் என்ற மாமனிதருக்கு உளவியல் அடிப்படையிலும், மெய்யியல் அடிப்படையிலும் கடமைப்பட்டுள்ளது. அவர் மறைந்த, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, அந்தப் புகழ்மிக்க - வியப்புக்குரிய -ஒளிநிறைந்த கபிலர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” எனக்கூறுகிறார் (2).
இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குக் கணாதரும், கபிலரும் முன்னோடிகளாயினர். இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இந்த இரண்டு மாமனிதர்களும் தோன்றினார்கள் (3). பழங்கால இந்தியாவின் அறிவுலகப் படைப்புத்திறனை தனது பக்கம் ஈர்த்ததோடு, இந்தியச் சிந்தனையோட்டத்தை 1500 ஆண்டுகளாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு தத்துவமே கபிலரின் எண்ணியத் (சாங்கியத்) தத்துவம் எனவும் மக்கள் கபிலரை மாபெரும் சிந்தனையாளர், மனித வாழ்வை ஈடேற்றம் செய்வதற்குப் பிறந்தவர் எனப் போற்றிப் புகழ்ந்தனர் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு (4).
தொல்கபிலரின் சாங்கியம் எனப்படும் எண்ணியம் மிகத் தொன்மையானது எனவும், ஆதி காலத்தில் எண்ணிய தத்துவத்துக்கு இருந்த செல்வாக்கை மகாபாரதம் முதல் புராணங்கள் வரை அனைத்தும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கின்றன எனவும், கீதை முதல் மனுவின் சட்ட நூல் வரை உபநிடதங்கள் (மறைமங்கள்) உட்பட அனைத்து நூல்களும் கபிலரின் கருத்துக்களால் நிறைந்துள்ளன எனவும் கார்பே கூறுகிறார் (5).
மூல எண்ணியத்தின் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இந்தியத்தத்துவ வரலாற்றில் ஈடிணையற்ற சிறப்பைத்தந்தது. இதன் காரணமாகத்தான் நமது தத்துவப் பாரம்பரியத்திற்கு ஆக்கபூர்வமான அறிவியலுக்கான அடிப்படைக் கருத்துக்களை எண்ணியத்தால் வழங்க முடிந்தது. இவற்றில் மிக முக்கியமானவை பொருள் பற்றிய கோட்பாடு, காரணகாரியக் கொள்கை, அறிவுக்கொள்கை, பரிணாமக்கொள்கை ஆகியன எனவும், உலகத்தத்துவ வரலாற்றில் ஆதிப்பழமையானதும் நன்கு திட்டமிட்டு வகுக்கப்பட்டதுமான நாத்திகத்தின் பிரதிநிதியாக மட்டும் எண்ணியம் விளங்கிடவில்லை, அதன் நாத்திகம் மிகத் தெளிவான அறிவியல் கண்ணோட்டத்தின் முன் மாதிரியால் அமையப்பெற்றது எனவும் கூறுகிறார் சட்டோபாத்தியாயா (6).
மேற்கு நாடுகளில் தொல்கபிலரின் எண்ணியம்:
கிரேக்க அணுவியலின் தந்தை எனப்படும் டெமாக்கிரட்டசு (Democretus) இந்தியா வந்து ஓகப்பயிற்சி பெற்றுச் சமணராக (அமணராக) கடுந்துறவு மேற்கொண்டிருந்த இந்திய (தமிழ்) அறிவர்களைக் கண்டு மெய்யியல், அணுவியல்களைக் கற்றுச் சென்றார் என கார்ல் மார்க்சு, Difference between Democriterean and Epicurean philosophy of Nature என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அலெக்சாந்திரியாவின் கிலேமான், கிரேக்கர்கள் தங்களது தத்துவ சாத்திரத்தை இந்தியாவிலிருந்து திருடி வந்தவர்கள் என்கிறார். இந்தியச் சாங்கியத்துக்கும் பித்தகொரசின் தத்துவத்துக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக 18ஆம் நூற்றாண்டு வில்லியம் சோன்சு கூறுகிறார். சுக்ரோடர் (Schroder) என்ற செருமானிய அறிஞர், ‘பித்தகோரசும் இந்தியாவும்’ (Phythagoras and die Inder, Leipzig, 1884) என்ற நூலில் பித்தகோரசுடையது எனச் சொல்லப்படும் எல்லாத் தத்துவ, கணிதத் தொடக்கக் கோட்பாடுகளும் அவர் காலத்தில், இந்தியாவில் மிகவும் வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இவை போக சாங்கியத்தின் அடிப்படைகள் அனாக்சிமேந்தரசு (Anaximandre), கெராக்கிலிசு (Heraclite), எம்பிடாக்கில்சு (Empedocle), அனெக்சாகோரசு (Anaxagore), டெமாக்கிரிட்டசு (Democrite), எபிக்கூரசு (Epicure) போன்றவர்களிடமும் காணப்படுவதாக அலெய்ன் டானியலு (Alain Danielou) என்ற பிரெஞ்சு பாதிரியார் தனது இந்திய வரலாறு (Histoire de I’Inde) என்ற நூலில் கூறுகிறார் (7).
உரோம வரலாற்றாசிரியரும், புவியியலாளருமான சுடிராபோ (Strabo - கி.மு.63-கி.பி.24) ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பித்தகோரசு இந்தியாவிற்கு வந்து இந்தியர்களிடமிருந்து ஏழிசையைக் கற்றுச்சென்றார் எனக் கூறியுள்ளார். டெமாக்கிரட்டசு, எம்ஃபிடாக்கிள்சு, பித்தகோரசு முதலான கிரேக்க அறிஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றே தம் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதுதான் வரலாறு எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன். மேற்கத்திய அறிஞர் பித்தகோரசு தமிழரிடமிருந்து எண்ணிய மெய்யியலையும் ஏழிசையையும், எண் கணக்கையும் கற்றுச்சென்றார் என்கிறார் அறிஞர் குணா. பழங்காலத்தில் இந்தியா என்பது பழந்தமிழ் நாட்டையே குறிக்கும் (8).
எண்ணியம் (சாங்கியம்) என்ற முதுபெரும் தமிழ் மெய்யியல் நூலின் பெரும்பகுதி அழிந்து விட்டது எனவும், அதன் ஒரு சிறுபகுதி மட்டுமே சமயம் சார்ந்த பரபக்கவாதமாக நமக்கு தற்பொழுது கிடைத்துள்ளது எனவும், எண்கணிதம், வடிவியல், இயற்கணிதம், வானவியல், அணுவியலும்-அண்டவியலும், இசைக்கணிதம், கணியம் போன்ற பலவற்றைக் கொண்டதாக எண்ணியம் இருந்தது எனவும் ஆனால் அவை அனைத்தும் இன்று இல்லாது போயின எனவும் அறிஞர் குணா கூறுகிறார் (9). ஆகவே தொல்கபிலரின் எண்ணியம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் உலகப் புகழ் பெற்ற பொருள்முதல்வாத மெய்யியலாக இருந்தது எனலாம்.
தொல்கபிலரின் காலம்:
பௌத்தமதக் கோட்பாடுகள் எண்ணியத்திலிருந்து தோன்றியவை என அசுவகோசர் கூறியுள்ளார். புத்தரின் ஆசிரியர்களான ஆதாரகலமா, உத்தகா ஆகியோர் எண்ணியக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள். இவைகள் எண்ணியத் தத்துவம் புத்தருக்கு மிக முந்தையது என்பதை நிரூபிக்கின்றன (10). எண்ணியம் என்கிற சாங்கியம் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது எனவும் மகாபாரதத்திலேயே சாங்கியம் மிகப் பழமையானது எனக் கூறப்பட்டுள்ளது எனவும், உபநிடதங்கள் கூட சாங்கியம் அவற்றுக்கு முந்தையது எனக் காட்டுகின்றன எனவும் சாங்கியம் புத்தருக்கு முந்தையது எனக் கார்பேயும், கெச்.பி. சாத்திரியும் கருதுகின்றனர் எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார். மெய்யியல் அறிஞர்கள் பலர் சாங்கியம் வேதத்துக்கு முந்தைய ஆரியமில்லாத சிந்தனைப் போக்கு எனக் கருதுகின்றனர். உபநிடதங்களின் தொன்மை என்பது கி.மு. 7ஆம் நூற்றாண்டு என ‘இந்தியாவில் மெய்யியல்’ என்கிற நூல் கூறுகிறது (11). சாங்கியத் தத்துவம் வேதத்திற்கு முன்பே தோன்றியதாகக் கேகன் பால் (Kegan Paul) தனது ஓகத்தின் வரலாறு (A History of Yoga -1982) என்ற நூலில் கூறுகிறார். (12).
ஆகவே மகாபாரதத்திலேயே மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டதும், உபநிடதங்களுக்கும் முந்தையதுமான எண்ணியத்தைத் தோற்றுவித்த, தொல்கபிலர் கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையவர் என்பதால் அவரது காலத்தை கி.மு. 800 எனக்கொண்டு, அவர் தோற்றுவித்த எண்ணிய மெய்யியலின் காலம் கி.மு. 750 எனக் கணிக்கப்பட்டது.
தொல்கபிலர் ஒரு தமிழர் - க. நெடுஞ்செழியன்:
கபிலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனக் க. நெடுஞ்செழியன் பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளார். கார்பே போன்ற மெய்யியல் அறிஞர்கள் பலர் எண்ணியம் வேதத்துக்கு முற்பட்டது எனவும் ஆரியர் அல்லாதவருக்கு உரியது எனவும் கருதுகின்றனர் என அவர் கூறுகிறார்.
“பார்ப்பனர்கள், பார்ப்பனத்தன்மை ஆகியவற்றின் செல்வாக்கும் பாதிப்பும் மிகக் குறைவாக இருந்த இந்தியப் பிரதேசங்களில்தான் முதல்முதலாக நம் வாழ்வு என்பது நமக்குப் புரியாத புதிராய் இருப்பதை பகுத்தறிவு கொண்டு விடைதேடும் முயற்சி செய்யப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டால்தான் எண்ணியத்தின் மூலத்தொடக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும். எண்ணியம் சாராம்சத்தில் நாத்திகமானது மட்டுமில்லை, வேதத்திற்கு விரோதமானது.... அதன் உள்ளடக்கம் வேதச் சார்புடையதன்று. பார்ப்பனர்களின் சம்பிரதாயத்திற்கும், மரபுக்கும், ஆட்படாமல் இருப்பது” எனக் கார்பே கூறுவதாக க. நெடுஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பனர்களின் செல்வாக்கிற்கும் பார்ப்பனத் தன்மைக்கும் இடம் கொடுக்காத மண் தமிழ்மண் என்பதை இங்கே தோன்றிய இலக்கியங்களின் அகப்புறச் சான்றுகள் உறுதி செய்கின்றன எனவும், சாங்கியம் எனப்படும் எண்ணியத்தின் தோற்றுநரான தொல்கபிலரின் பாடல்கள் (6 பாடல்கள்) சங்க இலக்கியத்தில் உள்ளன எனவும், அவரது தொன்மையையும் சிறப்பையும் பாராட்டும் வகையில் அவரைத் தொல்கபிலர் எனச் சங்க இலக்கியம் பாராட்டுகிறது எனவும், எண்ணியக் கோட்பாட்டின் மூலச்சுவடுகள் அனைத்தும் இந்தியாவிலேயே தமிழில் உள்ள தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது எனவும் இவைகளின் காரணமாக, கார்பே அவர்கள் குறிப்பிடும் அந்த இந்தியப் பிரதேசம் தமிழ்நாடு தான் எனவும் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன் (13). மேலே தரப்பட்ட சான்றுகளின் மூலம் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் தமிழர்தான் என உறுதி செய்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். தொல்கபிலர் தோன்றுவதற்கான பின்புலம் பழந்தமிழ் நாட்டில் தான் இருந்தது, அது வட இந்தியாவில் இருக்கவில்லை என்பதை எமது ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
நகர அரசுகளும் பேரரசுகளும்:
சுமேரிய நகர அரசுகளும், கிரேக்க நகர அரசுகளும் உலகப் புகழ்பெற்றவை. சுமேரிய நகர அரசுகள் கி.மு. 4000க்கு முன் மெசபடோமியா பகுதியில் உலகில் முதல்முதலாகத் தோன்றிய நகர அரசுகள். இந்த சுமேரிய நகர அரசுகளையும் அதன்பின் அங்கு உருவான அக்கேடியப்பேரரசு, பாபிலோனியப் பேரரசு, அசிரியப் பேரரசு, பாரசீகப் பேரரசு, பார்த்தியப் பேரரசு போன்றவற்றை விரிவாக ஆய்வு செய்த தொல்லியலாளர் கார்டன் சைல்டு (V.Gordon Childe), சுமேரிய நகர அரசுகளில் ஏற்பட்ட சுயமான சுதந்திரமான சிந்தனைகளும், தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் அதன்பின் அங்கு உருவான பேரரசுகளில் ஏற்படவில்லை என்கிறார். மேலும் இந்தப் பேரரசுகள், சுமேரிய நகர அரசுகளின் கொள்கைகளை கோட்பாடுகளை, சிந்தனைகளை, அவற்றின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை, அதன் கண்டுபிடிப்புகளை அப்படியே பயன்படுத்திக் கொண்டன எனவும், அவை புதிதாக எதனையும் கண்டுபிடிக்கவோ உருவாக்கவோ இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
கிரேக்க நகர அரசுகளையும், உரோமப் பேரரசையும் ஒப்பிடும்பொழுது அவரது கூற்று உண்மை என உறுதியாகிறது. கிரேக்க நகர அரசுகள், கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கப்பல் கட்டுதல், கட்டடக்கலை, கல்வி, அறிவியல், மருத்துவம் போன்ற பலவற்றில் பெருவளர்ச்சி பெற்று. பெரும் சாதனைகளைச் செய்தன. இன்றைய மேற்கத்திய சிந்தனைகள் அனைத்திற்கும் கிரேக்கச் சிந்தனைகளே மூலமாக இருந்தன. ஆகவே உலகத்திற்குப் பேரளவான விடயங்களை கிரேக்கம் வழங்கியுள்ளது. அதன்பின் வந்த உரோமப் பேரரசு ஐரோப்பாவின் மிகப் பெரிய பேரரசு. மிக நீண்ட காலம் இருந்த பேரரசு. ஆனால் உரோம் பேரரசு கிரேக்க நகர அரசுகளிடமிருந்து அதன் சிந்தனைகள், கோட்பாடுகள், கொள்கைகள் ஆகிய அனைத்தையும் கடன் வாங்கிக் கொண்டது. அதன் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் உரோமப் பேரரசு எதனையும் புதிதாக உருவாக்கவோ கண்டுபிடிக்கவோ இல்லை. ஆகவே கிரேக்கத்துடன் ஒப்பிடும் பொழுது உரோமப் பேரரசு உலகத்திற்கு வழங்கியது மிகக் குறைவு.
மக்களைக் கட்டுப்படுத்தப் பேரரசுகள் மதம், சமயம் சார்ந்த சிந்தனைகளையும் மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குச் சிந்தனைகளையும் ஊக்குவிக்கின்றன, பரப்புகின்றன. அங்கு சுதந்திரமான சிந்தனைகளும், அறிவியல் கண்ணோட்டமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே பேரரசுகளை விட நகர அரசுகள்தான் மக்களுக்கானவை, வளர்ச்சிக்கானவை.
கி.மு. 1000க்கு முன்பிருந்து 1000 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிற பழந்தமிழ்நாட்டு நகர அரசுகளையும், கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதல் நூற்றாண்டுவரை 500 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிற மகதப் பேரரசையும் ஒப்பிடும்பொழுதும் இதே முடிவையே நாம் வந்தடைகிறோம். நகர அரசுகளைக் கொண்ட பழந்தமிழ்ச் சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கப்பல் கட்டுதல், கல்வி, அறிவியல், மருத்துவம் போன்ற பலவற்றிலும் மகதப் பேரரசைவிட மிக முன்னேறிய சமூகமாகவும் உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்துள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது (14). ஆகவே தொல்கபிலர் வட நாட்டில் தோன்றவில்லை எனவும் அவர் பழந்தமிழ் நாட்டில் தோன்றிய ஒரு தமிழர் எனவும் உறுதி செய்யலாம்.
பழந்தமிழ்நாட்டின் பின்புலம்:
பேரரசுகளைவிட நகர அரசுகளில்தான் பொருள்முதல்வாத மெய்யியலும், தத்துவார்த்த அறிவியல் தொழில் நுட்பமும் பேரளவான வளர்ச்சியைப் பெருகின்றன என்பதை வரலாறு பலவகையிலும் மெய்ப்பித்துள்ளது. அதனால்தான் வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டிருந்த பழந்தமிழ்நாட்டின் பின்புலம்தான் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம். ஆனால் வட இந்தியாவில் கி.மு. 800 வாக்கிலோ அல்லது அதன் பின்னரோ தொல்கபிலர் போன்ற மாமேதைகள் தோன்றுவதற்கான பின்புலம் அங்கு இருக்கவில்லை.
கி.மு. 800 வரை வட இந்தியா, அநாகரிக நிலையில்தான் இருந்து வந்தது. கி.மு. 800 வாக்கில்தான் ஆரியர்கள் கங்கைச் சமவெளியில் குடியேறத் தொடங்கி இரும்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். கி.மு. 600க்கு பின்னரே அங்கு நகர நாகரிகம் தோன்றத் தொடங்கியது. ஆனால் அது பேரரசுகளின் நகர நாகரிகமாக இருந்தது. ஆனால் பழந்தமிழ்நாட்டில் நகர அரசுகளின் நகர நாகரிகம் கி.மு. 1000க்கு முன்பிருந்து இருந்து வந்தது. மேலும் பழந்தமிழ்நாட்டில் கி.மு. 3000 முதலே இரும்புக்கால நாகரிகம் இருந்துள்ளது என்பதைத் தற்போதைய சிவகளை அகழாய்வு உறுதி செய்துள்ளது. பழந்தமிழ்நாட்டில் கி.மு. 1500 முதல் ஆதிச்சநல்லூர் போன்ற சிறுகுறு நகர அரசுகளும், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து மூவேந்தர்களின் நகர அரசுகளும் உருவாகின.
கி.மு. 750க்கு முன்பே அவை வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளாக, உருவாகி இருந்தன. தமிழ்நாட்டில் இந்த நகர அரசுகள் 1000 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தன. பழந்தமிழ்நாடு ‘குறியீடு’ எனப்பட்ட எழுத்து வடிவத்தை கி.மு. 1500 முதல் பயன்படுத்தி வந்தது. கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் ‘தமிழி’ எழுத்து இருந்து வந்தது. ஆனால் வட நாட்டில் கி.மு. 250 வரை எழுத்தோ, கல்வியோ இருக்கவில்லை. கி.மு. 600 அளவிலேயே பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் பழந்தமிழ்நாட்டில் இருந்தன என கீழடி அகழாய்வு உறுதி செய்துள்ளது. செவ்வியல் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் உருவாகின. ஆனால் வட நாட்டில் அவை இல்லை.
நறுமணப் பொருள்கள், அவைகளின் திரவியங்கள், பலவகையான மணிக்கற்கள், முத்துக்கள் போன்றவைகளின் உலகத்தேவையும், அவைகளால் உருவான வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தது. இக்கடல் வணிகம் கி.மு. 1500க்கு முன்பிருந்து நடந்து வந்தது. மிகப்பழங்காலம் முதல், மிக நீண்டகாலமாக மிகப்பெரிய கடற்படையையும், உலகளாவிய வணிக மேலாண்மையையும் பழந்தமிழ் அரசுகள் கொண்டிருந்தன. இவற்றின் காரணமாகப் பழந்தமிழ்ச் சமூகம் பண்டைய காலத்திலிருந்து பொருள் உற்பத்தி, வேளாண்மை, தொழில், வணிகம், மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் போன்றவற்றில் நன்கு வளர்ச்சியடைந்து ஒரு உயர்வளர்ச்சி பெற்ற சமூகமாக ஆகியிருந்தது.
பழந்தமிழ்நாட்டில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு குறிப்பிடுவதாக நேரு கூறுகிறார்-(6). அங்கு ஊர், நகரம் போன்றவற்றுக்கான மக்கள் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருதன் இளநாகனார் அவர்களின் அகம் 77ஆம் பாடல் உறுதி செய்கிறது. பழந்தமிழ்நாட்டில் வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளை அரசர்கள், சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் போன்ற பலதரப்பட்ட தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த நகர அரசுகள் பேரளவான வளர்ச்சியைப் பெற்றன (15).
சுகாப் என்பவர் எழுதிய எரித்ரேயக்கடலில் பெரிப்ளசு என்ற நூல், மேற்கு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த கப்பல்களைவிட பழந்தமிழ் நாட்டிலிருந்து சீனா போன்ற கிழக்கு நாடுகளுக்குச் சென்ற தமிழ்நாட்டுக் கப்பல்கள் மிகப்பெரியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தன எனக் கூறுகிறது. முசிறி-அலெக்சாண்ட்ரியா என்ற கி.மு. 150ஆம் ஆண்டைய கிரேக்க மொழி ஒப்பந்தம் பழந்தமிழ்நாட்டில் நடந்த பேரளவான வணிகத்தை எடுத்துக்காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே சேரர் துறைமுக நகரான முசிறி நகரானது, இன்றைய இலண்டன், நியூயார்க், சாங்காய் போன்ற பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையான ஒரு பெருநகராக இருந்தது என இலத்தீன் கிரேக்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன, கலிங்கத்தின் பித்துண்டா நகரம் 1300 ஆண்டுகளாக இருந்து வரும் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்தது என கி.மு. 165ஆம் ஆண்டைய அத்திக்கும்பா கல்வெட்டு கூறுகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த மௌரியப் பெரும்படையை தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி தோற்கடித்தது. கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமூலனார் தனது அகம் 31ஆம் பாடலில் மூவேந்தர்கள் மொழிபெயர்தேயம் எனப்படும் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் பாதுகாத்து வந்தனர் என்கிறார் (16). இத்தரவுகள் பல்வேறு துறைகளிலும் பேரளவான வளர்ச்சியைப் பெற்றிருந்த பழந்தமிழ்நாட்டின் பின்புலத்தை வெளிப்படுத்துகின்றன. இந்தப்பின்புலம் தான் தொல்கபிலர் போன்ற மாமேதைகள் தோன்றக் காரணமாகும்.
எண்ணியத்தின் சில சிறப்புக் கருத்தியல்கள்:
(1). இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக்கொள்கை. இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது. ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது” என எண்ணியம் கூறுகிறது.
(2). இன்றைய உலகம் பொருளால் ஆனது என்பதால் இந்த உலகத்திற்கு காரணமான ஆதிமூலப்பொருளும் பொருளால்தான் ஆகியிருக்கவேண்டும். ஆகவே உலகத்திற்கான முதற்காரணம் என்பது பொருள்தான் என்பதே காரணகாரியக் கொள்கை மூலம் எண்ணியம் வந்தடைந்த முடிவு.
(3). ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளில் இருந்து தான் நாம் காணும் அண்டமும் அதில் உள்ள பொருட்களும் தோன்றின எனவும் இறுதியில் இந்த ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளுக்குள் இந்த எல்லாப் பொருட்களும் கலந்து ஒன்றிணைந்து விடும் எனவும் இந்த ஆதிமூலப்பொருள் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் எனவும் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது.
(4). எண்ணியத் தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது. அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக பரிணாமம் பெற்று வருகிறது என்பதுதான். பரிணாமக் கோட்பாடு (THEORY OF EVOLUTION) என்ற அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய கபிலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
(5). வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்கிறது எண்ணியம்.
(6). ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கத்திற்குக் காரணமாய் இருப்பது எதுவோ அதுவே இன்மையாகும். இதனை இயங்கியல் கோட்பாட்டின் உருவமும் உள்ளடக்கமாகவும் (FORM AND CONTENT) கொள்ளலாம்.
(7). ‘அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவு வளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது. தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத் தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ என்பதே உலகம் பற்றிய எண்ணியப்பார்வை (16).
கருத்துமுதல்வாத வேதியக் கருத்தியலையும், வேதச் சடங்குகளையும் கொண்டிருந்த வடஇந்திய சமூகத்தில் இவைபோன்ற பொருள்முதல்வாத மெய்யியலையும், காரணகாரியக் கொள்கையையும், தர்க்கவியலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த அறிவியல் கோட்பாடான சாங்கியம் எனப்படும் எண்ணியம் உருவாகியிருக்க முடியாது என உறுதிபடக் கூறலாம். ஆதலால் வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளையும், பொருள் உற்பத்தி, வேளாண்மை, தொழில், வணிகம், மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் போன்றவற்றில் ஒரு உயர்வளர்ச்சி பெற்ற, உலகின் ஒரு முன்னணிச் சமூகமாக இருந்த பழந்தமிழ்நாட்டில்தான் எண்ணியம் தோன்றியிருக்க முடியும் என்பதால் தொல்கபிலர் ஓர் தமிழர் ஆகிறார்.
வடமரபும் தமிழ்மரபும்:
(1). தமிழ் மரபுப்படி நீர், நிலம், தீ, காற்று, வெளி ஆகிய ஐம்பூதங்கள் உண்டு. ஆனால் வட இந்திய மரபில் வெளி போக நான்கு பூதங்கள் மட்டுமே உண்டு.
இப்பேரண்டத்தின் அடிப்படையாக இருக்கும் முதற்பொருள் என்பது வெளி, காலம் (Time & Space) ஆகியவற்றின் சேர்க்கை எனத் தமிழ் மரபு கூறியது. ஆனால் வெளி பற்றிய அடிப்படை அறிவோ, புரிதலோ வட இந்தியாவில் இருக்கவில்லை என்பதால் அங்கு வெளி இல்லாதுபோனது.
(2). தமிழ் மரபுப்படி ஏழு பொருள்கள் உண்டு. வடமரபுப்படி இன்மை போக ஆறு பொருள்கள் மட்டுமே உண்டு.
ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளாக மாறும் திரிவாக்கத்தையும் (பரிணாமம்), இயங்கியலையும் வெளிப்படுத்தும் ஒரு கோட்பாடாக ‘இன்மை’ என்பது தமிழ் மரபில் இருந்தது. ஆனால் இன்மை என்பது குறித்த அடிப்படை அறிவோ, புரிதலோ வடமரபில் இருக்கவில்லை. ஆகவே இன்மை என்பது வட மரபில் நீக்கப்பட்டது.
(3). தமிழ் மரபுப்படி எண்ணியம் 24 கூறுகளைக் கொண்டது. வட மரபுப்படி புருடனையும் சேர்த்து 25 கூறுகள் உண்டு.
அறிவியல் அடிப்படையற்ற புருடன் தமிழ் மரபில் இருக்கவில்லை. ஆனால் சாங்கியத் தத்துவத்தை வேதச்சார்பானதாக மாற்ற வடமரபில் 25ஆவது கூறாக புருடன் செயற்கையாகச் சேர்க்கப்பட்டது.
(4). தமிழ் மரபுப்படி மனித வாழ்வின் அடிப்படைகள் என்பன அறம், பொருள், இன்பம் ஆகியன. வடமரபுப்படி இந்த மூன்றுடன் வீடு சேர்க்கப்பட்டது.
தமிழ் மரபில் மனிதவாழ்வின் அடிப்படை என்பது அறிவியல் அடிப்படையைக் கொண்டது. ஆனால் வடமரபு வேதச்சார்பான ஆன்மீகக் கண்ணோட்டத்தைக் கொண்டது என்பதால் அதில் வீடு சேர்க்கப்பட்டது.
(5). தமிழ் மரபுப்படி நூலுக்கான தந்திர உத்திகள் 32. வடமரபுப்படி பேச்சுக் கலைக்கான தந்திர உத்திகள் 36.
தமிழ் மரபின் நூலுக்கான உத்திகளை நகலெடுத்த வடமரபு அதனைப் பேச்சுக் கலைக்கானதாக மாற்றியமைத்துக்கொண்டது. புதிதாகச் சேர்க்கப்பட்ட 4 உத்திகளும் தமிழ் மரபின் 32 உத்திகளுக்குள் அடங்கியவைதான்.
தமிழ்ச்சிந்தனை மரபு என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாதச் சிந்தனையின் விளைவு. ஆனால் தமிழ்ச் சிந்தனை மரபின் அறிவியல் அடிப்படையை வடமரபு புரிந்து கொள்ளாமல், அவற்றை தன்வயப்படுத்த முயன்றதால் வெளி, இன்மை முதலியன நீக்கப்பட்டன. புருடன், வீடு முதலியன சேர்க்கப்பட்டன. தமிழின் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபிலிருந்துதான் வட மரபுகள் பல உருவாகின என்பதை இவ்விளக்கங்கள் உறுதி செய்கின்றன. ஆகவே மூல மரபான தமிழ்ச் சிந்தனை மரபின் அடிப்படையாக இருந்த எண்ணியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் ஒரு தமிழர்தான் என்பது உறுதியாகிறது.
தொல்கபிலர் - தமிழ் அறிவு மரபின் தந்தை:
பழந்தமிழ் நாட்டில் தொல்கபிலரின் எண்ணிய மெய்யியல் உருவான பின் தான் பழந்தமிழ்நாடு தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் மிக வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது. அதன்பின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் பல புதிய சிந்தனைகளும், பல புதிய நூல்களும் உருவாகின. இவற்றின் காரணமாகப் பல்வேறு துறைகளிலும் பேரளவான வளர்ச்சி ஏற்பட்டு, பழந்தமிழ்நாடு பொருள் உற்பத்தியிலும், தொழில் வளர்ச்சியிலும், உலகளாவிய கடல் வணிகத்திலும் புதிய உச்சத்தை அடைந்து, உலகின் ஒரு முன்னணிச் சமூகமாக ஆகியது. தமிழ்நாட்டு நகர அரசுகள் உலகளவில் பேரளவு வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாகப் பரிணமித்தன. பழந்தமிழ்நாட்டு நகர அரசுகளின் இவைபோன்ற பேரளவான வளர்ச்சிக்கு வித்திட்டது தொல்கபிலரின் எண்ணிய மெய்யியலே என்பதால், தொல்கபிலர் தமிழ் அறிவுமரபின் தந்தை ஆகிறார்.
பார்வை:
(1). தொல்கபிலர் - தமிழ் அறிவு மரபின் தந்தை, கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 17.
(2). மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி, 2018. பக்: 115.
(3). “ “ “ பக்: 88.
(4). தொல்கபிலர் - தமிழ் அறிவு மரபின் தந்தை, கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 18.
(5). “ “ “ பக்: 17
(6). “ “ “ பக்: 77, 84.
(7). “ “ “ பக்: 88.
(8). “ “ “ பக்: 90, 91.
(9). எண்ணியம், அறிஞர் குணா, தமிழ்நாட்டு ஆய்வரண், மீனம் தி.பி. 2044, மார்ச்-ஏப்ரல் 2013. பக்: 1-348..
(10). மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன் பாலன், தமிழினி, 2018. பக்: 65.
(11). பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH, சனவரி-2023, புத்தகம் - 1, பக்: 64.
(12). தொல்கபிலர் - தமிழ் அறிவு மரபின் தந்தை, கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 88.
(13). முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும், சரக சம்கிதையும். பக்: 20-22.
(14). பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH, சனவரி-2023, புத்தகம் - 2, பக்: 539-543.
(15). தொல்கபிலர் - தமிழ் அறிவு மரபின் தந்தை, கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 18-20.
(16). பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH, சனவரி-2023, புத்தகம் - 1, பக்: 116-160, 427&-456, 512-518.
(17). தொல்கபிலர் - தமிழ் அறிவு மரபின் தந்தை, கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், சனவரி-2023, பக்: 259-274.
- கணியன் பாலன்