mk stalin 347

புதிய ஆட்சி பொறுப்பேற்று முப்பது நாட்கள் (மே 7 முதல் ஜூன் 7 வரை) முடியுந் தறுவாயில் மக்கள் கண்காணிப்பகம் விடுகின்ற திறந்த மடல்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு நூறு நாட்களைக் கடந்த பின்னரே அதன் செயற்பாடுகள் குறித்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். இது தான் சனநாயக மரபின் நடைமுறையில் இருக்கும் அரசியல் ஒழுக்க முறைமை, நியதி ஆகும்.

ஆனால் தமிழகத்தில் புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் இந்த அரசைப் பற்றி எதிர்க்கட்சியும், பாரதிய சனதாவும் தொலைக்காட்சிகளில் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைப்பது, அநாகரிகமாகப் பேசுவது அரசியல் அறமற்ற செயலாகும்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் நூறு நாட்கள், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூறவேண்டிய நேரம். சனநாயக நெறிமுறைப்படி புதிய அரசு அமைத்துள்ள “அனைத்துக்கட்சிக் குழுவில்” ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைக், கருத்துகளை எடுத்துரைப்பது தான் அராசியல் நாகரிகம் ஆகும். இதைவிடுத்து பொதுவெளியில் குற்றம் சாட்டுவது வெறுப்பரசியலாகவே வெகுமக்களால் பார்க்கப்படுகிறது.

குடிமைச் சமூகத்தின் நேர்கொண்ட பார்வை:

ஓர் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, நேர்மையான செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும், தார்மீக உரிமையும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கு உள்ளது. குடிமைச்சமூக அமைப்பு என்பதை அரசு சாரா அமைப்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விட வேண்டாம்.

அவர்கள் மனித உரிமைகளுக்காக, மீறல்களுக்கெதிராகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகள், குறிப்பாக அரசியல் கட்சிகளைச் சாராதோர் ஆவர். திமுகவின் வெற்றிக்கு அதன் கட்சியினர் மட்டும் காரணமல்ல.

குடிமைச் சமூகத்தினர், எட்டுவழிசசாலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், குடியுரிமைத் திருத்தச்சட்டம் போன்றவற்றிற்கு எதிராகப் போராடியோர், தொழிற்சங்கத்தினர், பெண்ணுரிமை அமைப்பினர் மேலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவோர், மனித உரிமைகள் தளத்தில் பணியாற்றுவோர், தமிழ்த் தேசிய கருத்துகளை முன் வைத்து பணியாற்றுவோர், ஏழு தமிழர் விடுதலைக்குக் குரல் கொடுத்தோர் இவர்கள் அனைவரும் மனித உரிமைக் காப்பாளர்கள் ஆவர். இவர்கள் அளித்த வாக்குகளும் சேர்ந்து வெற்றிக்கு வித்திட்டு புதிய அரசைப் பொறுப்பேற்க வைத்துள்ளது என்பதை இங்கே நினைகூர விரும்புகிறோம்.

அருஞ்செயல்களை அறிந்து பாராட்டுக:

தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு ஒரு மாத காலத்திற்குள் பல்வேறு முக்கிய பணிகளை ஆற்றியிருக்கிறது. நல்லனவற்றை அறிந்து போற்றிப் பாராட்ட வேண்டியது சமூகக் கடனே என்ற நோக்கில் சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்டுவது காலத்தின் அவசியமாகும்.

· கொரோனோ பெருந்தொற்றுப் பேரிடர்ப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் அரசு செயலாற்றி வருகிறது. கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 அறிவிக்கப்பட்டு ரூ 2000 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மளிகைப் பொருட்களும் வழங்கப்பட உள்ளது.

· தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவிற்கான சிகிச்சை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

· ஆக்சிஜன் தடுப்பூசிகள் உயிர்காக்கும் மருந்துகள் இவற்றிற்கான தட்டுப்பாடு இல்லாத அளவில் அரசு கவனத்துடன் செயலாற்றி வருகிறது.

· கொரோனோ பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவர்க்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதே போன்று பத்திரிகையாளர்களும் முன் களப் பணியாளர்களே என அங்கீகரித்து இழப்பீடும், ஊக்கத் தொகையும் அறிவித்துள்ளது.

· கொரோனா பெருந்தொற்றுக் காரணமாகப் பெற்றோரை இழந்துத் தவிக்கும் குழந்தைகளை அரசே பாதுகாக்கும் என்று உதவிகளை அறிவித்துள்ளது.

· தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து மூன்றாமாண்டு நினைவேந்தல் நாளில் மக்களுக்கு நியாயத்தின் மேல் நம்பிக்கை ஏற்படும் வகையில் போராட்டக்காரர்கள் மீதான குறிப்பிட்ட வழக்குகளைத் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்ப உறுபினர்க்கு, காயம்பட்டோர்க்கு தகுதியின் அடிப்படையில் பணிவழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்கியது பாராட்டிற்குரியது.

· வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை ஒன்றிய அரசுத் திரும்பப்பெற வேண்டும் என்று இந்த அரசு கூறியுள்ளது பாராட்டிற்குரியது.

· சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் நகரப் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் கட்டணமின்றிப் பயணிக்கிறார்கள். இதற்கு அடையாள அட்டைத் தேவையில்லை.

· ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 3 குறைந்துள்ளது.

· தன் படைபாற்றலால் இலக்கிய உலகில் தமிழுக்குப் பெருமைச் சேர்த்த கி. ராஜ்நாராயணன் அவர்களின் மறைவுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ஒரு எழுத்தாளர்க்கு அரசு மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

· அண்மையில் “கலைஞர் நூலகம்” ஒன்றை மதுரையில் அமைக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

· மக்கள் குறை தீர்க்க "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டம் செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

· தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முதல்வரின் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திரு. உதயச்சந்திரன், திரு.உமாநாத், திரு.சண்முகம், திருமிகு அனு ஜார்ஜ் ஆகியோர் முதல்வரைச் சுற்றியிருக்கும் மிகுந்த நேர்மையான அதிகாரிகள். இவர்களின் நியமனம் மூலம் இங்கே ஊழலுக்கு இடமில்லை என்ற காப்புறுதியை அளித்துள்ள அரசை மதித்துப் பாராட்டுகிறோம்.

மாண்புமிகு முதலமைச்சர்க்கு அன்பான வேண்டுகோள்:

தேர்தல் காலத்தில் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடிமைச் சமூகத்தைச் சார்ந்தோர், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வளர்ச்சிப்பணியில் திறன் படைத்தோர் போன்றோர் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இவர்களை அடையாளங்கண்டு, கடந்த காலத்தில் திருமிகு சோனியா தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப் பெற்ற ஆலோசனைக் குழுவைப் போல், மேற்கூறப்பெற்ற வெவ்வேறு துறைகளில் திறன் படைத்தோர் அடங்கிய ஒரு “மாநிலக் குழுவை ” அமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இதற்கு உதவியாக ஒரு துணைக் குழுவையும் அமைக்க வேண்டும். இக்குழுக்கள் தன்னிச்சையாகச் செயற்பட்டு மக்கள் நலன் சார்ந்தவற்றை அரசின் கவனத்திற்குத் தொடர்ந்து எடுத்துரைத்து அதற்கான பரிந்துரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும். இறுதியாக எதிர்க்கட்சியினர் முதல் நூறு நாட்கள் அரசுடன் இணைந்து செயற்படுவது அரசியல் நாகரிகம் என்று எடுத்துரைக்கிறோம்.

எதிர்க்கட்சியினர் வெறுப்பரசியலுக்கு இடமளிக்காமல், சனநாயக நெறிமுறைகளுக்கிணங்க அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்கள் பணியில் அறமற்ற செயல் பொருளற்றது.

திரு. ஹென்றி திபேன்,

நிர்வாக இயக்குநர் – மக்கள் கண்காணிப்பகம்

Pin It