hyundai chennai employeesஇழவு விழுந்தாலும் ஒப்பாரி வைத்து கத்திக் கதறினாலும் அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளை மூடப் போவதில்லை என்பதிலும் 100 சதவீத தொழிலாளர்களுடன் ஆலைகளை இயக்குவதிலும் இந்த அரசு உறுதியாக இருக்கின்றது.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை மனமார ஏற்றுக் கொண்ட மனிதர்களிடம் மனித விழுமியங்களை எதிர்ப்பார்ப்பது கசாப்புக் கடைகாரனிடம் ஆடுகள் கருணையை எதிர்ப்பார்ப்பது போன்றது தான்.

தொழிலாளர்களின் ரத்தத்தை சிறுநீராகவும் முதலாளிகளின் சிறுநீரை புனித தீர்த்தமாகவும் கருதும் ஞான நிலையை முதலாளித்துவம் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அளிக்கின்றது. அந்த ஞான நிலைதான் அவர்களை துடி துடித்து சாகும் மனித உயிர்களை ரசித்துப் பார்க்க வைக்கின்றது.

முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் மூலம் ஆட்சியை பிடிக்கும் அரசுகளுக்கும் முதலாளிகளின் அடியாளாக வேலை செய்ய கையூட்டு வாங்கி, வாங்கிய கையூட்டில் தொழிலாளர்களின் ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வரும் கார்ப்ரேட் கட்சிகளுக்குமான வித்தியாசம் எப்போதுமே அப்பட்டமாகவே தெரியும்.

இன்று நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் ஆலை கிடைத்தவர்களை எல்லாம் வாரி சுருட்டிக் கொண்டு சென்று கொண்டுள்ளது. எழுத்திலும் சொல்லியும் கேள்விப்பட்ட மனித பேரவலங்களை நாம் இன்று கண்முன் பார்த்து கலங்கி நிற்கின்றோம்.

மருத்துவ மனைகளில் இருந்து குப்பைகளை கொட்டுவது போல பிணங்களை கொட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். சதைகளை எரித்து எரித்து களைத்துப் போன தகன மேடைகள் உருகி வழிந்து கொண்டு இருக்கின்றன.

ஆனாலும் உலகம் முதலாளிகளுக்கான தன் உற்பத்தியை நிறுத்துவதில் இருந்து ஒரு அடி கூட பின் வாங்காமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஒரு பக்கம் தகன மேடைகளில் இருந்து புகைகள் இடைவிடாமல் வெளியேறுவது போல இன்னொரு பக்கம் தொழிற்சாலைகளின் புகை போக்கிகளில் இருந்தும் புகை வெளியேறிக் கொண்டு இருக்கின்றது.

இரண்டு பக்கமும் இருந்தும் வெளியேறும் சாம்பல் முதலாளித்துவத்தின் தத்துவத்தை மார்க்சியம் படிக்காமலேயே தொழிலாளிகளுக்கு உணரவைத்துக் கொண்டு இருக்கின்றது.

நேற்று வரை தான் ஆதரித்து பேசிய, கூழைக் கும்பிடு போட்ட முதலாளியை இன்று அதே தொழிலாளி காறி உமிழ்கின்றான். நேற்று வரை தான் கொண்டாடிய கட்சி தலைவனை இரக்கமற்ற பேர்வழி என்றும் கைக்கூலி என்றும் சாபமிடுகின்றான்.

நடைமுறையில் இருந்து தத்துவத்தையும் தத்துவத்தில் இருந்து நடைமுறையையும் இன்று தொழிலாளர்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்ததன் விளைவுதான் இது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இயங்கிவரும் ஹூண்டாய் தொழிற்சாலையில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். சிகிச்சை பலனின்றி 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்.

இதுதான் முதலாளித்துவத்தின் அப்பட்டமான கோரமுகம். இத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 10 தொழிலாளர்கள் ஆலையின் லாப வெறிக்கு பலி கொடுக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

ஆனால் ஆலை நிர்வாகம் முழு ஊரடங்கில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையை மயிரளவுக்குக் கூட கண்டு கொள்ளவில்லை.

இதனால் பணிக்குச் செல்லாமல் தொழிற்சாலை வளாகத்திலேயே தொழிலாளர்கள் உள்ளிருப்பு உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தியதை அடுத்து ஆலை நிர்வாகம் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி 29-ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்தது.

ஐந்து நாட்களில் எதுவுமே மாறப்போவதில்லை. ஏறக்குறைய 600 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பவே பல நாட்கள் ஆகும். மேலும் உயிரிழப்பு ஏற்படாது என்பதற்கும் எந்த உத்திரவாதமுமில்லை.

ஆனால் தொழிலாளர்கள் ஆலை நிர்வாகம் தரும் ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் ஹூண்டாய் ஆலை முதலாளியின் லாப வெறிக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். சாவதற்கு தயாராய் போக வேண்டும்.

தொழிலாளர்களின் இறப்புக்கு ஆலை நிர்வாகம் 10 சதவீதம் காரணமென்றால் மீதம் 90 சதவீத காரணம் இந்த அரசுதான். முதலாளிகளின் லாப வெறிக்கு தொழிலாளர்களை தெரிந்தே இந்த அரசு பலி கொடுக்க துணிந்துள்ளது.

ஸ்டாலின் அரசின் அடித்தளமே தொழிலாளர்களின் பிணங்களின் மீது வலுவாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இதன் மூலம் இந்த அரசு முதலாளிகளுக்கு தெளிவான சமிக்ஞைகளை வழங்குகின்றது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் முதலாளிகளுக்கு தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உயிரை நிபந்தனை இன்றி பலி கொடுக்க இந்த அரசு தயாராக இருக்கின்றது என்று.

பன்னாட்டு தொழிற் நிறுவனங்கள் எதிர்ப்பார்ப்பது அதைத்தான். எவன் தாலியை அறுத்தாலும் ஆளும் அரசுகள் கண்டு கொள்ளக் கூடாது. அப்படி கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்து கொடுத்து விடுவார்கள்.

ஸ்டெரிலைட் ஆலைக்கு திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பே முந்திக் கொண்டு போய் ஆதரவுக் கரம் கொடுத்த போதே இந்த அரசு எந்த வழியில் நடக்கப் போகின்றது என்பது தெரிந்து விட்டது. நிச்சயம் முதலாளிகளுக்காக ஒட்டுமொத்த தொழிற்துறை பாட்டாளிவர்க்கத்தையும் பலி கொடுக்க இவர்கள் தயங்க மாட்டார்கள்.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை செயல்படுத்துவதில் மோடிக்கு ஸ்டாலின் எந்தவகையிலும் குறை வைக்க மாட்டார் என்பதை விட மோடியை விட பல மடங்கு அதை தீவிரமாக செயல்படுத்தவும் செய்வார் என்பதைத்தான் அவரின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் காட்டுகின்றன.

தொற்று வேகமாக பரவி தினம் 450 க்கும் மேற்பட்டவர்கள் இறக்கும் சூழ்நிலையில் 100 சதவீத தொழிலாளர்களுடன் ஆலையை இயக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு மனம் வேண்டும். அந்த மனம் பிணக் குவியலின் மீது பணக் குவியலை கட்டமைக்கும் சித்தாந்தத்தில் தோய்ந்த பின்தான் வரும்.

திமுகவிற்கு ஓட்டு போட்டதற்காக இப்போதே ஒவ்வொரு தொழிலாளியும் துயரப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். அவர்கள் வாழ்வதற்காக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார்கள்.

ஆனால் இந்த அரசு தனது சொந்த சுயநலத்திற்காக ஒட்டு மொத்த தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தையும் லாப வெறி பிடித்த முதலாளிகளுக்கு பலி கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

ஹூண்டாய் தொழிற்சாலையில் மட்டுமல்ல ஓட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் முதலாளிகளாலும் அரசாலும் பலி கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வரும்.

கொரோனா தொற்று குறையும் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறையை முதலாளிகளும் அளிக்கப் போவதில்லை அளிக்கச்  சொல்லி முதலாளிக்கு இந்த அரசும் நிச்சயம் உத்திரவிடப் போவதில்லை. எனவே இந்தியாவில் அதிகளவு பிணங்களை உற்பத்தி செய்யும் மாநிலம் என்ற பெருமையை திமுக அரசு கூடிய விரைவில் தட்டிச் செல்லும்.

- செ.கார்கி

Pin It