Ainni logo2017 SCA (Standardized Control Assessment) அறிக்கையின்படி, தேசிய மனித உரிமை ஆணையம், பணி நியமனங்களைத் தெரிவு செய்வதில் சில மாற்றங்களை முன்வைத்தது – காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம், தகுதியான விண்ணப்பதாரர்கள் போன்றவற்றை மதிப்பிடுவதற்குத் தெளிவான, சீரான அளவுகோல்களை நிறுவியது.

அண்மையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணி நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள், வழிமுறைகள் பேரதிர்ச்சியும் பெருங்கவலையும்  அளிப்பதாக அகில இந்திய அரசுசாரா அமைப்புகளின் வலைத்தளம் இத்துடன்   தேசிய/மாநில மனித உரிமைகள் நிறுவனங்களுடன் பணிபுரியும்  தனிமனிதர்கள் (The All India Network of NGOs and Individuals working with the National and State Human Rights-AiNNI)  என்ற அமைப்பு தெரிவித்துள்ளது..

தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டமைப்பின்  (Global Alliance of National Human Rights Institutions-GANHRI) அங்கீகாரத்திற்கான துணைக்குழுவின் (SCA) பரிந்துரைகளையும், 2017 இல் SCA  முன் தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த அறிக்கையையும்,2019 இல் மனித உரிமைகள் சட்டத்  (HRPA) திருத்தத்தையும், குடிமைச்சமூகம் அளித்த முறையீடுகளையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் நியமனக் குழு முற்றிலுமாக புறக்கணித்துள்ளது என்று AiNNI உறுதியாக நம்புகிறது.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி நியமனங்கள், தேவையான செயல்முறைகளுடன், பரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைத்  தரங்களின் அடிப்படையில், மதிப்பீடு செய்ய திட்டவட்டமான அளவு கோல்களுடன், ஒவ்வொரு விண்ணப்பதாரர்களையும் உள்ளடக்கிய, வெளிப்படையான அனைத்து முயற்சிகளும் விரைவாக செய்யப்பட வேண்டும் என்று கடந்த 2021 மே 11 அன்று AiNNI பல அமைப்புகளுடன் இணைந்து,  இந்திய குடியரசுத் தலைவர்க்குக் கடிதம் எழுதியது.   

 மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், குழுவில் உள்ள அதிருப்தி உறுப்பினருமான திரு மல்லிகார்ஜுன் கார்கேவின் கடிதத்திலும்  இது காணப்படுகிறது, இருப்பினும்  அனைத்துப் பரிந்துரைகளையும் அரசு கண்டுகொள்ளவில்லை. பணிநியமனங்களில் மரபை மீறிய அரசின் எதேச்சதிகாரப்போக்கு வெளிப்படையாக உள்ளது.

2011, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிநியமனங்களில் பன்மைத்துவம் இல்லை, குறிப்பாக சாதி, மத, பாலின சமத்துவத்தை அடையாளப்படுத்தும் பிரதிநிதித்துவம் இல்லை என்று SCA தனது பெருங்கவலையை வெளிப்படுத்தியது.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விளம்பரம், சீரான அளவுகோல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை மதிப்பீடு செய்தல், அது குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்துதல் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை முன்னிறுத்தியது.

2017 ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கையின்படி, “தேவைப்படும் காலிப் பணியிடங்களுக்கான விளம்பரம், விண்ணப்பதாரர்களின் தகுதியை மதிப்பிடுதல், தகுதியானவரைத் தெரிவு செய்ய தெளிவான, சீரான அளவுகோல்களை நிறுவுதல் போன்ற தேவைகளை உள்ளடக்குவதற்கான மாற்றங்களுக்காக தேசிய மனித உரிமை ஆணையம் (அரசாங்கத்திடம்) முறையிட்டது.”

ஒரு வெளிப்படையான செயல்முறையில், சீரான  அளவுகோல்களை அமைத்தல், விரிவான ஆலோசனைகளை நடத்துதல் போன்றவற்றை அண்மை நியமனங்களில் அரசு பின்பற்றத் தவறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது, திரு. கார்கேவின் பரிந்துரைகள் இருந்தபோதிலும், பன்மைத்துவக் கொள்கையை இக்குழு வெளிப்படையாக நிராகரித்துள்ளது. மனித உரிமைகள் சட்டம் 2019 இன் திருத்தங்களைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நியமனம்  தொடர்பான நடைமுறைகள் திருத்தப்பட்டன.

இதன்படி தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி போன்றோரைத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகத் தெரிவு செய்யலாம். தற்போது நீதிபதி ஆர் பானுமதி, நீதிபதி இந்து மல்ஹோத்ராஆகிய இருவர் உள்ளனர். இவர்களை நியமனக்குழு கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற பெண் நீதிபதியைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் நல்வாய்ப்பை நியமனக் குழு தவறவிட்டது என்றே கூறப்படுகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என்பதே வரலாறு.

நீதிபதி அருண் மிஸ்ரா அவர்களை விட மூத்தவரும், அனுபவம் மிக்கவரும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நீதிபதி பி.சி.பந்த் அவர்கள், மனித உரிமை நிறுவனங்களில் உயர்ந்ததாகக் கருதப்பெறும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்க தகுதியுள்ளவராகக் கருதப்பட்டாரா என்பதும் தெளிவாக இல்லை.

நீதிபதி அருண் மிஸ்ரா தற்போதைய அரசாங்கத்தை வெளிப்படையாகப் போற்றித் தன்னைச் சுய - பிரகடனம் செய்து கொண்டவர், மேலும் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அவருடைய நடத்தைகளும், தீர்ப்புகளும் கேள்விக்குள்ளானவை என்று நம்பகமான ஊடகங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, தேர்வுப் பட்டியலில் தகுதி வாய்ந்தோர் இருக்கும் போது, மனித உரிமைகள் தரங்களின் அடிப்படையில், மதிப்பீடு செய்யும் அளவுகோல்கள் அதற்கான தகுதியைப் பூர்த்தி செய்ததா? என்ற ஐயம் எழுகிறது.

பல நம்பகமான மனித உரிமைக் காப்பாளர்களைக் கொண்ட இந்திய  நாட்டில், மனித உரிமைகள் பற்றிய அறிவும் அனுபவமும்உள்ள ஒருவரே தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக  இருக்க வேண்டும் என்ற கருத்தோட்டம் உள்ள நிலையில் உளவுத்துறையின் முன்னாள் இயக்குநரைத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக  நியமித்திருப்பது ஓர் அதிர்ச்சியாக உள்ளது.

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரை மனித உரிமைகள் நிறுவனத்தின் ஆணையாளராக இருப்பார் என்பது இதற்கு முன் இல்லாத ஒன்றாகும். நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட நீதித்துறை உறுப்பினரின்  தற்போதைய வயதைக் கருத்திற் கொண்டால், இந்த அலுவலகத்தில் 19 மாதங்களுக்கு மேல் அவரால்  பணியாற்ற முடியாது.

நீதிபதி முருகேசன் ஓய்வு பெற்ற மூன்று ஆண்டுகள் முடிவுறும் தறுவாயில்  இப்பதவி இன்னும் காலியாகவே  உள்ளது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். மனித உரிமைகள் சார்ந்த அனுபவம், அதற்கான ஆவணம், இயல்பான பங்களிப்பு ஆகியவையே தெரிவு செய்வதற்கான அளவுகோல் ஆகும், எனவே இப்போது செய்யப்பட்ட நியமனங்களுக்கு மறு ஆய்வு தேவைப்படுகிறது.

மனித உரிமைகள் சட்டம் 2019 திருத்தங்களைக் குறிப்பிட்டு தேசிய மனித உரிமைகள்  ஆணையத்தின் பதவி நியமனத்தில் அரசின் தலையீடு கூடாது என்று  AiNNI கூறியது, “தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மனித உரிமைகளுக்குச் சாதகமான ஒருவரை நியமனக் குழு தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும். ஆணையத்தின் நலன் கருதி தலைமை நீதிபதியைத் தெரிவு செய்வது விரும்பத்தக்கது. இது நீதித்துறையின், அரசின் தலையீட்டைக் கட்டுப்படுத்தும்.

2006 ல் முன்மொழியப்பட்ட இந்த திருத்தத்திற்கு நீதிபதி ஜே.எஸ்.வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவைக்கு வந்தபோது திரும்பப் பெறப்பட்டது."

கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தால், 2017 இல் SCA இன் மதிப்பாய்வு அறிக்கையைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உள்ள  “A” தர வரிசையைத் தக்க வைப்பதற்கு, ஐ.நா.வின் பாரிஸ் கோட்பாடுகளை அடியொற்றி மனித உரிமை சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த  உறுதி அளித்ததை இப்போது நினைவு கூர வேண்டியுள்ளது.  

தரவரிசையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள உலக அரங்கில் இந்தியா சாதுர்யமாக SCA வைத்  தவறாக வழி நடத்தியதா என்ற கேள்வி பெரிதாக எழுகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணி நியமனத்தில் உள்ள நடைமுறையை மீறுதல் என்பது ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மைக்கும், உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்ற  நற்பெயருக்கும் கேடு விளைவிக்கிறது.

மேலும் தகவலுக்குத், தொடர்பு கொள்ளவும் -

ஹென்றி திபேன், தேசிய செயலாளர், AiNNI

Pin It