கொரோனாத் தொற்று இரண்டு அலைகளாக வந்து நாட்டைப் புரட்டிப் போட்ட நிலையில் மூன்றாம் அலை அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

கொரோனாத் தொற்றைத் தடுக்கும் வழிகளில் தனி மனித இடைவெளி என்பது மிக முக்கியம். வடநாட்டுக் கும்பமேளாவைத் தடை செய்யாதக் காரணத்தால், கொரோனாக் கொடுந்தொற்று எப்படித் தலைவிரித்து ஆடியது என்பதை உத்தரப் பிரதேசத்தில் பார்த்தோம். இறந்து போன உடல்களைக் கூட ஏரிக்க முடியாத நிலையில் சாலையோரங்களில் அவைகளைக் கண்டோம்.

அண்டைய கேரளா, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தடையைத் தளர்த்தியதால் இன்று கேரளத்தில் கொரோனாத் தொற்று வேகமெடுத்துள்ளது. அது போலத்தான் மும்பை நிலையும் இருக்கிறது.

பா.ஜ.க ஆளும் கர்நாடகத்தில் அரசு வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை விதித்துள்ளது. பாஜகவின் முந்தைய கூட்டாளியான சிவசேனா ஆட்சி, மும்பையில் வினாயகர் சதுர்த்திக்குத் தடை விதித்துள்ளது.

இவையெல்லாம் தெரிந்திருந்தும் பா.ஜ.க வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு வினாயகர் சிலை ஊர்வலத்திற்குத் தடை விதிக்கக் கூடாது என்று பேட்டி அளிக்கிறார். அவருக்கு இதில் ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பது வெளிப்படை.

தி.மு.கழகம் ஆட்சியேற்ற போது தமிழ்நாட்டில் கொரோனா உச்சத்தில் இருந்ததை மறக்க முடியாது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிதானமாக ஆனால் போர்க்கால அடிப்படையில் எடுத்த நடவடிக்கையால் தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறைகள் எல்லாம் சமாளித்து 100 நாட்களுக்குள் நிலையையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களின் பணியும் கடுமையாக இருந்துள்ளது.

அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில், சூழலைப் புரிந்து கொள்ளாமல் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ள வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பொதுவெளியில் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற சங்க்பரிவாரங்களில் கூற்று மிகவும் ஆபத்தானது.

தமிழ்நாடு அரசு, வீட்டில் சதுர்த்தியைக் கொண்டாடத் தடைவிதிக்கவில்லை. பொதுவெளியில் குறிப்பாகக் கூட்டமாக மக்கள் செல்லும் ஊர்வலங்களைத்தான் தடைசெய்துள்ளது.

கொரோனாப் பரவலைத் தடுக்கப் பெரிதும் உதவும் இந்தத் தடை வரவேற்புக்கு உரியது, மக்களைப் பாதுகாக்கும் வழியும் இதுதான்.

இந்த உண்மை வடிவம் சங்கப் பரிவாரங்களுக்குக் குறிப்பாக அண்ணாமலைக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் வினாயகர் சதுர்த்திக்குத் தடை நீக்கக் கோருவது, தி.மு.கழக அரசின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மட்டுமன்று, மக்களின் மீது அவர்களுக்கு அக்கரையில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

Pin It