கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ramasundram1“பல்வேறு சோதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், பயன்படுத்தலுக்கும் ஆளான முதலாளித்துவ அறிவியலுக்கு, சோதனைக்கு ஆளாகாத அனுபவத்தாலும் கூர்ந்து நோக்காலும் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலவுடைமை அறிவியல் ஈடுகொடுக்க முடியாது. (சுந்தரம், 2004: வீ)”

இந்த மேற்கோள் அறிவியல் குறித்த பேரா. இராம.சுந்தரம் அவர்களின் பார்வையைக் குறிக்கிறது. அவருக்கென்று ஒரு தனித்த பார்வை இருந்தது. அதை அவர் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை.

வாழ்க்கைப் பின்னணி

பேரா இராம.சுந்தரம் அவர்கள் 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அலவாக்கோட்டையில் பிறந்தார். பெற்றோர்கள் இராமநாதன் - அன்னபூரணி. 1954 இல் நாட்டரசன்கோட்டை ச.இராம உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டத்தை 1959 இல் முடித்தார்.

பின்னர் அவர் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பேரா.வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் (1964-1966) மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

அப்போது பேரா வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் பேரா. இராம. சுந்தரத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்திற்கு அனுப்பிவைத்தார்.

அவர் தன் மேற்பார்வையின்கீழ் ஆய்வை மேற்கொள்ளும் முனைவர் பட்ட மாணவர்களைப் பல்வேறு பல்கலைக்கழக மொழியியல் துறைகளுக்குக் குறுகிய காலம் அங்குத் தங்கி ஆய்வை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இது அவர்களைப் புதிய சூழலில் புதிய பேராசிரியர்களையும் துறைசார்ந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்துத் தங்கள் ஆய்வை விசாலப்படுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

அப்படிதான் பேரா. இராம.சுந்தரம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்திற்கு வந்தார். அப்போது நாங்கள் (பேரா.பொற்கோ, பேரா.வ.ஞானசுந்தரம், நான் ஆகியோர்) முதலாம் ஆண்டு மொழியியல் முதுகலை மாணவர்களாகவும் பேரா.கி.கருணாகரன், பேரா.க.பாலசுப்பிரமணியம் ஆகியோர் மொழியியல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களாகவும் இருந்தோம்.

இதுதான் பேரா. இராம.சுந்தரம் அவர்களுடனான எங்கள் அறிமுகம். அது நட்பின் தொடக்கம். பேரா.இராம.சுந்தரம் அவர்கள் “A Descriptive Grammar of Pattuppaattu” (பத்துப்பாட்டு வண்ணனை இலக்கணம்) என்ற பொருளில் ஆய்வை மேற்கொண்டிருந்தார்.

அமைப்பு மொழியியல் கோட்பாட்டு வரையறைக்குள் இவ்விலக்கியத்தின் ஒலியனியல் அமைப்பையும் உருபனியல் அமைப்பையும் விவரித்த பிறகு தொடரியலை விவரிக்க ஹெம்ஸ்லேவ் (Hjemslev) என்ற அறிஞரின் க்ளோஸெமேட்டிக்ஸ் (Glossematics) என்ற கோட்பாட்டை எடுத்துக்கொண்டார். இது ஒரு கடினமான முயற்சி.இக்கோட்பாட்டை விவரிக்கின்ற நூல்கள் மொழியியலில் அதிகம் இல்லை.

முனைவர் பட்ட ஆய்வேட்டைக் கேரளப் பல்கலைக்கழகத்திற்கு அளித்த பிறகு, பேரா.இராம.சுந்தரம் அவர்கள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரி மொழியியல் துறையில் பல்கலைக்கழக நிதி நல்கையுடன் ஆய்வாளராகச் சேர்ந்தார்.

பேரா.எஸ்.எம்.கத்ரே, பேரா.ஏ.எம்.காடகே, பேரா.ஹெச்.எஸ்.பிலிகிரி போன்ற அறிஞர்களுடன் பழகவும் மொழியியல் அறிவை விரிவுபடுத்திக்கொள்ளவும் அது அவருக்கு வாய்ப்பாக அமைந்தது.

இந்திய அளவில் டெக்கான் கல்லூரி மொழியியல் துறையும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் உயராய்வு நிறுவனங்களாகப் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் மேம்படுத்தப்பட்டன.

பேரா.எஸ்.எம்.கத்ரே அவர்கள் டெக்கான் கல்லூரி மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநராகவும், பேரா.தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார்கள். அத்துடன் கேரளப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் அனைந்திய நிலையில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

பேரா.இராம. சுந்தரம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பயிலும்போது பேரா.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களின் மாணவராகவும் பேரா.தெ.பொ.மீனாட்சிசுந்தரம் அவர்களின் மாணவராகவும் இருக்கக் கூடிய நல்வாய்ப்பைப் பெற்றிருந்தார்.

பின்னர் பேரா வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் மாணவராக இருந்தார். சிறந்த தமிழ் அறிஞர்களிடம் தமிழும் மொழியியலும் பயிலும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார்.

பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநராக இருந்த பேரா. ச.அகத்தியலிங்கம் அவர்கள் அம்மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்ற அழைப்பு விடுத்ததை ஏற்று அங்குப் பணியில் சேர்ந்தார்.

அங்குப் பணிபுரியும்போது போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழையும் மலையாளத்தையும் பயிற்றுவிக்க அவரை அழைத்தார்கள். ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் போலந்தில் பணிபுரிந்துவிட்டுத் தமிழகம் திரும்பினார்.

போலிஷ் மொழியில் நன்றாகப் பேசவும் படிக்கவும் தேர்ச்சி பெற்றதுடன் திருக்குறள், திருவெம்பாவை, திருப்பாவை, திருமுருகாற்றுப்படை, சில பாரதி பாடல்கள், ஜெயகாந்தனின் ஓரிரு கதைகள் ஆகியவற்றைப் போலிஷ் மொழியில் வெளிவர அம்மொழி அறிஞர்களுடன் இணைந்து மொழிபெயர்ப்பை மேற்கொண்டார். அம்மொழியில் நல்ல புலமையை வளர்த்துக்கொண்டார்.

எல்லோருடனும் நன்றாகவும் பாசத்துடனும் பழகும் பண்பு உள்ளவராதலால் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியராக அவர் அங்கு இருந்தார். அவர் இருக்கும் இடத்தில் நகைச்சுவையும் மகிழ்ச்சியும் பொங்கி வழியும்.

போலந்திலிருந்து தமிழகத்திற்கு வந்த பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில் முதுநிலை ஆய்வாளராக அவர் சேர்ந்தார். பேரா.ச.அகத்தியலிங்கம் அவர்கள் பேரா.இராம.சுந்தரம், பேரா.குமாரசாமி ராஜா, பேரா.செ.வை. சண்முகம், பேரா.க.பால சுப்பிரமணியம், பேரா.பொன்.கோதண்டராமன் (பொற்கோ) ஆகியோர் அடங்கிய ஒரு சிறு குழுவை உருவாக்கினார்.

தொல்காப்பியத்தையும் தொல்காப்பிய உரைகளையும் ஆழமாகப் படித்து விரிவாக விவாதிக்கின்ற தளமாக அக்குழு இருந்தது. விவாதங்கள் பரபரப்பாகவும் கடுமையாகவும் நிகழ்ந்த காலம் அது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளிவந்த பிறகு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் பேரா.இராம.சுந்தரம் அவர்களைத் தமிழ் வளர்ச்சி என்ற திட்ட இயக்ககத்தின் இயக்குநராக நியமித்து அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழைப் பாடமொழியாகப் பயிற்றுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும் பொறியியலில் பி.இ. படிப்பிற்கும் தேவையான நூல்களையும் கலைச்சொற்களையும் உருவாக்கும் பணியை மேற்கொள்ள அவர் பேரா இராம.சுந்தரத்திடம் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் தலைசிறந்த மருத்துவர்களையும் பொறியியலாளர் களையும் கண்டறிந்து முதல் இரண்டு ஆண்டுகளுக்குரிய பாடத்திட்டங்களையும் நூல்களையும் உருவாக்கும் பணிகளைப் பேரா இராம.சுந்தரம் அவர்கள் மேற்கொண்டார்.

அவருடைய அயராத உழைப்பின் காரணமாக பொறியியலில் 13 நூல்களும் மருத்துவத்தில் 14 நூல்களும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளிக்கொணரப்பட்டன.

தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன (சுந்தரம், 2019: 198-199). பல்வேறு அறிவியல் நூல்கள் தமிழில் வெளிவந்தன.

1987-இல் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை என்ற புதிய துறையை இரண்டாம் துணைவேந்தராகப் பணியாற்றிய பேரா ச.அகத்தியலிங்கம் அவர்கள் உருவாக்கி அத்துறையின் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பேரா. இராம. சுந்தரம் அவர்களை நியமித்தார்.

அத்துடன் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் ஒன்றைத் தொடங்கி அதன் செயலாக்கத்தை அவரிடம் ஒப்படைத்தார். இக்கழகம் 1987 முதல் இதுவரை 24 கருத்தரங்குகளைத் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுடனும் கல்லூரிகளுடனும் இணைந்து நடத்தியுள்ளது என்பது அவரின் சாதனைகளுள் முக்கியமானது.

“யார் எப்போது கலந்துரையாட விரும்பினாலும் அவர்களுக்கு வாய்ப்பளித்து, இசைவாகவும் இனிமையாகவும் அவர்களோடு கலந்துரையாடி அவர்களுக்கு உதவுகிற உயர்பண்பும், பல்துறை அறிவுத் திறமும் ஒருங்கு அமையப் பெற்றவர் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள்” என்று சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேரா.பொற்கோ அவர்கள் (1999) கூறுகிறார்.

இக்கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற இப்பண்புகள்தான் காரணமாக அமைந்தன. அறிவியல் தமிழ் என்ற அறிவுத் துறை இன்று ஆல் போல் தழைத்து வளர்ந்து செயல்பட அவருடைய பணி மகத்தானது. “அறிவியல் தமிழின் தந்தை” என்று அவர் அழைக்கப்படுகிறார். 1998-இல் அவர் தன்னுடைய பணியை நிறைவுசெய்தார்.

பணி நிறைவு பெற்றாலும் அறிவியல் தமிழ்த் துறையோடு அவருடைய தொடர்பு அறுபடாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. அதேபோல் டாக்டர் சு.நரேந்திரன், மறைந்த பேரா சா.கிருட்டினமூர்த்தி, தற்போதைய அறிவியல் தமிழ்த் துறைத் தலைவர் பேரா தியாகராஜன் ஆகியோருடன் இணைந்து அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகத்தின் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

இதுவரை 24 கருத்தரங்குகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘வளர்தமிழில் அறிவியல்’ என்ற வரிசையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அறிவியல் கலைச்சொற்களைத் தொகுத்ததும் அவற்றைத் தரப்படுத்தியும் தரப்படுத்தியதன் பின்னணியில் கொள்கைகளை வகுத்ததும் அவருடைய முக்கியப் பணிகள்.

பேரா.இராம.சுந்தரம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்) படித்ததால் தமிழில் மரபுசார் புலமையும் பேரா. அ.சிதம்பரநாதன் செட்டியார், பேரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் போன்ற தமிழ் அறிஞர்களிடம் தமிழ் கற்றதால் மேலை நாட்டு ஆய்வு முறையையும் ஒருங்கே பெற்றிருந்தார்.

பேரா.மா.இராசமாணிக்கனார், பேரா. ஒளவை துரைசாமிப் பிள்ளை, பேரா. அ.கி.பரந்தாமனார், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் ஆகிய பேராசிரியர்களைப் போற்றிப் புகழ்வார். முனைவர் பட்டத்திற்காகப் பேரா. வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வை மேற்கொண்டதால் மொழியியலிலும் ஆழமான அறிவை வளர்த்துக்கொண்டார்.

பேரா.வ.அய்.சுப்பிரமணியம் அவர்களைத் தன் ஞானத் தந்தை என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அத்துடன் பேரா.நா. வானமாமலை போன்றோரின் தொடர்பால் நாட்டுப்புறவியலிலும் தம்முடைய புலமையைத் தக்கவைத்துக்கொண்டார்.
சங்க இலக்கியத்தை முனைவர் பட்ட ஆய்விற்காக எடுத்துக்கொண்டதால் சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியம் போன்ற மரபிலக்கணங்களிலும் ஆழ்ந்த அகன்ற அறிவைப் பெற்றிருந்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்’ என்ற திட்டம் அவர் இட்ட வித்து. பின்னர் அது ஒரு தனித் திட்டமாக வளர்ந்து பல நூல்கள் வெளிவந்தன.

வரலாற்றில் ஆர்வம் நிறைந்து இருந்ததால் தமிழ் வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார். பணிவழியான அறிவியல் தமிழும் ஆழமாக அவரிடம் குடிகொண்டது. எடுத்த காரியத்தை எவ்வித சமரசமும் இன்றி நேர்மையாகவும் முறையாகவும் துடிப்பாகவும் செய்யக் கூடியவராக அவர் இருந்தார்.

நூல்கள் வெளியீடு

1999ஆம் ஆண்டு அவருடைய பணிநிறைவைச் சிறப்பிக்கும் வகையிலும் அவரைப் பெருமைப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும் என்று விரும்பிய அவருடைய நண்பர்கள் அவருடைய அறுபதாம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் மலர் ஒன்றைக் கொண்டுவரப் பாடுபட்டார்கள்.

மணிவாசகர் பதிப்பகம் அதனை நிறைவேற்றும் வண்ணம் தமிழியல் ஆய்வுகள்’ என்னும் தலைப்பில் மலர் ஒன்றைப் பதிப்பித்தது. பேரா.சா.கிருட்டிணமூர்த்தி, பேரா.கி.அரங்கன், பேரா.எ.சுப்பராயலு ஆகியோர் பதிப்பாசிரியர்களாகச் செயல்பட்டு அம்மலரை வெளிக்கொணர்ந்தார்கள்.

பேரா.இராம.சுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு சுருக்கமாகவும் அவர் படைத்த நூல்கள், கட்டுரைகள் ஆகியவை தொகுக்கப்பட்டு அம்மலரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏறக்குறைய பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தும் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டும் உள்ளது அவருடைய சிறப்பு.

அவருடைய மொழிபெயர்ப்பு இயல்பாக அமைந்திருக்கும். இதற்கு உரிய சான்றாக, பேரா. தாமஸ் ட்ரவுட்மேன் அவர்களின் ஆங்கில நூலைத் “திராவிடச் சான்று” என்ற தலைப்பில் மொழிபெயர்த்துக் காலச்சுவடு பதிப்பகத்தின்வழி வெளிவந்ததை நாம் இங்குக் குறிப்பிடலாம்.

இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில் பேரா.எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்கள் பணி குறித்தும் பேரா. க.கைலாசபதி அவர்களுடைய பணி குறித்தும் நூல்கள் எழுதித் தரும்படி சாகித்திய அகாதெமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பேரா.இராம.சுந்தரம் அவர்கள், அவர்களைப் பற்றி இரு நூல்களை அந்நிறுவனத்திற்கு அளித்தார்.

அவ்விரு நூல்களும் பேரா. இராம.சுந்தரம் அவ்வறிஞர்களின் மீது கொண்டிருந்த அன்பையும் புலமை மீது கொண்டிருந்த மரியாதையையும் காட்டும். அதேபோல் பேரா கா.சிவத்தம்பி அவர்களுடனான அவருடைய நட்பும் குறிப்பிடப்பட வேண்டியது.
அவருடைய கல்விப் பணியைப் பாராட்டி 1997 ஆம் ஆண்டு ஆதித்தனார் நிறை முத்தமிழ் மன்றத்தின் சார்பாக மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்வழிக் கல்வி சாதனைக்கான ‘நல்லறிஞர்’ விருது வழங்கினார்.

25 கருத்தரங்குகள் நடத்தியதோடு 60க்கும் மேற்பட்ட மாநில/ தேசிய/ சர்வ தேசிய கருத்தரங்குகளில் அவர் பங்கெடுத்துள்ளார்.
வார்சாவில் நடைபெற்ற கீழைத்தேயயியல் அறிஞர் கருத்தரங்கு (1977), கொழும்பில் நடைபெற்ற பிராந்திய மொழியியல் கருத்தரங்கு (1992), கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாசிரியர்கள் மாநாடு (1994), தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் “அறிவியல் தமிழ் அமைப்பு” என்னும் தலைப்பில் பத்து சிறப்புரைகள் அவர் நிகழ்த்தியுள்ளார். சுருக்கமாகச் சொல்வது என்றால் அவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, மொழியியல், மொழி பெயர்ப்பியல், அறிவியல் தமிழ், மொழித் திட்டமிடுதல், நாட்டுப்புறவியல் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்.

சமூகப் போராளி

அறிவுத் தேடலோடு நிற்காமல் சமூகத்தின் மேன்மையிலும் வளர்ச்சியிலும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர் அவர். அவர் தொடக்க காலகட்டத்தில் திராவிட இயக்கத்தால் - குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தால் - கவரப்பட்டார்.

அவர் மாணவராக இருந்தபோது இயக்கத்தின் தீவிரப் பற்றாளராக இருந்தார். பின்னர் இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டு இயக்கமாகச் செயல்பட்டார். இடதுசாரி இயக்கங்களோடும் தொடர்பு கொண்டிருந்தார்.

பின்னர் ஆசிரிய இயக்கங்களோடு தன்னைப் பிணைத்துக்கொண்டு போராட்டங்களில் கலந்துகொள்வதோடு முன்னின்று இயக்குபவர்களுள் முதன்மையானவராகவும் அவர் இருந்தார்.

1980-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் போராட்டத்தில் பங்கு பெற்றதோடு மற்ற சங்கங்களின் ஆதரவைப் பெறத் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.

இதனால் அவருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் பெரிய முரண் ஏற்பட்டு அவருடைய திட்டம் முடிந்ததும் பணியைத் தொடரவிடாமல் நிர்வாகம் அவரை வெளியேற்றிவிட்டது. இதனால் அவர் மனம் தளரவில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களை உதவி ஆய்வாளர்களாக நிரந்தரம் செய்யக்கோரி 1990-களில் நடைபெற்ற ஆசிரியர்-பணியாளர் போராட்டம் 47 நாட்கள் தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்றது.

கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், தொழிற் சங்கத்தினர் ஆகியோரின் ஆதரவைப் பெற்று அப்போராட்டத்தை முறையாக நெறிப்படுத்தி தொய்வடையாமல் காத்து இறுதியில் வெற்றி பெறும்வரை பாடுபட்டோர்களுள் அவர் முதன்மையானவர்.

சிறை சென்ற ஆசிரியர்கள்-பணியாளர்களுள் அவரும் ஒருவர். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு அவர் பெருந்துணையாக நின்றவர்.

தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவையில் உறுப்பினராக இருந்தபோது ஆசிரியர் - பணியாளர் நலன்களுக்குப் பெரிதும் பாடுபட்டார். மார்க்சியச் சிந்தனைகளும் தொழிற்சங்க உணர்வுகளும் அவருடைய வாழ்நாள் முழுவதும் நிலைத்து நின்றன.

அவரும் நானும்

1964-இல் தொடங்கிய எங்களது நட்பு அவர் மரணிக்கும் வரை தொடர்ந்திருந்தது.அது ஒரு குடும்ப உறவு.என்னுடைய நட்பு வட்டாரத்தில் பல நண்பர்கள் எனக்கு மூத்த சகோதரர்கள் போல் இருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் பேரா.இராம.சுந்தரம் அவர்கள். அவரால் கவரப்பட்டும் இருக்கிறேன்; அவருடைய சிந்தனை ஆதிக்கத்திற்கு ஆட்பட்டும் இருக்கிறேன்.

என்னுடைய சிந்தனை வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் அவர். அவரைப் பற்றி நான் குறிப்பிடும் இரு மேற்கோள்கள் எங்கள் நெருக்கத்தைக் காட்டுவதாக அமையும்.

"இத்தகைய ஒரு நூலை (நோம் சோம்ஸ்கி-பன்முக அறிமுகம்) எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தவர் பேரா.இராம.சுந்தரம் அவர்கள்.அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் என்னை வெகுவாகப் பாதித்துள்ளன.” (அரங்கன், 2013)
"A special word of thanks must go to Prof. Rm. Sundaram who is the major source of inspiration for me. I don’t remember that any of my research work went without his notice. He is a continuous source of encouragement for me. His influence on me may be witnessed both on my academic and non-academic activities.” (Rangan, 2012: xi

இவ்விரு மேற்கோள்களும் எங்களுக்கு இடையிலான நட்பை உறுதிப்படுத்தும் வாக்குமூலமாக நான் கருதுகிறேன். இரு கண்களில் ஒன்றை இழந்ததுபோல் நான் உணர்கிறேன்.

“அவர் ஒரு தனி மனிதர் அல்ல; அவர் எப்போதும் ஒரு இயக்கமாகச் செயல்பட்டவர். கொள்கைப் பிடிப்பிற்காக இடைவிடாமல் பல தொல்லைகளை அனுபவித்த இந்தப் பெருந்தகை தனிப்பட்ட முறையில் யார் மீதும் குறைபட்டதில்லை”, என்று அவரைப் பேரா. பொன்.கோதண்டராமன் அவர்கள் (1999) குறிப்பிடுகிறார்.

இந்த நட்பு நிலத்தை விட அகன்றது; கடலை விட ஆழமானது; வானினும் உயர்ந்தது; காலத்தை வென்றது. எங்களுடைய நட்பு வட்டாரப் பூஞ்செடியிலிருந்து அந்த மலர் விழுந்தாலும் அதன் மணம் எங்களை விட்டு என்றும் அகலாமல் தொடரும்.

உதவிய நூல்கள்

• அரங்கன்.கி. 2013. நோம் சோம்ஸ்கி - பன்முக அறிமுகம். கோயம்புத்தூர்: மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம்.

• கிருட்டினமூர்த்தி. சா., அரங்கன். கி., சுப்பராயலு.எ. (ப. ஆ.) 1999. தமிழியல் ஆய்வுகள் - முனைவர் இராம. சுந்தரம் மணிவிழா ஆய்வு நூல். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
• கோதண்டராமன்,பொன்.1999.“பேராசிரியர் முனைவர் இராம.சுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு”, தமிழியல் ஆய்வு.
• சுந்தரம். இராம.2004.தமிழக அறிவியல் வரலாறு. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
• ------------------- (மொ.பெ.)2007.திராவிடச் சான்று-எல்லீசும் திராவிட மொழிகளும். நாகர்கோவில் & சென்னை: காலச்சுவடு பதிப்பகம் & சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Tamil translation of Thomas Trautmann’s Language and Nation: The Dravidian Proof in Colonial Madras).
• -------------------- 2019. “அறிவியல் வளர்க்கும் தமிழ்”, இராமசாமி. மு., முத்தையா.இ. சேதுபாண்டியன்.தூ. (ப. ஆ.)இலக்கணமும் மொழியியலும் (ஆய்வுக் கட்டுரைகள்). சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்..பக்.188-201.

• Rangan.K . 2012 .Toward , Formulating Formal Phonological Rules of TolkappiyamEzhuttatikaaram. Chennai: Central Institute of Classical Tamil

(நன்றி கணையாழி)

- கி.அரங்கன்