பாகம் -  I

காவியம் பேரரசர்கள் காலத்து இலக்கிய வடிவம்.  17-18-ஆம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்களின் காலத்தில், அதாவது ஜமீந்தார்களின் காலத்தில், சிற்றிலக்கியங்கள் உருவாகின்றன.

ஜமீந்தார்கள் எங்கேயோ இருக்கும் பேரரசர்களின் அடியாட்கள்.  பேரரசர்களின் சொல்கேட்டு நடப்பவர்கள்.  இவர்கள் காலத்தில் சுய சிந்தனைக்கு இடமில்லை.  சிருங்கார ரசம் மிக்கப் படைப்புகளே அவர்களின் சபைகளில் அரங்கேற்றப்பட்டன.  இவை சிற்றிலக்கியங்கள் எனப்பட்டன.  உலா, கலம்பகம் எனப் பலவகைகளில் இவை பாடப்பட்டன.

19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆங்கில ஆட்சி உறுதிப்பட்டது.  ஆங்கில ஆட்சி மூலம் ஆங்கிலக் கல்வி நுழைந்தது.  புதிய ஆங்கிலம் படித்த நடுத்தர வர்க்கம் உருவானது. அச்சகங்கள் திறக்கப்பட்டன.  புதிய புதிய நூல்கள் ஏராளம் அச்சிடப்பட்டன.

ஆங்கிலம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்குச்  சிற்றிலக்கியங்கள் சலிப்பூட்டின.  வெளி நாட்டிலிருந்து, குறிப்பாக அன்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான ஆங்கில இலக்கியங்கள் இந்தியாவில் வாசிக்கக் கிடைத்தன.  இந்த இறக்குமதி இலக்கியங்களை வாசித்த தமிழக நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இங்கும் இம்மாதிரி இலக்கியங்களை உருவாக்க விரும்பினர்.  இவர்கள் அனைவருமே உயர் சாதியினர்.  இவர்களில் முதன்மையானவராக அன்று இருந்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.  இவர் முன்சீப்பாகப் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்.

இந்த வேதநாயகம் பிள்ளை (1826-1889) ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நாவலை 1878இல் எழுதினார்.  இது தமிழ்ப் பெண்களின் உயர்வைப் பேசும் கற்பனையான நாவல்.

அடுத்து ராஜம் அய்யர் 1895இல் ‘கமலாம்பாள்’ சரித்திரம் எழுதினார்.

மாதவய்யா ‘பத்மாவதி சரித்திரம்’ என்னும் நாவலை 1898இல் எழுதினார்.

இவர்கள் எழுதியவை கதாநாயகிகளின் வாழ்வைச் சரித்திர வடிவத்தில் பேசின. இன்று இந்த வடிவம் கைவிடப்பட்டது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879இல் முதல் நாவல் எழுதுவதற்கு முன்பே, 1775 இல் சிவகங்கை மன்னர் வடுகநாத துரைக்கு முத்துக் குட்டி அய்யா சொன்ன ‘வசன சம்பிரதாயம்’ என்னும் கதை பனை ஓலையில் எழுதப்பட்டது.  தமிழில் அறியப்பட்ட முதல் உரைநடை நூல் இதுவே.  இது 1895இல் அச்சிடப்பட்டது.

இந்த முதல் நாவலுக்கு முந்தியே நெல்லை சேஷ அய்யங்கார் ‘ஆதியூர் அவதானி’ என்னும் செய்யுள் வடிவ நாவலை எழுதினார்.  ஒரு பிராமணர் தன் மகளுக்குச் சாதி மறுப்புத் திருமணம் செய்த கதை இது.  இதை எழுதியதற்காக சேஷ அய்யங்கார் பல தொல்லைகளுக்குள்ளானார்.  அவர் மகளின் திருமணப் பந்தல் எரியூட்டப்பட்டது.  அவர் தன் ஊரை விட்டு நெல்லைக்கே குடிபெயரும்படி ஆயிற்று.

இந்தக் காலத்தில் வீரமா முனிவர் பரமார்த்த குரு கதை எழுதினார்.  பல கதைகள் பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும் பட்டன.  இவை எல்லாம் நாவல்கள் அல்ல, வெறுங் கதைகளே.  ஏனெனில் இவை சமகாலச் சமூக வெளிச்சமற்றவை.

இக்காலத்தில் ஒரு மலையாள முன்சீப் ‘இந்துலேகா’ என்னும் முதல் நாவலை மலையாளத்தில் எழுதினார்.  மலையாளப் பெண்களின் உயர்வைப் பேசும் நாவல் இது.

நாவலின் வகைகள்

பிரதாப முதலியார் சரித்திரம் புனைவியல் வகையைச் சார்ந்தது.  புனைவியல் என்றால் என்ன? எல்லா நாவல்களும் புனைவுகளே.  ஆயினும் புனைவியல் என்பது ஒரு தனிவகை. 

நற்பண்புகளையும் தீய பண்புகளையும் தேவைக்கேற்பப் பாத்திரங்களாகப் படைத்து, ஒன்றோடு ஒன்று மோதவிட்டு உருவாக்கப்படும் கற்பனைப் படைப்பு புனைவியல்.

புனைவியல் நாவல்களிலும் எதார்த்தக் கூறுகள் இருக்கும்.

(எ.கா) கல்கியின் ‘அலை ஓசை.’

நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ ஒரு எதார்த்த நாவல்.  அதில் புனைவியல் கூறுகள் கலந்துள்ளன.

கலப்பில்லாமல் நகை செய்ய இயலாது.  இலக்கியத்திலும் இதுதான் உண்மை.

காவியத்துக்கும் நாவலுக்கும் வேறுபாடு

காவியம்                                             

பழமையைப் பேசுவது

இறந்தொழிந்த பழங்காலம்

வாழ்வை மீறிய பாத்திரங்கள்

இலட்சிய மொழி சில வேளைகளில் தலைப்பிரட்டைமொழி

விழுமியங்களைப் பேசும்\

நாவல்

புதுமையைப் பேசுவது

அண்மைக்காலம்

வாழ்வில் நாம் சந்திக்கும் பாத்திரங்கள்

மக்கள் மொழி.

வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பேசும்

‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவல் கூறுகளும் காவியக் கூறுகளும் கொண்டது.

1898இல் நாகர்கோயில் அருமை நாயகம் “மீதி இருள்” என ஒரு நூல் எழுதினார்.  இது கிறிஸ்தவப் பிரச்சாரத் தன்மை கொண்டது.  எனவே நாவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  நாவல் என்பது சமகாலச் சமூகத்தை விமர்சனம் செய்யும் உள்ளகம் கொண்டது.

பாகம் - II

19-20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலக் கல்வியாலும், சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் முயற்சிகளாலும், சமூக அடுக்குகளில் குலைவுகள் ஏற்பட்டன.  அடித்தளத்தில் நசுங்கிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் படிப்படியாக விடுதலையடையத் தொடங்கினர்.  இதனால் நிலப்பிரபுத்துவக் கோபுரக் கட்டுமானத்தின் அடித்தளத்தில் உடைவுகள் ஏற்பட்டன.  அடித்தளத்தில் நெடுங்காலம் நசுங்கிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் படிப்படியாக விடுதலையடையத் தொடங்கினர்.

இதனால் கோபுரத்தில் மேலிருந்தோர் வீழ்ச்சியடையத் தொடங்கினர்.  இது நிரந்தர வீழ்ச்சி.  வீழ்ச்சியடைந்தவர்கள் வேறு வழி தெரியாமல்,  ஆன்மவிசாரத்தில் மூழ்கினர்.  இந்தப் போக்கு நவீனத்துவப் போக்கு எனப்படுகிறது.

கமலாம்பாள் சரித்திரம் இந்த வீழ்ச்சிப் போக்கைப் பேசுகிறது.  இதன் தொடர்ச்சியாகப் பொய்த் தேவு, ஜே.ஜே. சில குறிப்புகள் முதலியன படைக்கப்பட்டன.

இந்த இடிபாடுகளின் இடையே சிக்கியும், வாழும் முயற்சியும், நம்பிக்கையும் கொண்ட துளிர்கள் குருத்தெடுத்து வளரத் தொடங்கின.  இதைப் பத்மாவதி சரித்திரம் என்னும் படைப்பில் மாதவய்யா எழுதிக் காட்டினார். இது எதார்த்தப்போக்கு எனப்படுகிறது.

யதார்த்தம் என்பது என்ன?  நேற்று இன்றாக, இன்று நாளையாகப் பரிணமிக்கச் சமூகத்தினுள் இயங்கும் உள் ஆற்றலே எதார்த்தம். இந்த எதார்த்த ஆற்றல் எங்கும் நிறைந்திருக்கிறது.  இதன் வளர்ச்சியை, இயக்கத்தை, மோதலை, முரன்களை வரைந்து காட்டும் இலக்கியமே எதார்த்த இலக்கியம் எனப்படுகிறது.

மேற்குலகம் நவீனத்துவத்தை ஏன் கொண்டாடுகிறது?  அந்த மேற்கு உலகம் ஒரு காலத்தில் உலகம் முழுவதையும் கொள்ளையடித்தது.  ஆதிக்கம் செய்தது.  அதன் அடிமை நாடுகள் இன்று விடுதலை பெற்றுச் சுயமாக வளர்கின்றன.  எனவே பிறரைச் சுரண்டும் வாய்ப்புகளை இழந்து சோர்ந்து கிடக்கும் அது வீழ்ச்சியின் இலட்சியத்தைக் கொண்டாடுவது இயல்பே.

மாதவய்யா ஆழமான எதார்த்த வாதி.  அவர் தொடங்கி வைத்த போக்கு இன்று வலுவாக வேர்விட்டுத் தமிழகத்தில் வளர்ந்து படர்கிறது.

அடுத்த கட்டமாகத் தமிழகத்தில் மர்ம நாவல்கள் குவியல் குவியலாக மொழி பெயர்க்கப்பட்டன.  ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதைநாயகி அம்மாள், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியோர் மர்மக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தனர்.  மர்ம நாவல்கள் தமிழில் குவிந்தன.  தொடர்ந்து தமிழ்வாணன், சுஜாதா முதலியோர் மர்ம நாவல்களைச் சுயமாக எழுதினர்.

இப்படியாக மூன்று போக்குகளும் தமிழில் வளர்கின்றன.

இவை போகத் தன் வரலாற்று நாவல்கள் ஒரு போக்காக வளர்ந்துகொண்டிருக்கின்றன.  அழகிய நாயகி அம்மாள் எழுதிய “கவலை”, நல்ல எடுத்துக்காட்டு.  ஆர்.எஸ்.ஜேக்கப் எழுதிய “வாத்தியார்” இன்னும் ஒரு எடுத்துக்காட்டு.

சூழலியல் நாவல்கள்:  எந்திர உற்பத்திப் பெருக்கத்தால் இன்று திருப்பூர் போன்ற நகரங்களில் சூழல் கடுமையாக மாசுபடுகிறது.  நொய்யல் நதியே சாக்கடையாகிவிட்டது.  இதை சுப்ரபாரதிமணியன் சாயத்திரையில் எழுதினார்.

சுவாமிநாதன் கலப்பை என்னும் நாவலை எழுதி இயற்கை விவசாயத்துக்குத் திரும்புக என்றும் கோஷத்தை வலுவாக முன்வைக்கிறார்.

டி.செல்வராஜ் ‘தோல்’ நாவலில் தோல் பதனிடுவதால் நிலமும் நிலத்தடி நீரும் மாசுபடுவதை எழுதினார்.

படைப்புகளும் சாதிகளும்

இன்று சமூகத்தின் பழைய கோபுரக் கட்டமைப்பு உடைந்து அடித்தளச் சாதிகள் படிப்படியாக மேலே வருகின்றன. 1879இல் வேதநாயகம் பிள்ளை முதல் நாவல் எழுதினார்.  110 ஆண்டுகள் கழித்து சிவகாமி IAS என்னும் தலித்து ஆனந்தாயி எழுதினார். மேலும் 14 ஆண்டுகள் கழித்து ஜோ.டி.குருஸ் ஆழிசூழ் உலகு எழுதினார்.

என்னை எழுது எழுது என இன்னும் எத்தனைச் சமூகங்கள் படைப்பாளிகளை எதிர்பார்த்துத் தவம் கிடக்கின்றனவோ?

பாகம் - III

சமூகம் பூப்பதன் அடையாளமே அதில் இலட்சியம் உருவாவதுதான்.

ஒரு சமூகம் பூத்துவிட்டது என்பதன் அடையாளமே அதில் இலட்சியம் படைக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.  இன்னும் நசுங்கிக் கிடக்கிற, புதைந்து கிடக்கிற எல்லாச் சமூகங்களும் பூக்க வேண்டும்.  அதன் பூவை அதன் படைப்பாளியே உருவாக்க வேண்டும்.

தமிழ் வரலாற்றில் சில நாவல்கள்

1930-40-களில் காந்தியப் பேரலை தமிழ்நாட்டில் வீசியது. முருகன் ஓர் உழவன் கே.எஸ்.வெங்கடரமணி எழுதிய நாவல்.

இதயநாதம் சிதம்பர சுப்ரமணியம் எழுதிய நாவல்.

1942- நாகம்மாள்: சண்முக சுந்தரம் எழுதினார்.  ஒரு விதவைப் போராளியைக் கதாநாயகியாக்கிய நாவல்.

1948-50 திராவிட இயக்க இலக்கியம் உருவானது. மூடத்தன எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு, இவை திராவிட இலக்கியங்களின் முனைப்புகள்.

டி .கே.சீனிவாசன் ஆடும் மாடும் என்னும் அருமையான நாவல் எழுதினார்.

பொதுவாகத் திராவிட இயக்கம் இலக்கியங்களில் பாலியல் மிகை, அடுக்கு மொழி ஆகியன இருக்கும்.  இவை இலக்கிய படைப்புகளுக்குக் கவர்ச்சியூட்டின.

சாண்டில்யனிடமும் இப்போக்கு உண்டு. 

மு.வ.  நாவல்களில் அறவுரை மிகுந்திருக்கும்.

கல்கி வரலாற்றுப் புனைவுகள் எழுதினார்.

நிஜ வரலாற்று நாவல் பிரபஞ்சன் எழுதினார்.  (வானம் வசப்படும்)

சு.வெங்கடேசன் காவல்கோட்டம் எழுதினார்.

1950 யதார்த்த வாதம் ஒரு புதிய கட்டத்தை எட்டியது.  அன்ற நெல்லையில் நடந்த நெசவாளர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டு ரகுநாதன் பஞ்சம்பசியும் எழுதினார்.

1964இல் ஹெப்சிபா ஜேசுதாசன் பனை ஏறி நாடார்க்ளுக்கும் நிலமைக்கார நாடார்களுக்கும் இடையே உள்ள முரணை வைத்துப் புத்தம் வீடு எழுதினார்.

1966இல் சு.சமுத்திரம் ஒரு கோட்டுக்கு வெளியே என்னும் நாவல் எழுதினார்.

தலித்துப் பெண்கள் நாடர் பெண்களின் ஏற்றுமையை இது பேசியது.

டி.செல்வராஜ் மலரும் சருகும் எழுதினார்.  நெல்லை மாவட்ட விவசாய கூலிகளின் போராட்டம் பற்றிய நாவல் அது.

கு.சி.பா. தாகம் என்னும் நல்ல நாவல் எழுதினார்.  மண் வாசனை மிக்க எதார்த்த நாவல்.

பொன்னீலன் - கரிசல் மண்ணையும் மக்களையும் நவலாக எழுதினார்.

வாத்தியார் நாவல் ஆர்.எஸ்.ஜேக்கப் எழுதினார்.

1992இல் சிவகாமி அய்.எ.எஸ் ஆனந்தாயி என்னும் அருமையான தலித் நாவல் எழுதினார்.

2012இல் மலர்வதி தூப்புக்காரி எழுதினார்.

சில முக்கியமான நாவல்கள்

நீல பத்மநாபன்  - கிருஷ்ணப்பருந்து

சா.கந்தசாமி  - சாயாவனம்

வண்ணநிலவன் - கடற்புறத்தில்

எம்.வி.வெங்கட்ராம் - கேள்வித் தீ

கண்மணி குணசேகரன் - கோரை

தங்கர்பச்சான் - ஒன்பது  ரூபாய் நோட்டு

நாஞ்சில் நாடன் - தலைகீழ் விகிதங்கள்

1950இல் பெண் எழுத்தாளர்கள் களத்துக்கு வந்தார்கள்.  லட்சுமி - உயர் வகுப்புக் குடும்பங்களில் ஆண் ஆதிக்கத்துக்கு எதிரான பிரச்சினைகளை எழுதினார் இவர் உயர் சமூகங்களில் பெண் குரல் இதன் மூலம் வலிமை பெற்றது.

சூடாமணி, அனுத்தமா, அனுராதா ரமணன் இவர்களும் பெண்கள் பிரச்சினைகளை எழுதினர்.  1956-ல் தி.ஜானகி ராமன் அம்மா வந்தாள் என்னும் கலையழகு மிக்க நாவல் எழுதினார்.  அழகிய நாயகி அம்மாள் கவலை என்னும் தன் வரலாற்று நாவலை எழுதினார்.

பாமா கருக்கு, வன்மம் ஆகியன எழுதினார் - இவை தலித் நாவல்கள்.

ராஜம்கிருஷ்ணன் குறிஞ்சித் தேனில் எழுதத் தொடங்கினார்.  தொடர்ந்து வாழ்க்கையின் எதார்த்தத்தைத் தேடித் தேடி நாவல்கள் எழுதினார்.  கரிப்பு மணிகள், கூட்டுக் குஞ்சுகள் முதலிய எதார்த்த நாவல்கள் இவர் எழுதியவை.

சிறுபான்மையினர் நாவல்கள்

தோப்பில் முகமது மீரான் ஒரு கடலோர கிராமத்தின் கதை எழுதினார்.

மீரான் மைதீன் ஓதி எறியப்படாத முட்டைகள் எழுதினார்.

சூழலியல் நாவல்கள்

இன்று எந்திரங்களின் வளர்ச்சியால் சூழல் கெடுவதை சுப்ரபாரதிமணியன் எழுதினார்.  விவசாயத்தில் நஞ்சுவிதை மருந்தாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகச் சாமிநாதன் கலப்பை நாவல் எழுதினார்.

காலந்தோறும் சமூகத்தில் புதுப்புதுப் பிரச்சினைகள் தோன்றுகின்றன.  பிரச்சினைகள் படைப்புகளாக மலர்கின்றன.

வருங்கால வடிவம் எது? காலமே பதில் சொல்லும்.  ஆயினும் வருவதை நேசிப்போம் வாசிப்போம், விமர்சிப்போம் வளர்விப்போம்.

(6.6.2019 அன்று கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இரண்டு அமர்வுகளில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.)