இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் அதை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது.

ambedkhar 350இந்துக்கள் கூறும் எதிர்க் குற்றச்சாட்டுக்கு முதல் பதில், அடிமை முரையை இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையற்றது என்பதே. அடிமை முறை இந்துக்களின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்துக்களின் சட்டத்தை உருவாக்கிய மனு இதை அங்கீகரித்திருக்கிறார். அவருக்குப் பின் வந்த ஸ்மிருதி ஆசிரியர்கள் இதைப் பற்றி விரிவாகக் கூறி முறைப்படுத்தியிருக்கிறார்கள். அடிமை முறை, இந்துக்களிடையே ஏதோ ஒரு பண்டைக் காலத்தில் இருந்த அமைப்பு அல்ல. இந்திய வரலாறு நெடுகிலும் 1843 வரை அடிமை முறை செயலில் இருந்து வந்தது. அந்த ஆண்டில் பிரிட்டிஷ் அரசு, சட்டத்தின் மூலம் அடிமை முறையை ஒழித்திராவிட்டால் இன்று வரையும் கூட அது நீடித்திருக்கும்.

அடுத்து, அடிமை முறை, தீண்டாமை ஆகியவற்றின் தன்மை பற்றிய எதிர்க்குற்றச் சாட்டுக்குப் பதில் கூருவதற்குத் தீண்டாமையையும், பண்டைக் கால ரோமிலும், நவீன கால அமெரிக்காவிலும் வழக்கத்திலிருந்த அடிமை முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை நடைமுறையில் எப்படி இருந்தது? இதைப்பற்றி நான் அறிந்த மிகச் சிறப்பான வர்ணனை திரு.பாரோ எழுதிய ‘ரோமப் பேரரசில் அடிமைமுறை’ என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. திரு.பாரோ கூறுகிறார் (ரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக். 47-49.):

“இதுவரை, வீடுகளில் அடிமைகளை வைத்திருக்கும் முறையின் கொடூரமான அம்சங்கள் விவரிக்கப்பட்டன. மற்றுமொரு அம்சமும் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்ட வீடுகள் சாதாரணமாகக் காணப்படுபவை என்று இலக்கியம் காட்டுகிறது. ஆனால், இது விதிவிலக்கானது தான். பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை; இவர்கள் பொதுவாக ரோம் நகரில் காணப்பட்டார்கள். இத்தாலியிலும் மாகாணங்களிலும் பெருமைக்காகக் காட்சி காட்டுவதற்கு அதிகத் தேவை இருக்கவில்லை.

மாளிகையின் பணியாளர்களில் பலர், நிலமும் விளைபொருள்களும் தொடர்பான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மேற்பார்வையாளருக்கும் அடிமைக்கும் இடையிலான பழமையான உறவுமுறை அங்கும் இருந்தது. ஆனால் பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பிளினி, தமது பணியாளர்களிடம் காட்டிய அன்பு பற்றி நாம் நன்றாக அறிவோம். தமது சொந்த நேர்மை உண்ர்ச்சியைக் காட்டுவதற்காகவோ, வருங்காலத் தலை முறையினர் தமது கடிதங்களைப் படிப்பார்கள் என்று நம்பி அவர்களிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனோ அவர் தமது அடிமைகளின் உடல் நலக்குறைவு பற்றியும் அவர்களின் மரணம் பற்றியும் தமது மனவேதனையை வெளிப்படுத்தவில்லை.

(பிளினியின்) குடும்ப வீடு அடிமைகளின் குடியரசு. பிளினி தமது அடிமைகளை நடத்திய விதம் பற்றிக் கூறியிருப்பது சில சமயங்களில்  பொதுவான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறியதாக உள்ளதால் அதைச் சான்றாக மதிக்க முடியாது என்று கருதப்படுகிறது. இவ்வாறு கருதுவது சரியல்ல.

பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும் உண்மையான இலக்கிய ஆர்வத்தினாலும் செல்வம் மிக்க குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இலக்கியத்திலும் கலைகளிலும் பயிற்சி பெற்ற அடிமைகளை வைத்திருந்தார்கள். கிளாவிஸிஸெஸ் சேபினஸ், தம்மிடம் ஹோமர், ஹெஸியாயிட், மற்றும் ஒன்பது கவிஞர்களின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கப் பயிற்சி பெற்ற பதினொரு அடிமைகளை வைத்திருந்ததாக ஸெனெடா கூறுகிறார். ‘புத்தக அலமாரி வைத்துக் கொள்வது செலவு குறைவாயிருக்கும்’ என்று முரட்டுத்தனமாகப் பேசும் நண்பர் ஒருவர் கூறினார். “அப்படியில்லை” என்று அவருக்குப் பதில் கூறப்பட்டது. இவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், அச்சுக்கலை தோன்றாத அந்தக் காலத்தில் கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும்….வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். இருபது வயதில் இறந்து போகும் ஒரு ‘புத்தக மனிதன்’ தாம் கிரேக்கமும் லத்தீனும் அறிந்தவர் ’என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார், சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர்….பேரரசில் சுருக்கெழுத்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள். வாக்கு வன்மை பெற்ற பேச்சாளர்கள், இலக்கண அறிஞர்கள் ஆகியோரின் உரைகள் பலவற்றை ஸ்னெட்டோனியஸ் ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். வெரியஸ் ஃப்ளாக்கஸ் என்பவர் ஆஸ்டஸின் பேரர்களுக்கு ஆசிரியராயிருந்தார். அவர் இறந்தபின் அவருக்குச் சிலை வைத்துக் கௌரவித்தார்கள்.

ஸெரிபோனியஸ் அபியொடிசியஸ் என்பவர் ஆர்பிலியஸின் அடிமையாகவும் மாணவராகவும் இருந்தார்; பின்பு அவர் ஸெரிபேனியாவால் விடுதலை செய்யப்பட்டார், ஹைகின்ஸ் என்பவர் அவருக்குப்பின், அவரிடம் அடிமையாயிருந்து விடுதலைபெற்ற ஜுலியஸ் மாடெஸ்டஸ் அந்தப் பதவிக்கு வந்தார். அடிமையான தத்துவ அறிஞர் ஒருவரின் வரலாற்றை எழுதிய சுதந்திர மனிதர்கள் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். இந்த அடிமை அறிஞர், தமது எஜமானருடனும் அடிமைகளின் நண்பர்களுடனும் வாதங்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற அடிமைகள் மருத்துவர்களாகப் பணிபுரிந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் உள்ளன. இவர்களில் சிலர் குறிப்பிட்ட மருத்துவத் துறைகளில் தனித் தேர்ச்சி பெற்றவர்கள்.

இத்தகையவர்கள் பெரிய வீடுகளில் அடிமைகளாக இருந்தபோது பயிற்சி பெற்றவர்கள் என்று சில உதாரணங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் விடுதலை பெற்றபின் தங்கள் துறைகளில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, மிக அதிகமாகக் கட்டணம் வாங்குபவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.”

சமூகத்தில் சில பிரிவினரின் ரசனைகளுக்கு நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பல கலைகள் நிகழ்த்துவோர், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உடல் பிடிப்பவர்கள் போன்ற பலருடைய சேவைகள் வேண்டியிருந்தன. இத்தகைய பணிகள் எல்லாவற்றையும் செய்த அடிமைகள் இருந்தனர். இவர்கள் இந்தத் துறைகளில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றிருந்தனர். 1

ஆகஸ்டஸின் காலம் வர்த்தகமும் தொழில்களும் விரிவடையத் தொடங்கிய காலம்….அடிமைகள் (கலைகளிலும் கைத் தொழில்களிலும்) முன்பும் ஈடுபடுத்தப்பட்டனர்; ஆனால் திடீரென்று வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால்….முன்பு தேவைப்படாத அதிக எண்னிக்கையில் அவர்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது, ரோமானியர்கள் பல்வேறு வர்த்தக, தொழில் முயற்சிகளில் மிகத் தாராளமாகவும் திறந்த முறையிலும் ஈடுபட்டார்கள். ஆயினும் வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்ததால் அவர்களுக்கு முகவர்கள் தேவைப்பட்டார்கள்.

இத்தகைய முகவர்களாகப் பெரும்பாலும் அடிமைகளே செயல்பட்டனர்….(இவ்வாறு இருந்ததற்கு) காரணம் என்னவென்றால், அடிமைத் தளைகள் (தளர்த்தக் கூடியனவாக உள்ளன). (இவற்றை) அடிமையாயிருப்பவர் செல்வத்தையும் சுதந்திரத்தையும் பெறமுடியும் அன்ற நம்பிக்கையுடன் வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் தளர்த்தவும், அடிமையின் தவறான செயலால் எஜமானருக்கு இழப்பு ஏற்படாமல் உத்தரவாதம் செய்யும் வகையில் இறுக்கமாக்கவும் முடியும்.

வர்த்தகத்தில், ஓர் அடிமை தனது எஜமானருடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சாதாரணமாகக் காணப்பட்டது. இவ்வாறாகச் செய்யப்பட்ட வேலையும், ஈட்டப்பட்ட லாபமும் கணிசமாக இருந்தன……அடிமைக்கு நிலத்தைக் குத்தகைக்கு 1. ரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், ப. 63. விடுவது பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது…. தொழில்களிலும் இதே முறை பல்வேறு வடிவங்களில் வழக்கத்தில் இருந்தது. எஜமானர் ஒரு வங்கியை அல்லது கப்பலைப் பயன்படுத்தும் தொழிலை அடிமையிடம் குத்தகைக்குக் கொடுக்கலாம். இதற்கு ஈடாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படலாம் அல்லது அடிமைக்கு விகித அடிப்படையிலான தொகை கொடுக்கப்படலாம்1

அடிமை சம்பாதிக்கும் பொருள் சட்டப்படி அவனுடைய சொந்தப் பணம் ஆகும். அதைச் சேமித்துப் பல வழிகளில் பயன்படுத்தலாம். பலர் இதை உணவுப் பொருள்களுக்கும் உல்லாசத்திற்கும் செலவிட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தத் தனிப்பணம் ஏதோ கொஞ்சம் கையில் சேர்ந்தது, கரைந்து போயிற்று என்று சொல்லும் படியாக இருக்கவில்லை. எஜமானருடைய வர்த்தகத்தில் அவருக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கத் தெரிந்த அடிமை தன்னுடைய பொருளையும் எப்படி லாபமான முறையில் பயம்படுத்தலாம் என்பதை அறிவான்.

பல சமயங்களில் அவன் தன் எஜமானரின் வர்த்தகத்தில் அல்லது முற்றிலும் வேறான தொழில் முயற்சியில் முதலீடு செய்தான். அவன் தன் எஜமானருடனேயே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அப்போது அவன் எஜமானரிடமிருந்து முற்றிலும் தனிப்பட்ட மனிதனாகக் கருதப்பட்டான். மூன்றாம் மனிதர் ஒருவருடனும் அடிமை, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அவன் தன்னுடைய சொத்துக்களையும் நலன்களையும் மேலாண்மை செய்வதற்கு முகவர்களை வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக அடிமையின் தனிப்பணத்துடன் சம்பந்தப்பட்டவையாக நிலம், வீடுகள், கடைகள் ஆகியவை மட்டுமின்றி உரிமைகளும் பாத்தியதைகளும் காணப்பட்டன.

வர்த்தகத்தில் அடிமைகள் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்: பலர் கடைகள் வைத்திருந்தார்கள்; இவற்றில் உணவு, ரொட்டி, இறைச்சி, உப்பு, மீன், மது, காய்கறிகள், தேன், தயிர், பன்றியிறைச்சி, வாத்துகள், மீன் முதலானவை விற்கப்பட்டன. வேறு சில கடைகளில் துணி, காலணிகள், அங்கிகள் முதலானவை விற்கப்பட்டன.

ரோம் நகரில் இவர்கள் தங்கள் தொழில்களை மேமிமஸ் வட்டம், ட்ரைஜெமிமஸ் வாசல், எஸ்க்விலைன் மார்க்கெட், (காவோலியன் குன்றின்மேல் உள்ள) பெரிய அங்காடி, முதலான இடங்களில் நடத்தினார்கள்2 1. உரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக். 101-102 2. மேலது, ப. 105.

அடிமைகளான செயலாளர்களும் முகவர்களும் தங்களுடைய எஜமானர்கள் சார்பில் எந்த அளவுக்குச் செயல்பட்டார்கள் என்பதை பாம்பேயில் ஸீஸிலியஸ் ஜகண்டஸ் என்பவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ரசீதுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.1

அரசு தனக்குச் சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தது என்பது ஆச்சரியமல்ல; ஏனென்றால், போர், அரசு சம்பந்தப்பட்ட விஷயம் ஆதலால், போரில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அரசின் உடைமையாகவே இருக்கலாம். ஆனால் அரசின் அடிமைகள் எத்தகைய குறிப்பிடத்தக்க முறையில் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட சமூக அந்தஸ்தும் மிகுந்த ஆச்சரியம் அளிக்கின்றன….

”பொது அடிமை’ என்றால் பேரரசின் கருத்தில் அரசு தன்னுடைய பல பணிகளில் ஈடுபடுத்துகின்ற அடிமைகள் என்று பொருள்பட்டது. அவ்வாறு அழைக்கப்படுபவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசுப்பணி இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள். பல சமயங்களில் ஒரு சமூக அந்தஸ்து இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள், ஸீஸரின் அடிமைகள் ஆகியோர் செய்த பணிகளில், இப்போது அரசு நிர்வாகப் பணித்துறையின் மேற் பிரிவின் ஒரு பகுதியினரும் கீழ்ப்பிரிவினர் அனைவரும், நகரசபைகளின் பணியாளர்களும் செய்கின்ற மூளை உழைப்பு, உடல் உழைப்பு ஆகிய எல்லாப் பணிகளும் அடங்கியிருந்தன…(கருவூலத்தின்) சார்நிலைப் பணிகளில் எழுத்தர்களாகவும் நிதி அதிகாரிகளாகவும் பணிபுரிந்த பலர் அடிமைகளும், விடுதலை பெற்ற அடிமைகளும் ஆவார்கள்.

இவர்கள் செய்த பணிகள் மிகப் பலவகையாக இருந்திருக்க வேண்டும்… நாணய சாலை….இதன் தலைவராக ‘நைட்’ எனப்பட்ட உயர்நிலைப் போர்வீரர் இருந்தார்; நாணயம் அச்சிடும் செயல் முறையின் பொறுப்பாளராக…. விடுதலைபெற்ற அடிமை ஒருவர் இருந்தார்; அவருக்குக் கீழே விடுதலை பெற்ற அடிமைகளும், அடிமைகளும் பணி செய்தார்கள்…. ஆயினும் அரசுப் பணியின் ஒரு பிரிவிலிருந்து, மிக நெருக்கடியான ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் தவிர, அடிமைகள் கண்டிப்பாக விலக்கப்பட்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை; அவர்கள் கௌரவத்துக்குத் தகுந்தவரகளாகக் கருதப்படாததே இதற்குக் காரணம். வேறு காரணங்களும் இருந்தன என்பதில் சந்தேகமில்லை. பெரும் எண்ணிக்கையில் அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஆபத்தான பரிசோதனை ஆகிவிடும். 1. ரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், ப. 186.

அடிமைகள் போர்முனையில் அரிதாயிருந்த போதிலும், போர்முனையின் பின்னணியில் வேலைக்காரர்களாகவும், உணவு வழங்குதல் போக்குவரத்து ஆகியபிரிவுகளில் பணியாளர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் எப்போதும் காணப்பட்டனர். கடற்படைக் கப்பல்களில் அடிமைகள் பணி செய்வது சாதாரணமாயிருந்தது.”

 II

இப்போது அமெரிக்காவில் நீக்ரோக்கள் சட்டத்தின் பார்வையில் அடிமைகளாயிருந்த காலத்தில் அவர்களின் நடைமுறை நிலைமை எவ்வாறு இருந்தது என்று பார்க்கலாம். நீக்ரோக்களின் நிலைமை பற்றி நன்றாக விளக்கும் சில விவரங்கள் கீழே தரப்படுகின்றன:2

“புரட்சியின் போது வெள்ளையரும் கருப்பரும் ஆகிய கடற்படை வீரர்கள் ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாக உணவு உண்டனர் என்று லஃபாயத் கூறியிருக்கிறார். வட கரோலனாவின் கிரான்வில் கவுண்ட்டியில், அசல் நீக்ரோவான ஜான் சேவிஸ் என்பவர் வெள்ளை மாணவர்களுக்குத் தனியான பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். பிரின்ஸ்டன் பக்கலைக் கழகத்தில் கல்விகற்ற அவர் உள்ளூர் மதகுருக்கள் சபையின் உரிமப்பட்டயம் பெற்று, அம்மாநிலத்தில் வெள்ளையர்களைக் கொண்ட திருச்சபையில் உபதேச உரைகள் நிகழ்த்தி வந்தார். அவருடைய மாணவர்களில் ஒருவர், வட கரோலினாவின் ஆளுநர் ஆனார்; மற்றொருவர், மாநிலத்தின் மிகப் பிரபலமான விக் கட்சி செனட் உறுப்பினர் ஆனார்.

அவருடைய மாணவர்களில் இருவர், வட கரோலினாவின் தலைமை நீதிபதியின் மகன்கள். மாநிலத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சிக் கழகத்தை நிறுவியவரின் தந்தை அவரது பள்ளியில் படித்து அவரது வீட்டில் உணவு உண்டு வந்தார்…. அடிமைகளின் உழைப்பு எல்லாவிதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீக்ரோக்களில் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள் கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டார்கள், அல்லது அவர்களது பணி மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் சாதாரணத் தொழிலாளர்களைவிட அடிமைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு இரண்டு மடங்கு பணம் கொடுத்தார்கள். தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்கள் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களின் உரிமையாளர்களாயிருந்தனர். இந்த முறை மேலும் வளர்ச்சி பெற்ற 1. மேலது, பக். 139 2. சார்லஸ் சி. ஜான்சன் அமெரிக்க நாகரிகத்தில் நீக்ரோவர்.

போது, சில தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்களுடைய அடிமைத் தொழிலாளர்களின் கீழ் வேலை செய்வதற்கு வேறு அடிமைகளை அமர்த்தினார்கள். பல அடிமைக்கைத்தொழிலாளர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகச் செய்த வேலைக்காகக் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணத்தைச் சேமித்து அதை விலையாகக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தை வாங்கினார்கள்.”

“ஓடிப்போன அடிமைகள் பற்றியும் அடிமை விற்பனை பற்றியும் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அவர்களின் திறமைக்குச் சான்று கூறுகின்றன. அவர்கள், ஏழை வெள்ளைத் தொழிலாளருக்குச் சமமாக அல்லது கூடுதலாக ஊதியம் பெற்றார்கள். தங்களுடைய உடைமையாளரின் செல்வாக்கினால் மிக நல்ல வேலைகளைப் பெற்றார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதென்ஸில் கொத்து வேலைக்கும் தச்சு வேலைக்கும் ஒப்பந்தம் எடுப்பவர்கள் நீக்ரோ தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று 1838 – இல் அவர்களிடம் மனுக் கொடுக்கப்பட்டது.

”வெள்ளையர்கள் தான் இந்த நாட்டின், இந்த மாநிலத்தின், உண்மையான, சட்டபூர்வமான, அறநெறிப்படியான சொந்தக்காரார்கள். இந்த உரிமை அவர்களுக்கு உலகம் உருண்டையானது என்ற உண்மையைக் கண்டறிந்து கூறிய கோபர்னிகஸ், கலீலியோ ஆகிய வெள்ளையர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது; இந்த உண்மையின் அடிப்படையில் மற்றொரு வெள்ளையர் கொலம்பஸ், உலகில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்கு மேற்கு நோக்கிக் கடற்பயணம் செய்யலாம் என்று உணர்ந்தார். எனவே இந்தக் கண்டம் வெள்ளையர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இந்த வெள்ளையர்களுக்குத்தான் நீங்கள் வேலை கொடுக்க மறுத்து அவர்களுடைய பசியினால் வாடும் குடும்பங்களுக்கு உணவும் உடையும் கிடைக்காமல் செய்கிறீர்கள். அதுமட்டுமின்றி நீக்ரோக்களுக்கே நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்.”

அட்லாண்டாவில் 1858-இல் இரண்டு வெள்ளையந்திரப் பணியாளர்கள் கொடுத்த ஒரு மனுவில் தங்கள் பகுதிகளில் வசிக்கும் தலைமைத் தொழிலாளர்களின் கருப்பு அடிமைத் தொழிலாளர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அடுத்த ஆண்டிலேயே சில வெள்ளையர்கள் தங்கள் மத்தியில் ஒரு நீக்ரோ பல்வைத்தியர் இருப்பதையும் தொழில் செய்வதையும் நகர சபை சகித்துக் கொள்கிறது என்று புகார் கூறினார்கள். ‘எங்களுக்கும் சமுதாயத்திற்கும் நியாயம் செய்வதற்கு இதை நிறுத்தியாகவேண்டும். அட்லாண்டா நகரவாசிகளான நாங்கள் உங்களிடம் நீதி கேட்கிறோம்.

’ ஜார்ஜியா மாநிலம் ரிச்மண்ட் கவுண்ட்டியில் 1819-இல் சுதந்திரமான நீக்ரோக்கள் பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அவர்கள் தச்சுவேலை, முடிதிருத்தல், படகு பழுது பார்த்தல், குதிரைச் சேணய் செய்தல், நூல் நூற்றல், இயந்திரங்களில் மாவரைத்தல், துப்பாக்கி உறைகள் தைத்தல், நெசவு, மரம் அறுத்தல், நீராவிப் படகுக்கு வழிகாட்டிச் செலுத்துதல் போன்ற வேலைகளைச் செய்வதாகத் தெரியவந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மன்ரோ பதவி ஏற்றபோது அணிந்திருந்த காலணிகளை நீக்ரோ காலணித் தொழிலாளர் ஒருவர் கையினால் செய்து கொடுத்திருந்தார்.

மாண்டிஸெலோவில், தாமஸ் ஜெபர்ஸனின் வீட்டில் ஓடு பாவிய தரையை நேர்த்தியாக உருவாக்கிய அடிமையின் தொழில் திறமையை ஹாரியட் மார்ட்டினோ வியந்துரைத்தார். பழைய பருத்தித் தோட்டத்தின் அந்தப் பெரிய வீட்டில் நீக்ரோ கைவினைஞர்களின் கைத்திறனின் அடையாளங்கள் இன்னமும் காணப்படுகின்றன. தோட்டம் அமைப்பதற்கு முன் அங்கு நின்ற ஓக் மரங்களை வெட்டியெடுத்து அவற்றின் கட்டைகளை இணைத்து அமைக்கப்பட்ட வலுவான மாளிகைகள் இன்றும் நிற்கின்றன. நூல் நூற்பதிலும் நெசவிலும் தேர்ச்சி பெற்ற நீக்ரோ பெண்கள் ஆலைகளில் வேலை செய்தார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதன்ஸில் அவர்கள் வெள்ளை இனப் பெண்களுடன் வேலை செய்வதையும், அதைப்பற்றி ஆட்சேபமோ வெறுப்போ காட்டப்படவில்லை என்பதையும் பக்கிங்ஹாம் 1839-இல் பார்த்தார்.

தென்பகுதியில் உள்ள நீக்ரோ கைத்தொழிலாளர்கள் – அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகிய இருசாராருமே – வட பகுதியில் உள்ள தங்கள் சகோதரர்களைவிட நல்ல நிலையில் இருந்தார்கள். 1856-இல் பிலடெல்பியாவில் இருந்த 1637 நீக்ரோ கைத்தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்சம் காரணமாக அவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவானவர்களே தங்கள் தொழில்களைச் செய்ய முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுக்குப் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த ஐரிஷ் மக்கள், நீக்ரோ அடிமைத்தனத்திற்கு அடிப்படையாகக் கொடுத்துப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சாதகமாக இவ்வாறு கூறப்பட்டது: ‘ஐரிஷ் கத்தோலிக்கர் ஒருவர் தாம் எந்த நிலையில் வைக்கப்படுகிறாரோ அதைவிட மேலே உயர்வதற்கு முயலமாட்டார்; ஆனால், நீக்ரோ, பல சமயங்களில் முயற்சி செய்து வெற்றி பெற்றுவிடுகிறார்.’

பியூரிட்டனான ஆலிவர் க்ராம்வெல், கருப்பு அடிமைகள் வர்த்தகம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ட்ரோகேடா படுகொலையில் கொல்லப்படாத ஐரிஷ் மக்கள் அனைவரையும் பார்படாஸில் உள்ளவர்களுக்கு விற்றுவிடவில்லையா? நியூயார்க்கிலும் பென்சில்வேனியாவிலும் உள்ள சுதந்திரமானவர்களும் ஓடிவந்த அடிமைகளுமான நீக்ரோக்கள் இந்த மக்களுடன் எப்போதும் போராடிக் கொண்டிருந்தார்கள். நியூயார்க்கில் நடந்த கட்டாய ராணுவ சேவைக் கழகங்களில் இந்தப் பகைமை, மிகுந்த வன்முறையாக வெளிப்பட்டது. இந்த ஐரிஷ் மக்கள் சிற்றாள் வேலை முதலான சாதாரண வேலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த வேலைகளில் நீக்ரோக்கள் இடம் பெறும் முயற்சி ஒவ்வொன்றையும் அவர்கள் எதிர்த்தார்கள். இந்த முயற்சிகள் அமெரிக்காமீது தங்களுக்கிருந்த லேசான பிடிப்புக்கும், வாழ்க்கை ஆதாரமான தொழிலுக்கும் அபாயமானவை என்று அவர்கள் கருதினார்கள்.

ரோமானிய அடிமை, அமெரிக்க நீக்ரோ அடிமை ஆகியோரின் நடைமுறை நிலைமை இவ்வாறு இருந்தது. இந்தியாவில் உள்ள தீண்டாதோரின் நிலைமையில், ரோமானிய அடிமையின் நிலைமையுடனும் அமெரிக்க நீக்ரோ அடிமையின் நிலைமையுடனும் ஒப்பிடக் கூடியதாக ஏதேனும் இருக்கிறதா? தீண்டாதோரின் நிலைமையையும் ரோமப் பேரரசில் அடிமையின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அதே காலகட்டத்தை எடுத்துக்கொள்வது தவறாகாது. ஆயினும் ரோமப் பேரரசில் இருந்த அடிமைகளின் நிலைமையுடன் இப்போது உள்ள தீண்டாதோரின் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க நான் இணங்குகிறேன். இது ஒரு புறம் மிக மோசமானதையும் மறுபுறம் மிகச் சிறந்ததையும் எடுத்து ஒப்பிடுவதாகும்.

ஏனென்றால் இப்போதைய காலம் தீண்டாதோரின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. தீண்டாதோரின் நடைமுறை நிலைமை அடிமைகளின் நிலைமையுடன் ஒப்பிடும் போது எவ்வாறு உள்ளது? ரோமானிய அடிமைகளைப் போல எத்தனைத் தீண்டாதோர் நூலகர்களாகவும், சொல்லுவதை எழுதுவோராகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும் வேலையில் உள்ளனர்? ரோம் நகரில் அடிமைகள், பேச்சாளர்கள், இலக்கண ஆசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் போன்ற அறிவுத் துறைப் பணிகளில் அமர்த்தப்பட்டது போல எத்தனைத் தீண்டாதவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்? ரோமில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டது போன்ற பணிகளில் தீண்டாதவர்கள் எத்தனைப் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? எந்த இந்துவும் இவற்றில் எந்தக் கேள்விக்காவது உடன்பாடான பதில் கூற முடியுமா? அடிமைகள் மிகப் பெருமளவில் இடம்பெற்றிருந்த இந்தப் பணிகள் எல்லாவற்றிலுமிருந்து தீண்டாதோர் முற்றிலுமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர்.

தீண்டாமையை நியாயப்படுத்துவதற்கு இந்துக்கள் சொல்லும் வாதங்கள் எவ்வளவு பலனற்றவை என்பதை இது நிரூபிக்கிறது. இதில் இரங்கத்தக்கது என்னவென்றால், பெரும்பாலானவர்கள், ஒரு மனிதன் அல்லது ஒரு வகுப்பினர் மற்றொரு மனிதனின் வாழ்வு அல்லது மரணத்திற்கான அதிகாரத்தைச் சட்டப்படி பெற்றிருப்பது தவறு என்று கூறி, அடிமை முறையைக் கண்டனம் செய்வதாகும். ஆனால் அடிமைத்தனம் இல்லாத போதும் கூட மிகக் கொடுமையான ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் துன்புறுத்தலும் இவற்றின் விளைவான துன்பங்களும் ஏமாற்றமும் மனத்தளர்ச்சியும் இருக்கமுடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

அடிமைகளின் நடைமுறை நிலைமை பற்றி மேலே கூறப்பட்ட விவரங்களைக் கவனிப்பவர்கள், அடிமையின் சட்டப்படியான நிலைமையை மட்டும் கருத்தில் கொண்டு அடிமை முறையை அவசரப்பட்டுக் கண்டனம் செய்வது சரியல்ல என்று ஒப்புக் கொள்வார்கள். சட்டம் அனுமதிக்கிறது என்பது, அந்த நடைமுறைகள் சமூகத்தில் உள்ளன என்பதற்குச் சான்றாகிவிடாது. தாங்கள் பெற்றுள்ள் எல்லாம் அடிமை முறையினால் கிடைத்தவையே என்று பல அடிமைகள் ஒப்புக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு ஒப்புக் கொண்டாளும் இல்லாவிட்டாலும் பல அடிமைகள் தாங்கள் பெற்றவற்றையெல்லாம் அடிமைமுறை காரணமாகவே அடைந்திருந்தனர்.

அடிமை முறை, சுதந்திரமான சமூக அமைப்பு அல்ல என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தீண்டாமை சுதந்திரமான சமூக அமைப்பு என்று கூற முடியுமா? தீண்டாமையை ஆதரிக்கும் இந்துக்கள், இது சுதந்திரமான சமூக அமைப்புதான் என்று கூறலாம். ஆனால் தீண்டாமைக்கும் அடிமை முறைக்கும் இடையில் உள்ள சில வேறுபாடுகள் தீண்டாமையை அடிமை முறையைவிட மோசமான சுதந்திரமற்ற சமூக அமைப்பு ஆக்கிவிடுவதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அடிமைமுறை ஒருபோதும் கட்டாய மாக்கப்படவில்லை. ஆனால் தீண்டாமை கட்டாயமானது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை அடிமையாக வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அடிமையாக வைத்திருக்க விரும்பவில்லையென்றால் அவர்மீது கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் தீண்டாதவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. தீண்டாதவராகப் பிறந்துவிட்டால் தீண்டாதவருக்கு உள்ள எல்லாத் துன்பங்களையும் அவர் அனுபவித்தேயாக வேண்டும்.

அடிமை முறைச் சட்டம் அடிமையை விடுதலை செய்வதை அனுமதித்தது. ஒரு முறை அடிமையாகிவிட்டால் எப்போதுமே அடிமைதான் என்ற நிலை கிடையாது. தீண்டாமையிலிருந்து தப்பிக்க வழியே கிடையாது. தீண்டாதவர் என்றால் எப்போதுமே தீண்டாதவர்தான். மற்றொரு வேறுபாடு என்னவென்றால், தீண்டாமை மறைமுகமான அடிமை முறையாகும்; எனவே அது மிக மோசமான அடிமை முறையாகும். ஒரு மனிதனின் சுதந்திரத்தைத் திறந்த முறையில் நேரடியாகப் பறித்துக்கொள்வது அதைவிட மேலானது. அடிமையான மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல் படியாகும். ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாகப் பறிக்கப்பட்டால் அவன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணராமலிருக்கிறான்.

தீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும். தீண்டாதவரிடம் ‘நீ சுதந்திரமானவன், நீ ஒரு குடிமகன், குடிமகனின் எல்லா உரிமைகளும் உனக்கு உண்டு’ என்று கூறிக்கொண்டு, அவர் இந்த இலட்சியம் எதையும் அடைய வாய்ப்புப் பெறமுடியாத வகையில் கயிற்றை இறுக்குவது கொடுமையான ஏமாற்று வேலையாகும். இது தீண்டாதோர் தங்களுடைய அடிமைத்தனத்தை உணராமலே அவர்களை அடிமையாக்குவதாகும். இது, தீண்டாமை என்றாலும் இது அடிமைத்தனமே. இது, மறைமுகமானது என்றாலும் உண்மையானது. இது, உணரப்படாமலே இருப்பதால், இது, நீடித்து நிற்கிறது. தீண்டாமை, அடிமை முறை ஆகிய இரண்டில் சந்தேகமில்லாமல் தீண்டாமைதான் மோசமானது.

அடிமை முறை, தீண்டாமை ஆகிய இரண்டுமே சுதந்திரமான சமூக அமைப்புகள் அல்ல. ஆனால், இந்த இரண்டுக்குமிடையே வேறுபாடு கூறவேண்டுமானால் – வேறுபாடு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை – கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றைப் பெறுவது அடிமை முறையில் சாத்தியமா, தீண்டாமையில் சாத்தியமா என்று பார்க்கவேண்டும். அடிமை முறையில் கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கு இடம் இருக்கிறது. தீண்டாமையில் இதற்கெல்லாம் இடமே இல்லை.

அடிமை முறையும் சுதந்திரமில்லாத சமூக அமைப்புதான் என்றாலும், அதில் உள்ள அனுகூலங்களில் எதுவுமே தீண்டாமையில் இல்லை. அதே சமயம் சுதந்திரமான சமூக அமைப்பில் உள்ள பிரதிகூலங்கள் அனைத்தும் தீண்டாமையில் உள்ளன. அடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில், வர்த்தகம், கைத்தொழில், கலை ஆகியவற்றில் பயிற்சி பெறுவதற்கு அல்லது பேராசிரியர் ம்யூர்ஸ் கூறுவதுபோல ‘மேலான ஒரு பண்பாட்டில் அடி எடுத்து வைப்பதற்கு’ வாய்ப்பு இருக்கிறது. தீண்டாமையின் அழுத்தும் பாரமோ, தனிமனித வளர்ச்சிக்கு உள்ள தடையோ அடிமை முறையின் அம்சங்களாக இல்லை. எனவே, அடிமை முறையைவிடத் தீண்டாமை நல்லது என்று கூறுவது அவசரப்பட்ட கூற்றாகும்.

இந்தப் பயிற்சியும் பண்பாட்டின் அறிமுகம் பெறுதலும் அடிமை முறையின் பெரிய நன்மை என்பதில் சந்தேகமில்லை. அடிமைக்குப் பயிற்சி அளிப்பதற்கும் பண்பாட்டின் அறிமுகம் செய்துவைப்பதற்கும் எஜமானுக்குக் கணிசமான செலவு பிடித்தது. அடிமையாவதற்கு முன்பே கல்வியோ பயிற்சியோ பெற்ற அடிமைகள், இளம் அடிமைகளாயிருக்கும்போது வீட்டு வேலையில் அல்லது கைத்தொழிலில் பயிற்சி அளிப்பதேயாகும். பேரரசு உருவாவதற்கு முன் ஓரளவுக்கு இவ்வாறுதான் செய்யப்பட்டது. உதாரணமாக, மூத்த கேட்டோ இவ்வாறுதான் செய்தார். அடிமையின் உடைமையாளரும், ஏற்கெனவே உள்ள பணியாளர்களும் இந்தப் பயிற்சியை அளித்தார்கள்… உண்மையில், செல்வர்களின் வீடுகளில் இதற்கெனத் தனி ஆசிரியர்களே இருந்தார்கள். இந்தப் பயிற்சி, தொழில், வர்த்தகம், கலைகள், இலக்கியம் ஆகியவற்றில் அளிக்கப்பட்டது.

அடிமைக்கு இவ்வாறு உயர்வான உழைப்புகளிலும் பண்பாட்டிலும் பயிற்சி அளிப்பதற்கு உடைமையாளர் முயற்சி எடுத்தற்குக் காரணம் சந்தேகமில்லாமல் லாபநோக்கம் தான். பயிற்சி பெறாத அடிமையை விட, பயிற்சி பெற்ற அடிமைக்கு ஒரு வர்த்தகப் பொருள் என்ற முறையில், மதிப்பு அதிகம். அவனை விற்றால் அதிக விலை கிடைக்கும்; மற்றவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டால், அவன் அதிக ஊதியம் ஈட்டி வருவான். எனவே உடைமையாளர் தனது அடிமைக்குப் பயிற்சி அளிப்பது அவருக்கு முதலீடாகும்.

அடிமை முறை போன்ற சுதந்திரமில்லாத சமூக அமைப்பில் அடிமையின் உயிரையும் உடம்பையும் பராமரிக்கும் பொருப்பு உடைமையாளரைச் சார்ந்தது. அடிமை தன்னுடைய உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தேடும் பொறுப்புகள் எல்லாவற்றிலுமிருந்து விடுதலை பெற்றான். இவையெல்லாவற்றையும் அளிக்கவேண்டியது உடைமையாளரின் பொறுப்பாயிற்று. அடிமை, தனக்கு ஆகும் செலவை விட அதிகமாகவே ஈட்டியதால் உடைமையாளருக்கு, இது சுமையாக இருக்கவில்லை. ஆனால், சுதந்திர மனிதர் ஒவ்வொருவரும் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் உத்தரவாதம் பெறுவது எப்போதும் சாத்தியமில்லை என்பதை ஊதியத்துக்கு உழைப்பவர்கள் தங்கள் அனுபவத்தில் அறிந்துள்ளனர், உழைக்கத் தயாராயிருப்பவர்கள் எல்லோருக்கும் வேலை எப்போதும் கிடைத்துவிடுவதில்லை. வேலை இல்லை என்றால் உணவு இல்லை என்ற விதியிலிருந்து உழைப்பாளர் தப்பிக்க முடியாது.

இந்த விதி வேலை இல்லை என்றால் உணவு இல்லை என்பது – அடிமைக்குப் பொருந்தாது. அவனுக்கு உணவு தேடித்தருவதும், வேலை தேடித்தருவதும் உடைமையாளரின் கடமை. உடைமையாளர் வேலை தேடித்தரத் தவறினால், அடிமை, தனக்கு உணவு பெறும் உரிமையை இழந்துவிடுவதில்லை. வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்கள், வளர்ச்சிகள், தளர்ச்சிகள் ஆகியவற்றின் விளைவுகளை சுதந்திரமான ஊதியத் தொழிலாளர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இவையெல்லாம் அடிமையை பாதிப்பதில்லை. இவை அடிமையின் எஜமானரை பாதிக்கலாம்; ஆனால், அடிமை இவற்றிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறான். அவனுக்கு உணவு, அநேகமாக அதே உணவு, கிடைத்துவிடும். வர்த்தகம் வளர்ந்தாலும் தளர்ந்தாலும் அடிமைக்கு உணவு கிடைத்துவிடும்.

அடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில் எஜமான் தன்னுடைய அடிமையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவனம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறான். அடிமை, தன்னுடைய எஜமானின் உடைமையாவான். இந்தப் பிரதிகூலமான நிலையே அவனுக்குச் சுதந்திர மனிதனைவிட அனுகூலமாக அமைந்துவிடுகிறது. அடிமை தம்முடைய உடைமை என்பதாலும், எனவே மதிப்புள்ள பொருள் போன்றவன் என்பதாலும், உடைமையாளர் தமது சுயநலத்துக்காகவேனும் அடிமையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவணம் செலுத்தினார்.

ரோம் நகரில் அடிமைகள் ஒருபோதும் சதுப்பு நிலங்களிலோ மலேரியா வரக்கூடிய நிலத்திலோ வேலையில் அமர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலங்களில் சுதந்திர மனிதர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். அடிமைகளை ஒருபோதும் சதுப்பு நிலத்தில் அல்லது மலேரியா வரக்கூடிய நிலத்தில் பயன்படுத்த வேண்டாம் என்ற ரோமானிய விவசாயிகளுக்குக் கேட்டோ என்பவர் அறிவுரை கூறுகிறார். இது விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆயினும், சற்று யோசித்துப் பார்த்தால் இது மிகவும் இயல்பானது என்று தெரியும். அடிமை, மதிப்பு மிக்க உடைமையாவான்; எனவே தன்னுடைய நலனை உணர்ந்திருக்கும் விவேகமுள்ள மனிதன், தனது மதிப்புமிக்க உடைமையை மலேரியாவின் சீர்கேடுகளுக்கு உட்படுத்த மாட்டான். சுதந்திர மனிதன் விஷயத்தில் இதேபோன்ற கவனம் செலுத்த வேண்டியதில்லை; ஏனென்றால், அவன் மதிப்புள்ள உடைமை அல்ல. உடைமையாளரின் இந்தக் கருத்து அடிமைக்குப் பெரிய அனுகூலத்தைத் தந்தது. யாருக்கும் அளிக்கப்படாத கவனிப்பு அடிமைக்கு அளிக்கப்பட்டது.

சுதந்திரமற்ற சமூக அமைப்பில் காணப்பட்ட இந்த மூன்று அனுகூலங்களில் ஒன்றுகூடத் தீண்டாமையில் இல்லை.

தீண்டாதவருக்கு நாகரிகத்தின் உயர்கலைகளில் பிரவேசிக்க அனுமதி இல்லை. பண்பாடான வாழ்க்கைக்கு எந்த வழியும் அவருக்குத் திறந்திருக்கவில்லை. அவர் குப்பை கூட்ட வேண்டும்; அதைத்தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. தீண்டாதவரின் வாழ்க்கைக்கு எந்தப் பாதுகாப்பையும் தீண்டாமை உறுதி செய்யவில்லை. தீண்டாதவரின் உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் இந்துக்களில் எவரும் பொறுப்பானவர் அல்லர். தீண்டாதவரின் ஆரோக்கியம் யாருக்கும் அக்கறையுள்ள விஷயம் அல்ல. உண்மையில், ஒரு தீண்டாதவர் இறந்தால், வேண்டாதது ஒழிந்ததாகவே கருதப்பட்டது. ஓர் இந்துப் பழமொழி ‘தீண்டாதவன் செத்தான், தீட்டுப் பயம் ஒழிந்தது’ என்று கூறுகிறது.

மறு புறத்தில், சுதந்திரமான சமூக அமைப்பின் எல்லாப் பிரதிகூலங்களும் தீண்டாமையில் உள்ளன. சுதந்திரமான சமூக அமைப்பில் வாழ்க்கைப் போராட்டத்தில் வென்று உயிர் வாழ்வது அந்தந்த மனிதரின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு சுதந்திரமான சமூக அமைப்பின் மிகப் பெரிய பிரதிகூலங்களில் ஒன்றாகும். ஒரு தனி மனிதன் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடிகிறதா என்பது வாழ்க்கையில் நியாயமான ஆரம்பம், சம வாய்ப்பு, நியாயமாக நடத்தப்படுவது ஆகியவற்றைப் பொறுத்தது. தீண்டாதவர் சுதந்திரமான மனிதராக இருந்தாலும் அவருக்கு வாழ்க்கையில் நியாயமான ஆரம்பமோ சம வாய்ப்போ, நியாயமாக நடத்தப்படுவதோ கிடைப்பதில்லை. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தீண்டாமை, அடிமை முறையை விட மோசமானது மட்டுமின்றி, அடிமை முறையுடன் ஒப்பிடும்போது உண்மையிலேயே கொடுமையானதுமாகும். அடிமை முறையில், அடிமைக்கு வேலை கிடைக்கச் செய்யும் பொறுப்பு எஜமானுக்கு இருக்கிறது.

சுதந்திரமான தொழிலாளர்களைக் கொண்ட முறைமையில் வேலை பெறுவதற்குத் தொழிலாளர்கள், தொழிலாளர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இந்தப் போட்டிப் போராட்டத்தில் தீண்டாதவர் நியாயமாக நடத்தப்படுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? சுருக்கமாகச் சொன்னால், சமூக இழிவு முத்திரை காரணமாக வாழ்க்கையின் துலைக்கோல் தமக்கெதிராகவே சாய்ந்திருக்கும் நிலையில் தீண்டாதவர் வேலை அளிக்கப்படுவதில் கடைசி இடத்தையும், வேலையிலிருந்து நீக்கப்படுவதில் முதல் இடத்தையும் பெறுகிறார். அடிமை முறையுடன் ஒப்பிடும்போது தீண்டாமை கொடுமையானது; ஏனென்றால், உயிர்வாழ்வதற்கு வேண்டிய பொருள் ஈட்டுவதற்கு எல்லா வழிகளையும் தீண்டாதவருக்கு முழுமையாகத், திறந்துவிடாமல் தம்மைப் பராமரித்துக் கொள்ளும் பொறுப்பைத் தீண்டாமை அவர் மீது சுமத்துகிறது.

மொத்தத்தில், அடிமைகளைப் போலன்றி, தீண்டாதோர் இந்துக்களின் நலன்களுக்குத் தேவையான விஷயங்களில் அவர்களின் உடைமையாகவும், தீண்டாதோர் இந்துக்களின் உடைமையாக இருந்தால் இந்துக்களுக்குப் பொறுப்பு ஏற்படும் விஷயங்களில் அவர்களால் சொந்தமில்லை என்று கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர். தீண்டாதோர் சுதந்திரமற்ற சமூக அமைப்பின் நன்மைகள் எதையும் பெறமுடியாமலும் சுதந்திரமான சமூக அமைப்பின் தீமைகள் எல்லாவற்றையும் சுமக்கவேண்டியும் உள்ள நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 3)

Pin It